சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

‘மாணிக்க ஜோதி!’

ஸ்ரீபிரகதீஸ்வரர் - ஸ்ரீமாணிக்க நாச்சியார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீபிரகதீஸ்வரர் - ஸ்ரீமாணிக்க நாச்சியார்

ஓவியம்: ஜீவா

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

அன்று கார்த்திகை சோமவாரம், முன்னிரவு வேளை. திருவாரூர் தியாகேசர் ஆலயம் தீப விளக்குகளால் ஜொலித்துக்கொண்டிருந்தது.

வரிசை வரிசையாக ஏற்றிவைக்கப்பட்டிருந்த ஆவளி தீபங்கள், வண்ணக் கோலங்களின் நடுவே ஒளிர்ந்த அலங்கார தீபங்கள், தெய்வ உருவங்களை வரைந்து அதற்கு முன் வைக்கப்பட்டிருந்த சித்திர தீபங்கள், மாலை வடிவில் திகழும் மாலா தீபம், அடுக்கு தீபங்கள், மதில்களின்மீது திகழும் ஆகாச தீபங்கள், கமலாலயக் குளத்தில் மிதக்கும் ஜல தீபங்கள், வாழைமட்டையால் ஆன சிறு ஓடத்தில் மிதக்கும் நவ்கா தீபங்கள், கோபுரங்களின் மடக்குகளில் ஒளிரும் கோபுர தீபங்கள்... இன்னும் திருச்சந்நிதிகளின் திருவிளக்குகள், அர்ச்சனை தீபங்கள் ஆகியவற்றால் ஆலயமே ஒளி வெள்ளத்தில் பிரகாசித்துக்கொண்டிருந்தது.

இன்னும் சிறிது நேரத்தில் நாட்டிய வைபவம் தொடங்கிவிடும். `திருவாரூர் செப்புச்சிலை’ என்று போற்றப்படும் மாணிக்க நாச்சியார் ஆட வருவாள். அவள் நடனத்தைக் காண பெருங்கூட்டம் கூடியிருந்தது. அன்று ஆலயமெங்கும் ஒளிரும் விளக்கீடு பணியைச் செய்தவளும் அவள்தான் என்று அங்கு உரையாடியவர்கள் சொன்னார்கள்.

அஷ்ட அரம்பையரில் ஒருத்தியான காமவர்த்தினியின் வழித்தோன்றல் மாணிக்க நாச்சியார்.

‘மாணிக்க ஜோதி!’
‘மாணிக்க ஜோதி!’

அஷ்ட அரம்பையரா... யார் அவர்கள்?

அம்பிகைக்குத் துணையாகப் பாற்கடலில் தோன்றியவர்கள் 60,000 அப்சரப் பெண்கள். இவர்களில் முதன்மையான எட்டுப் பேரே அஷ்ட அரம்பையர்!

திருமாலின் இதயத்தில் வீற்றிருந்து, அவரின் இதயத் துடிப்புக்கு ஏற்ப அஜபா நடனம் ஆடிக் கொண்டிருப்பவர் தியாகராஜராகிய விடங்கப் பெருமான். இந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க, விடங்கரின் மூர்த்தத்தை இந்திர லோகத்துக்கு அனுப்பிவைத்தார் திருமால்.

அங்கே விடங்கருக்குச் சிறப்புடன் நடைபெறும் பூஜையில் அஷ்டமங்கலப் பொருள்கள் இடம்பெறும். அவற்றை ஏந்திப் பணிவிடை செய்பவர்கள் அஷ்ட அரம்பையர்தான்.

கிழக்கில் ஊர்வசியும் மேனகையும் முறையே கண்ணாடியையும், பூரணக் கும்பத் தையும் ஏந்தி நிற்பார்கள். தெற்கில் ரம்பை ரிஷபக் கொடியையும், திலோத்தமை இரட்டைக் கவரியையும் ஏந்தி நிற்பர். மேற்கில் சுமுகி ஸ்ரீவத்சத்தையும், சுந்தரி சுவஸ்திகத்தையும் ஏந்தி நிற்பார்கள். வடக்கிலோ காமுகியும் காமவர்த்தினியும் முறையே சங்கையும், அடுக்கு தீபத்தையும் ஏந்தி சேவைபுரிவது வழக்கம்.

இந்த நிலையில் போரில் தனக்கு உதவிய முசுகுந்தனின் வேண்டுதலை ஏற்று, அவருக்குப் பரிசாக விடங்கப் பெருமானைத் தந்தான் இந்திரன். விடங்கரின் மூர்த்தம் ஆழித்தேரில் பூலோகம் புறப்பட்டது. `அவர் இல்லாத இடத்தில் தங்களுக்கும் வேலை இல்லை’ என்று கூறி, அஷ்ட அரம்பையரும் ஆழித்தேருக்கு முன்னே ஆடியபடியே திருவாரூருக்குக் கிளம்பிவிட்டார்கள்.

மண்ணுலகின் ஆதி கோயிலாம் திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோயிலில், இந்த எட்டுப் பெண்களும் விதவிதமான கைங்கர்யங்களைச் செய்து வழிபட்டார்கள். பின்னர், ஈசனின் கட்டளையால் மீண்டும் கயிலாயம் சென்றார்கள் என்கிறது திருவாரூர் புராணம். இந்தப் பெண்களின் வழியே தோன்றியவர்கள், `ருத்ர கணிகையர்' என்ற பெயர் கொண்டு ஆரூர் பெருமானுக்கு தங்களை அர்ப்பணித்தவர்கள் ஆவார்கள்.

அந்த வழியில் தோன்றியவள் மாணிக்கநாச்சியார். ஆரூர் பெருமானுக்கு விளக்கிடும் கைங்கர்யத்தை விடாமல் செய்து வந்தவள். அதேபோல், எங்கிருந்தெல்லாமோ திருவாரூருக்கு வரும் சிவனடியார்களுக்கு இவளின் இல்லமே சத்திரமாக விளங்கியது. அவர்கள் தங்கவும், உண்ணவும், அவர்களின் உடைகளுக்காகவும் தன் சொத்துகளை வாரி வழங்கியவள் மாணிக்க நாச்சியார்.

இதோ இசைக் கருவிகள் ஒலிக்கின்றன. நாச்சியாரும் ஆட வந்துவிட்டாள்.

`முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே

பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப்பின்னே...''

அப்பர் பெருமானின் பதிகத்துக்கு ஏற்ப நாச்சியார் மெய்ம்மறந்து மெல்லிய இறகாக ஆடிக்கொண்டிருந்தாள். இனிய குரலும், அப்பரின் மயக்கும் வரிகளும் சங்கமிக்க, அழகுப்பதுமையாக ஆடும் மாணிக்க நாச்சியாரின் ஆடலைக் கண்டவர்களுக்கு, உலக மாதாவான அந்த உமையம்மையே மண்ணுலகில் இறங்கி ஆடுவதாகத் தோன்றியது. அன்று நள்ளிரவு வரை மக்கள் நாச்சியாரின் நாட்டியம் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்.

`‘எவ்வளவு அற்புதமான நாட்டியம். என் ஆயுளில் இப்படி ஓர் அழகையும் அபிநயத் தையும் கண்டதே இல்லை.’’

``மிகச் சரியாகச் சொன்னீர். ஆனானப்பட்ட சோழ ராஜா கொடுத்த தலைக்கோலி பட்டத்தையே வேணாம்னு சொன்னவதானே இந்தப் பொண்ணு.’’

‘`பின்னே... அந்தப் பட்டம் வாங்கியாச் சுன்னா மன்னன் முன்னாடி ஆடணும். அவர் உத்தரவு தந்தால், திருவாரூருக்கு வரும் எல்லா அதிகாரிகளுக்கு முன்னாடியும் ஆடணும். ஒத்துக்குவாளா இந்த மாணிக்கம்... ஆரூர் பெருமானைத் தவிர, வேற யார் முன்னாடியும் ஆடவோ, பேசவோகூட மாட்டாளே... தாசி ஆனாலும் இவள் தங்கம்வோய்... இவளுக்குன்னு யார் வரப் போறானோ தெரியலையே!’’

இங்ஙனம் விதவிதமாகப் பேசிக்கொண்டார்கள். அவர்கள் பேசியது அத்தனையும் உண்மை. தியாகராஜரையே மணாளனாக வரித்துக்கொண்டவள் மாணிக்க நாச்சியார். யாராவது ஒருவரைத் துணையாக்கிக் கொள்ள நட்பும் சுற்றமும் வற்புறுத்தியபோது, உறுதியாக மறுத்துவிட்டாள்.

``சிவம் ஒன்றே என் ஆன்மாவுக்குக் காவல். அந்த ஈசனே என்னைக் காத்து வரும் நிரந்தர உறவு’’ என்று கூறிவிட்டாள்.

ஊர் அவளை தெய்வப் பெண்ணாகவே போற்றியது. நாள்கள் செல்லச் செல்ல இன்னும் அதிகமாக தியாகேசரைப் பற்றிக்கொண்டாள் மாணிக்கம். ஆலயப் பணிகளும் அடியார்களின் தொண்டுமே தன் கடமை என்று வாழ்ந்தாள். தூய்மையான இவளது தொண்டை உலகறியச் செய்ய ஈசன் திருவுளம் கொண்டார். ஒரு முதியவர் உருவெடுத்து அவள் இல்லம் தேடி வந்தார்.

அப்படி வந்தவரை வரவேற்று பாதபூஜை செய்து, விருந்து தந்து உபசரித்தாள் மாணிக்கம்.

ஸ்ரீபிரகதீஸ்வரர் - ஸ்ரீமாணிக்க நாச்சியார்
ஸ்ரீபிரகதீஸ்வரர் - ஸ்ரீமாணிக்க நாச்சியார்

`‘பெண்ணே! உன் உபசரிப்பால் மகிழ்ந் தேன். திருவாரூரிலேயே நீதான் அழகான தாசி என்று கேள்விப்பட்டேன்; உன்னைக் கண்டதும் அது உண்மை என அறிந்தேன். உன் அழகு பித்துப்பிடிக்க வைத்துவிட்டது. இன்றிரவு உன்னோடு சுகித்திருக்க விரும்பு கிறேன். மறுத்துவிடாதே, இது தியாகராஜரின் மீது ஆணை'' என்றார் முதியவர்.

மாணிக்க நாச்சியார் அதிர்ந்தாள். அவள் தேகமெல்லாம் நடுங்கியது.

`தியாகவிநோதா... ஆரூர் அரசே... இதென்ன சோதனை... கேட்பது உன் அடியார். கேட்கப்படுவது நான். உனக்கே ஆட்பட்ட என்னை இவரிடம் சமர்ப்பிப்பதா... மனம் ஒப்பவில்லையே! ஆனால், அடியாரின் விருப்பத்தை மறுதலிப்பது உம்மையே மறுதலிப்பது போலல்லவா... அடியாள் என்ன செய்ய வேண்டும்... என்னை வழி நடத்தும்’ என்று மனதுக்குள் வேண்டினாள்.

முதியவரோ, ‘`உனக்குக் கொடுக்க என்னிடம் பணம் இல்லை. அபூர்வமான ருத்ராட்ச வடங்களை இமயமலைப் பகுதியிலிருந்து கொண்டு வந்திருக்கிறேன். அதை வாங்கிக்கொண்டு என்னை ஏற்றுக் கொள்’' என்று கூறிச் சிரித்தார்.

நாச்சியாருக்கு சிரிப்பதா, அழுவதா என்று புரியவில்லை. மனப்போராட்டத்தின் நிறைவில் ஒரு முடிவை எட்டினாள். `என்ன ஆனாலும் சரி... ஒரு சிவனடியாரின் மனதைப் புண்படுத்திவிடாமல், அவர் கோரிக்கையை ஏற்பது’ என்று தீர்மானித்தாள்.

`‘உங்களின் விருப்பத்தை இயன்றவரை நிறைவேற்றுவேன். தங்களை ஈசன் என்றே கருதுகிறேன். அவரின்றி வேறு எவரும் என்னிடம் இப்படிக் கேட்டிருக்க முடியாது என்றும் நம்புகிறேன்... வாருங்கள் ஆலயத்துக்குச் சென்று வருவோம்’’ என்றாள். இருவரும் ஆலயத்துக்குச் சென்றனர். ஈசனைப் பாடியும் ஆடியும் நாச்சியார் வழிபட்டாள்.

இருள் கவிழும்போது வீடு திரும்பினர். அதற்குள் செய்தி ஊர் முழுக்கப் பரவியது.

`‘இவளுக்கு என்ன ஆனது! சோழ தேசத்தில் ஆண்களே இல்லை என்று அவமதிக்கிறாளா... யாரோ ஒரு வடநாட்டுப் பரதேசியை இவள் வரித்துக்கொள்வாளாம்... அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப் போமா... அந்தக் கிழவனை விரட்டுவோம்’’ என்று உறவும் நட்பும் கொதித்தனர்.

ஆனால் மாணிக்க நாச்சியாரோ, `‘இது என் வாழ்க்கை. இதில் யார் தலையிடவும் நான் அனுமதிக்க மாட்டேன்’’ என்று உறுதிபடச் சொல்லிவிட்டாள். வேறு வழியின்றி சுற்றமும் உறவும் ஒதுங்கிக்கொண்டார்கள்.

இரவு தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்ட நாச்சியார், முதியவருக்கு அறுசுவை விருந்தளித்தும், தாம்பூலம் தந்தும் பணிவிடைகள் செய்தாள். இசைக் கருவிகள் வாசித்தும், பாடல்கள் பாடியும் மகிழ்ச்சியைப் பரிமாறினாள். நேரம் நள்ளிரவு தாண்டியது. அவ்வளவு நேரமும் இன்பத்தில் திளைத்திருந்த அந்த முதியவர், திடீரென கண்கள் பஞ்சடைத்து, கைகால்கள் விறைத்துப் போக, மூர்ச்சையாகி விழுந்தார். அதைக் கண்டு அலறினாள் நாச்சியார். வைத்தியர் வந்தார், முதியவர் இறந்துவிட்டதாகச் சொன்னார். சுற்றிலும் உள்ளவர்கள் கூடிவிட்டனர்.

‘அழாதே! ஊர் பேர் தெரியாதவர்தானே... காவல் வீரர்களிடம் சொல்லி இந்தப் பிணத்தை அப்புறப்படுத்திவிடு. ஆக வேண்டிய காரியத்தைப் பார்’ என்று பலரும் பலவிதமாக அறிவுறுத்தினார்கள்.

ஆனால் அவளோ, `‘நான் இவரையே கணவனாகக் கருதிவிட்டேன். சில மணி நேரம் மட்டுமே வாழ்ந்தாலும் இவரே என் வாழ்க்கைத்துணை. எனவே, இவரோடு நானும் சிதையில் இறங்க விரும்புகிறேன். அதை இந்த ஊர் ஏற்பாடு செய்தால் நன்றியோடு இருப்பேன்’’ என்றாள்.

ஊர் மறுத்தது. `மாணிக்கம் கோயிலுக்கு உரிய பெண். அவள் எப்படி ஓர் ஆடவனுக்கு மட்டும் உரிமையாவாள்... உடன்கட்டை வழக்கத்தையும் அனுமதிக்க முடியாது’ என்றது. மாணிக்க நாச்சியார் உறுதியோடு நிற்கவே, வேறு வழியின்றி சிதைக்கு ஏற்பாடு செய்தது. திருவாரூர் கோயிலுக்கு வடக்கே அவள் வாழ்ந்த வீட்டின் அருகிலேயே சிதை அமைக்கப்பட்டது. சர்வாலங்கார நாயகி யாகத் தன்னை அலங்கரித்துக்கொண்ட மாணிக்க நாச்சியார் விறகுகளுக்கு மத்தியில் அமர்ந்தாள். அவள் மடிமீது முதியவரின் பிணம் கிடத்தப்பட்டது. சிதை எரியூட்டப் பட்டது.

படபடவென விறகுகள் வெடித்துச் சிதற தீ கொழுந்துவிட்டு எரிந்தது. பெருந்தீயின் நடுவே ‘ஆரூரா... தியாகேசா... என்னைக் கைவிட்டாயா’ என்று ஆவேசமாக ஒலித்தது நாச்சியாரின் குரல். அவ்வளவுதான்... அக்கணமே தீ அணைந்தது. சிதை மேடை மலர் மேடையானது. அவளின் மடியில் கிடந்த முதியவர் மறைந்தார். நாச்சியார் மீது மலர் மாரிப் பொழிந்தது. ரிஷப வாகனத்தில் ஈசனும் உமையும் தோன்ற, எல்லோருக்கும் அந்த அருள் காட்சி கிடைத்தது.

திருவாரூரே கயிலாயமாக மாறியது. மாணிக்க நாச்சியாரின் தியாகத்தையும் தொண்டையும் போற்றிய ஈசன் அவளை ஆசிர்வதித்தார்.

மாணிக்க நாச்சியார் வாழ்ந்த வீடு இன்றும் திருவாரூர் கீழை வீதி வடக்கில் அருள்மிகு மாணிக்க நாச்சியம்மன் சமேத பிரகதீஸ்வரர் கோயிலாக உள்ளது. திருமண வரம் வேண்டி யும் குழந்தைப்பேறு வேண்டியும் பலரும் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இங்கே ஈசனுக்கு முன் உள்ள நந்திதேவர், தன் முகத்தைத் திருப்பியவாறு காட்சிதருகிறார். ஜீவசமாதிகள் உள்ள இடத்தில்தான் இவ்வாறான அமைப்பு இருக்கும் என்கிறார்கள்.

`இப்போதும் இங்கே மாணிக்க நாச்சியார் அரூபமாக உலாவுகிறாள். ஆடலும் பாடலுமாக சிவத் தொண்டுசெய்து வருகிறாள்’ என்று நம்பிக்கையுடன் தெரிவிக் கிறார்கள் ஆன்மிக ஆன்றோர்கள்.

திருவாரூர் செல்லும் அன்பர்கள், அவசியம் மாணிக்க நாச்சியார் சந்நிதிக்கும் சென்று வாருங்கள். அங்கே விளக்கேற்றிவைத்து சில கணங்களேனும் கண்மூடி தியானியுங்கள்; அவள் தன் இருப்பை நிச்சயம் உங்களுக்கும் உணர்த்துவாள்!