Published:Updated:

"7 அடுக்குகள், 3,000 மீட்டர் துணி, 25 அடி உயர குதிரை!"- ஆழித்தேர் ரகசியம் சொல்லும் சுப்பிரமணியன்

ஆழித்தேர்

"எனக்கு எண்பது வயசு ஆகுது. நாங்க மூணு தலைமுறையா இந்த ஆழித்தேர் குதிரைகள் செய்யிற வேலைய செஞ்சிட்டு வர்ரோம். இது எவ்வளவு பெரிய கொடுப்பினை..!"- பெரியவர் சுப்பிரமணியன்

"7 அடுக்குகள், 3,000 மீட்டர் துணி, 25 அடி உயர குதிரை!"- ஆழித்தேர் ரகசியம் சொல்லும் சுப்பிரமணியன்

"எனக்கு எண்பது வயசு ஆகுது. நாங்க மூணு தலைமுறையா இந்த ஆழித்தேர் குதிரைகள் செய்யிற வேலைய செஞ்சிட்டு வர்ரோம். இது எவ்வளவு பெரிய கொடுப்பினை..!"- பெரியவர் சுப்பிரமணியன்

Published:Updated:
ஆழித்தேர்
"ஆரூரா..! தியாகேசா..!" என்ற பக்திகோஷம் விண்ணைப் பிளக்க, மக்கள் வெள்ளத்தின் நடுவே நான்கு வீதிகளிலும் அசைந்து ஆடி, வரும் இந்த ஆழித்தேரோட்டத்தைக் காண இரண்டு கண்கள் போதாது என்பார்கள் திருவாரூர் மக்கள். நான்கு ரத வீதிகளிலும் திருவாரூர் தேரானது அசைந்து ஆடி வரும் போது அதன் முன் பக்கத்தில் பொருத்தப்பட்டிருக்கும், தேர் குதிரைகள் தனி கவனம் பெறும். பார்ப்பதற்கு நிஜ குதிரைகள் தேரினை இழுத்து வருவது போன்ற கண்கொள்ளாக் காட்சியை இவை கொடுக்கும்.

இந்தப் பிரம்மாண்ட குதிரைகள் பூட்டிய ஆழித்தேரினை, படைக்கும் கடவுளான பிரம்மா ஓட்டிவர, திருவாரூர் தேரோட்ட திருவிழாவினை திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும் வந்து தங்கி, தேரோட்ட ஏற்பாடுகளை பார்ப்பதாகவும், இத்தேரினை இந்திரன் முதலான தேவர்கள் வான் நின்று வணங்கி மகிழ்வதாகவும் ஐதீகத்தில் இடம்பெற்று உள்ளது. உலகம் புகழும் ஆழித்தேர் விழா வரும் 15-3-2022 அன்று நடைபெற உள்ளது. அதையொட்டி புண்ணியம் மிக்க அந்தத் தேரை புனரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

தேர்க்குதிரைகள்
தேர்க்குதிரைகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தற்போது இந்தத் தேரினை அலங்கரிக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் ஈடுபட்டுள்ளனர். வருடா வருடம் தேரோட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக இந்தத் தேர்க்குதிரைகளை புதுப்பிப்பது மட்டுமே வழக்கமாக இருந்தது. ஆனால், கடந்த வருடம் நடைபெற்ற தேரோட்டத்தின் போது, ஆழித்தேரானது தெற்கு ரத வீதியில் திரும்பும் போது, அங்கு இருந்த அடுக்குமாடி கட்டடத்தின் மீது மோதி, தேரின் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த தேர்க்குதிரைகள் முற்றிலுமாகச் சேதமடைந்து மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையிலிருந்தது. ஆதலால், தற்போது சுமார் 5 லட்சம் மதிப்பீட்டில் கோயில் நன்கொடையாளர்களின் மூலம், புதியதாக நான்கு தேர்குதிரைகள் செய்யப்பட்டு உள்ளன. இதுகுறித்து அந்தத் தேர் குதிரைகளைச் செய்து கொண்டிருந்த சுப்பிரமணியன் என்ற பெரியவரிடம் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தக் குதிரை பொம்மைகளை வருஷா வருஷம் நீங்கள்தான் செய்வீர்களா?

"ஆரூரா தியாகேசா... இந்தப் புண்ணியமான பாக்கியத்தைக் கொடுத்த எம் இறைவனுக்குத்தான் எத்தனை கருணை! எவருமே எட்ட முடியாத எம்பெருமான் ஏறிவரும் திருத்தேரை இந்த எளியவன் தொட்டு திருப்பணி செய்ய எத்தனை புண்ணியம் செய்திருக்க வேணும். ஐயா, எனக்கு எண்பது வயசு ஆகுது. நாங்க மூணு தலைமுறையா இந்தத் தேர்க்குதிரைகள் செய்யிற வேலைய செஞ்சிட்டு வர்றோம். இது எவ்வளவு பெரிய கொடுப்பினை எங்களுக்கு! உலகமே தொட்டுக் கும்பிடும் இந்தக் கடல் தேரை செய்யற பணி எப்போதும் எங்களுக்கு அலாதியான திருப்தியைக் கொடுக்கும்."

ஆழித்தேர் பணியாளர்கள்
ஆழித்தேர் பணியாளர்கள்

இந்தத் தேரைப் பற்றியும் இது அலங்கரிக்கப்படும் விதம் பற்றியும் சொல்லுங்களேன்!

"இந்த ஆழித்தேர் 4 நிலைகளையும், பூதப்பார், சிறுஉறுதலம், பெரியஉறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசன பீடம் என 7 அடுக்குகளையும் கொண்டது. இந்தத் தேரின் நான்காவது நிலையில் தியாகராஜ சுவாமி வீற்றிருப்பார். இந்த பீடம் மட்டுமே 31 அடி உயரமும், 31 அடி அகலமும் கொண்டது என்றால் தேரின் பிரமாண்டத்தை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ஆழித் தேரை அலங்கரிக்கும் பணி சுமார் 20 நாள்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிடும். தேரை அலங்கரிக்க ஏராளமான மூங்கில் கழிகள், பனம் சப்பைகள் தேவைப்படும். தேர்ச்சீலைகள் அமைக்கவே 3,000 மீட்டர் அளவுக்கு துணிகள் தேவைப்படும். அலங்காரத் தேரில், தேரோட்டி பிரம்மன் பொம்மையும், நான்கு வேதங்களை முன்னிறுத்தும் பெரிய குதிரை பொம்மைகளும் பொருத்தப்பட்டிருக்கும். அதில் குதிரை பொம்மைகள் தயாரிக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டு இருக்கிறோம்.

சுப்பிரமணியன்
சுப்பிரமணியன்

வருஷா வருஷம் புது குதிரைகள் செய்வீர்களா?!

"இல்லை, போன வருஷம் திருவாரூர் தேருக்குப் பயன்படுத்துன, குதிரையெல்லாம் ரொம்ப மோசமா உடைஞ்சு போயிட்டு... அதனாலதான் இந்த வருசம் புதுசா ரொம்ப பிரமாண்டமா 25 அடி, உயரத்துக்கு இந்தத் தேர்க்குதிரையைச் செஞ்சிட்டு இருக்கோம். நாங்க சுமார் 10 பேரு, மூணு மாசமா வேலை பார்த்து இந்த குதிரையை வடிவமைச்சிருக்கோம்.

முதல்ல மூங்கில் சிம்புகள வச்சி இந்தக் குதிரைக்கு தோற்றத்தை உருவாக்குனோம். பிறகு, காகித கலவையை இந்த மூங்கில் கூடு மேல பூசுவோம். கொஞ்ச நாள் கழிச்சி அது நல்லா காய்ஞ்ச பிறகு, சுண்ணாம்புக் கலவையைப் அதுக்கு மேல பூசி, ஒரு பெரிய குதிரை வடிவத்துக்கு கொண்டு வந்து இறுதியா, கலர் அடிச்சி, சில அலங்கார மினுக்குகள் எல்லாம் சேர்த்து அழகா, பிரமாண்டமா இந்த திருவாரூர் தேரின் குதிரையை உருவாக்கி இருக்கோம். ஐதீகத்தின் படி 'நான்கு வேதமும் நான்கு குதிரைகள்' என்பார்கள். அதன் படி, இரண்டு பச்சை நிற குதிரையும், இரண்டு வெள்ளை நிற குதிரையும் இந்த ஆழித்தேரின் முன்பக்கம் இடம்பெறும்!"

திருவாரூர் தேர்
திருவாரூர் தேர்

இந்தப் பணியைச் செய்யும்போது உங்க மனநிலை எப்படி இருக்கும்?

"இந்தத் தேர் ஆடி அசைந்து வரும்போது பார்க்கவே ரொம்ப அழகா இருக்கும். குழந்தைகள் எல்லாம் குதிரைகளைப் பார்த்து கைதட்டி மகிழ்வார்கள். பலரும் தொட்டுக் கும்பிடுவாங்க... அப்போது இந்தக் குதிரைகளை செஞ்ச எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாவும் நெகிழ்ச்சியாவும் இருக்கும். இது எதுவுமே நம்மால செஞ்சது இல்ல. எல்லாம் சுவாமி செஞ்சிக்கிறார், நாம வெறும் கருவியாத்தான் இருக்கிறோம்-னு நெனச்சிக்குவோம். பின்ன 'ஆரூர் பெருமான் பேரைச் சொல்லி மண்ணை அள்ளி வச்சாக்கூட பொன்னா, பொன் சிலையா மாறும்னு' பெரியவங்க சும்மாவா சொல்லி இருப்பாங்க. எல்லோரும் திருவாரூருக்கு வாங்க... எங்க ஐயன் பிரமாண்டத் தேரில் அசைந்து வந்து அருள் கொடுக்கும் அழகை வந்து பாருங்க. ஆயுள்ள ஒருவாட்டியாவது பார்க்க வேண்டிய திருக்கோலங்க அது. இந்த அற்புதத் தேரின் திருப்பணியில் இந்த எளியவங்களும் ஒரு துரும்பாய் பயன்பட்டு இருக்கோம்கிறதே பெரிய பாக்கியம். இந்தப் பிறவிக்கு இந்த பெருமை போதும்ப்பா!" என்று நெகிழ்ந்து போகிறார் அந்தப் பெரியவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism