
திருவிளநகர் வரதர்
சோழ நாட்டு வைணவ திவ்யதேச தலங்களில் ஒன்று, திருவிளநகர் அருள்மிகு வரதராஜ பெருமாள் ஆலயம். மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரிக் கரையில் அமைந்துள்ள திருவிளநகரை, தென் காஞ்சி என்று சிறப்பிக்கிறார்கள் ஆன்மிக ஆன்றோர்.
இங்கு மூன்று புறங்களில் நந்தவனம் அமைந்திருக்க, நால்புறமும் மடவிளாகம் சூழ, எதிரில் சூரிய புஷ்கரணியுடன் எழிலுற அமைந்திருக் கிறது, பூமிதெவி - நீலாதேவி சமேத அருள்மிகு வரதராஜ பெருமாள். இந்த ஆலயம், கி.பி.11-ம் நுற்றாண்டைச் சேர்ந்தது என்கிறார்கள்.
நுழைவு வாயில் மொட்டைக் கோபுரத்துடன் திகழ்கிறது. ராமன் பட்டாபிஷேகம் உட்பட பல்வேறு சுதைச் சிற்பங்களுடன் திகழ்கிறது இந்தக் கோபுரம். நுழைவாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தால், கொடி மர தரிசனம். தொடர்ந்து மகா மண்டபம் மற்றும் அர்த்த மண்டபம்.
மகாமண்டபத்தின் வடக்கில் பாமா ருக்மிணி தேவியருடன் அருள்கிறார் ராஜகோபாலன். மணவாளமாமுனிகள், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரின் விக்கிரகத் திருமேனி களையும் தரிசிக்கலாம். விஸ்வக்சேனரின் தரிசனமும் நமக்கு கிட்டுகிறது.




இங்கே ராமன் விசேஷ கோலத்தில் அருள்கிறார். வில்லும் அம்பும் கொண்டு, கரிசடையுடன் கூடிய திருமுடி அழகனாக வனவாச காலத்தில் திகழ்ந்த கோலத்துடன் அருள்கிறார் ராமபிரான். அவருடன் சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் அருள்புரிகிறார்கள். ராமனின் இந்தக் கோலம் வேறெங்கும் காண்பதற்கரிய ஒன்று என்கிறார்கள்.
ராமன், சீதா, லட்சுமணன், அனுமன் ஆகியோரின் இந்தத் திருமேனி கள் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், நந்தவனத்தில் பூமிக்கடியில் எழுந்தருளி இருந்ததாகவும், அதன்பின்னர் வெளிப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டன என்றும் கூறுகிறார்கள்.
கருவறையில் பூதேவி, நீலாதேவியுடன் நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிய நிலையில் அருள்கிறார் வரதராஜ பெருமாள். தரிசிக்கும் பக்தர்களுக்கு, சாட்சாத் உப்பிலியப்பனைப் போன்றே நெடிய உருவத்துடன் காட்சி தருகிறார் வரதராஜ பெருமாள். அருகிலேயே மரச்சிம்மாசனத்தில் உபயநாச்சியாருடன் உற்சவர் வரதர் அருள்கிறார்.
பெருமாள் சந்ததிக்குத் தென்புறத்தில் தனிச் சந்நிதி கொண்டிருக்கிறார் பெருந்தேவி தாயார். இவர், பெருமாள் ஆலயத்தைக் காப்பதற்காகப் பிரதிஷ்டை செய்யப்பட்டவராம். கையில் தாமரையை ஏந்தியபடி, எப்போதும் அறக் கருணையைப் பொழிந்தவண்ணம் அருள்கிறார் தாயார். ஆக, ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் இந்தத் தாயாரை முதலில் தரிசித்து `பிராட்டியை முன்னிட்டு பெருமாளை வேண்டும்’ வழக்கதைக் கொண்டுள்ளார்கள்.
பெருந்தேவி தாயாருக்கு வெள்ளிக்கிழமை தோறும் திருமஞ்சனமும், மாலையில் புறப்பாடும் செய்யப்படுகின்றன. ஆடி மற்றும் தை மாத வெள்ளிக் கிழமைகளில் விசேஷ திருமஞ்சனம் - தீபாராதனைகள் நடைபெறுகின்றன. நவராத்திரியின் போது கொலு தரிசனம் காட்டும் பெருந்தேவி தாயாரை தரிசிக்க கண்ணிரண்டு போதாது. வேண்டும் வரங்களை வேண்டியபடி அருளும் அன்னையாகத் திகழ்கிறார் இந்தத் தாயார்.
திருக்கோயிலின் சுற்றுப் பிராகாரத்தில் பால ஆஞ்சநேயர் சந்ததி அமைந்துள்ளது. மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தியில் பெரியவர் இவர். இந்த அனுமனுக்கு வடை மாலை, வெண்ணெய், துளசி, வெற்றிலை மாலை சமர்ப்பித்து வழிபடுகிறார்கள். அனுமன் ஜயந்தி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
பிரம்ம ரிஷிகளில் தலைசிறந்தவர் ஜயிஷவ்யர். தவசீலரான இந்த முனிவர் பெருமாளை நேரில் தரிசித்து அவர் அருளால் மோட்சப்பேறு பெற விரும்பினார். இந்த நிலையில் ஓர் அசரீரி வாக்கி அவருக்கு வழிகாட்டியது.


சோழ தேசத்தில் உள்ள உசிரவனம் செல். அங்கே, சூரிய புஷ்கரணியின் கரையில் தவம் செய்து வா. விரைவில் விருப்பம் நிறைவேறும்’ என்றது அசரீரி வாக்கு. அப்படியே உசிர வனம் எனப்படும் இந்தத் தலத்தை அடைந்தார் முனிவர். பெருமழை காலத்தில் நீரீன் நடுவிலும், கோடையில் பஞ்சாக்னியின் நடுவிலும் நின்று கடும் தவம் புரிந்தார்.
அவருடைய தவத்தால் மகிழ்ந்த பகவான், பல அலங்கார அணிகளை அணிந்தவராக முனிவருக்குத் திருக்காட்சி கொடுத்தார். சிந்தை குளிர்ந்த ஜயிஷவ்யர், ``எனக்குக் கிடைத்த பாக்கியம் உலக மக்கள் யாவருக்கும் கிடைக்க வேண்டும். இதே கோலத்தில் இங்கே நீங்கள் எழுந்தருள வேண்டும்’’ என்று பகவானை வேண்டிக்கொண்டார்.
பகவானும் அப்படியே அருள்புரிந்தார். இந்தத் தலத்தில் முனிவரின் வேண்டுதல்படி நெடிய திருவுருவத்தில் அற்புதமாகக் கோயில் கொண்டார். மகத்துவம் வாய்ந்த இந்தத் திருக்கோயிலின் வழிபாட்டுச் சிறப்புகளை ஆலயத்தின் விஜய் பட்டர் பகிர்ந்துகொண்டார்.
“தொடர்ந்து 7 அமாவாசை தினங்கள் இந்தக் கோயிலுக்கு வந்து, சூரிய புஷ்கரணியில் நீராடி அங்கப்பிரதட்சனம் செய்து, வரதராஜ பெருமாளை வழிபட்டால், நம் மனக் கவலைகள் அனைத்தும் நீங்கும்; பரிபூரண ஆனந்தம் வாய்க்கும்.
சனி கிரகத்திற்கு அதிபதியான பெருமாளை, புரட்டாசி சனிக் கிழமைகள் மற்றும் அமாவாசை தினங்களில் தரிசித்து, அகல் தீபம் ஏற்றி வழிபடுவது விசேஷம். இதனால் சனிக்கிரக தோஷம் நிவர்த்தி கிடைக்கும். புதன் கிரகத்திற்கும் பெருமாளே அதிபதி. ஆகவே, புதன் கிழமைகளில் இவரை வழிபட்டால், கல்வி - கலைகளில் சிறக்கலாம்; தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறலாம்.
வெள்ளிக்கிழமை தோறும் பெருந்தேவியாருக்குத் திருமஞ்சனம் நடைபெறும். அந்த வைபவத்தைத் தரிசிக்கும் அன்பர்களுக்கு சகல நன்மைகளும் உண்டாகும். கல்யாணத் தடை, தோஷங்கள் மற்றும் பிரச்னைகளால் வருந்தும் கன்னிப் பெண்கள் தொடர்ந்து 7 வெள்ளிக் கிழமைகள் கோயிலுக்கு வந்து, தாயாருக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபடவேண்டும். நிறைவு நாளில் புடவை காணிக்கைச் சமர்ப்பித்து வணங்கவேண்டும். இதனால் விரைவில் கல்யாணம் கைகூடும். மனதுக்கினிய மண வாழ்க்கை அமையும்” என்றார் விஜய் பட்டர்.
நீங்களும் ஒருமுறை விளநகர் வரதரைக் குடும்பத்துடன் சென்று வழிபட்டு வாருங்கள், உங்கள் குலம் செழிக்க, நல்ல நிலையுடன் விளங்க வரம் தருவார் வரதர்.
எப்படிச் செல்வது?: மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் மயிலாடு துறையிலிருந்து சுமார்5 கி.மீ. தொலைவில் விளநகர் உள்ளது. பேருந்து நிற்கும் இடத்திலிருந்து வடக்கில் சிறிது தூரத்திலேயே கோயில் அமைந்துள்ளது. கார்,ஆட்டோ வசதி உண்டு.