திருக்கதைகள்
Published:Updated:

திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
News
திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி

திருமலை, நாடெங்கும் உள்ள பக்தர்களை இழுக்கும் ஆன்மிகக் காந்தம். அங்கு கோயில் கொண்டுள்ள அழகன் அகில உலகத் தையும் ஆளும் ஆதிநாராயணன். வேங்கட மலை மீது நின்றதாலே வேங்கடவன். ஒருமுறை அவனை தரிசனம் செய்துவிட்டால் மீண்டும் மீண்டும் தரிசிக்கும் ஆவலை ஏற்படுத்துபவர். ஏன் அங்கேயே தங்கிவிட மாட்டோமா என்னும் பேராவலைத் தூண்டுகிறவர். அப்படி அந்தக் காலத்தில் திருமலைக்கு வந்து, பின் அங்கேயே தங்கி அவனோடு கலந்த பக்தர்கள் அநேகர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஹாதிராம் பாவாஜி.

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி

திருமலை கோயிலுக்கு வலதுபக்கம் உள்ள மேட்டில் அமைந்திருக்கிறது ஹாதிராம் பாவாஜியின் மடம். ஒருகாலத்தில் திருமலை ஆலயப் பராமரிப்பிலும் ஆராதனைகளிலும் முக்கியப் பங்காற்றிய மடம் இது என்கிறார்கள்.

இந்த உலகத்தின் பரம்பொருளைச் சீராட்டித் தாலாட்டி வளர்க்க யசோதா என்ன தவம் செய்தாளோ என்று ஒரு பாடல் உண்டு. உண்மையில் யசோதாவை விட கோகுலத்தில் வளர்ந்த சிறுவர்கள்தான் அதிகம் தவம் செய்தவர்களாக இருந்திருப் பார்கள். காரணம் அவர்கள் கண்ணனோடு விளையாடும் பாக்கியம் பெற்றார்கள்.

சர்வ வியாபகனான அந்தப் பரம்பொருள் சிறுவனாக வளர அவனோடு மாடு மேய்த்து, சண்டைபிடித்து, வெண்ணெய் திருடி, குழலிசை கேட்டு ஆடிப்பாடி மகிழ்ந்த அந்தச் சிறுவர்களின் பாக்கியம் அலாதியானது. இவை அனைத்தும் அவர்களின் தன்மையால் அவர்களுக்குக் கிடைக்கவில்லை, கிருஷ்ணனின் கருணையால் கிடைத்தது. அப்படி அந்தப் பரந்தாமனோடு விளையாடும் பாக்கியம் பெற்ற மகான் பாவாஜி.

வட இந்தியாவில் அயோத்திக்கு அருகே டால்பத்பூர் என்னும் கிராமத்தில் கி.பி 1500-ம் ஆண்டு பிறந்தவர் பாவாஜி. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ஆசாராம் பல்ஜோத். நான்கு சகோதரர்கள். அனைவருக்கும் ராம் என்றே முடியும் பெயர். ஆசாராமுக்கு இளம் வயது முதலே ஆன்மிக ஈடுபாடு அதிகமாக இருந்தது. ஒருகட்டத்தில் அவர் வீட்டை விட்டு வெளியேறி தீர்த்த யாத்திரை செய்ய ஆரம்பித்தார். அப்போதுதான் திருமலையின் மகிமைகளை அறிந்து அங்கு வந்தார். வேங்கடவனை தரிசனம் செய்தார். அதன்பின் அவனே தன் தலைவன் என்று முடிவு செய்து விட்டார். சகலத்தையும் துறந்தார். அவன் நாம சங்கீர்த்தனமே வாழ்க்கையாகிவிட்டது. ஆலய தரிசனமும் ஹரிநாம ஜபமும் மட்டுமே நித்திய அனுஷ்டானங்கள் ஆயின.

பக்தர்கள் கோடிபேர் அவன் சந்நிதியில் குவிந்தாலும், தூய அன்போடும் பக்தியோடும் தரிசனம் செய்யும் எளியவர் எவராயினும் அவரைக் கண்டுகொண்டு அனுக்கிரகம் செய்பவர் அல்லவா அந்த ஏழுமலையான்... பாவாஜியின் அன்பைப் புரிந்துகொண்டார். அவர் தெரிந்துகொண்டால் போதுமா? இந்த அகிலம் தெரிந்துகொள்ள வேண்டாமா? தன் அடியவரின் புகழ் அண்டம் முழுவது பரவ வேண்டும் என்று விரும்பும் தன்னிகரில்லாத் தலைவன் அல்லவா அவன்... அதற்கான விளையாடலில் இறங்கினார்.

ஒரு நாள் மாலை பாவாஜி தன் ஆசிரமத்தில் ஓய்ந்திருந்த வேளையில் பெருமாள் அவருக்குக் காட்சி கொடுத்தார். அனுதினமும் தான் ஆராதிக்கும் அந்த வேங்கடவன் தன் இருப்பிடம் தேடி வந்து நிற்பதைக் கண்டு சிலிர்த்தார் ஆசாராம். செய்யவேண்டிய உபசாரங்களைச் செய்து, வரவேற்று அமர வைத்தார். பிறகு பெருமாளின் திவ்ய மங்கலத் திருமுகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி

ஒரு கட்டத்தில் பெருமாள், ``ஆசாராம், என்னையே பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி? உனக்கு என்ன வேண்டும் என்று கேள்?'' என்று கேட்டார்.

அதற்கு ஆசாராம், ``இந்தப் பிரபஞ்சத்தில் காணக்கிடைக்காத பரம்பொருளே காட்சி கொடுத்துவிட்ட பின்பு, எனக்கு என்ன வேண்டும்... எதுவும் வேண்டாம். உம் தரிசனம் கிடைத்தாலே போதும்'' என்றார்.

பெருமாள் உடனடியாக, ``அப்படியே ஆகட்டும்'' என்று சொல்லி எழுந்து சென்றார். மறுநாள் மாலையிலும் பெருமாள் அங்கே வந்தார். ஆசாராம் அகம் மகிழ்ந்தார். பொழுது புலர்ந்ததும் பக்தர்கள் அந்த ஆண்டவனை தரிசனம் செய்ய அகமகிழ்வோடு ஆலயம் செல்வதுபோல, பொழுது சாய்ந்ததும் பெருமாள் தன் பக்தனைக் காண ஓடி வர ஆரம்பித்தார். ஆசாராமுக்கு அனுதினமும் ஆனந்த தரிசனம்.

பெருமாள் தன் திருவிளையாடலின் அடுத்த கட்டத்தைத் தொடங்கினார்.

``பக்தா, நாம் பகடை விளையாடலாமா...''

``பெருமாளே... இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கமே உன் திருவிளையாடல்தான். அதை நிகழ்த்தும் உன்னோடு விளையாட என்னால் ஆகுமா...'' என்று கேட்டார்.

பெருமாளோ, ``உனக்கும் எனக்கும் இடை யில் பரமன் பக்தன் என்ற உறவைத் தாண்டி நல்ல சிநேக பாவம் தோன்றிவிட வில்லையா. நீ என் நண்பன் அல்லவா. நண்பனோடு விளையாடாமல் யாரோடு விளையாடுவது... நீயே சொல்'' என்றார்.

இதைக் கேட்ட ஆசாராம் சிலிர்த்து, ``ஹரி... நீ என்னை நண்பனாக்கிக் கொண்டது உன் பெருந்தன்மை. உன் தயை. அதற்கு நான் என்றுமே அடிமை. இனி என்னிடம் உத்தரவு கேட்காதே. ஆணையிடு, விளையாடக் காத்திருக்கிறேன்'' என்றார்.

பகடையாட்டம் ஆரம்பமானது. இருவருக் கும் மாறி மாறி வெற்றி. தன் வெற்றியையும் வேங்கடவனுக்கே சமர்ப்பணம் செய்தார் ஆசாராம். ஆசாராமின் இந்தப் பக்தி பெருமாளை மகிழச் செய்தது. இந்தப் பக்தியை உலகறியச் செய்யத் திட்டம் தீட்டினார்.

அன்று விளையாட்டு மும்முரமானது. இரவு வேகவேகமாக நகர்ந்து செல்ல பொழுது புலர ஆரம்பித்தது. சுப்ரபாத சேவைக்காக வேங்கடவனின் சந்நிதியில் வேதியர்களும் அடியவர்களும் கூடிவிட்டார்கள். அவர்களின் மந்திர கோஷம் கேட்டதும்தான் பெருமாள் அவசர அவசரமாக எழுந்து, `நாளை வரு கிறேன்' என்று சொல்லி மறைந்தார். எழுந்த வேகத்தில் அவரின் கழுத்து மாலை கீழே விழுந்தது. ஆசாராம் அதைக் கண்டெடுத்து அவரை அழைப்பதற்குள் அவர் மறைந்துவிட... `சரி... நாமே அதைச் சந்நிதியில் சமர்ப்பித்துவிடுவோம்' என்று நினைத்துக் கொண்டார்.

சந்நிதியில் திரை விலகியது. வேங்கடவனை அனைவரும் தரிசனம் செய்தனர். சிலரோ அதிர்ச்சி அடைந்தனர். அவர் கழுத்தில் இருந்த ஆரம் காணாமல் போயிருந்தது.

``இது எப்படி சாத்தியம்... யார் அதைக் களவாடியது?'' என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். அந்த நேரம் கையில் ஆரத்தோடு ஆசாராம் அங்கே வந்தார்.

``பெருமாள் இரவு என் குடிலுக்கு வந்து விளையாடிவிட்டு மறதியாக இதை விட்டு விட்டு வந்துவிட்டார்'' என்று சொல்லி அதைக் கொடுத்தார்.

தெய்வம் என்றால் அது தெய்வம். வெறும் சிலை என்றாலோ சிலைதான் என்பது கவிஞனின் வாக்கு. ஆசாராமுக்கு வேங்கடவன் தெய்வம். ஆனால் அவன் மகிமை உணராத வர்களுக்கு அது சிலாரூபம்தான்.

`பெருமாளாவது குடிலுக்கு வருவதாவது விளையாடுவதாவது' என்று சொல்லி அவதூறு செய்தனர். ஆசாராமை மன்னரின் முன்பாகக் கொண்டுபோய் நிறுத்தினர்.

மன்னனுக்குக் குழப்பம். பூட்டியிருந்த சந்நிதியில் இருந்து எப்படி ஆரம் வெளியே செல்லும்? இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று நினைத்து ஆசாராமை விசாரித்தார்.

ஆசாராமோ நடந்தவற்றையே மீண்டும் சொன்னார். யார் நம்புவார்கள் மன்னன் நம்ப?! மன்னனுக்குக் கோபம் வந்தது.

``என்ன... பெருமாள் உம்மை இரவில் நாடி வந்து உம் வீட்டில் விளையாடினாரா... அற்புதம் நிகழ்த் தும் சித்தரா நீர்? அப்படியானால் இன்றைய இரவும் அவர் வருவார் அல்லவா...''

``ஆமாம். நிச்சயம் என்னை சந்திக்க வருவார்''

``அப்படியா... அதையும் பார்த்துவிடுவோம். இந்த சந்நியாசியை பல கட்டுக் கரும்போடு சேர்த்து சிறையில் அடையுங்கள். துறவியே... இன்று இரவுக்குள் கரும்பு முழுமையையும் சாப்பிட்டுத் தீர்க்க வேண்டும். இல்லை என்றால், விடிந்ததும் மரண தண்டனை நிச்சயம். வீரர்களே இரவு முழுக்க இவரைக் கண்காணியுங்கள்'' என்று கட்டளையிட்டான்.

பல கட்டுக் கரும்புகள் சிறைச்சாலைக்குள் போடப் பட்டன. அந்த அறைக்குள் ஆசாராம் அடைக்கப்பட்டார். அவருக்கு என்ன கவலை... விடிந்து உயிரோடு இருந்தால் புஷ்கரணியில் நீராடி வேங்கடவனை தரிசனம் செய்யலாம். தலை துண்டிக்கப்பட்டால் விரஜா நதியில் நீராடி வைகுண்ட வாசனை தரிசனம் செய்யலாம் என்று தீர்மானம் செய்துகொண்டு அப்படியே உறங்கி விட்டார்.

பக்தன் உறங்கலாம் பரமன் உறங்குவானா... யானை உருக்கொண்டு சிறைக்குள் தோன்றினார். மொத்தக் கரும்பையும் தின்று தீர்த்தார். தான் வந்துபோனதன் அடையாளமாக ஒரு பிளிறலை உண்டாக்கினார். அதுவரை மயங்கிக்கிடந்த உலகம் விழித்துக்கொண்டது. வீரர்கள் ஓடிவந்து பார்த்தனர். சிறைக்குள் யானை ஒன்று நின்றுகொண்டிருந்தது. சத்தம்போட்டு பிறரையும் வீரர்கள் அழைக்க, யானை மறைந்துபோனது.

செய்தி மன்னன் வரை சென்று சேர்ந்தது. ஓடிவந்து ஆசாராமின் திருவடிகளைப் பணிந்து மன்னிப்புக் கேட்டார். யானை வடிவில் வேங்கடவன் வந்து அவருக்கு அருள் செய்ததால் அவருக்கு ஹாத்திராம் பாபாஜி என்று பெயர் உண்டானது. பாவாஜி, பாபாஜி என்று பக்தர்கள் தங்களுக்குப் பிரியமான முறையில் அவரை அழைத்தனர்.

அதற்குப் பிறகும் பலகாலம் திருமலையில் வாழ்ந்த ஹாத்தி ராம் பாவாஜி வேங்கடவனின் சம்மதத்தோடு அங்கேயே ஜீவ சமாதி அடைந்தார்.

திருமலையில் ஒரு படியாகவாவது கிடைப்பேன் என்றார் ஓர் ஆழ்வார். பாவாஜி தன் சரீரத்தையே அங்கு அடக்கிக்கொண்டார். திருமலை சித்தர்களின் பூமி. பாவாஜி அதில் குறிப்பிடத்தக்க ஒருவர் என்றால் மிகை அல்ல.

- தரிசிப்போம்...

மாற்றி யோசிக்கலாம்!

ஒரு சீமாட்டி தன் ஓவியத்தை வரைய ஆசைப்பட்டு, ஓவியரிடம் சென்றாள். அவரும் அவளைத் தத்ரூபமாக வரைந்தார். ஆனாலும், அவளுக்குத் திருப்தி இல்லை.

``இந்த உருவம் என்னைப் போலவே இருந்திருந்தால், என்னுடைய நாய் அடையாளம் கண்டு வாலாட்டியிருக்குமே?'' என்றாள். அவளை ஒருவாரம் கழித்து வரச் சொன்னார் ஓவியர். ஓவியத்தில் நுட்பமான மாறுதல்களைச் செய்து வைத்தார்.

ஒரு வாரம் கழித்து வந்தவள், ``என் நாய் இப்போதும் வாலாட்டவில்லை'' என்று அடம்பிடித்தாள். தான் அந்த ஓவியத்தை இன்னும் மெருகேற்றி வைப்பதாகவும், மறு வாரம் வந்து பார்க்குமாறும் ஓவியர் சொன்னார்.

அதன்படி, அடுத்த வாரமும் அவள் நாயோடு வந்தாள். இந்த முறை அவளின் நாய் வேக வேகமாக வாலாட்டிக் கொண்டு, ஓவியத்தின் அருகில் சென்று அந்தச் சட்டங்களை நக்கியது. அந்தப் பெண் மணிக்கு ஆனந்தம் தாங்க முடிய வில்லை. அதிகம் தொகை கொடுத்து வாங்கிச் சென்றாள்.

ஓவியரின் உதவியாளர், ``இந்த ஒரு வாரத்தில் நீங்கள் ஓவியத்தில் எந்த மாற்ற மும் செய்ததாகத் தெரிய வில்லையே! பிறகு எப்படி...?' என்று குழப்பத்துடன் கேட்டார்.

``நாய்க்கு வண்ணங்கள் எல்லாம் தெரியாது. அந்தச் சீமாட்டி தெரியாமல் பேசுகிறாள். நான் ஓவியத்தின் சட்டத்தில் அதன் உணவைத் தடவி வைத்திருந்தேன். அந்த மணத்துக்காகக்தான் நாய் ஓடிவந்து நக்கியது. அவளோ, தனது நாய் தன்னை ஓவியத்தில் அடையாளம் கண்டுகொண்டதாக எண்ணி விட்டாள்!' என்றார் ஓவியர்.

புரியாதவர்களுக்குப் புரிய வைக்க மாற்றி யோசிப்பது அவசியம்!

- வி.ராமு, கரூர்