Published:Updated:

`தலையில் தேங்காய் உடைத்து சாட்டையால் அடி வாங்கி நேர்த்திக்கடன்!' -திண்டுக்கல் அருகே விநோதத் திருவிழா

தலையில் தேங்காய் உடைக்கும் பூசாரி
தலையில் தேங்காய் உடைக்கும் பூசாரி

வேண்டுதல் நிறைவேறினால், தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டை அடி வாங்கியும் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள் பக்தர்கள்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே உள்ளது ஜெ.ஊத்துப்பட்டி. இங்குள்ள ஸ்ரீ மாலம்மாள் கோயில் மாசித்திருவிழா 13 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நடைபெற்று வருகிறது. 3 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் ஸ்ரீ மாலம்மாள், ஸ்ரீ சென்னப்பன், ஸ்ரீ கருப்பணசாமி ஆகிய கிராம தெய்வங்களுக்குச் சிறப்பு வழிபாடு ஆராதனைகள் நடைபெறும். இரவு நேரங்களில் மேள தாளங்கள் முழங்க, கரகாட்டம், கிராமிய கலைநிகழ்ச்சிகளென ஊரே மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கிறது.

தலையில் தேங்காய் உடைக்கும் பூசாரி
தலையில் தேங்காய் உடைக்கும் பூசாரி

குழந்தைகளுக்கு மொட்டையடிப்பது போன்ற வழக்கமான நிகழ்வுகளைத் தாண்டி, மற்றொரு சிறப்பு இந்தத் திருவிழாவுக்கு இருக்கிறது. அதுதான் இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வு. தங்கள் வேண்டுதல் நிறைவேறினால், தலையில் தேங்காய் உடைப்பதாகத் தெய்வத்திடம் வேண்டுவார்கள்.

வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், விரதம் இருந்து தலையில் தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். அத்துடன் பூசாரியிடம் சாட்டையில் அடிவாங்கும் நேர்த்திகடனும் இங்கு நடக்கும்.

பெண்கள் தலையில் தேங்காய் உடைப்பு
பெண்கள் தலையில் தேங்காய் உடைப்பு

இன்று, நடைபெற்ற திருவிழாவில் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனாகத் தலையில் தேங்காய் உடைத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆண், பெண் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து, பூசாரி நேர்த்திக்கடனை நிறைவேற்றி வைத்தார்.

மேலும், சாட்டையால் அடி வாங்கும் நேர்த்திகடன் நிகழ்வும் திருவிழாவில் நடைபெற்றது. இதில் பூசாரி, பக்தர்களைச் சாட்டையால் அடித்து அவர்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றி வைத்தார். இந்த விநோத திருவிழாவைக் காண தமிழகம் முழுவதிலிருந்தும் 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர்

சாட்டையடி வாங்கும் நிகழ்வு
சாட்டையடி வாங்கும் நிகழ்வு

விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்க்கவுண்டர் பழனிசாமி, பூசாரி மாலையன், வெள்ளைவரிசு முருகன், குருக்கள் எஸ்.மணி, கோல்காரர் வி.எம்.லகுமையா, ஆபரணப் பெட்டிக்காரர் எம்.ராஜ், கிண்டி பி.ராமசாமி தலைமையிலான அருது குல - ஆரிய குல வம்சத்தைச் சேர்ந்த விழா கமிட்டியார்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். மாலம்மாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமையும் கருப்பணசாமி கோயிலில் திங்கள்கிழமையும் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதிலிருந்து ஆயிரக்கணக்கான குரும்பர் இன மக்கள் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தனர்.

அடுத்த கட்டுரைக்கு