Published:Updated:

`டிசம்பர் 26-ம் தேதி சூரிய கிரகணம்'- திருப்பதி, சபரிமலை கோயில்களில் நடைசாத்தப்படும் நேர விவரம்!

டிசம்பர் மாதம் 26 -ம் தேதி சூரியன், சந்திரன், குரு, கேது, சனி மற்றும் புதன் ஆகிய ஆறு கிரகங்கள் தனுசு ராசியில் சஞ்சரிக்கின்றன.

திருப்பதி
திருப்பதி

முக்கியமான வானியல் நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் சூரியகிரகணம், வரும் டிசம்பர் 26-ம் தேதி ஏற்படுகிறது. இதையொட்டி, திருமலை திருப்பதி கோயிலில் 13 மணி நேரம் நடை சாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு வானியல் விசித்திர நிகழ்வாக வரும் டிசம்பர் மாதம் 26 -ம் தேதி, சூரியன், சந்திரன், குரு, கேது, சனி மற்றும் புதன் ஆகிய ஆறு கிரகங்கள் தனுசு ராசியில் சஞ்சரிக்கின்றன. அன்றைய தினம் சூரியகிரகணமும் ஏற்படுகிறது. டிசம்பர் 26 -ம் தேதி காலை 8.08 மணியிலிருந்து காலை 11.10 மணி வரை நீடிக்கிறது.

`டிசம்பர் 26-ம் தேதி சூரிய கிரகணம்'- திருப்பதி, சபரிமலை கோயில்களில் நடைசாத்தப்படும் நேர விவரம்!

இதையொட்டி, டிசம்பர் 25 - ம் தேதி இரவு 11 மணி முதல் மறுநாள் 26 - ம் தேதி பகல் 12 மணி வரை திருப்பதி கோயில் நடை சாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் கோயிலில் ஆலய சுத்தி செய்யப்பட்டு, பகல் 2 மணிக்கு மேல் பக்தர்கள் சர்வ தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்' என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள், இதற்கேற்ப தங்கள் பயணத்திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தத் தகவலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சபரிமலையில் 4 மணிநேரம்!

கார்த்திகை மாதம் மாலை அணிந்து, ஐயப்ப பக்தர்கள் பெருமளவில் சபரிமலைக்குச் செல்வது வழக்கம். குறிப்பாக டிசம்பர் மாதம் 20 -ம் தேதிக்கு மேல் இவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். டிசம்பர் 26 -ம் தேதி சூரிய கிரகணத்தையொட்டி, சபரிமலை கோயிலின் நடை காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை நடை சாத்தப்பட்டிருக்கும் என்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.