திருக்கதைகள்
Published:Updated:

வாரணமும் தோரணமும்

தோரணமலை
பிரீமியம் ஸ்டோரி
News
தோரணமலை

வாரணமும் தோரணமும்

மானுடப் பிறப்பெடுத்து வந்துவிட்டால், பிரம்மன் எழுதிவைக்கும் தலை யெழுத்தை மாற்றுவது இயலாத காரியம் என்பது ஞானநூல்கள் சொல்லும் விளக்கம். `இல்லை... வந்த வினைகளையும் வருகின்ற வல்வினைகளையும் மாற்றும் வல்லமை எங்கள் கந்தனுக்கு உண்டு’ என்பார்கள் முருகப்பெருமானின் பக்தர்கள்.

தோரணமலை
தோரணமலை

அருணகிரிநாதர், திருச்செந்தூர் முருகனைப் போற்றும் கந்தர் அலங்காரம் பாடல் ஒன்றில், `கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே’ என்று பாடுகிறார்.

கந்தப்பெருமான், சிலம்பொலி முழங்கும் தன் திருவடிகளை நம் தலையில் பதித்து நான்முகன் எழுதிவைத்த தலையெழுத்தை மிக நல்லதாக மாற்றிவிடுவாராம். இது உண்மை என்பதால்தானே கந்தன் அருள் சுரக்கும் ஆலயம்தோறும் கடலென கூடித் திளைக்கிறது அடியார்க் கூட்டம். தோரண மலையிலும் அப்படித்தான்... குகையழகன் குமரனைத் தேடி வரும் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் இருக்கிறது.

``எங்கள் தோரணமலையானின் அற்புதங்களைப் பேச ஆரம்பித்தால் ஆயுள் பற்றாது’’ என்று சிலிர்ப்போடு கூறுகிறார் செண்பக ராமன். அன்பர்கள் பலரின் உதவியோடும் பக்தர்களின் ஒத்துழைப்போடும் இந்தத் திருக் கோயிலை, வழிபாடுகள் மற்றும் விழாக்களை திறம்பட நிர்வகித்து வருகிறார் இவர்.

``இங்கு வரும் ஒவ்வொருவரும் தோரண மலை முருகன் அருளால் ஏதேனும் ஒரு அற்புதத்தைச் சந்தித்தவர்களாகவே இருப் பார்கள். பிணி தீர்ந்தது, மணம் முடிந்தது, வேலை கிடைத்தது, வீடு கிடைத்தது, பிள்ளை பிறந்தான்... என்று நீளும் அவர்கள் அடைந்த பலாபலன்கள்’’ எனச் சொல்லும் செண்பகராமன், தன்னுடைய தந்தையார் ஆதிநாராயணன் காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

``தோரண மலைக்கு அருகிலுள்ள ஊர் மடத்தூர். இவ்வூர் மக்கள் பலரும் சென்னையில் வசிக்கிறார்கள். மாசித் திருவிழாவையொட்டி சொந்த ஊருக்கு வருவது உண்டு. அப்படி வந்தவர்கள் ஒருமுறை தோரண மலைக்கும் வந்தார்கள்.

தரிசனம் முடித்துத் திரும்பும்போது அப்பா வைப் பார்த்ததும் முகம் கொள்ளா பூரிப்புடன் ஒரு தகவலைப் பகிர்ந்தார்கள். சென்னையில் பிரபலமான சினிமாத் தியேட்டர் ஒன்றில், தோரண மலை கோயிலைப் பற்றி ஸ்லைடு விளம்பரம் போடப்படுகிறது என்றார்கள் சந்தோஷத்துடன். எனக்கும்கூட திகைப்புதான். `நம்ம கோயில் ஸ்லைடு விளம்பரம், சென்னை தியேட்டரில் எப்படி...’ என்று யோசித்தேன். அதுகுறித்து விசாரித்தபோதுதான் அப்பா ஒரு தகவலைப் பகிர்ந்துகொண்டார்கள்.

ஒருமுறை... புகழின் உச்சத்தில் இருந்த நடிகர் ஒருவரின் மனைவி இங்கு வந்தாராம். மலைக்கோயிலையும் முருகனையும் உள்ளம் உருக தரிசித்து வழிபட்டுள்ளார். அனைத்தும் நல்லபடியாக முடிந்து அவர் புறப்படுவதற்குள் நேரம் இருட்டிவிட்டது. காரில் ஏறும்போதுதான் கவனித்திருக்கிறார்... அவர் அணிந்திருந்த பாரம்பர்ய நகை ஒன்று காணாமல் போய்விட்டதை.

மிகவும் கலங்கிப்போனாராம். அவர் நினைத்தால் அதைப்போல் பல நகைகள் வாங்கலாம். ஆனால், அது அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த பாரம்பர்ய நகை என்பதால் மிகவும் தவித்துப்போனார்.

அருகிலிருந்தவர்கள் இயன்றவரையிலும் சுற்றுமுற்றும் தேடிப் பார்த்தும் தொலைந்த ஆபரணம் கிடைத்தபாடில்லை.

`தோரணமலையானை தரிசித்துவிட்டு சந்தோஷமாக அல்லவா அவர்கள் செல்ல வேண்டும்’ என்று நினைத்த என் தந்தையார், தானே தேடுவதற்கு முடிவு செய்தார். அதற்குள்ளாக வெளிச்சம் நன்றாக மங்கிவிட்டது. எனவே, லாந்தர் விளக்குகளை வரவழைத்தார்களாம்.

உதவியாளர் ஓரிருவரை உடன் அழைத்துக்கொண்டாராம் அப்பா. அந்த அம்மாவிடம் `நீங்கள் இங்கே எந்தப் பகுதிக்கு எல்லாம் சென்று வந்தீர்களோ, அங்கெல்லாம் தேடுவோம்... நாங்கள் வெளிச்சம் காட்டியபடி உடன் வருகிறோம்’ என்றுகூறி தேடத் தொடங்கினார்களாம். நேரம் சென்றதே தவிர, நகை கிடைத்த பாடில்லையாம்.

`தொலைந்தது இனி கிடைக்காது’ என்று அந்த அம்மையார் முடிவெடுத்த நிலையில், ஓரிடத்தில் பளீரென்று வெளிச்சம்... ஆமாம் அவர் தொலைத்த நகைதான் அது.

ஓடோடிச் சென்று கையில் எடுத்தவர், மகிழ்ச்சி யில் கண்கள் கலங்க மலைக்கோயிலை நோக்கி வணங்கி முருகனுக்கு நன்றி சொன்னாராம். அத்துடன், நன்றிக் காணிக்கையாக கோயிலுக்கு ஒரு தொகை தரவும் முன்வந்தாராம். அப்போது என் தந்தையார், `சென்னையில் இருப்பவர்களும் தோரணமலையானின் மகிமையை அறிய வேண்டும். அதற்கேற்ப, அவர்களுக்குச் சொந்த மான திரையரங்கில் தோரணமலை விளம்பர ஸ்லைடு போட்டால் நன்றாக இருக்கும்' என்று கேட்டுக்கொண்டாராம்.

அதன்படி போடப்பட்ட ஸ்லைடைப் பார்த்துவிட்டே மடத்தூர் மக்கள் தகவல் சொல்கிறார்கள் என்று விவரம் சொன்னார் அப்பா.

பிரபலமான அந்தத் தியேட்டர் எது தெரியுமா? சென்னை சாந்தி தியேட்டர். அந்த அம்மையார், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ஐயாவின் மனைவி கமலாம்மாள்’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறி முடித்தார் செண்பக ராமன்.

இன்றும் தொடர்கிறது தோரணமலையானின் அற்புதங்கள். தைப்பூசப் பெரு விழாவுக்குத் தயாராகிறது அவன் ஆலயம்.

தைப்பூச நன்னாளில்தான் முதலில் நீரும், அதிலிருந்து உலகமும் உயிர்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஒரு தைப் பூச நாளில்தான் முருகன் வள்ளிக்குறத்தியை மணந்தார் என்றும் தகவல் சொல்கின்றன சில ஞானநூல்கள்.

சூரனை வெல்ல முருகப் பெருமான் அன்னையிடம் `சக்தி வேல்’ பெற்றதும் தைப்புசத் திருநாளில்தான். ஆகவே தைப்பூசம் முருகனுக்கு மிக உகந்தது.

தோரணமலையில் வரும் பிப்ரவரி - 5 ஞாயிறு; தைப்பூசத் திருநாளன்று அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் வழிபாடுகள் தொடங்கவுள்ளன. காலை 8 மணியளவில் முருகன் திருக்கல்யாணம், 12 மணியளவில் உச்சிக்கால பூஜை, அன்னதானம், மாலையில் 501 சரவண ஜோதி திருவிளக்குபூஜை என விழா வைபவங்கள் நடைபெறவுள்ளன.

விடுதலைப்போராட்ட தியாகிகள், உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் கெளரவிக்கப்படுதல், பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், பழங்குடி மக்களின் பாரம்பர்ய நடனம் ஆகியவை விழாவின் சிறப்பம்சங்கள் ஆகும்.

நீங்களும் இந்த விழாவில் கலந்து கொள்ளலாம். தோரண மலை யானைத் தரிசித்து, அவனின் பேரருளைப் பரிபூரண மாகப் பெற்று வரலாம்.

-தரிசிப்போம்....

மகா ஸ்கந்த ஹோமம்!

தைப்பூசத் திருநாளன்று தோரணமலையில் சக்திவிகடன் சார்பில் மகா ஸ்கந்த ஹோமம் நடைபெறவுள்ளது. அசுர சக்திகளின் தொல்லைகள் நீங்க, தேவாதி தேவர்கள் அனைவரும் கூடிச் செய்த மகா ஹோமம் இது.

இந்த ஹோமத்தில் சங்கல்பித்துப் பிரார்த்திப்பதன் மூலம் சகல காரியங்களிலும் தடைகள் நீங்கி வெற்றி பெறலாம். கிரக தோஷங்கள், தீவினைகள், பிணித் துயர்கள் நீங்கும்; தீரா கடன் பிரச்னைகளில் இருந்தும் விடுபடலாம். நீங்களும், இந்த ஹோமத்தில் சங்கல்பப் பிரார்த்தனையைச் சமர்ப்பித்து முருகனின் திருவருளைப் பெறலாம்.

வாசகர்கள் கவனத்துக்கு: இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், பெயர் நட்சத்திரத் துடன் ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்பம்+விபூதி+ குங்குமம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).