Published:Updated:

வழிகாட்டுவார் ஈசன் வரம் அருள்வாள் அம்பிகை!

ஈசன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஈசன்

விளநகர் உசிரவனேஸ்வரர் ஆலயம்!

அவன் பெயர் அருள்வித்தன். சிவ பக்தியில் சிறந்தவன். ஈசனுக்கான மலர்க் கைங்கர்யத்தில் மகிழ்பவன். அதிகாலையில் மலர்களை வண்டுகள் தீண்டு முன்பேகொய்து சேகரித்து, ஈசனுக்கு சமர்ப்பித்து வழிபடுவான். அவனின் மாண்பை உலகறியச் செய்ய சித்தம் கொண்டது சிவம்.

ஒருநாள், காவிரி அன்று கரைபுரண்டது. காலம் தவறாது கடமை செய்யும் அருள்வித்தன் திகைத்தான். எனினும் சிவனை துதித்தபடி, மலர்க் கூடையைத் தலையில் சுமந்தபடி நதியில் இறங்கினான். விதியில் மயங்கினான்.வெள்ளம் அவனை அடித்துப்போனது. திசைகள் மயங்க அவன் உள்ளம் துடித்துப் போனது. திருக்கோயில் திசை தெரியாமல் கலங்கினான். மறுகரையில் இருந்தவர்களோ செய்வதறியாது அலறினர். அருள்வித்தன் நிலை கண்டு வருந்தினர்.

அருள்வித்தனோ ஈசனைச் சரணடைந் தான். இதுவே தருணமென்று ஈசன் நினைத்தார். ஆலயத்தின் திசையினைக் காட்டிக்கொடுத்தார். திருக்கோயில் தரிசனமே பெரும் வலிமை தந்தது; அருள்வித்தனின் கால்களில் விசை சேர்த்தது. எளிதில் நீந்தி கரை சேர்ந்தான்.

வழிகாட்டுவார் ஈசன் வரம் அருள்வாள் அம்பிகை!

‘வெள்ளத்தில் இப்படி யாராவது இறங்குவார் களா...’ என்று ஊரார் கடிந்துகொண்டனர். அருள்வித்தனோ, “பிறவிப்பெருங்கடலையே கடக்க உதவும் ஈசன் இந்தக் காவிரியைக் கடக்கவா உதவமாட்டார் என்று நம்பினேன். என் நம்பிக்கை வென்றது!” என்று பதிலுரைத்தான். கரை காட்டிய ஈசனை இனி துறைகாட்டிய வள்ளல் என்றே போற்றுவோம் என்றனர் பக்தர்கள். இப்படிப்பட்ட அற்புதம் நிகழ்ந்த தலம்தான் திருவிளநகர்.

அருள்வித்தனுக்கு இப்படி அருள் செய்தார் எனில், திருஞானசம்பந்தரை, வேடன் வடிவில் வந்து ஈசன் கரைசேர்த்தார். ஆலயம் வந்து தரிசனம் செய்த ஞானக் குழந்தை ‘ஒளிரிளம்பிறை சென்னிமேல் உடையர்’ என்று தொடங்கி ஒரு பதிகம் பாடியது. அதில் இத்தல இறைவனின் புகழ் ஓங்கியது.

வழிகாட்டுவார் ஈசன் வரம் அருள்வாள் அம்பிகை!

விள நகர் வள்ளல்!

புராணக் காலத்தில் ‘விழல்’ புதர்கள் நிறைந்த வனமாக இருந்தமையால் விழல் நகர் என்று பெயர் ஏற்பட்டுப் பின்னாளில் ‘விளநகர்’ என்று ஆனது என்கிறது தலவரலாறு. இத்தலத்து ஈசனுக்கு இதை அடிப்படையாகக் கொண்டு ‘உசிரவனேஸ்வரர்’ என்ற திருநாமம் ஏற்பட்டது. `உசிரம்' என்றால் வடமொழியில் ‘விழல்’ என்பது பொருள். தர்ப்பை போன்ற ஒருவித புதர்த் தாவரம்.

இந்தப் பகுதியில் நான்கு திசைகளிலும் அருளும் ஈசனுக்கு வள்ளல் என்றே பெயர்.

கிழக்கில் விளநகரில் துறைகாட்டும் வள்ளல்; மேற்கில் மூவலூரில் வழிகாட்டும் வள்ளல்; தெற்கே பெருஞ்சேரியில் கைகாட்டும் வள்ளல்; வடக்கில் மாயூரத்தில் மொழிகாட்டும் வள்ளல் எனச் சிறப்புற கோயில் கொண்டிருக்கிறார் சிவபெருமான்.

வழிகாட்டுவார் ஈசன் வரம் அருள்வாள் அம்பிகை!

துவார பாலகராய் விநாயகர்...

ஐந்து நிலை கொண்டு அழகிய சுதைச் சிற்பங்களுடன் காட்சி தருகிறது கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். கோபுர தரிசனம் செய்து உள்நுழைந்தால் நெடிது விரிந்த வெளிச்சுற்று.

பலிபீடம் மற்றும் நந்திபகவானை தரிசித்துக் கடந்தால் உள்கோபுர வாயில். இதன் இருபுறமும் அழகிய துவார பாலகர்களாக விநாயகர் இடம் பெற்றிருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு. ஆஸ்தான மண்டபத்திற்கு, வலது புறத்தில் ஆடல்வல்லான் சந்நிதி. பக்கவாட்டில் நவகிரகங்கள். இவற்றோடு சனிபகவானும் சூரிய பகவானும் தனிச்சந்நிதி கொண்டருள்கின்றனர். பைரவரும் இங்கே அருள்காட்சி தருகிறார்.

வழிகாட்டுவார் ஈசன் வரம் அருள்வாள் அம்பிகை!

கிழக்கு நோக்கி அருள்கிறார் உசிரவனேஸ்வரர். லிங்கரூப தரிசனம் மனத்தை நிறைக்கிறது. மூலவருக்குச் சற்று அருகிலேயே இடதுபுறத்தில் அம்பிகை, வேயுறுதோளியம்மை என்ற திருநாமத்தோடு சங்கு - சக்கரம் தாங்கியவளாக அருள்கிறாள்.

கோஷ்டத்தில் தென்முகக்கடவுள் சந்நிதியில் மேற்புற விமானத்துக் கீழடுக்கில் ‘வீணா தட்சிணா மூர்த்தி’ அருள்வது விசேஷம். கருவறையின் பின்னே கோஷ்டத்தில் லிங்கோத்பவருக்குப் பதிலாக திருமால் அருள்கிறார்.

தொடர்ந்து விநாயகர், தேவியருடன் முருகன், கஜலட்சுமி ஆகியோர் அருள்கிறார்கள். மேலும், பரகேசரிவர்மன் மற்றும் கோவிந்த தீட்சிதர் ஆகியோர் வணங்கியிருக்க, தனிச்சந்நிதி கொண்டு அருள்கிறார் ஆதிலிங்கேஸ்வரர்.

வழிகாட்டுவார் ஈசன் வரம் அருள்வாள் அம்பிகை!

இடப்புற கோஷ்டத்தில் நான்முகன் இடம் பெற்றுள்ளார். எதிரே, தல விருட்சமான ‘விழல்’ புதரானது சிறிய அளவில் வளர்க்கப்படுகிறது. சற்று தள்ளி துர்கை சந்நிதி. ஆயுதங்கள் ஏந்தி மகிஷாசுரனின் சிரசின் மேல் நின்றருளும் அம்பிகை விஷ்ணு துர்கையாய்க் காட்சிகொடுக்கிறாள். எதிரிலேயே மிகச்சிறிய தனிச் சந்நிதி சண்டேசருக்கு.

வழிகாட்டுவார் ஈசன் வரம் அருள்வாள் அம்பிகை!

புராதானமான இக்கோயில் ‘ஞாழற்கோயில்’ எனப் படும் வகையினைச் சார்ந்தது. ஞாழல் என்றால் புலிநகக்கொன்றை என்கிற சிறுமரத் தினைக் குறிக்கும்.

ஞாழல் பூ போன்ற அமைப்பிலான கருவறையை உடைய கோயில்களை ‘ஞாழற் கோயில்கள்’ என்பர். தவிர, ஞாழல் மரங்கள் சூழ்ந்த சோலையில் அமைக்கப்பெற்ற கோயில்களில் மிக அரிதான வகை இது எனலாம்.

வழிகாட்டுவார் ஈசன் வரம் அருள்வாள் அம்பிகை!

இந்த ஆலயத்தில் பணி செய்யும் மகேஷ் குருக்களிடம் பேசினோம்.

“சுயம்புநாதரான இத்தலத்துப் பெருமானை வணங்கினால், வாழ்வில் எல்லா வகையிலும் வழிகாட்டியாக விளங்கு வார். இன்னகள் அனைத்தும் விலகும்.

வழிகாட்டுவார் ஈசன் வரம் அருள்வாள் அம்பிகை!

சங்கு, சக்கரத்துடன் காட்சியளிக்கும் அம்பாளை ஒன்பது வெள்ளிக்கிழமைகள் வணங்கி விளக்கேற்றி வழிபடுவது சிறப்பாகும். அதன் பலனாகக் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிட்டும். அதேபோல் இந்தக் கோயிலின் மற்றொரு சிறப்பம்சம் சனி பகவான். வன்னி மரத்தடியில் இருக்கும் சனி பகவானை வணங்கி வழிபட்டால், அனைத்துவிதமான தோஷங்களும் விலகும்.

இங்கு, அலங்கார மண்டபத்தில் தெற்கு நோக்கி விநாயகர் அருள்வது சிறப்பானதாகும். இந்த விநாயகரை வழிபட்டால் வாழ்வில் வரும் அனைத்து சங்கடங்களும் விலகும் என்பது திண்ணம்” என்றார்.

வழிகாட்டுவார் ஈசன் வரம் அருள்வாள் அம்பிகை!

திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்தின் பரிபாலனத்தில் இயங்குகின்ற இக்கோயில், 1959-ம் வருடம் கும்பாபிஷேகம் கண்டது. அதன் பின்னர் நீண்ட வருடங் களாகப் பொலிவிழந்து திகழ்ந்தது.

வழிகாட்டுவார் ஈசன் வரம் அருள்வாள் அம்பிகை!

தற்போதுதான் தருமையாதீனகர்த்தர் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகளின் அருளாட்சியில் புத்தாக்கம் செய்யப்பெற்று கடந்த ஐப்பசித் திங்கள் 19-ம் நாளன்று (4.11.2020) கும்பாபிஷேகம் கண்டது.

வழிகாட்டுவார் ஈசன் வரம் அருள்வாள் அம்பிகை!

மயிலாடுதுறை - திருக்கடையூர் சாலையில், மயிலாடுதுறையிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவிளநகர்.

புதுப்பொலிவு பெற்று மண்டலாபிஷேகம் நடைபெற்று வரும் இத்திருக்கோயிலுக்கு நீங்களும் சென்று வாருங்கள். துறைகாட்டும் வள்ளல், உங்கள் வாழ்க்கை செழிக்கவும் நல் வழி காட்டுவார். அந்த ஈசனின் திருவருளால் எதிர்காலம் சிறக்கும்; நடப்பதெல்லாம் நன்மையாகும்.

வன்னி மரத்தடி சனிபகவான்!

கிழக்கு வெளிப் பிராகாரத்தின் வலது புறத்தில் வயது முதிர்ந்த வன்னி விருட்சம் ஒன்று உள்ளது. இதன் கீழ் சனிபகவான் சந்நிதி கொண்டு அருள்கிறார். வன்னி மரத்தை ‘சமீவிருக்ஷம்’ என்பர். இது வெற்றியின் குறியீடு. நெருப்புத் தத்துவத்தின் அடையாளம்.

வழிகாட்டுவார் ஈசன் வரம் அருள்வாள் அம்பிகை!

வன்னிமரத்தின் கீழ் நின்று செய்யும் வேண்டுதல்களை நிறைவேற்றும் சக்தி இந்த விருட்சத்திற்கு உண்டு என்பது நம்பிக்கை. குறிப்பாக அவிட்ட நட்சத்திரக்காரர்களும், கும்ப ராசிக்காரர்களும் வன்னி மரத்தை வழிபட்டால் வெற்றி மேல் வெற்றி சேரும்.

இப்படிப்பட்ட பெருமைமிகு வன்னிமரத்தின் கீழ் சனிபகவான் எழுந்தருளியிருப்பது மிகவும் விசேஷம். இங்குவந்து சனீஸ்வரரை வழிபட்டால், சனி தோஷங்கள் விலகுவதோடு வாழ்வில் நற்பலன்களும் அதிகரிக்கும் என்கின்றனர் பக்தர்கள்.