Published:Updated:

வாழை இலையில் சந்தனப் பிரசாதம்! - வேலவன் வேள்வி புரிந்த வேளிமலை குமார கோயில்

வேளிமலை குமார கோயில்
பிரீமியம் ஸ்டோரி
News
வேளிமலை குமார கோயில்

கந்தன் வருவான்... சஷ்டி தரிசனம்!

திருமுருகாற்றுப்படை முருகப்பெருமானைப் பற்றிக் குறிப்பிடும் போது, ‘வேள்வி செய்யும் வேதியர்கள் தொழுகிற தெய்வம்’ என்கிறது. வேள்வி செய்து வழிபட்டால் வேண்டும் வரம் தருபவன் முருகப் பெருமான்.அப்படிப்பட்ட முருகனே வேள்வி செய்த தலம் உண்டு என்றால், அது அவர் திருமணம் புரிந்த திருத்தலமாகவே விளங்கும்.

முருகப்பெருமான் வள்ளியை மணம் புரிந்த தலம் என்று வள்ளி மலையைக் குறிப்பிடுவார்கள். அதேபோன்று புகழ்ந்து கூறப்படும் தலங்களில் ஒன்று வேளிமலை. திருமணத்துக்காக வேள்வித் தீ வளர்த்த மலை என்பதால் `வேள்வி மலை’ எனப்பட்டு அதுவே `வேளிமலை’ ஆனது என்கிறது தலபுராணம்.

வாழை இலையில் சந்தனப் பிரசாதம்! - வேலவன் வேள்வி புரிந்த வேளிமலை குமார கோயில்

நாஞ்சில் நாடு - தமிழகத்தில் அழகு எல்லாம் குவிந்திருக்கும் அற்புத மான நிலப்பரப்பு. அந்த அழகிய நிலப்பரப்பில்தான் அழகன் முருகன் கோயில் கொண்டுள்ள வேளிமலை உள்ளது. நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது தெங்கரை.நெடுஞ்சாலையிலிருந்து வலப்புறம் திரும்பும் பாதையில் தோரண வாயில் நம்மை வரவேற்கும்.

அதன் வழியே பயணித்தால் வேளிமலை குமரன் கோயிலை அடையலாம். செல்லும் வழிகளின் இருபுறமும் வயல்வெளிகள், வாழைத்தோப்புகள் என்று காணுமிடமெல்லாம் குமரனின் பச்சை மயிலின் வண்ணம். இந்தப் பயணத்தில் களைப்பெல்லாம் நீங்கி மனமும் உடலும் புத்துணர்ச்சி கொண்டுவிடும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வாழை இலையில் சந்தனப் பிரசாதம்! - வேலவன் வேள்வி புரிந்த வேளிமலை குமார கோயில்

நாம் பயணிக்கும் அந்தச் சாலை வேளிமலை குமாரசுவாமி திருக்கோயிலின் பின்வாசலை அடையும். அங்கிருந்து பிரதட்சிணமாக வலம் வந்தால் திருக்கோயிலின் தெப்பக்குளம். அந்தத் தெப்பக்குளத்தில் நடுவிலே விநாயகப் பெருமான் வீற்றிருக்கிறார். திருக்குளத்தில் நீராடும் பக்தர்கள் விநாயகரை வலம் வந்து வழிபடுகிறார்கள்.

குளத்தின் அருகிலேயே ஒரு சிறு குன்று. அந்தக் குன்றில்தான் அமைந்திருக்கிறது குறைகள் தீர்க்கும் குமரன் கோயில். அருகிலேயே உள்ளது நேர்ச்சை மண்டபம். இங்குதான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பக்தர்கள் அனைவரும் முடிக்காணிக்கை செலுத்துவது, காவடிக் கட்டுவது, வெடி வழிபாடு நடத்துவது என நேர்த்திக் கடன் களைச் செலுத்தத் தயாராகிறார்கள். அந்த மண்டபத்திலும் விநாயகர் சந்நிதி ஒன்று அமைந்துள்ளது. மண்டபத்தின் வாயிலில் நின்று நோக்கினால், குன்றின் மீதுள்ள குமரன் கோயில் கோபுரத்தை தரிசிக்கலாம்; கைகூப்பி வணக்கிக் கோடிப் புண்ணியம் பெற்று படியேறலாம்.

வாழை இலையில் சந்தனப் பிரசாதம்! - வேலவன் வேள்வி புரிந்த வேளிமலை குமார கோயில்

மொத்தம் 38 படிகள். ஆலயத்தில் நுழைந் ததும் கம்பீரமாகக் காட்சிகொடுக்கிறது கொடி மரம். ஆலயத்தின் வெளி பிராகாரத் தில் தர்மசாஸ்தா சந்நிதி அமைந்துள்ளது.

பிராகாரத்தின் மேற்குப் பகுதியில் அமைந் துள்ளது மயில்மண்டபம். சில காலங்களுக்கு முன்புவரை காளை மற்றும் மயில்கள் இங்கு வளர்க்கப்பட்டு வந்தனவாம். ‘மயில்களுக்குப் பக்தர்கள் பொரி, அவல் போன்றவை வழங்கியிருக்கிறோம்’ என்கிறார் மூத்த பக்தர் ஒருவர். ஆனால் இப்போது இங்கு காளைகளோ, மயில்களோ இல்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கல்யாண விநாயகர் சந்நிதியில் கல்யாணப் பிரார்த்தனை!

வடக்குப் பிராகாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் ஊட்டுப்புரை அமைந்துள்ளது. வடகிழக்கு மூலையில் (ஈசான மூலை) தீர்த்தக் கிணறு உள்ளது. இந்த தீர்த்தக் கிணற்றில் இறங்கி சென்று தண்ணீர் எடுப்பதற்காகப் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் வெளி பிராகாரத்தை ஒருமுறை வலம் வந்து கோயிலுக்குள் நுழையும் இடத்தில் கல்யாண விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது.

வாழை இலையில் சந்தனப் பிரசாதம்! - வேலவன் வேள்வி புரிந்த வேளிமலை குமார கோயில்

வள்ளியைக் கரம் பிடிப்பதற்காக முருகப்பெருமான் கிழவராக உருமாறி வந்து விளையாடல் புரிந்தார். அப்போது தனக்கு உதவுமாறு தன் அண்ணனான விநாயகரை அழைத்தார்.

வள்ளிதேவி சுனையில் நீராடும்போது யானை வடிவத்தில விநாயகர் வந்தார். யானையிடமிருந்து தன்னைக் காக்கும்படி வள்ளி, கிழவரிடம் வேண்டினாள்.

கிழவராக வேடம் பூண்டிருந்த முருகனும், “நான் உன்னைக் காப்பாற்றினால் பதிலுக்கு நீ என்னைத் திருமணம் செய்துகொள்வாயா” என்று கேட்க, வேறு வழியின்றி வள்ளியும் ஒப்புக்கொண்டாள். பின்பு யானையை விரட்டுவதுபோல் பாவனை செய்ய யானை வடிவில் வந்த விநாயகரும் மறைந்தார்.

அவ்வாறு விநாயகப்பெருமான் யானை உருக்கொண்டு தோன்றிக் காட்சிகொடுத்த இடத்தில்தான் கல்யாண கணபதி சந்நிதி அமைந்துள்ளது என்கிறார்கள் பக்தர்கள்.

வாழை இலையில் சந்தனப் பிரசாதம்! - வேலவன் வேள்வி புரிந்த வேளிமலை குமார கோயில்

முருகப்பெருமானின் திருமண வைபவம் நடந்த அந்த இடத்திலே இன்று ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன. வள்ளியும் குமரனும் மணம் புரிந்த தலம் என்பதால், பக்தர்கள் இந்தச் சந்நிதியில் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்கள். தமிழகம் மட்டுமல்ல கேரளத்திலிருந்தும் பக்தர்கள் இங்கு மணம் புரியக் குவிகிறார்கள். திருமண வரம் வேண்டும் அன்பர்கள் இங்கு வந்து வேண்டிக்கொள்ள, விரைவில் திருமணம் நடைபெறுகிறது என்கிறார்கள் பக்தர்கள்.

வாழை இலையில் சந்தனமும் திருநீறும்...

மூலவரின் சந்நிதி வாசலில் வீரபாகுவும் வீர கந்தர்வரும் கம்பீரமான தோற்றத்தோடு துவார பாலகர்களாக நிற்கிறார்கள். அவர் களை வணங்கி உள்ளே நுழைந்தால், கருவறையில் கம்பீரமாக - சுமார் எட்டரை அடி உயரத்தில் நீண்ட நெடிய திருமேனியனாகக் காட்சியளிக்கிறார் கந்தன்.

தெப்பக்குளம்
தெப்பக்குளம்

வள்ளியம்மையோ ஆறரை அடி உயரத்தில் அழகுத்திருக்கோலம் காட்டியருள்கிறார். சூரியனைக் கண்ட பனி விலகுவதுபோல் அம்மையின் திருஎழில் தரிசனத்தால் நம் துன்பங்கள் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள். இந்தச் சந்நிதியில் தரிசனம் காணும் பக்தர் களுக்கு வாழை இலையில் சந்தனமும் திருநீறும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

இந்தச் சந்நிதியின் தரிசனத்துக்கு மற்று மொரு சிறப்பும் உண்டு!

சந்நிதி நுழைவாயில் 5 அடி உயரமே உள்ளது. எனவே சாதாரண மாக யாரும் தலை நிமிர்ந்த வண்ணம் உள்புக முடியாது. தலை குனிந்து உள்ளே நுழைந்து, பின்னர் நிமிர்ந்து பிரமாண்டமான சுவாமியின் திருமேனியைக் காணும்போது பக்தர்களின் மனம் சிலிர்க்கிறது. ஆணவத்தை நீக்கித் தலைகுனிந்து அவன் தாள் தொழுதால் அந்த வேதநாயகனின் தரிசனம் கிடைக்கும் என்னும் தத்துவமே இந்த தரிசனத்தின் ரகசியம் என்கிறார்கள் பெரியோர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேங்கை மரமாகி நின்ற வேலன்!

குமரன் சந்நிதியின் பிராகாரத்தில் இளைய நயினார், ஸ்ரீகாசி லிங்கம், ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீமணவிடை குமாரர், ஸ்ரீஆறுமுக நயினார் ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. வடகிழக்கு மூலையில் தெற்கு முகமாக வேங்கை மரச் சந்நிதி ஒன்றும் உள்ளது.

தினைப்புனம் காக்க சென்ற வள்ளியைக் காண, வேடுவர் போல் உருவாறி வந்தார் முருகப்பெருமான். அப்போது அங்கு வள்ளியம்மையின் தந்தை வேடுவர் குலத் தலைவன் நம்பிராஜன் வரவே, அவரிடமிருந்து தப்ப முருகன் வேங்கை மரமாகி நின்றார்.

வள்ளிக் குகை
வள்ளிக் குகை

அவ்வாறு முருகன் மரமாகி நின்றதன் அடையாளமாக இங்கே வேங்கை மரம் ஒன்றின் அடிப்பாகம் மட்டும் உள்ளது. அதை முருகப்பெருமானாகவே நினைத்துப் போற்றி வழிபடுகிறார்கள் பக்தர்கள்.

வேங்கைமர சந்நிதியை வழிபட்டுவிட்டு திரும்பினால், கிழக்குப் பிராகாரத்தில் ஸ்ரீமஹாதேவர் சந்நிதி அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் லிங்க ரூபமாக வடக்கு நோக்கிக் காட்சியருள, அன்னை சிவகாமி தெற்கு முகமாக நின்று அருள்பாலிக்கிறார்.

பங்குனி அனுஷத்தில்...

கோயில் கொடி மரத்திற்கு அருகிலேயே கோயில் அலுவலகம் இருக்கிறது. அங்கிருந்த கோயில் ஸ்ரீகாரியம் (மேலாளர்) மோகன் குமாரிடம் கோயிலின் திருவிழாக்கள் பற்றிக் கேட்டோம்.

“இது திருக்கல்யாணத் திருத்தலம் என்ப தால், பங்குனி மாதம் அனுஷம் நட்சத்திரத் தன்று திருக்கல்யாண திருவிழா விசேஷமாக நடைபெறும். அதேபோன்று வைகாசி விசாகத் திருவிழா 10 நாள்கள் நடைபெறும். ஐப்பசியில் கந்த சஷ்டி திருவிழாவும் சூர சம்ஹாரமும் இங்கு விசேஷம்.

வள்ளிச் சுனை
வள்ளிச் சுனை

ஆடி மாத ஹஸ்தம் நட்சத்திர தினத்தில் ‘நிறை புத்தரிசி விழா’ நடைபெறும். அந்த தினத்தில் வயலிலிருந்து புதிய நெற்கதிர்கள் கொண்டு வரப்பட்டு பூஜை செய்யப்படும். பூஜைக்கு வைக்கப்படும் நெற்கதிர்கள் பக்தர் களுக்குப் பிரசாதமாகக் கொடுக்கப்படும்.

புரட்டாசி மாதம் திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவிலும் மார்கழியில் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் திருவிழாவிலும் கலந்துகொள்ள குமார சுவாமி புறப்பட்டுச் செல்லும் நிகழ்வுகள், இந்தப் பகுதியில் பிரசித்திபெற்றவை” என்றார் மோகன்குமார்.

வேளிமலை மகிமைகள் குறித்து ஸ்ரீகுமார் என்ற பக்தர் சிலிர்ப்போடு பகிர்ந்துகொண் டார். “வள்ளிதேவியை மணம் புரிய, அவளு டன் முருகன் மலை மீது சென்றபோது, வேடுவர்கள் சூழ்ந்தனர்; யுத்தம் செய்தனர். முருகப் பெருமான் அவர்களை யுத்தத்தில் வீழ்த்தினார். பின்னர், வள்ளி மனமிரங்கி வேண்டிக்கொண்டதற்கு இணங்க, முருகன் அவர்களை உயிர்ப்பித்து விஸ்வரூப தரிசனம் காட்டி அருளினார் வேடுவர்களும் முருகனும் யுத்தம் செய்த நிகழ்வை `வேடுவர் படுகளம்’ என்பர். இந்த நிகழ்வுகள் பங்குனி விழாவில் நடத்தப்படுகின்றன.

அதில் குறவர் படுகளம் முடிந்ததும் குறவன் பாட்டு பாடி பல்லக்கில குமாரசுவாமி யையும், வள்ளியம்மையையும் அழைத்து வருவார்கள். திருக்கல்யாணம் முடிந்ததும் தேனும் தினைமாவும் பிரசாதமாக வழங்கப் படும். இவற்றை இப்போதும் மலைக் குறவர்கள் கொண்டுவந்து கொடுக்கிறார்கள்.

மஞ்சள் அதிசயம்!

வேளிமலை குமரன் ஆலயத்துக்கு நிறைய சொத்துகள் உண்டு. வைகாசி மாத நடை பெறும் திருவிழாவின் ஆறாம் நாளில் அந்தச் சொத்துகளின் பட்டியலை மக்கள் மத்தியில் வாசிக்கும் வழக்கம் உள்ளது.

முருகன் திருவிளையாடல் புரிந்த வள்ளிச் சோலை, வட்டச் சோலை, கிழவன் சோலை, வள்ளிக்காவு, வள்ளி காத்த தினைப்புனம், வள்ளிச் சுனை ஆகிய இடங்கள் இந்த மலையைச் சுற்றி இருக்கின்றன.

வள்ளியம்மை மஞ்சள் தேய்த்து நீராடிய சுனைதான் வள்ளிச் சுனை என்கிறார்கள். கோயில் இருக்கும் இடத்தி லிருந்து ஒரு கி.மீ மேலே நடந்து சென்றால் வள்ளி சுனையைக் காணலாம்’’ என்றார் ஸ்ரீகுமார்.

வள்ளிச்சுனைக்கு அருகே இருந்த பாறைகளில் விநாயகர், சிவலிங்கம், முருகப் பெருமான், வள்ளி பிராட்டி ஆகியோரின் புடைப்புச் சிற்பங்கள் திகழ் கின்றன. இங்கு இரண்டு பாறை களுக்கு இடையே மேலிருந்து தண்ணீர் விழுகிறது. அதில் பக்தர்கள் நீராடுகிறார்கள். இது, வள்ளியம்மை மஞ்சள் தேய்த்து நீராடிய சுனை என்பதால், இங்குள்ள பாறையைத் தொட்டால் மஞ்சள் அறைத்தது போல் கைகளில் மஞ்சள் ஒட்டிக் கொண்டு நம்மை வியக்கவைக்கிறது. இங்கு வரும் பக்தர்கள் இந்த அதிசய மஞ்சளை உடம்பில் பூசிக் கொண்டு குளிக்கிறார்கள். இதனால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.

நீங்களும் ஒருமுறை வேளிமலைக்குச் சென்று வாருங்கள்; அங்கு கோயில் கொண் டிருக்கும் குமரக்கடவுளின் திருவருளால் உங்கள் இல்லங்களில் மங்கலங்கள் பெருகும்; தினமும், காலை 4:30 முதல் 12:30 மணி வரையிலும் மாலையில் 5 முதல் 8:15 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

நோய் தீர்க்கும் `கஞ்சி' பிரசாதம்!

ந்தத் திருக்கோயிலின் தெற்கு வெளிப் பிராகாரத்தில் கல் தொட்டி ஒன்று உள்ளது. உடலில் தோல் பிரச்னைகள், கொப்புளங்கள் இருப்பவர்கள் உப்பும், நல்ல மிளகும் வாங்கி வந்து, அவற்றைக்கொண்டு உடலைச் சுற்றி கல் தொட்டியில் போடுகிறார்கள். இதனால் தோல் நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வேளிமலை குமாரகோயிலின் வடக்குப் பக்கத்தில் தெப்பக்குளத்தை ஒட்டி கஞ்சிப்புரை ஒன்று உள்ளது. இதில் வெள்ளிக்கிழமைகளில் கஞ்சி காய்ச்சி, கல் தொட்டிகளில் ஊற்றி வைத்திருப்பார்கள். மதிய தீபாராதனைக்குப் பிறகு கஞ்சிப்புரையில் பக்தர்களுக்குக் கஞ்சியும், பூசணிக்காய்க் கூட்டும் வழங்குவார்கள். இந்தக் கஞ்சி நோய் தீர்க்கும் மருந்து என்கிறார்கள் பக்தர்கள். வெள்ளிகிழமைகளில் பலர் கஞ்சி தானம் செய்கிறார்கள். கஞ்சிதானம் முடிந்த பிறகு சிதறிக்கிடக்கும் பருக்கைகளின் மீது பக்தர்கள் உருண்டு நேர்த்திக்கடன் செய்கிறார்கள்.