Published:Updated:

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா: சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் - பக்தர்களுக்கு அனுமதியில்லை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நாள்களைத் தவிர மற்ற நாள்களில் தினசரி காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 10,000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். இதில் 50 சதவிதம் ஆன்லைன் பதிவு செய்தவர்களையும், 50 சதவிதம் நேரில் வருபவர்கள் என அனுமதிக்கப்படுவர்.

ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசிமாதம் வளர்பிறையில் வரும் சஷ்டி கந்த சஷ்டியாகக் கொண்டாடப்படும். இதை ஒட்டி அனைத்து முருகன் கோயில்களிலும் ஆறுநாள்கள் திருவிழா கொண்டாடப்படும். பக்தர்கள் ஆறுநாள்கள் விரதமிருந்து ஆறாம் நாள் சூரசம்ஹாரத்தை தரிசனம் செய்து விரதம் முடிப்பர். முருகனின் அறுபடைவீடுகளில் திருச்செந்தூரில் கந்த சஷ்டிப் பெருவிழா சிறப்பாக நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வர். இந்த ஆண்டு 4.11.2021 தொடங்கி 15.11.2021 வரை கந்த சஷ்டிப் பெருவிழா நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் கலந்துகொள்வதற்குப் பல கட்டுப்பாடுகளை கொரோனா அச்சம் காரணமாக கோயில் நிர்வாகம் விதித்துள்ளது. மேலும் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் ஆகிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்ட கந்த சஷ்டி விழா தொடர்பான நடவடிக்கைகள் குறித்த கூட்டத்திற்குப்பின் விரிவான செய்தி அறிக்கை வெளியிடப்பட்டது.

திருச்செந்தூர் முருகன்
திருச்செந்தூர் முருகன்

அதில், "வழக்கமாகக் கந்த சஷ்டித் திருவிழாவின்போது உலகெங்கும் இருந்து 15,000 முதல் 20,000 வரை பக்தர்கள் திருச்செந்தூர் கோயில் பகுதியில் வருகை தந்து இரவில் தங்குவார்கள். மேலும் இங்குள்ள விடுதிகளிலும் பேக்கேஜ் முறையில் ஒரு வார காலத்திற்கு விடுதிகளிலும் , மடங்களிலும் தங்குவார்கள். இந்த ஆண்டு பக்தர்கள் கோயிலுக்குள் மற்றும் கோயில் வளாகப் பகுதியில் தங்க அனுமதி இல்லை. திருச்செந்தூரில் உள்ள விடுதிகள், மடங்கள் மற்றும் மண்டபங்களில் பேக்கேஜ் முறையில் முன்பதிவு செய்து தங்குவதற்கும் அனுமதி இல்லை. கடற்கரை பகுதிக்குச் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.

மேலும் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நாள்களை தவிர மற்ற நாள்களில் தினசரி காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 10,000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். இதில் 50 சதவிதம் ஆன்லைன் பதிவு செய்தவர்களையும், 50 சதவிதம் நேரில் வருபவர்களையும் அனுமதிக்க இருக்கிறார்கள். முதலில் வருபவருககு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படுவர். திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும்.

பல்வேறு தற்காலிகக் கொட்டகைகளை ஏற்படுத்திக் கூடுதலாக வரும் பக்தர்களை சமூக இடைவெளியுடன் அமர வைத்து சுவாமி தரிசனத்திற்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்படும். இப்பகுதிகளில் கை கழுவுவதற்கான வசதியும், முககவசமும், சானிடைசர் வசதியும் ஏற்படுத்தித் தரப்படும். தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்குக் குடிநீர், தற்காலிகக் கழிப்பறை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல்வேறு துறைகளின் மூலம் முறையாக ஏற்பாடு செய்யப்படும்.

பக்தர்கள் கோயில் பிராகாரப் பகுதியில் விரதம் இருக்கவோ, அங்கப்பிரதட்சணம் செய்யவோ அனுமதி இல்லை. கட்டணம் அடிப்படையில் உபயதாரர்கள் மூலம் திருக்கோயில் பிராகாரத்தில் நடைபெறும் தங்கத்தேர் திருவீதி உலா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த ஆணடு தனியார் அமைப்புகளுக்கும் அன்னதானம் வழங்க அனுமதி இல்லை.

சூரசம்ஹாரம்
சூரசம்ஹாரம்

லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் சூரசம்ஹாரம் (9.11.2021) மற்றும் திருக்கல்யாண நிகழ்வுகளில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோயில் பிராகாரத்தில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வை பக்தர்கள் தொலைக்காட்சி மற்றும் இணையம் மூலம் தரிசிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருக பக்தர்கள் தரிசிக்க விரும்பும் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தை நேரில் தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறித்து முருக பக்தர்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு