ஆண்டுக்கு ஒருமுறையாவது திருப்பதி சென்று தரிசனம் செய்வது நம் வழக்கம். திருப்பதிக்குக் குடும்பத்தோடு செல்வது, நண்பர்களோடு செல்வது, பக்தர்கள் கூட்டமாகச் செல்வது என்று பல்வேறு வழிகளில் யாத்திரை செல்வதுண்டு. ஆனால், ஓர் ஊரே ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மொத்தமாகக் கிளம்பி ஒரே நேரத்தில் திருப்பதிக்குச் செல்கிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணத்திற்கு அருகே உள்ளது செட்டிமாரப்பட்டி கிராமம். இக்கிராம மக்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனியே பல குலதெய்வங்கள் இருந்தாலும் இவர்கள் அனைவருக்கும் இஷ்ட தெய்வம் திருப்பதி வேங்கடாஜலபதி. ஆண்டுக்கு ஒருமுறை ஊரில் உள்ள அனைவரும் ஒரே நாளில் கிளம்பி திருப்பதிக்குச் செல்லும் வழக்கம் உள்ளது என்பதைக் கேள்விப்பட்டு அந்த ஊருக்குச் சென்றோம்.
செட்டிமாரப்பட்டி ஊருக்குச் சென்றபோது ஊரே வெறிச்சோடியிருந்தது. அதிசயமாய்க் கண்ணில் பட்டார் கல்யாணி பாட்டி. தன் வீட்டு வாசலில் கால் நீட்டி அமர்ந்திருந்தார். அவரிடம் இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது என்று கேட்டோம்.

"எனக்குத் திருமணமானதிலிருந்து கிட்டத்தட்ட ஐம்பது வருஷமாக இதே ஊரில்தான் நான் இருக்கேன். அதுக்கு முன்னாடியிருந்தே இந்த ஊரில் இந்த வழக்கம் இருந்திருக்கு. மூன்றாண்டுக்கு ஒருமுறையோ, ஐந்தாண்டுக்கு ஒருமுறையோ எல்லோரும் ஒண்ணுகூடி ஊர்த் தலைவரிடம் கலந்துபேசி திருப்பதி யாத்திரைக்கு நாள் குறிப்போம். அப்புறம் அந்த நாளில் எல்லோரும் புறப்பட்டு திருப்பதி மலைக்குப் போய் அங்கேயே மூணு நாள்கள் தங்கியிருந்து சாமி தரிசனம் செய்வோம். இதுதான் வழக்கம். இப்போது மாரியப்பன்கிறவரோட தலைமையில்தான் ஊர்மக்கள் திருப்பதிக்குப் போயிருக்காங்க" என்றார்.
நடக்கமுடியாத அல்லது கால்நடைகளைப் பார்த்துக்கொள்ள என்று வயதானவர்கள் ஒருசிலரை மட்டும் விட்டுவிட்டு ஒட்டுமொத்த ஊரும் திருப்பதிக்குக் கிளம்பிவிட்டது. ஒரே நேரத்தில் இத்தனை பேரும் எப்படிப் பயணப்படுகிறார்கள் என்பது குறித்து அங்கிருந்த சக்தி என்பவரிடம் கேட்டோம்.

"கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மொத்தம் 15 பேருந்துகளிலும் தனியாக ஏழெட்டு கார்களிலும் ஊர்மக்கள் திருப்பதிக்குப் போயிருக்காங்க. சாமி தரிசனம் எல்லாம் முடிச்சிட்டு 04/03/2020 இரவுதான் ஊர் திரும்புவாங்க. ஊரின் காவலுக்காக காவேரிப்பட்டிணம் காவல் நிலையத்தில் மனு கொடுத்திருக்கோம். இரவு நேரங்களில் போலீஸார் ரோந்து வருவாங்க. ஏற்கெனவே இங்க நடக்க முடியாத முதியவர்களும் தோட்டந்தொரவுகளைப் பார்த்துக்கொள்ள சிலரும் இருக்காங்க. பகல்ல அவங்க பாத்துப்பாங்க. அதையும் மீறி இதுவரைக்கும் அப்படி எதுவும் அசம்பாவிதம் நடந்ததில்லை. இது இன்று நேற்று தோன்றிய பழக்கம் இல்லைங்க. ஆண்டாண்டுக் காலமாக நடந்துகொண்டேதான் இருக்குது" என்றார்.
மற்றுமொரு முறை ஊரைச் சுற்றிவந்தபோது வேங்கடம்மாள் என்பவர் கண்ணில் பட்டார். அவரிடம் இந்த வழக்கம் குறித்துப் பேசினோம்.

"இங்க எல்லோரும் பெருமாள் சாமி கும்புடுறவங்கதான். வீட்டுக்கு வீடு திருப்பதி சாமிக்குன்னு குடம் போன்ற உண்டியல் ஒன்று இருக்கும். வாராவாரம் சனிக்கிழமைகளில் குளித்துவிட்டு, நெத்தியில் நாமம் வைச்சிக்கிட்டு மஞ்சள் உடையணிந்து கையில் உள்ள சில்லறைக் காசுகளைக் கணக்குப் பார்க்காமல் அப்படியே அந்த உண்டியலில் போட்டுருவாங்க. திருப்பதிக்குப் போக முடிவாகியதும் பதினைந்து நாள்களுக்கு முன்பிருந்தே அசைவம் சாப்பிடுறத விட்ருவோம். உண்டியலில் இருக்கும் பணம் எத்தனை லட்சமாக இருந்தாலும் அதைக் கடவுளுக்கு ஒரு பங்கு, வழிச்செலவு மற்றும் தான தர்மத்திற்கு ஒரு பங்கு, சாவு வீடுகளில் சடங்கு செய்பவர்களுக்கு ஒரு பங்குன்னு மூணு பங்காகப் பிரிச்சிடுவோம். இதுதான் வழக்கம். மூணு வருஷமோ ஐந்து வருஷமோ இடைப்பட்ட காலத்துல நாம் வேண்டிக்கிட்ட காரியங்கள் நிறைவேறினதுக்கான நேர்த்திக்கடனா இந்த திருப்பதி யாத்திரையைச் செய்யுறோம். நல்லது கெட்டது எதுவானாலும் நாங்க திருப்பதி பெருமாளைத்தான் வேண்டிப்போம். அவர் மேல உள்ள நம்பிக்கைதான் எங்களைப் பெரிய குறையில்லாம நடத்துது. அதுக்காகத்தான் இந்த யாத்திரையை ஊரே கூடி நடத்துறோம்" என்றார் சிலிர்ப்போடு.