
திருவண்ணாமலையில் தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. நாளை (6.12.2022) காலை 3 மணி அளவில் அண்ணாமலையார் ஆலயத்தில் பரணிதீபமும் மாலை 6 மணி அளவில் திருவண்ணாமலை மலை மீது மகாதீபமும் ஏற்றப்படும்.
Live : திருக்கார்த்திகை மகாதீபம் 2022 | Tiruvannamalai Karthigai Maha Deepam 2022 | திருவண்ணாமலை
திருவண்ணாமலை : பர்வத ராஜகுல மரபினருக்குத் திருக்கோயிலில் பரிவட்ட மரியாதை
திருவண்ணாமலை மகாதீபத்தினை கண்டாலே புண்ணியம் என்பார்கள். அப்படியானால் அதனை ஏற்றுபவர் உண்மையில் எவ்வளவு பாக்கியசாலிகள்... இந்தத் திருப்பணியைச் செய்யும் உரிமை அனைவருக்கும் கிடையாது. காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே இதைச் செய்துவருகிறார்கள். பர்வத மகாராஜாவின் வம்சத்தில் வந்தவர்களே இதைக் காலம் காலமாகச் செய்பவர்கள். அதற்காக ஒவ்வோர் ஆண்டும் மகாதீப தினத்தில் திருவண்ணாமலை ஆலயத்தில் அந்த வம்சத்தினருக்குப் பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்படுகிறது. இதோ இந்த ஆண்டு பரிவட்டம் கட்டும் காட்சி உங்களுக்காக...
கரும்புத்தொட்டில் சுமந்தபடி மாட வீதியை வலம்வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
அண்ணாமலையாரை வேண்டிக்கொண்டு பிள்ளை வரம் பெற்ற பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கரும்புத்தொட்டில் சுமந்து தம் பிரார்த்தனையை நிறைவேற்றுவது வழக்கம். இன்றும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கரும்புத்தொட்டில் பிரார்த்தனையை நிறைவேற்றினர்.


மகாதீபம் ஏற்ற நெய், திரி மலை உச்சிக்குக் கொண்டுச் செல்லப்படும் காட்சி
அண்ணாமலையாருக்கு முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கிரிவலம் செல்லும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக முடி காணிக்கை செலுத்துகிறார்கள். படங்கள்: ச.வெங்கடேசன் / லோகேஸ்வரன்.கோ


திருவண்ணாமலை கிரிவலம் : குழந்தைகளுக்குப் பாதுகாப்புப் பட்டை
திருவண்ணாமலை அண்ணாமலையாரை வணங்கப் பெற்றோர்களுடன் கிரிவலம் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய அவர்களின் மணிக்கட்டுகளில் பெயர், செல்நம்பர் எழுதப்பட்ட விவரங்கள் அடங்கிய பட்டைகளை போலீஸார் கட்டி அனுப்புகிறார்கள். படங்கள்: ச.வெங்கடேசன் / லோகேஸ்வரன்.கோ


அதிகாலை முதலே பக்தர்கள் உற்சாகமாக கிரிவலம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ‘மகா தீபம்’ இன்று மாலை ஏற்றப்படுகிறது. இதையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கிரிவலம் சென்ற வண்ணமிருக்கிறார்கள். படங்கள்: ச.வெங்கடேசன்.


அதிகாலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்... பக்தர்கள் பரவச தரிசனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில், மூலவர் கருவறை முன்பு இன்று அதிகாலை ‘பரணி தீபம்’ ஏற்றப்பட்டது. தீப ஜோதியாக அருள்பாலித்த அந்தப் பரஞ்ஜோதியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்து பரவசம் அடைந்தனர்.
பரணி தீப நிகழ்வில், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஜோதி ஸ்வரூபனான இறைவனே பல்வேறு வடிவங்களில் எழுந்தருளியிருக்கிறான் என்னும் தாத்பர்யத்தை விளக்கவே பரணி தீபம் ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலை பரணிதீபக் காட்சி நேரலை
தீபக் கொப்பரை இன்று மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் திருக்கார்த்திகை தீபவிழாவின் முக்கிய நிகழ்வான ‘மகா தீபம்’ நாளை மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமிருக்கும் மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. அதற்கான மகா தீப கொப்பரை இன்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் முழங்க மலை உச்சிக்குத் தூக்கிச்செல்லப்பட்டது. இதோ அந்தக் காட்சிகள்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா
இந்தப் பரந்த உலகத்தை ஓர் ஆலயமாகக் கருதினால் திருவண்ணாமலை தலத்தை அதன் கருவறையாகக் கொள்ளலாம். அருணாசலமே அக்கருவறையிலுள்ள சிவலிங்கம் ஆகும். நினைத்தாலே முக்தி தரும் இத்தகு மகிமைமிகு அண்ணாமலை, மகா தீபத் திருவிழாவுக்குத் தயாராகிறது. அற்புதமான இந்தத் தருணத்தில், திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் நிகழ்வுகள் குறித்த தகவல்கள் இதோ உடனுக்குடன் உங்களுக்காக...
