Published:Updated:

பெருமாளுக்கு எந்த நாள், எந்த வாகனம், என்ன பலன்? - களைகட்டுகிறது திருப்பதி பிரம்மோற்சவம்!

பிரம்மோற்சவ தினங்களில் வேங்கடேசப் பெருமாளுக்குத் தினமும் பூஜைகளும் அலங்காரங்களும் செய்விக்கப்படும். நான்கு மாடவீதிகளிலும் சுவாமி வீதி உலா வருவார்.

Tirupati
Tirupati

திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறும். புராண - இதிகாச காலத்தில் பிரம்மனே திருமலைக்கு வந்து மலையப்பசாமிக்கு பிரம்மோற்சவ விழாவைக் கொண்டாடியதாக ஐதிகம். இதையொட்டி வைகாநஸ ஆகம விதிமுறைகளின்படி, பிரம்மோற்சவ தினங்களில் வேங்கடேசப் பெருமாளுக்குத் தினமும் பூஜைகளும் அலங்காரங்களும் செய்விக்கப்படும். நான்கு மாடவீதிகளிலும் சுவாமி வீதி உலா வருவார்.

Tirupati
Tirupati

திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின் வரலாறு

திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் கடந்த 1,400 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கி.பி 614-ம் ஆண்டு புரட்டாசி மாதத்தில் முதல் பிரம்மோற்சவம் நடைபெற்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. பல்லவ நாட்டை ஆண்ட 'பெருந்தேவி' என்றழைக்கப்பட்ட 'சமவை' என்பவர்தான் முதன்முதலில் இந்த பிரம்மோற்சவத்தை நடத்தியுள்ளார். அப்போது அவர் வெள்ளியால் வடிவமைக்கப்பட்ட 'மணவாளப் பெருமாள்' என்னும் சிலையைத் திருப்பதி கோயிலுக்கு வழங்கினார். அந்தச் சிலைதான், 'போக சீனிவாசமூர்த்தி' என்று இப்போது அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா வருகிற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி தொடங்கி, அக்டோபர் மாதம் 8-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதுமிருந்து பக்தர்கள் பலரும் இந்த பிரம்மோற்சவ விழாவில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். குறிப்பாக, பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை நிகழ்ச்சி அக்டோபர் 4-ம் தேதி நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

Devotees
Devotees

பிரம்மோற்சவத்தில் பக்தர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள இருப்பதால் விழா நடைபெறும் நாள்களில், அனைத்து வகையான சிறப்பு தரிசனங்கள், ஆர்ஜித சேவைகள், மூத்தக் குடிமக்கள், கைக்குழந்தைகளுடன் வருபவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கிவரும் சிறப்பு தரிசன சலுகைகள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவை தவிர வி.ஐ.பி தரிசனம், பரிந்துரை மற்றும் சிபாரிசுக் கடிதங்களின் அடிப்படையில் வருபவர்களுக்கும் சிறப்பு தரிசன அனுமதியும் மறுக்கப்படுகிறது.

பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிநிரலும் தரிசன பலன்களும்

30.9.2019 - கருடக் கொடியேற்றம்

அன்று இரவு 7 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலாவருவார்.

சேஷ வாகனம், 'தாஸானு தாஸ' பக்திக்கு எடுத்துக்காட்டு. இதில் சுவாமி எழுந்தருளி உலா வரும்போது தரிசனம் செய்தால், நம் மனதில் இருக்கும் மிருகத்தன்மை நீங்கி சாத்விகமான குணங்கள் ஏற்பட்டும். மற்றவர்களுக்குப் பயன்படும் வாழ்க்கை அமையும்.

Tirupati
Tirupati

1.10.2019 - சிறிய சேஷ வாகன வீதி உலா

சிறிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி வருவார். இதில் சுவாமி உலா வரும்போது, தரிசனம் செய்பவர்களுக்குக் குண்டலினி யோக பலம் கிடைக்கும்.

அன்று இரவு 7 மணிக்கு ஹம்ச (அன்னப்பறவை) வாகன வீதி உலா

ஹம்ஸ (அன்னப்பறவை) வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வருவார். பெருமாளிடம் நம் மனதைத் தூய்மையாக்கி ஆத்மநிவேதனம் செய்து ஒப்படைப்பவனையே பகவான் ஏற்கிறார் என்பதை விளக்கவே இந்த அன்னப்பறவை வாகனம்.

2.10.2019 - சிம்ம வாகன வீதி உலா

சிம்ம வாகனத்தில் சுவாமி பவனி வருவார். தீயோர்களை அழித்து நல்லவர்களைக் காப்பதை அறிவுறுத்தும் வாகனம் சிம்ம வாகனம். சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் சுவாமியைத் தரிசித்தால், நமக்கு எதிரிகளின் தொல்லை இருக்காது என்பது ஐதிகம்.

Devotees
Devotees

இரவு 7 மணிக்கு முத்துப்பந்தல்

முத்துப்பந்தல் வாகனம். நன்முத்துக்கள் குளிர்ச்சிக்கு அடையாளம். சந்திரன் உச்சம் பெறும் தலமான திருவேங்கடத்தில் முத்துப்பந்தல் மிகவும் பொருத்தமான ஒன்றாகும்.

3.10.2019 - கற்பக விருட்ச வாகன வீதி உலா

கற்பக விருட்ச வாகனத்தில் ஶ்ரீதேவி பூதேவி சமேதராக வேங்கடேசப் பெருமாள் பவனி வருவார். கேட்கும் வரங்களை மட்டும் வழங்கும் மரம், கற்பக விருட்சம். அதே போன்று கற்பகவிருட்ச வாகனத்தில் எழுந்தருளும் பெருமாளை தரிசனம் செய்ய... கேட்கும் வரங்களோடு கேட்காத வரங்களையும் வாரி வழங்குவார் பெருமாள்.

இரவு 7 மணிக்கு சர்வ பூபால வாகன வீதி உலா

Tirupati
Tirupati

4.10.2019 - மோகினி அவதாரத்தில் பல்லக்கு

மகாவிஷ்ணு மோகினி அவதாரத்தில் எழுந்தருளி அமிர்தத்தை தேவர்களுக்கு வழங்கினார். எனவே, மோகினி அவதாரத்தில் வலம்வரும் பெருமாளை தரிசனம் செய்ய வாழ்வில் நன்மை என்னும் அமிர்தம் பொங்கும் என்பது ஐதிகம்.

Vikatan

இரவு 7 மணிக்கு கருட சேவை

பெரிய திருவடி என்னும் கருட வாகனத்தில் எம்பெருமான் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பிரம்மோற்சவ விழாவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இந்த நாள் கருதப்படுகிறது. அதனால் கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளும் இந்நாளில் மட்டும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள். இதையொட்டித் திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான பல ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பெருமாளே வரமாகக் கேட்டுப் பெற்ற சிறப்பினுக்கு உரியது கருட வாகனம். கருட சேவையில் எழுந்தருளும் பகவானை தரிசித்தால் சகல பயங்களும் நீங்கும் என்பது ஐதிகம்.

tirupati
tirupati

5.10.2019 - அனுமன் வாகன வீதி உலா

சிறிய திருவடி ஹனுமந்த வாகனத்தில் வில் அம்புடன் சுவாமி பவனி வருவார். வைணவ சம்பிரதாயத்தில் ஆஞ்சநேயரே முதல் பக்தர்.

மாலை 5 மணியளவில் தங்கத் தேரோட்டம். தேர் என்பது நடமாடும் கோயில் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. நம் உடல் என்பது தேர் என்றால், உடலை இயக்கும் சாரதி நம் மனம். நம் உடலை இயக்கும் மனம் தூய்மையாக இருக்க வேண்டும். அப்போதுதான் நம் செயல்கள் பரிசுத்தமாக, மற்றவர்களுக்குப் பயன்படும்படியாக அமையும்.

இரவு யானை வாகன வீதிஉலா.

6.10.2019 சூர்ய பிரபை வாகன வீதி உலா

சூரியபிரபையின் ஒளிக் கதிர்களுக்கிடையே சூரிய நாராயணனாக வேங்கடவன் எழுந்தருளுகிறார்.

இரவு 7 மணிக்கு சந்திர பிரபை வாகன வீதி உலா

இந்த இரண்டு வாகனங்களில் பகவானை தரிசித்தால், ஆன்ம வலிமையும் மனவளமும் கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Tirupati
Tirupati

7.10.2019 தேரோட்டம்

'பாரதப் போரில் அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்து வழிநடத்திய பகவான், இன்று நம்மையும் நல்ல வழியில் நடத்திச் செல்வான்' என்ற தத்துவத்தை உணர்த்துவதே மலையப்ப சுவாமியின் தேர்பவனி.

இரவு 7 மணிக்கு குதிரை வாகன வீதி உலா

துவாபர யுகத்தில் கேசி என்னும் குதிரை வடிவில் வந்த அசுரனை அழித்த கேசவன் கலியுகத்தில் கல்கி அவதாரம் எடுக்க இருப்பதை உணர்த்துவதே குதிரை வாகன சேவை.

8.10.2019 சக்கர ஸ்நானம் (திருமுழுக்காட்டு நிகழ்வு)

பிரம்மோற்சவத்தின் இறுதிநாள் நிகழ்ச்சியான இந்த விழா திருமலையில் கோயிலுக்கு அருகே இருக்கும் சுவாமி புஷ்கரணியில் நடைபெறும்.

Pushkarani
Pushkarani

இரவு 7 மணிக்கு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு.

பிரம்மோற்சவத்தின்போது ஒவ்வொரு நாளும் மலையப்ப சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் பவனி வருவார். அவ்விதம் கம்பீரமாக எழுந்தருளி உலா வரும் சுவாமியைத் தரிசித்தால், அந்தந்த நாளுக்கு உரிய நற்பலன்கள் கிடைக்கும் என்பது திருமலை பிரம்மோற்சவத்தின் சிறப்பு.

திருமலை திருப்பதி பிரமோற்சவத்தில் பங்கேற்க முடியாதவர்கள், பிரமோற்சவ நிகழ்ச்சிகள் அனைத்தையும் நேரடி ஒளிபரப்பாக எஸ்.வி.பி.சி சேனலில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் கண்டு களிக்கலாம்.