Published:Updated:

பதவி உயர்வு தரும் திட்டை... திருவருள் அருளும் திருவலிதாயம்... தரிசிக்க வேண்டிய குருஸ்தலங்கள்!

திட்டை
திட்டை

குருவுக்கு, குரு பதவியையும் குரு யோகத்தையும் தந்தருளிய புண்ணியம் நிறைந்த தலம் திட்டை. இங்கே தெற்கு நோக்கி தனிச் சந்நிதியில் அருள்கிறார் ராஜகுரு. இவரை வழிபட்டால் ராஜயோகம் கிட்டும் என்பது நம்பிக்கை.

தேவர்களுக்கெல்லாம் குரு எனும் உயர்ந்த பீடத்திலிருந்த குரு பகவானுக்கு இன்னும் உயர்வு பெற வேண்டும் என்று ஆவல் எழுந்தது. தனது விருப்பத்துக்கு இறையருளே கைகொடுக்கும் என்று முடிவு செய்தவர், அடர்ந்த வனப்பகுதியை அடைந்தார். அங்கு கோயில் கொண்டிருந்த இறைவனை மனத்தில் இருத்தி கடும் தவத்தில் மூழ்கிப் போனார். அவரது தவத்துக்கு அருள் வழங்கத் திருவுளம் கொண்ட சிவப்பரம்பொருள், குருபகவானுக்குத் திருக்காட்சி வழங்கினார். அதுமட்டுமா? நவகிரக பதவியையும் வழங்கி, பிரகஸ்பதியை ஆசீர்வதித்தார்.

குரு பகவான்
குரு பகவான்

இங்ஙனம், தேவகுருவான பிரகஸ்பதி, கிரகங்களில் ஒருவராக பதவி உயர்வு பெற்ற தலம் திட்டை. தஞ்சாவூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இது. அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை சமேத அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் குடியிருக்கும் திட்டை திருக்கோயிலில், ஸ்வாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளுக்கு நடுவே தனிச் சந்நிதி கொண்டிருக்கிறார் குரு பகவான். சிறந்த வரப்பிரசாதி!

பஞ்சபூதங்களுக்குமாக ஐந்து சிவலிங்கங்கள் இத்தலத்தில் உள்ளன. நான்கு மூலைகளில் நான்கு லிங்கங்களும், கருவறையில் வசிஷ்டர் வழிபட்ட ஐந்தாவது சிவலிங்கத் திருமேனியும் உள்ளன.

இங்கே சிவனாருக்கு இணையாக மிக உயர்ந்த பீடத்தில் காட்சி தருகிறாள் அம்பிகை. அவளின் திருச்சந்நிதிக்கு மேலே, விதானத்தில் 12 ராசிக் கட்டங்களும் செதுக்கப்பட்டுள்ளன. அனைத்து ராசிக்காரர்களின் கஷ்டங்களையும் நீக்கி அருள்கிறாள் தேவி.

குருவுக்கு, குரு பதவியையும் குரு யோகத்தையும் தந்தருளிய புண்ணியம் நிறைந்த தலம் திட்டை. இங்கே தெற்கு நோக்கி தனிச் சந்நிதியில் அருள்கிறார் ராஜகுரு. இவரை வழிபட்டால் ராஜயோகம் கிட்டும் என்பது நம்பிக்கை.

சந்திரனுக்கும் உகந்த தலம் இது. திங்களூரில் தன் சாபம் தீர்த்த சிவனாருக்குத் திட்டையில் தன் நன்றியைச் செலுத்துகிறார் சந்திர பகவான் என்பர். அதாவது, சிவலிங்கத் திருமேனிக்கு மேலே சந்திரகாந்தக் கல்லாக இருந்து, காற்றிலிருந்து ஈரப்பதத்தை எடுத்து, 24 நிமிடங்களுக்கு ஒருமுறை நித்ய அபிஷேகம் செய்கிறார் சந்திரன்.

திட்டை, பைரவரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலமும்கூட. ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டகச் சனி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தேய்பிறை அஷ்டமியில் இங்கு அருளும் பைரவமூர்த்தியை வழிபட்டால், விரைவில் தோஷங்கள் நீங்கும்; சந்தோஷம் பெருகும் என்பது ஐதிகம்.

எப்படிச் செல்வது?: தஞ்சாவூரிலிருந்து மெலட்டூர் செல்லும் வழியில் சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது, தென்குடித் திட்டை என்னும் திட்டை திருத்தலம். தஞ்சையிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

யோகங்கள் அருளும் குருவித்துறை குரு பகவான்!

திருவருள் அருளும் திருவலிதாயம்

திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட தொண்டை நாட்டுத் திருத்தலங்களில் 21 வது திருத்தலம் திருவலிதாயம். இந்தத் தலத்தை அருணகிரிநாதர் வள்ளலார் ஆகியோரும் போற்றிப்பாடியுள்ளனர்.

மேனகையின் சாபத்தால் குருவியாக மாறிய பரத்வாஜ முனிவர் இந்தத் தலத்துக்கு வந்து, பல்லாண்டு காலம் சிவ வழிபாடு செய்து விமோசனம் பெற்றார் என்கிறது தலபுராணம். அவர் மட்டுமின்றி, இந்திரன், பிரம்மன், விஷ்ணு, சூரிய சந்திரர், அக்னி, அனுமன் மற்றும் நட்சத்திர தேவதையரும் இங்கு வந்து வழிபட்டு, அருள் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக, குருபகவானும் சிவபூஜை செய்து வழிபட்ட தலம் இது என்பதால், திட்டை, ஆலங்குடி, திருச்செந்தூர் போன்று இதுவும் குரு பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.

குருப்பெயர்ச்சி
குருப்பெயர்ச்சி

இங்கே அருள்பாலிக்கும் குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, முல்லைப் பூவால் அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வணங்கினால் சகல தோஷங்களும் விலகி திருவருள் கூடும் என்கின்றனர் பக்தர்கள்.

எப்படிச் செல்வது?

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து (சுமார் 6 கி.மீ. தொலைவு) ஆவடி, அம்பத்தூர் (ஓ.டி.) செல்லும் பேருந்தில் ஏறி, பாடி லூகாஸ் டி.வி.எஸ். பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். இங்கிருந்து ஐந்து நிமிட நடைதூரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ ஜகதாம்பிகை சமேத ஶ்ரீதிருவலிதாய ஸ்வாமி திருக்கோயில்.

அடுத்த கட்டுரைக்கு