Published:Updated:

கலைவாணி வழிபட்ட திருவீழிமிழலை

திருவீழிமிழலை
பிரீமியம் ஸ்டோரி
News
திருவீழிமிழலை

ஓவியம்: வேதா

முப்பெருந்தேவியரில் அன்னை கலைவாணி சில சிவத் திருத்தலங்களில் வழிபட்டு அருள்பெற்ற திருக்கதைகள் உண்டு. அங்ஙனம் அவள் வழிபட்ட தலங்களை சரஸ்வதீஸ்வரங்கள் எனப் போற்றுகின்றன ஞானநூல்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அவ்வகையில் கலைமகள் தட்ச யாகத்தில் கலந்துகொண்டதால் ஏற்பட்ட தோஷம் தீர சீர்காழியில் வழிபட்டு அருள்பெற்றாள். அதேபோல், முனிவர் ஒருவரின் சாபத்தால் பேச்சை இழந்த சரஸ்வதி தேவி திருக்காளத்திக்குச் சென்று வழிபட்டு விமோசனம் பெற்றாள் என்கின்றன புராணங்கள். அவ்வகையில், குருகாவூர், திருநெய்த்தானம், ராமேஸ்வரம், பெருவேளூர் ஆகிய தலங்களிலும் சரஸ்வதி வழிபட்டு சிவனருள் பெற்ற திருக்கதைகள் உண்டு. இங்ஙனம் அன்னை கலைவாணி வழிபட்ட தலங்களில் தனிச் சிறப்புடன் திகழ்வது திருவீழிமிழலை.

அன்னை கலைவாணியை வாக்தேவி எனப் போற்றுகின்றன ஞானநூல்கள். அவள் சந்தியா காலங்களில் முறையே காயத்ரீ, சாவித்திரி, சரஸ்வதி ஆகிய மூன்று கோலங்களில் அருள்வதாகச் சொல்வர். இந்த மூன்று திருக்கோலங்களிலும் அவள் வழிபட்ட திருத்தலமே திருவீழி மிழலை. இங்குள்ள அருள்மிகு வீழிநாதர் திருக்கோயிலில் உள்ள மூன்று லிங்கங்கள் காயத்ரீஸ்வரர், சாவித்திரீஸ்வரர், சரஸ்வதீஸ்வரர் ஆகிய திருப்பெயர்களில் விளங்குகின்றன. ஆக, இந்தத் தலத்துக்குச் சென்று வழிபட்டால், கல்விகேள்விகளிலும் கலைஞானத்திலும் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.

கலைவாணி வழிபட்ட திருவீழிமிழலை

திருவீழிமிழலை - திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் அருகே உள்ளது. இந்து மத திருமணச் சடங்குகளில் முக்கியமானவை பந்தற்கால் மற்றும் அரசாணிக்கால் சடங்கு. இவ்வகைத் திருமணக் கோலத்தில் அம்மையும் அப்பனும் அருளும் தலம்தான் திருவீழிமிழலை. இங்கே அழகிய மாமுலையம்மை உடனாய அருள்மிகு வீழிநாதராக அருள்பாலிக்கிறார் சிவனார். சோழநாட்டுக் காவிரித் தென்கரை தலங்களில் 61-வது தலமாக போற்றப்படுகிறது.

‘மாப்பிள்ளை சுவாமி’ என்று அழைக்கப்படும் இங்குள்ள வீழிநாதரின் திருவுருவமே தமிழகத்தில் மிகப் பெரியது என்று சொல்லப்

படுகிறது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல்பெற்ற தலமாகும். சேந்தனாரின் ‘திருவிசைப்பா’, அருணகிரிநாதரின் ‘திருப்புகழ்’, ஞானதேசிகரின் ‘பிள்ளைத்தமிழ்’, காளமேகப் புலவரின் ‘தனிப்பாடல்’ என பலராலும் போற்றப்பட்ட இந்தக் கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புராதனக் கோயில்.

இந்த ஊரில் வசித்த காத்தியாயன முனிவர் குழந்தைப்பேறு வேண்டி கடும் தவம்புரிய, அவருக்கு அருள்பாலித்த அம்பிகையிடம், ‘தாயே, நீயே எனக்கு மகளாக பிறக்க வேண்டும்; சிவபெருமானை மணந்து, மணக்கோலத்தில் காட்சித்தர வேண்டும்’ என்று வேண்டினார். அதன்படி மகள் பிறக்க, கார்த்தியாயினி என்ற பெயர்சூட்டி வளர்த்தார் முனிவர். உரிய பருவத்தில் இறைவனே மணமகனாக வருகிறார். கார்த்தியாயினிக்கு குழப்பம் உண்டாக்க ஆயிரம் உருவமாக இறைவன் காட்சித் தருகிறார். `யாருக்கு மாலை சூடுவது?’ எனத் தவித்த கார்த்தியாயினி, நந்திதேவரின் உதவியை நாடினார். அவர் கண்ஜாடையால் அடையாளம்காட்ட, இறைவன் திருவிளை

யாடலை எண்ணி அம்பாள் நாணத்துடன் சுவாமி திருவடியைப் பார்க்க, மற்ற மாய உருவங்கள் மறைய... சிவபெருமானுக்கு மாலை சூடினார் அம்பிகை.

கலைவாணி வழிபட்ட திருவீழிமிழலை

நந்திதேவரை சாட்சியாக வைத்து திருமணம் நடந்ததால் கோயில் விமானத்தில்கூட நந்தியுடன் திருமணக் கோலத்தில் சுவாமி, அம்பாள் இருப்பதைக் காணலாம். இறைவன், இந்த ஊர் பெண்ணை மணந்ததால் மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

திருமணம் ஆகாத பெண்கள் மாப்பிள்ளை சுவாமிக்கு மாலை சாற்றி அர்ச்சனை செய்துவிட்டு அந்த மாலையைப் பிரசாதமாகப் பெற்று, சுவாமி முன் உள்ள பந்தக்காலை மூன்றுமுறை வலம்வந்து வணங்க வேண்டும். அதன்பின் அந்த மாலையை வீட்டுக்குக் கொண்டுசென்று பூஜை அறையில் வைத்து. கோயிலில் அர்ச்சகர்கள் சொல்லித் தரும் மூன்று மந்திரங்களை 48 நாள்கள் கூறி வழிபட்டால், விரைவில் திருமணம் நிச்சயம் நடக்கும் என்பது இந்த தலத்தின் விசேஷம் ஆகும்.

விஷ்ணு, சக்ராயுதம் வேண்டி ஆயிரம் தாமரை மலர்களைக்கொண்டு தினமும் சிவபூஜை செய்தார். ஒருநாள் சிவனார் ஒரு பூவை எடுத்து மறைத்துவிட, விஷ்ணு தனது வலது கண்ணையே தாமரை மலராக்கி பூஜையை முடித்தார். உடனே அவருக்கு சக்ராயுதம் அளித்தார் சுவாமி. அந்த விஷ்ணு தங்கியிருந்த ஊர்தான் பக்கத்தில் உள்ள விஷ்ணுபுரம். விஷ்ணுவின் விழி மலரால் வணங்கப்பட்ட வீழிநாதரை கண்பார்வை கோளாறு உள்ளவர்கள் வந்து வணங்கினால் நோய் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது.

கலைவாணி வழிபட்ட திருவீழிமிழலை

சிறந்த சிவபக்தனான சுவேதகேது சிவபூஜையில் இருந்தபோது, அவனுடைய ஆயுள் முடிய இருந்தது. எனவே, யமன் சுவேதகேதுவின் உயிரைக் கவர பாசக்கயிற்றை வீசினான். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் யமனை சம்ஹாரம் செய்தார். பின்னர் தேவர்களின் பிரார்த்தனைக்கு இணங்கி யமனை மீண்டும் உயிர்ப்பித்தார். அதனால் திருக்கடவூர் போலவே இங்கேயும் தம்பதிகள் ஆயுஷ ஹோம பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள்’’ என்றார்.

கர்ப்பக்கிரகத்தின் பின்புறம் உள்ள துவாரம் வழியே தினந்தோறும் சாயரட்சை வேளையில் பச்சைக்கிளி பறந்து வந்து சுவாமியின் தோளில் அமர்ந்து செல்வது அற்புதக் காட்சியாகும். பல்லி கத்தினால் நல்ல சகுனம் என்பார்கள். இக்கோயிலில் வேண்டுதல் செய்துவிட்டு பிராகாரம் சுற்றி வரும்போது, பச்சைக்கிளி கத்தினால் வேண்டுதல் பலிக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை!