Published:Updated:

திருச்செந்தூர்: தகரக்கொட்டகை, 2000 போலீஸார்... கடற்கரையில் 45 நிமிடங்களில் நிறைவடைந்த சூரசம்ஹாரம்!

சூரசம்ஹாரம்
சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், கடற்கரை முகப்பு பகுதியில் தகரக்கொட்டகைக்குள் முதல்முறையாக பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடுதான் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாக்களில் கந்த சஷ்டி திருவிழாவும் ஒன்று. சூரபத்மன் என்ற ’ஆணவம்’, சிங்கமுகன் எனும் ’கண்மம்’, தாரகாசூரன் என்ற ’மாயை’ ஆகிய மும்மலங்களால் ஏற்படும் தீமையை ஒழிக்கவே ‘ஞானம்’ என்ற முருகப் பெருமான் தோன்றி, போரிட்டு வெல்கிறார். இந்த வெற்றி வீர நிகழ்ச்சிதான் கந்தசஷ்டி திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

வெற்றிவேல்
வெற்றிவேல்

தமிழகத்தின் பல முருகன் தலங்களில் சஷ்டியின் போது சூரசம்ஹாரம் நடைபெற்றாலும், அறுபடை வீடுகளில் கடற்கரை ஓரத் தலமான திருச்செந்தூரில் நடைபெறுவது சிறப்பாகும். ”சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என ஒரு பழமொழி உண்டு. ”சஷ்டியில் விரதமிருந்தால் அகப்பையில் (கருப்பையில்) குழந்தை பிறக்கும்” என்பதுதான் இதன் விளக்கம். குழந்தை வரம் வேண்டும் தம்பதிகளுக்கு உகந்த விரதமாகச் சஷ்டி விரதம் சொல்லப்படுகிறது. அத்துடன், வியாபார முடக்கம், தீராத நோய்ப் பிரச்னை, கடன் தொல்லை ஆகியவற்றில் இருந்தும் விடுபட இவ்விரதத்தை மேற்கொள்கிறார்கள் பக்தர்கள்.

45 நிமிடங்களில் நிறைவடைந்த சூரசம்ஹாரம்!

இந்த 6 நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றி, பாலும், பழமும் மட்டும் உட்கொண்டு விரதம் மேற்கொண்டு சூரசம்ஹார நிகழ்ச்சியில் முருகனை தரிசனம் செய்து விரதத்தைப் பூர்த்தி செய்வார்கள். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா, கடந்த 15-ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. விழாவின் 6-ம் நாளான இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து உற்சவரான ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. மாலை 3.30 மணிக்கு சூரபத்மன் தன் படைகளுடன் மேளதாளம் முழங்கக் கடற்கரைக்கு வந்து போருக்குத் தயாரானார்.

சூரசம்ஹாரம்
சூரசம்ஹாரம்

சரியாக மாலை 4.35 மணிக்கு பஞ்சவாத்தியங்கள் முழங்க சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்திற்காகக் கடற்கரையில் எழுந்தருளினார். 4.49 மணிக்கு ஆனைமுகன் சம்ஹாரமும், 4.49 மணிக்கு சிங்கமுக வதமும், 5.03 மணிக்கு சூரபத்மன் வதமும், 5.12 மணிக்கு மாமரத்தில் இருந்து பிரிந்து சூரபத்மன் சேவற்கொடியாக முருகப் பெருமானிடம் சரணாகதி அடையும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. வழக்கமாக 4.35 மணிக்கு துவங்கும் சூரசம்ஹாரம் 6.30 மணி வரை நடைபெறும். ஆனால், இந்தாண்டு 45 நிமிடங்களில் நிறைவுபெற்றது.

சம்ஹாரத்திற்குப் பிறகு சாயாபிஷேகம்!

சம்ஹாரத்திற்குப் பிறகு, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானை அம்பாளுடன் எழுந்தருளி, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அசுரனை வதம் செய்த முருகனைக் குளிர்விக்கும் விதமாக, 108 மகாதேவர் சந்நிதி முன்பு ’சாயாபிஷேகம்’ நடைபெற்றது. 'சாயா' என்றால் நிழல் என்று பொருள். வெற்றி வேலனான ஜெயந்திநாதருக்கு எதிரில் வைக்கப்படும் கண்ணாடிக்கு அபிஷேகங்கள், விசேஷ தீபாராதனை நடைபெற்றது. நாளை மாலை தெய்வானை அம்பிகைக்கும் முருகப் பெருமானுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

வெற்றிவேல் - சேவலை ஆட்கொண்ட வீரவேல்
வெற்றிவேல் - சேவலை ஆட்கொண்ட வீரவேல்

வழக்கமாக சூரசம்ஹாரத்தைக் காண தமிழகத்தின் பல மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து மட்டுமில்லாமல், சிங்கப்பூர், இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருவார்கள். ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. சூரசம்ஹார நிகழ்ச்சி திருக்கோயிலின் முன் பிரகாரத்தில் நடைபெறுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

கடற்கரை முகப்பில் தகரக்கொட்டகைக்குள் நடந்த சம்ஹாரம்!

பா.ஜ.கவினர் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள், ”சூரசம்ஹாரத்தை பாரம்பர்ய வழக்கத்தை மாற்றாமல் கடற்கரையிலேயே நடத்த வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்திருந்தனர். திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமசுப்பிரமணிய ஆதித்தன், இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

கடற்கரை மறைக்கபட்ட தகரக்கொட்டகை
கடற்கரை மறைக்கபட்ட தகரக்கொட்டகை

மனு மீதான விசாரணையின் போது, “கடற்கரையின் முகப்பு பகுதியில் சூரசம்ஹர நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால், நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதியில்லை” என அறநிலையத்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக கடற்கரையின் முகப்பு பகுதியில் சுமார் 300 மீட்டர் தொலைவில் மணல் சமன் செய்யப்பட்டது. கடற்கரை முகப்பு பகுதியில் திறந்தவெளியாக இல்லாமல் தகரக்கொட்டகை அமைக்கப்பட்டு, கொட்டகைக்குள்ளேயே நடைபெற்றது. கடலே தெரியாமல் மறைக்கப்பட்டிருந்தது.

தொடங்கியது திருவண்ணாமலை தீபத் திருவிழா... அதிகாலையில் நடந்த கொடியேற்றம்!

சம்ஹாரத்தின்போது வெடிக்காத மத்தாப்பு!

வழக்கமாக சூரனை வதம் செய்யும்போது முருகப் பெருமானுக்கும், சூரபத்மனுக்கும் இடையே எதிரெதிர் மத்தாப்புகள் வெடிப்பது நடைபெறும். இந்தாண்டு சூரசம்ஹாரத்தின் போது மத்தாப்பு வெடி வெடிக்கப்படவில்லை. 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தகரக் கொட்டகைக்குள் நடந்த சம்ஹாரம்
தகரக் கொட்டகைக்குள் நடந்த சம்ஹாரம்

கந்தசஷ்டி விரதம் துவங்கிய நாளில் இருந்தே கோயில் பிரகாரம், கடற்கரை, மடங்கள், வள்ளிகுகை, நாழிக்கிணறு, மரத்தடி நிழல் எனத் திரும்பும் திசையெங்கும் விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் அங்கப் பிரதட்சனம், காவடியாட்டம், பஜனை, ஆடல், பாடல், கோஷங்களால் பக்தி பரவிக் காணப்படும். அதேபோல, சூரசம்ஹார நிகழ்ச்சியின் போதும் பக்தர்களின் ”அரோகரா” கோஷம் விண்ணை முட்டும். இந்தாண்டு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், ”அரோகரா”, “வேல்வேல்... வெற்றிவேல்.” கோஷங்கள் எதிரொலிக்கவில்லை.

அடுத்த கட்டுரைக்கு