Published:Updated:

வாதவூரரின் வழியில் ஒரு ஞான உலா!

ஆன்மிகம்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிகம்

ஆன்மிகம்

வாதவூரரின் வழியில் ஒரு ஞான உலா!

ஆன்மிகம்

Published:Updated:
ஆன்மிகம்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிகம்

ரலாற்றுப் பயணங்கள், மரபு நடைப் பயணங்கள் போவதைப் போல சைவ சமய குரவர் ஒருவரின் அடியொற்றி புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்தோம். நினைத்ததும் வந்து ‘சிக்’கெனப் பிடித்துக் கொண்டவர் மாணிக்கவாசகப் பெருமான்!

வாதவூரடிகள் எனும் தமிழ் வள்ளல்பெருமான் வழியில், அவர் பிறப்பதற்குக் காரணமான உத்தரகோசமங்கையில் தொடங்கி சிதம்பரம் வரை ஒரு பயணம் மேற்கொண்டோம். வாருங்கள் தொடர்வோம்...

உத்தரகோச மங்கை ஸ்ரீமங்களநாதர் திருக்கோயில்
உத்தரகோச மங்கை ஸ்ரீமங்களநாதர் திருக்கோயில்

குளக்கரையில் குட்டி பூதம்!

‘மண் முந்தியோ மங்கை முந்தியோ’ எனும் சொல்வழக்குக்கு ஏற்ப, தொன்மையை அறிய இயலாத தலம் உத்தரகோசமங்கை. அங்கே, ஸ்ரீமங்களநாதர் திருக்கோயிலின் அக்னி தீர்த்தத்துக்கு அருகில் நின்றுகொண்டிருந்தோம்.

‘இங்கு தானே அந்த அதிசயம் நடந்தது. இங்குதானே ஒரு ஞான சூரியனின் பிறப்பு திருவிளையாடலாக நடந்தது’ என்று மனம் விம்மி நெகிழ்ந்துபோக, திருவாசக சிவபுராணத் தைப் பாடி உருகினோம்.

வாதவூரரின் வழியில் ஒரு ஞான உலா!

மங்கையான பார்வதிக்கு ஈசன் வேதத்தின் ரகசியங்களைச் சொல்லிக் கொடுத்த தலம் என்பதால் `உத்தரகோச மங்கை' என்று பெயர். உலகின் முதல் சிவாலயம் என்றும் ஆதி சிதம்பரம் என்றும் போற்றப்படும் தலம். இங்கு தனது பூத கணங்களுக்கு (ரிஷிகளுக்கு என்றும் சொல்வர்) சிவனார் சைவ சித்தாந்த ரகசியங்களைச் சொல்லிக் கொடுத்துக்கொண் டிருந்தாராம். அப்போது ஒரு குட்டி பூதம் மட்டும் பாடங்களைக் கவனியாமல், சுற்றுப்புற அழகை ரசித்துக்கொண்டிருந்ததாம். மனம் மாயையில் சிக்கிக்கொண்டதால் ஈசனை கவனியாமல் விட்டது பூதம்.

வாதவூரரின் வழியில் ஒரு ஞான உலா!

அதேநேரம், இலங்கையில் மண்டோதரி சிவ பூஜை செய்யத் தொடங்கினார். ஈசன் அங்கு செல்ல ஆயத்தமானார். உடனே, பூத கணங்கள் யாவும் அக்னி தீர்த்தத்தில் மூழ்கி கயிலாயம் செல்லத் தொடங்கின. குட்டி பூதம் மட்டும் எத்தனை முறை மூழ்கியும் குளத்திலேயே கிடந் தது; கயிலைக்குச் செல்ல இயலவில்லை. அதனால் வருந்தி ஈசனைச் சரணடைந்தது. `எதை விரும்பினாயோ அதை அடைவாய் எனும் தத்துவப்படி, பூமியில் சில காலம் இருந்து சகலருக்கும் ஞான மார்க்கத்தை போதித்தபின், எம்மை அடைவாய்’ என்று ஆசி கூறி கிளம்பினார் ஈசன். அதன்படி அந்தக் குட்டி பூதம் அந்தக் குளத்தின் கரையிலேயே தவமிருந்து வந்தது.

நம் சிந்தனை திடுமனெ கலைய நிகழ்காலத்துக்கு வந்தோம். குளக் கரையில் அருளும் மாணிக்கவாசகரை வணங்கி, கோயிலை வலம் வந்தோம். `இலவந்திகை' என்று சங்க இலக்கி யங்கள் போற்றும் அந்த ஊரின் பெருமைகள், மண்டோதரி கல்வெட்டுகள், வியப்பிலாழ்த்தும் சிற்ப அற்புதங்கள், மரகத நடராஜர், 3000 ஆண்டுகளைக் கடந்த இலந்தை மரம் என ஒவ்வோர் அதிசயத்தையும் தரிசித்து வியந்தோம்; மனம் இல்லாமல் உத்தரகோச மங்கையைவிட்டுப் புறப்பட்டோம். அடுத்து நாம் சென்றது திருவாதவூர்!

 திருவாதவூர் வாதபுரீஸ்வரர் கோயில்
திருவாதவூர் வாதபுரீஸ்வரர் கோயில்

சிலம்பொலி கேட்டது!

மதுரைக்கு வடக்கே 25 கி.மீ தொலைவில் உள்ளது திருவாதவூர். திருமறைநாதர் எனும் வாதபுரீஸ்வரர் குடிகொண்டிருக்கும் இத்தலக் கோயிலிலும் சிற்ப அற்புதங்கள் கொட்டிக் கிடக்கின்றன. சந்நித்களை தரிசித்து முடித்து வெளிப் பிராகாரத்துக்கு வந்தோம். இங்குதான் மாணிக்கவாசகர் ஈசனின் சிலம்பொலியைச் செவிமடுத்த சிலம்பொலி மண்டபம் உள்ளது.

இந்த மண்டபத்தை எழுப்பியவர் ‘தென்ன வன் பிரம்மராயன்’ எனும் வாதவூரடிகளே. இங்கு மாணிக்கவாசகருக்குத் தனிச் சந்நிதி உள்ளது. அதில் திருவாசகச் சுவடிகளை ஏந்தியபடி கிழக்கு நோக்கி அருள்கிறார் வாதவூரார்.கோயிலின் அருகில் வாதவூரரின் அவதாரத் தலம் உள்ளது. தற்போது சிறிய ஆலயமாக உருமாறி உள்ளது.

வாதவூரரின் வழியில் ஒரு ஞான உலா!

இந்தக் கோயிலின் அர்ச்சகரின் பணிகளால், மிகச் சாந்நித்தியத்துடன் விளங்கு கிறது. உள்ளே நுழைந்ததும் உடலெங்கும் சிலிர்த்தது. `உள்ளப்படாத திருவுருவை உள்ளு தலும், கள்ளப்படாத களி வந்த வான் கருணை, வெள்ளப்பிரான்... எம்பிரான்...' என்று மனம் நெகிழ, மணிவாசகப் பெருமானின் பாதத்தைப் பற்றிக்கொண்டது சித்தம்.

‘பல காலம் உத்தரகோச மங்கை திருக் குளத்தின் கரையில் தவம் செய்த பூதம் 3-ம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் திருவாதவூரில் ஆமாத்தியர் குல தம்பதிக்கு மகனாக அவதரித் தது. இளமையிலேயே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியவர், அரிமர்த்தன பாண்டி யனின் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற் றார்; வாதவூரர் எனும் சிறப்பையும் பெற்றார்.

திருப்பெருந்துறை
திருப்பெருந்துறை

தென்னவன் பிரம்மராயன் என்ற புகழ்ப் பெயருடன் சிவிகை, குடை, கவரி சூழ வாழ்ந்து வந்தார். அந்தப் புண்ணியர் எப்போது தம்மை நாடி வருவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தது சிவம். மோதிரத்தைத் தொலைத் தவர்தானே அதைத் தேடுவார்; மோதிரமா தொலைத்தவரைத் தேடும். ஈசன் தேடியது கிடைக்கும் காலமும் வந்தது!

திருவாதவூரை தரிசித்து மனம் நெகிழ்ந்து, மதுரையம்பதிக்குச் சென்றோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆலவாய் மாநகரில்...

மிகத் தொன்மையான மாநகரம். பாண்டிய நாட்டின் தலைநகரம். மீனாட்சி அம்மையின் ராஜதானி. ஆலவாய் என்று அடியார்கள் போற்றும் திருநகரம் - மதுரை. அங்கே ஆலவாய் அண்ணலையும் அம்மையையும் தரிசித்தோம். வைகையைக் கண்டு மகிழ்ந்தோம்.

வாதவூரரின் வழியில் ஒரு ஞான உலா!

அந்த ஆற்றங்கரையைக் கண்டதும் ‘இங்கு தானே சுடுமணலில் வாதவூரர் முட்டிப் போட்டது என்று கலங்கினோம். அடியார்களை எல்லாம் அரனார் சோதிப்பார். ஆனால் மாணிக்கவாசகருக்காக... தலையில் பெண் ணைச் சுமக்கும் அந்த ஈசன் மண்ணைச் சுமந்தாரே! அதுமட்டுமா பிரம்படியும் பட்டார்.

64 திருவிளையாடல்களில் 62 ஆடல்கள் நடைபெற்ற தலம் மதுரை. அவற்றில் ஐந்தை மாணிக்கவாசகருக்காகவே நடத்தினார். பரியை நரியாக்கியது, நரியைப் பரியாக்கியது, வைகையில் வெள்ளம் வரவைத்தது, பிட்டுக்கு மண் சுமந்து, பிரம்படி பட்டது எல்லாமும் அவனின் அருளாடல்களே.

மாணிக்கவாசகரை மயக்கி பொன் கவர்ந்து ஆலயம் எழுப்பிக்கொண்டதால், அந்தத் தவற்றுக்குப் பிராயசித்தமாக ஸ்வாமி பிரம்படி பட்டாராம்.

வாதவூரரின் வழியில் ஒரு ஞான உலா!

மன்னவன் வாங்க சொன்ன பரிகளை வாங்காமல் அந்தப் பொன்னைக் கொண்டு திருப்பெருந்துறை ஆலயத்தைக் கட்டி விட்டார் அமைச்சர். மன்னன் `எங்கே குதிரைகள்' என்று ஆள் மேல் ஆள் விட்டு கேட்டபோது, ‘ஆவணி மூல நாளில் குதிரைகள் வரும்' என்று பதில் சொல்ல ஈசனே மதுரைக்குச் சென்றார். சொன்னபடி பரிமேல் அழகனாக சொக்கநாதன் குதிரைகளை ஒப்படைத்து, `பெற்றுக் கொண்டேன்' என கைச்சாத்தும் வாங்கிக் கொண்டு சென்றார்.

உங்களுக்குத்தான் தெரியுமே... பரிகள் மீண்டும் நரிகளாகிவிட, அதனால் மன்னவன் கோபம் கொண்டதும் வாதவூரர் தண்டனை பெற்றதும்! தன் பக்தன்அவதியுற்றான் என்றதை அறிந்ததும் பொங்கிய சிவம் மதுரையை வெள்ளம் சூழச் செய்தார்.

வீட்டுக்கு ஒருவர் கரை அடைக்கும் பணிக்கு வரவேண்டும் எனக் கட்டளையிட்டான் மன்னன். வந்தியின் சார்பில் மண் சுமக்க ஈசனே வந்தார். மன்னனிடம் பிரம்படி பட்டார். அந்த அடி சகல ஜீவன்களின் மீதும் விழுந்தது. மன்னவன் உண்மை அறிந்தான். இறைவன் மணிவாசகரின் மகிமையை உலகறியச் செய்தார். இவையாவும் நிகழ்ந்த புண்ணிய பூமியை மதுரையம்பதியை வணங்கி, திருப்பெருந்துறை தலத்துக்கு நகர்ந்தோம்.

சிதம்பரம்
சிதம்பரம்

திருவாசகம் தந்த திருப்பெருந்துறை

‘அரிமர்த்தன பாண்டியனின் விருப்பப்படி பரிகளை வாங்க மதுரையைக் கடந்து மீமிசல் நோக்கி விரைந்து கொண்டிருந்தார் தென்னவன் பிரம்மராயன். வழியில் ஏதோ மாற்றம்; நெஞ்சைப் பிசைந்த நினைவுகள் ஒன்று கூட உடன் வந்தவர்களை விட்டு வழி மாறினார் மந்திரி. ஓரிடத்தில், ஜன்ம ஜன்மமாய் தன்னை ஆட்கொண்ட சக்தி தன்னை அழைப்பதாக உணர்ந்தார். அவரின் குதிரை தாமாகவே திருப்பெருந்துறை சோலையை அடைந்தது.

அங்கு திருவாதவூரர் முதலில் பார்த்தது ஈசனின் இரு திருப்பாதங்களை. ஆம் கால காலமாக தாம் எங்கிருந்து சேவை செய்து வாழ்ந்திருந்தோமோ அந்த திருவிடத்தை அவரின் ஆன்மா கண்டுகொண்டது. அதைச் சிக்கெனப் பற்றிக்கொண்டார் வாதவூரர்.

ஆம், தம் காலைக் கொடுத்து மணிவாசகரைப் பெருந்துறையில் ஆட்கொண்டார் சிவன். சைவ சமயத்தில் பிறவிப் பெருங்கடலை கடந்து செல்ல உதவும் துறைகள் (கடக்குமிடம்) நான்கு. பாலைக் கொடுத்து சம்பந்தரை ஆட் கொண்டது - தோணித்துறை. சூலை கொடுத்து நாவுக்கரசரரை ஆட்கொண்டது - திருவதிகைத் துறை. ஓலை கொடுத்து சுந்தரரை ஆட் கொண்டது - வெண்ணைநல்லூர் எனும் அருட்டுறை.

வாதவூரரின் வழியில் ஒரு ஞான உலா!

ஆவுடையார்கோயில் எனும் இந்தத் தலமோ காலத்தால் மூத்த பெருந்துறை. இங்கு வந்த வருக்கு பிறப்பே இல்லை என்பது சத்தியம் என்கிறது சைவம். குருந்த மரத்தடியில் ஆட்கொண்ட ஈசனை மனதார வழிபட் டோம். தென் முகமாகவே ஈசன் அருளும் ஒரே தலம் இது என்கிறார்கள். திருவாசகத்தின் முதல் பாடல் எழுந்த திருக் கோயிலைக் கண்ணீர் வழிய நெக்குருகி தரிசித் தோம். உலகப் புகழ்பெற்ற சிற்ப அதிசயங்களை கண்டு வியந்தோம்.

திருப்பெருந்துறையின் சிற்ப அழகுகளை எவராலும் எழுதிவிடவோ சொல்லிவிடவோ முடியாது என்பதே உண்மை. 27 நட்சத்திரங்களும் சிற்பமாக உள்ள நுட்பத்தைக் கண்டு வியந்தோம். ஞானியாக, கவியாக மட்டுமல்லாது, திரு அண்டப்பகுதி பகுதி மூலம் பிரபஞ்சத்தின் ரகசியங்களை எல்லாம் எழுதிய ஆதி விஞ்ஞானி யான மாணிக்கவாசகரை எண்ணி எண்ணி வியந்தோம். உருவமே இல்லாத ஆத்ம நாதரை யும் யோகாம்பிகையையும் வணங்கினோம்.

தலத்தின் விசேஷமான புழுங்கலரிசி நைவேத்தியமும் உண்டு மகிழ்ந்தோம். ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அமர்ந்து திருவாசகம் திருக்கோவை பாடி வழிபட்டோம்.

இந்த ஆலயத்தில் நந்தி இல்லை, கொடி மரம் இல்லை, கால பைரவர் இல்லை, சண்டிகேஸ்வரர் இல்லை. எல்லாமுமாக மாணிக்கவாசகரே இருக்கிறார். பொதுவாக உற்சவராக அருளும் நடராஜரும் இங்கே கல்லில் வடிக்கப்பட்டுள்ளார். அவர் நகர்வதே இல்லை. இங்கு எல்லா உற்சவங்களும் விழாக்களும் மாணிக்கவாசகருக்கு மட்டுமே. பக்தனுக்கு விழா நடக்கும் ஒரே தலம் திருப்பெருந்துறை மட்டுமே. அவரே ஈசனைப் போல ரிஷப வாகனத்தில் உலா வருகிறார்.

அப்போது ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. மாணிக்கவாசகரை ஏன் நாயன்மார்களில் ஒருவராக சேர்க்கவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டபோது, வாரியார் ஸ்வாமி சொன்னார்: ‘ஸ்வாமியை எப்படி நாயன்மார் ஆக்க முடியும். அது ஸ்வாமியின் ஞான சொரூபம். ஞானத்தின் வழியே கடவுளை அடைய முடியும் என்பதைக் காட்ட வந்த ஈசனின் அம்சம்!’.

மண்ணில் பிறந்தவர்கள் எல்லோரும் தரிசிக்க வேண்டிய குரு தலமான பெருந்துறை, அந்த ஊரின் அருகிலுள்ள... நரிகளைப் பிடித்து பரிகளாக்கிய `நரிக்குடி' போன்ற இடங்களைப் பார்த்துவிட்டுக் கிளம்பினோம்.

தொடர்ந்து திருவிடைமருதூர், திருவண்ணாமலை, திருக்கழுக் குன்றம், திருக்காஞ்சி என மாணிக்கவாசகப் பெருமான் ஈசனைப் பாடி பரவிய தலங்களை தரிசித்தபடியே வந்தோம்.

குறிப்பாக அவர் பல காலம் தங்கி அம்மானையும் பாவையும் பாடி மகிழ்ந்த ஆதி அண்ணாமலையார் கோயிலை கிரிவலப் பாதையில் தரிசித்து பாடல்கள் பாடி மகிழ்ந் தோம். அங்கு மெய்யாகவே மாணிக்கவாசகப் பெருமான் அரூபமாக அருகே இருப்பதைப் போலவே உணர்ந்தோம்.

நிறைவில், அவர் ஸ்வாமியால் ஆட்கொள்ளப் பட்டு முக்தி அடைந்த சிதம்பரத்தை அடைந்தோம்.

மாணிக்கவாசகர் பர்ணசாலை

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அருகி லேயே அமைந்த தலம் தில்லை திருப்பெருந்துறை, தற்போது `மாணிக்கவாசகர் பர்ணசாலை’ என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள கோயிலில், இறைவன் ஆத்மநாதர் என்ற திருப்பெயர் கொண்டு காட்சி தருகிறார்.

தில்லைக்கு வந்த மாணிக்கவாசகர், இலங்கை மன்னனின் பேச முடியாத மகளுக்கு பேச்சளித்து, தன்னோடு வம்பு பேசிய புற சமயத்தாரை பேச முடியாமல் செய்தார்.

திருப்பெருந்துறை தொடங்கி பல தலங்களில் திருவாசகப் பாடல்களைப் பாடி வந்தாலும், அவை எதையும் அவர் எழுதி வைத்ததில்லை. இந்நிலையில் முதியவராக மாணிக்கவாசகரிடம் வந்த ஈசன், அவரை எல்லா பாடல்களையும் மீண்டும் பாட வைத்தார். பாவை (திருவெம் பாவை) பாடிய வாயால் கோவை பாடுக என்று சொல்லி, திருக்கோவையாரும் பாடவைத்தார்.

அவர் பாடப் பாட ஈசனே எழுதினார்.

‘மாணிக்க வாசகன் சொல்ல அழகிய திருச் சிற்றம்பலமுடையான் எழுதியது’ என்று கையொப்பம் இட்டு, தில்லை பஞ்சாட்சரப்படியில் வைத்துவிட்டு மறைந்தார். மனிதன் சொல்ல தெய்வம் எழுதிய ஒரே வேதமானது திருவாசகம். தில்லை அந்தணர்கள் இந்தப் பாடல்களுக்குப் பொருள் என்னவென்று மாணிக்கவாசகரை வினவினர். அவர், `தில்லைக் கூத்தனைச் சுட்டிக்காட்டி ‘இவரே பொருள்’ என்று கூறி, கூத்தனுள் கலந்தார்!

அடியார்கள் அனைவருக்கும் ஒளி விளக்கா கத் திகழும் மாணிக்கவாசகப் பெருமானை நினைத்தாலும் பேசினாலும் நெஞ்சம் இனிக்கும்; நினைவுகள் குழையும். அவர் அருளிய திருவாசகம் வெறும் பக்தி நூல் மட்டு மல்ல; அது சிவமே எழுத்தாகி, சிவமே எழுதி, சிவமாகவே திகழும் ஒரு சிவரகசிய வேதம்.

இங்ஙனம் ஒவ்வொரு கணமும் மாணிக்க வாசகரின் அற்புத நினைவுகளோடும் தரிசித்த ஒவ்வோர் இடத்திலும் அவரின் சாந்நித்தியத்தை உணர்ந்த சிலிர்ப்போடும் நிறைவடைந்தது, எங்களின் அந்த ஆன்மிகப் பயணம்!

நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க!