Published:Updated:

திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் தொடங்கியது!

கொடியேற்றம்
கொடியேற்றம் ( TTD PHOTO )

ஆண்டுதோறும் நடைபெறும் திருப்பதி கோவிந்தராஜ சுவாமி திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவ நிகழ்வில் வரும் மே 21 ம் தேதி அன்று கற்பக விருட்ச வாகனமும் மே 22-ம் தேதி மோகினி அவதாரமும் கருட சேவையும் நடைபெறும்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோயில்களில் ஒன்று திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் திருக்கோயில். இந்தப் பெருமாள், திருமலையில் வேங்கடவன் கோயில்கொள்வதற்கு முன்பிருந்து அருளும் பெருமாள் என்பதால் இவரை ‘பெரிய அண்ணா’ என்றும் ‘பெத்த பெருமாள்’ என்றும் பக்தர்கள் அழைப்பார்கள். இந்தப் பெருமாளிடம் தினமும் திருமலை திருப்பதி கோயில் கணக்கு வழக்குகளை வாசிக்கும்முறையும் ஒருகாலத்தில் இருந்துவந்தது என்கிறார்கள்.

இங்கு பெருமாள் கிடந்த கோலத்தில் காட்சி அருள்கிறார். மேலும் ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீகோதண்ட ராமர், ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீமணவாள மாமுனிகள் எனப் பல சந்நிதிகளோடு இந்தத் திருக்கோயில் அமைந்துள்ளது. திருமலையில் வேங்கடவனுக்கு நிகழ்த்தும் உற்சவங்கள் போலவே கோவிந்தராஜப் பெருமானுக்கும் உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம்.

ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள்
ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள்
TTD PHOTO

வருடம்தோறும் வைகாசி மாதம் ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று (18.5.21) அன்று கொடியேற்றத்துடன் இந்த உற்சவம் தொடங்கியது. நேற்று காலை 7.55 முதல் 8.30 மிதுன லக்னத்தில், கோவிந்த ராஜசுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் கொடிமரம் அருகே எழுந்தருள, கொடிமரத்துக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு கருடக்கொடி ஏற்றப்பட்டு பிரம்மோற்சவம் தொடங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஸ்நபன திருமஞ்சனமும் நடைபெற்றது. இதை ஒட்டி மாலையில் பெரிய சேஷ வாகன உற்சவமும் நடைபெற்றது. கோவிட் பரவல் காரணமாக இந்த ஆண்டும் வாகன சேவைகள் ஆலய வளாகத்துக்குள்ளாகவே நடைபெற்றது. பக்தர்களுக்கு தரிசிக்க அனுமதியில்லை.

வரும் மே 21 ம் தேதி அன்று கற்பக விருட்ச வாகனமும் மே 22 ம் தேதி மோகினி அவதாரமும் கருட சேவையும் நடைபெறும். மே 23 வசந்தோற்சவமும் மே 24 ம் தேதி சூர்ய பிரபை, சந்திரபிரபை வாகன சேவையும் நடைபெறும். மே 25 - ம் தேதி ரதோத்சவமும் 26 - ம் தேதி சக்ர ஸ்நானமும் நடைபெற பிரம்மோற்சவ வைபவம் முடிவுக்கு வரும்.

சேஷ வாகனம்
சேஷ வாகனம்
TTD PHOTO

திருமலை திருப்பதியில் தரிசனம் செய்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது. பொதுவாக மே மாதத்தில் தினமும் லட்சக்கணக்கானவர்கள் தரிசனம் செய்வார்கள். கொரோனா பரவல் காரணமாக வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் திருப்பதிக்கு வருவது குறைந்துள்ளது. 17.5.21 அன்று திருமலையில் 4,587 பேர் மட்டுமே தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு