Published:Updated:

வைகுண்ட ஏகாதசி: திருப்பதி சொர்க்க வாசல் திறப்பு எப்போது? தரிசனம் செய்ய வழிமுறைகள் என்னென்ன?

திருப்பதி வேங்கடேஸ்வரா சுவாமி திருக்கோயில்
திருப்பதி வேங்கடேஸ்வரா சுவாமி திருக்கோயில்

2020 டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி வரவுள்ள வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு டிசம்பர் 25-ஆம் தேதி முதல் ஜனவரி 3-ஆம் தேதி வரை சொர்க்க வாசல் திறந்து இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் டிசம்பர் 25-ம் நாள் வரவிருக்கும் வைகுண்ட ஏகாதசி திருநாளையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பத்து நாள்கள் சொர்க்க வாசல் திறந்திருக்கும் என திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர்கள் குழு முடிவு செய்துள்ளது. விழா நாள்களில் தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் விற்பனையும் (ரூபாய் 300 விரைவு தரிசன டிக்கெட்) நேற்று முதல் நடைபெற்று வருகிறது.

2020 டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி வரவுள்ள வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு டிசம்பர் 25-ஆம் தேதி முதல் ஜனவரி 3-ஆம் தேதி வரை சொர்க்க வாசல் திறந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 2 அல்லது 3 நாள்கள் மட்டுமே திறந்திருக்கும் இந்த சொர்க்க வாசல் தரிசனம் இந்த ஆண்டு 10 நாள்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று அதிகம் உள்ள காரணத்தால் பக்தர்கள் குறைந்த அளவில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே அதிகமான பக்தர்களை அனுமதிக்க வேண்டி 10 நாள்கள் இந்த விழா நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடெங்கும் உள்ள பக்தர்கள் வேண்டுகோளின் படியும் பெரியோர்களான மடாதிபதிகள் மற்றும் பீடாதிபதிகளின் ஆலோசனைகளை படியும் இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சொர்க்க வாசல் விழா தரிசனத்துக்கு ஆன்லைனில் பதிவு செய்து கொண்ட பக்தர்கள் இந்த விழாவுக்கு வரும்போது பதிவின் நகலை கட்டாயம் கொண்டு வரவேண்டுமென்றும் தேவஸ்தானம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு பல திருப்பணிகள் செய்யவிருக்கிறது கோயில் நிர்வாகம். கோயில் கொடிமரம், பலிபீடம், மகா துவாரத்திற்கு தங்கத் தகடுகள் பதித்தல், மலைப்பாதையில் நிழல் பந்தல் அமைத்தல், சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்தல், திருமலையில் மாசு ஏற்படாத வகையில் பேட்டரியால் ஓடக்கூடிய 150 பேருந்துகள் இயக்குதல் என பல பணிகளை நிர்வாகம் தொடங்கியுள்ளது.

திருப்பதி சொர்க்க வாசல்
திருப்பதி சொர்க்க வாசல்
வைகுண்ட ஏகாதசி நாள் அன்று நள்ளிரவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மற்றும் மறுநாள் வைகுண்ட துவாதசி விழா ஆகியவை திருப்பதியில் நடைபெறுவது வழக்கம். பரமபத வாசல் வழியாக பக்தர்கள் 2 நாட்கள் மட்டுமே வழிபட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

லட்சக்கணக்கான பக்தர்கள் சொர்க்க வாசல் தரிசனம் செய்வது வழக்கம். இந்நாள்களில் பெருமாளை சொர்க்க வாசலில் தரிசித்தால் பரமபதம் அடைவார்கள் என்பது நம்பிக்கை. இந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 6-ம் நாள் ஒரு வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது நினைவிருக்கலாம். தற்போது இதே ஆண்டில் வரும் டிசம்பர் 25-ம் நாளும் மற்றொரு வைகுண்ட ஏகாதசி வருவது வெகு விசேஷமானது என்கிறார்கள் பக்தர்கள். 'வைகுண்ட துவாரம்' என்று போற்றப்படும் திருப்பதி சொர்க்க வாசலை தரிசிப்பது சாட்சாத் மேலோக வைகுண்டத்தை காண்பதற்கு சமம் என்பர் பெரியோர்கள்.

அடுத்த கட்டுரைக்கு