Published:Updated:

இன்று கஷ்டங்கள் தீர்க்கும் கார்த்திகை சோமவாரப் பிரதோஷம்!

`நமக்கெல்லாம் இனி எதுவும் கிடைக்காது. நாம் கொடுத்துவைத்தது அவ்வளவுதான்’ என்று கஷ்டங்களால் சோர்ந்து அமர்ந்துவிடும் சூழ்நிலைகள் வாழ்வில் ஏற்படுவதுண்டு.

பிரதோஷம்
பிரதோஷம்

நம் வாழ்வில் ஏராளமான கஷ்டங்களும் கவலைகளும் நம்மைச் சூழ்ந்தவண்ணம் உள்ளன. அவற்றிலிருந்து நாம் மீண்டு எழுந்து வாழ்வைக் கொண்டுசெல்ல நமக்கு இறைவனின் அனுக்கிரகம் தேவை. விதிப்படி வாழ்வில் வரும் தடைகளில் எல்லாம் நாம் தேங்கி நின்று சோர்ந்துவிடாமல் அவற்றைப் படிக்கட்டுகளாக்கித் தருபவை இறைவழிபாடுகள். எனவேதான் நம் முன்னோர்கள் மகிமைபொருந்திய நாள்களைக் குறித்து அவற்றில் இறைவழிபாட்டை மேற்கொள்ளச் சொல்லி வலியுறுத்துகிறார்கள்.

பிரதோஷம்
பிரதோஷம்

தோஷங்கள் என்பவை நம் முன்வினைப் பயன்களால் நமக்கு நேர்ந்தவை. அவற்றை மாற்ற நமக்குக் கிடைக்கும் பிரசாதமே பிரதோஷம். பிரதோஷ வழிபாடு உருவானது குறித்துப் பல்வேறு சம்பவங்களில் முக்கியமானது இறைவன் விஷம் உண்ட நிகழ்வு. நன்மைகளையும் இன்பங்களையும் வேண்டிப் பாற்கடலைக் கடைந்தனர் தேவர்கள். நாமும் உலகவாழ்வில் மேலதிகமான இன்பங்களைத் தேடி உலகில் அயராது உழைக்கிறோம்.

Vikatan

கடலோ பாற்கடல். அதனுள் இன்பம் தரும் அமிழ்தம் இருக்கிறது. கற்பக விருட்சம், ஐராவதம் முதலிய செல்வங்கள் இருக்கின்றன. ஆனால், அவையெல்லாம் முயற்சியின் முதலில் வெளிப்படவில்லை. யாராலும் தாங்கமுடியாத ஆலகால விஷம் வெளிப்பட்டது. தேவர்கள் அலறி ஓடினார்கள். அப்போது ஈசன் வெளிப்பட்டு அந்த ஆலகாலத்தை உண்டார்.

சிவபெருமான்
சிவபெருமான்

நாமும் இந்த உலகின் இன்பங்களைத் தேடும் முயற்சியில் உண்டாகும் கஷ்டங்களில் சோர்ந்து, `நமக்கெல்லாம் இனி எதுவும் கிடைக்காது. நாம் கொடுத்துவைத்தது அவ்வளவுதான்’ என்று அமர்ந்துவிடும் சூழ்நிலைகள் ஏற்படுவதுண்டு. அவ்வாறான தருணங்களைக் கடந்துபோகவே நமக்குப் பிரதோஷ வழிபாடு கைகொடுக்கிறது.

ஈசன், விஷத்தை விழுங்கி தேவர்களை உய்வித்ததுபோல நம்வாழ்வின் கஷ்டங்களை விழுங்கி உய்விக்கும் நேரம் பிரதோஷம். நம் முன்வினையால் உண்டாகும் தீய பயன்கள் எல்லாம் பிரதோஷ வழிபாட்டில் தீரும். நீண்டநாள் கோரிக்கைகள், வேண்டுதல்கள், நியாயமான ஆசைகளைப் பிரதோஷ வேளைகளில் இறைவனின் சந்நிதியில் வைக்க அவை விரைவாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.

பிரதோஷகாலத்தில் நந்தி வழிபாடு

முதலில் நந்தியை வணங்கி, பிறகு அதன் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.

அதன்பிறகு வழக்கமாக வலம் வருவதற்கு மாறாக, அப்பிரதட்சிணமாக (எதிர்வலமாக) சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை போய்த் திரும்ப வேண்டும். இதன்பின் போன வழியே திரும்ப வேண்டும். நந்தியை தரிசித்து, தினந்தோறும் செய்யும் வழக்கப்படி வலம் வர வேண்டும். அப்போதும், அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டாமல் அப்படியே திரும்பி, நந்தி வரை வர வேண்டும். இந்த முறைப்படி மூன்று தடவை செய்ய வேண்டும். இதுவே `சோமசூக்தப் பிரதட்சிணம்’.

அருகம்புல் மாலையாலும் வில்வ இலைகளாலும் நந்தி தேவரை அலங்கரித்து, நெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு. அரிசி, வெல்லம் கலந்த காப்பரிசியை நந்தி தேவருக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும்.

சிவபெருமான்
சிவபெருமான்

பிரதோஷ காலத்தில் மேற்குறிப்பிட்ட முறைப்படி தரிசனம் செய்து வழிபட்டால் கடன், வியாதி, அகால மரணம், வறுமை, பாவம், மனத் துயரம் முதலானவை நீங்கும். முக்தி கிடைக்கும்.

இன்று கார்த்திகை சோமவாரம். சிவபெருமானுக்கு உகந்த தினம். இந்தநாளில் வரும் பிரதோஷத்தில் சிவ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புடையதாகும். இன்று மாலை சிவாலயங்களுக்குச் சென்று சிவபெருமானைக் கண்டு வணங்கி அவரின் நல்லருளைப் பெறுவதன் மூலம் வாழ்வில் நம் கஷ்டங்களை எளிதில் வெல்லலாம்.