
பிரம்மா, சிவத்தை வணங்கி வழிபட்டு, வரம் பெற்று, இழந்த தன் பதவியைத் திரும்பப் பெற்ற தலம் இது. இதனால் இங்கு வந்து வேண்டுபவருக்கு ஈசனின் ஆணைப்படி பிரம்மன் தலையெழுத்தை மாற்றி துயரங்களைத் தீர்த்து அருள்கிறார்.
திருப்பட்டூர் எனும் திருத்தலம், தெய்வ அருளை வாரி வழங்குகிற தலம். நம் தலையெழுத்தையே மாற்றித் திருத்தி, நல்வாழ்க்கையை அருளும் திருத்தலம். இங்குள்ள பிரம்மபுரீஸ்வரரும், பிரம்மாவும் இணைந்து நம் வாழ்வை நலமாக மாற்றித் தருகிறார்கள் என்பது பலரும் கண்ட அனுபவம். இந்தத் தலத்துக்கு வந்து, ஈசனுக்கு அபிஷேகம் செய்து, அம்பிகைக்குப் புடவை சாத்தி, பிரம்மாவுக்கு மஞ்சள் காப்பு செய்து, பிராகார வலம் வந்து மனமுருகி வேண்டிக்கொண்டால், நிச்சயம் நம் தலையெழுத்து மாறி நல்வாழ்க்கை அமைந்துவிடும் என்கின்றன புராணங்கள். இது தேவார வைப்புத் தலம்.
தலையெழுத்தை மாற்ற பரிகாரம் செய்பவர்களிடம் அபிஷேகம் மற்றும் மஞ்சள் காப்பு சாத்த 3,000 ரூபாய் கட்டணம் வசூல் செய்வார்கள். தங்களால் இயன்ற பக்தர்கள் மஞ்சள் காப்பு சாத்தி வழிபடலாம். இயலாதவர்கள் மஞ்சள் வாங்கி கோயிலில் சமர்ப்பித்தால் அதை மஞ்சள் காப்பில் சேர்த்துவிடுவார்கள். இதற்கும் பலன் உண்டு. மஞ்சள் காப்பு சாத்த உகந்த கிழமைகள்: திங்கள், வியாழன். நட்சத்திரங்கள்: திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் அவரவர் ஜன்ம நட்சத்திர தினங்கள். ஜன்ம நட்சத்திர தினத்தில் பிரம்மனுக்கு மஞ்சள் காப்பு சாத்துவது மிகவும் விசேஷம்.

வியாழக்கிழமை இங்கு விசேஷம். நூற்றுக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே தரிசனம் செய்ய வருவார்கள். அதிலும் குருஹோரையான காலை 6.00 மணி முதல் 7.00 மணிவரை தரிசனம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
பிரம்மா, சிவத்தை வணங்கி வழிபட்டு, வரம் பெற்று, இழந்த தன் பதவியைத் திரும்பப் பெற்ற தலம் இது. இதனால் இங்கு வந்து வேண்டுபவருக்கு ஈசனின் ஆணைப்படி பிரம்மன் தலையெழுத்தை மாற்றி துயரங்களைத் தீர்த்து அருள்கிறார். ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் பிரம்மன் தன் சாபம் நீங்கவும், இழந்த பதவியைப் பெறவும் 12 சிவலிங்கங்கள் அமைத்து வழிபட்டார். அவை இன்றும் காலம் கடந்தும் கம்பீரமாகக் காட்சி தருகின்றன.
கிழக்குப் பார்த்த ஆலயம்; ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கிழக்கு நோக்கி சந்நிதி கொண்டிருக்கிறார். அவருக்கு இடப்பக்கத்தில் கிழக்குப் பார்த்தபடி அருள்புரிகிறாள் ஸ்ரீபிரம்ம சம்பத்கௌரி. ஸ்ரீபிரம்ம புரீஸ்வரரின் வலப்பக்கப் பிராகாரத்தில், கிழக்குப் பார்த்தபடி சந்நிதி கொண்டிருக்கிறார் ஸ்ரீபிரம்மா. இங்கு பிரம்மாவின் சந்நிதிக்கு நேராக நின்று பிரம்மாவையும் தரிசிக்கலாம், தட்சிணாமூர்த்தியையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம். இருவருமே குருவின் அம்சம் என்பதாலும் இருக்கலாம்.
பிரம்மபுரீஸ்வரர், பழமலைநாதர், பாதாளலிங்கேஸ்வரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கயிலாசநாதர், ஜம்புகேஸ்வரர், களத்திரநாதர், சப்தரிஷீஸ்வரர், சுத்த ரத்னேஸ்வரர் என சிவபெருமான், 12 லிங்கத் திருமேனியாக, தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார். நான்முகன் இங்கு மங்கள பிரம்மாவாகக் குடிகொண்டி ருக்கிறார்.
இங்குள்ள அம்பிகை ஸ்ரீபிரம்ம சம்பத் கௌரி என்று திருநாமம் கொண்டிருக்கிறாள். சிவபெருமானுடன் சேர்ந்து பிரம்மனுக்கு அருளியதால், பிரம்ம சம்பத் கௌரி என்ற பெயர் உண்டானதாம். ஸ்ரீபிரம்ம சம்பத்கௌரி அம்மனை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வணங்கி, புடவை சாத்தி வேண்டிக்கொண்டால், தடைப்பட்ட திருமணம் இனிதே நடந்தேறும்; தாம்பத்திய வாழ்க்கை வளம் பெறும்! பங்குனி மாதத்தில் மூன்று நாள்கள், ஈசனின் சந்நிதியில் விழும் சூரிய ஒளி, அம்பாளின் திருப்பாதங்களிலும் விழுவது அதிசயம். காசிக்கு நிகரான திருக்கோயில் இது என்று போற்றப்படுகிறது.
ஈசனின் திருநடனத்தை தரிசிக்க விரும்பிய வியாக்ரபாதரும் பதஞ்சலி முனிவரும் ஈசனின் ஆணைப்படி நவபுலியூருக்கும் சென்று தாண்டவ தரிசனம் கொண்டார்களாம். இறுதியில் திருப்பட்டூருக்கு வந்து ஈசனைத் தியானித்து இங்கே ஜீவசமாதி அடைந்தனர். இன்றும் திருப்பட்டூர் ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலில் ஸ்ரீவியாக்ரபாதர் திருச்சமாதியும், ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலில் ஸ்ரீபதஞ்சலி முனிவர் திருச்சமாதியும் உள்ளதைக் காணலாம். இங்கு தியானித்தால் எண்ணியது கூடுமாம்.

சூரபதுமனை அழிக்க முருகப்பெருமான் படை திரட்டி சிவத்தலங்கள் பலவற்றிலும் தங்கிச் சென்றார். அதில் முருகக் கடவுள் தங்கிய திருவிடம், திருப்படையூர் என அழைக்கப்பட்டது. அதுவே பின்னாளில் திருப்படவூர், திருப்பிடவூர் என்றெல்லாம் மருவி, தற்போது திருப்பட்டூர் எனப்படுகிறது. குருவின் கடாட்சம் பூரணமாக நிறைந்திருக்கிற அற்புதத் தலம் திருப்பட்டூர்.
இங்குள்ள முருகப்பெருமான் சந்நிதியில் முருகனின் வாகனம், அசுர மயிலாக இடம் மாறிக் காட்சி தருகிற கோலத்துடன் முருகப்பெருமானை தரிசிப்பது சிறப்பு எனப் போற்றுகின்றனர் அன்பர்கள். கந்தனின் பூஜையில் மகிழ்ந்த ஈசன், அவருக்குத் திருக்காட்சி தந்து, ‘வெற்றி உனக்கே!’ என அருளினார். இங்கே, ஸ்ரீவள்ளி- ஸ்ரீதெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியரின் சந்நிதிக்கு அருகில், ஸ்ரீகந்தபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராகக் காட்சி தருகிறார்.
பொதுவாக, கோயிலின் வடகிழக்கு மூலையில், தெற்கு நோக்கியபடி காட்சி தரும் ஸ்ரீகாலபைரவர், இங்கே மேற்கு நோக்கிய நிலையில் தரிசனம் தருகிறார். இவரின் வலது செவியும், அதில் இருக்கிற தாடங்கமும் சற்றே வித்தியாசமாக இருப்பதைக் காணலாம். தேய்பிறை அஷ்டமியின் ராகுகால வேளையில் வந்து, காலபைரவரை வணங்கி, அவரிடம் கோரிக்கைகளை வைத்தால், வழக்குகளில் இருந்தும் பிரச்னைகளில் இருந்தும் விரைவில் நிவாரணம் பெறலாம்; இழந்த பொருள், இழந்த பதவி, இழந்த செல்வம், இழந்த கௌரவம் ஆகியவற்றை மீட்டுத் தந்தருள்வார் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

இங்குள்ள பிரம்ம தீர்த்தம் அம்பிகை சந்நிதியின் வடக்கே உள்ளது. நான்கு அழகிய படித்துறைகளையும், வற்றாத நன்னீரையும் கொண்டது, பிரம்மன் ஈஸ்வரனை இந்நீரால் அர்ச்சித்ததால் பிரம்மதீர்த்தம் என அழைக்கப்படுகிறது. ஆலயத்தின் வடக்குப்பக்கத்தில் சோலைகளுக்கு நடுவே பகுள தீர்த்தம் நான்கு படித்துறைகளுடன் அமைந்துள்ளது.
திருப்பட்டூருக்கு மற்றொரு பெருமை மாசாத்தனார் எனப்படும் ஸ்ரீஐயனார் கோயில். இங்குள்ளவர் அரங்கேற்ற ஐயனார் எனப்படுகிறார். ஐயனார் வடிவங்களில் இவர் மிக மிகத் தொன்மையானவர் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சேரமான் நாயனார் அருளிய திருக்கயிலாய ஞான உலாவை திருப்பட்டூருக்குக் கொண்டு வந்து அரங்கேற்றியவர் இவர். இதனால் இங்கு சுந்தரருக்கும் சேரமான் நாயனாருக்கும் குருபூஜைத் திருவிழா ஆடி சுவாதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
திருச்சி சமயபுரத்தை அடுத்து, சிறுகனூருக்கு அருகில் உள்ளது திருப்பட்டூர் கிராமம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலுள்ளது திருப்பட்டூர். `இங்கு வரவேண்டும்’ என்று விதிக்கப்பட்டவர்களே திருப்பட்டூர் க்ஷேத்திரத்தை அடைவார்கள் என்பதும் அதிசயமான தகவல்.
ஒரேவொரு முறை... திருப்பட்டூரை தரிசித்து வாருங்கள்! உங்கள் வாழ்க்கையே வளமாக மாறுவதை நீங்கள் உணர்வீர்கள்!