Published:Updated:

திருமலை திருப்பதி ஶ்ரீவாரி சேவையில் 11 லட்சம் தொண்டர்கள்! - நீங்களும் இணைய விருப்பமா? #Tirupati

எஸ்.கதிரேசன்

திருமலை திருப்பதி ஶ்ரீவாரி சேவையில் ஈடுபட விரும்புபவர்கள் முதலில் ஒரு வார காலம் சேவை செய்வதற்கு 10 பேர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்துக்கொள்ள வேண்டும்.

Tirupati
Tirupati

திருப்பதி வேங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்ய செல்லும்போதெல்லாம் திருமலையில் எங்கு பார்த்தாலும் ஆரஞ்சு வண்ண ஸ்ஃகார்ப் அணிந்துகொண்டு பக்தர்களுக்கு உதவிடும் தன்னார்வத் தொண்டர்களைப் பார்க்கலாம். பக்தர்களின் தேவையறிந்து அவர்களுக்குச் சேவை செய்வது அளவற்ற புண்ணியம் தரக்கூடியது என்பதால், பலரும் இந்தச் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Srivari seva
Srivari seva

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு உதவும் வகையில், சந்நிதானம், லட்டு கவுன்ட்டர், வைகுண்டம் க்யூ காம்ப்ளெக்ஸ், அன்னதானக்கூடம் ஆகிய பகுதிகளில் 'ஶ்ரீவாரி சேவகர்கள்' என்னும் இந்தத் தன்னார்வத் தொண்டர்கள் உதவி செய்வார்கள். குறிப்பாக பிரம்மோற்சவம், புத்தாண்டு போன்ற விழாக்காலங்களில் இவர்களின் பணி மிகவும் சிறப்புடையதாக இருக்கும்.

திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் போலவே இவர்களும் பல வகைகளில் பக்தர்களுக்குத் தேவையான தகவல்களையும் உதவிகளையும் செய்வார்கள். எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் எம்பெருமான் சேவையை மட்டுமே கருத்தில் கொண்டு தொண்டாற்றுவார்கள்.

Tirupati
Tirupati

19 ஆண்டுகளுக்கு முன் 2000 ஆண்டு இந்த ஶ்ரீவாரி சேவை 199 தொண்டர்களுடன் தொடங்கப்பட்டது. மக்கள் மனதில் ஆன்மிகத் தேடல் வளர்ந்துள்ள நிலையில் இப்போது ஶ்ரீவாரி சேவை செய்திடும் தொண்டர்களின் எண்ணிக்கை 11,25,700 ஆக உயர்ந்துள்ளது.

வேங்கடேசப் பெருமாளுக்கு மிகவும் உகந்த ஶ்ரீவாரி சேவையில் நீங்களும் பங்கேற்க விரும்புகிறீர்களா?

Tirupati
Tirupati

உங்களுக்காக, அதுபற்றிய விவரங்களை, தேவஸ்தானம் அறிவித்துள்ளதன் அடிப்படையில் இங்கே பதிவு செய்துள்ளோம்.

திருமலை திருப்பதி ஶ்ரீவாரி சேவையில் ஈடுபட விரும்புபவர்கள் முதலில் ஒரு வார காலம் சேவை செய்வதற்கு 10 பேர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்துக்கொள்ள வேண்டும்.

இந்தக் குழுவில் இருப்பவர்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும் இந்துக்களாகவும் பெருமாள் கைங்கரியத்தில் ஆர்வமும் இருக்க வேண்டியதும் முக்கியத் தகுதியாகும். ஆண், பெண் வேறுபாடுகள் இல்லை.

Tirupati
Tirupati

ஶ்ரீவாரி சேவையில் ஈடுபட விரும்புபவர்கள் தங்களின் பெயர், முகவரி, பாலினம், தொழில், ஸ்டாம்ப் சைஸ் புகைப்படம், தொலைபேசி எண்கள் ஆகியவை அடங்கிய விண்ணப்பப் படிவத்தை, 'மக்கள் தொடர்பு அலுவலர், திருமலை திருப்பதி தேவஸ்தானம், நிர்வாகக் கட்டடம், கபிலத்தீர்த்தம் சாலை, திருப்பதி - 517501 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

திருமலை திருப்பதியில் தங்கி சுவாமி தரிசனம் செய்வது எப்படி? விடுதிவசதிகள் என்னென்ன? #DoubtOfCommonMan

மேலும், விவரங்கள் உங்களுக்குத் தேவைப்பட்டால், 0877- 2263544, 2263293 என்னும் தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

Tirupati
Tirupati

3 நாள்கள், 4 நாள்கள் அல்லது 7 நாள்கள் வரை ஶ்ரீவாரி சேவையில் பங்கு பெறலாம். இதில் பங்கேற்க, இணையதளத்தின் வாயிலாக www.tirumala.org எனும் வலைதளத்தில் 'ஶ்ரீவாரி சேவை' எனும் இணைப்பின் மூலமாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.