திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். நேற்று விடுமுறை தினம் என்பதால், கூட்டம் அதிகமிருந்தது. அப்போது, தனியார் ஆடைத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் சார்பில் ‘விபூதி, குங்கும’ பிரசாத பாக்கெட்டுகள் அர்ச்சகர்களிடம் நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கின்றன. விபூதி பாக்கெட்டுகளின் முன்பக்கம் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் படங்கள் அச்சிடப்பட்டிருந்தன. பின்பக்கம், அன்னை தெரசா படமும், அந்த நிறுவனத்தின் பெயரும் முகவரியும் அச்சிட்டிருந்தனர். இதை கவனிக்காமல், அர்ச்சகர்களும் பக்தர்களிடம் வழங்கியிருக்கிறார்கள்.

இது பற்றி, இந்து முன்னணி அமைப்பினருக்குத் தெரியவரவே, அவர்கள் விபூதி பொட்டலங்களுடன் கோயில் இணை ஆணையரிடம் முறையிட்டனர். உடனடியாக, நடவடிக்கை எடுக்கக் கோரித் தரையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பணியில் கவனக்குறைவாகச் செயல்பட்ட அர்ச்சகர்கள் சோமநாத குருக்கள், முத்துகுமாரசாமி குருக்கள் ஆகிய இருவரையும் ஆறு மாதகாலத்துக்கு பணியிடை நீக்கம் செய்து, கோயில் இணை ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார். `அர்ச்சகர்கள் இருவரும், இந்த இடைப்பட்ட காலத்தில், கோயிலுக்குள் வந்து சாமிக்கு எந்தவிதமான பூஜையும், ஆராதனையும் செய்யக் கூடாது’ என்ற உத்தரவும் கண்டிப்புடன் பிறக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக, கோயில் இணை ஆணையர் குமரேசன் வெளியிட்டிருக்கும் உத்தரவு நகலில், ‘‘நீதிமன்றத்தின் மூலமாகவோ, இந்து சமய அறநிலையத்துறையின் உயர் அலுவலர்கள் உத்தரவோ என எதுவும் பெறாமல், கோயில் நிர்வாகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், உபயதாரர் மூலம் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய விபூதி, குங்குமப் பிரசாத கவரை சோமநாத குருக்கள் மற்றும் முத்துகுமாரசாமி குருக்கள் இருவரும் வாங்கியிருக்கிறார்கள். அதைத் திருக்கோயில் நிர்வாகத்திடம் தெரிவிக்காமலும், அனுமதி பெறாமலும் 01-05-2023 அன்று பக்தர்களிடமும் வழங்கியிருக்கிறார்கள். தன்னிச்சையாகச் செயல்பட்ட புகாரையடுத்து, இருவரும் அர்ச்சகர், ஸ்தானீகம் பணியிலிருந்து ஆறு மாதகாலத்துக்குத் தற்காலிமாகப் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.