Published:Updated:

திருச்சி கோயில்கள் - 15: மதுரை கள்ளழகர், கூடலழகர் தெரியும்... அன்பில் அழகரின் சிறப்புகள் தெரியுமா?!

மண்ணுலகம் வந்த வால்மீகி முனிவர் நாரதரின் ஆலோசனையால் 'ராம நாமத்தை' முதன்முதலாக உச்சரித்த தலம் இது எனப்படுகிறது. துர்வாசரின் சாபத்தால் தவளையான சுதபா மகரிஷி தவமிருந்து சாப விமோசனம் பெற்ற தலம் இது.

அலங்காரப் பிரியரான திருமால் 'அழகர்' என்ற திருநாமத்திலேயே அருளும் தலங்கள் மூன்று. அவை அழகர் கோயில் கள்ளழகர், மதுரை கூடலழகர், திருச்சி அன்பில் என்ற ஊரில் எழுந்தருளி இருக்கும் திருவடிவழகிய நம்பி எனும் சுந்தரராஜ பெருமாள். மூவருமே அழகு என்றாலும் பாதாதிகேசமாக பார்க்கும் இடமெங்கும் கொள்ளை அழகுடன் திகழ்பவர் அன்பில் அழகரே என்பது ஆன்றோர் திருவாக்கு.
திருச்சி அன்பில்
திருச்சி அன்பில்

ஒருமுறை வால்மீகி முனிவருக்கும் பிரம்மனுக்கும் ஒரு விவாதம் எழுந்தது. அதில் வைகுந்ததில் எழுந்தருளும் அனந்த சயனப் பெருமாளுக்கு இணையான அழகியத் திருமேனி வேறெங்கும் உள்ளதா என்று கேள்வி எழுந்தது. இறுதியில் இதை வைகுந்தவாசனிடமே கேட்க, அவரே மதுரை, அழகர் கோயில், அன்பில் தலங்களில் சென்று பார்த்து முடிவெடுக்குமாறு கூறினாராம். அதன்படி அன்பில் வந்த முனிவர்கள் இருவரும் அன்பில் நம்பியே அழகுடைய நம்பி என்று போற்றி வணங்கினார்களாம். இது இப்படி இருக்க, இன்னொரு திருக்கதையும் இந்த அன்பில் அழகர் குறித்துச் சொல்லப்படுகிறது.

நாத்திகர்களும் விரும்பிய வள்ளலாரின் 199-வது பிறந்த நாள் - ஞான தீபச் சுடரின் வாழ்க்கைக் குறிப்புகள்!

அகில உலகங்களையும் படைத்த பிரம்மன், தன்னுடைய படைப்புகளின் அழகை எண்ணி வியந்து ஆணவத்தோடு, இவற்றை மிஞ்சும் படைப்புகள் இனி மண்ணுலகில் தோன்றவே தோன்றாது என்று முடிவு செய்தாராம். அவரின் ஆணவத்தை ஒடுக்க எண்ணிய பெருமாள், அழகிய நம்பியாக வடிவெடுத்து அவர் முன்பு தோன்றினாராம். கோடி சூரியப் பிரகாசத்தோடு அழகின் வடிமாய் தோன்றிய பெருமாளைக் கண்டு வியந்த பிரம்மன், யார் இந்த அழகன்! நான் படைத்த படைப்பில்லையே என்று வியந்தாராம். என் படைப்பினும் மிஞ்சிய பேரழகே தாங்கள் யார் என்று பிரம்மன் வினவியதும், 'நானே திருவடிவழகிய நம்பி' என்று உரைத்து 'அன்பில் உருவான திருமேனி இது' என்று கூறி மண்ணுலகில் திருச்சி லால்குடியை அடுத்த எழிலார்ந்த கிராமத்தில் எழுந்தருளினாராம். அன்பில் உருவான திருமேனி என்பதால் அந்த ஊரே 'அன்பில்' எனப்பட்டதாம்.

ஸ்ரீசுந்தரராஜ பெருமாள்
ஸ்ரீசுந்தரராஜ பெருமாள்

திருவடிவழகிய நம்பி என்ற திருநாமம் பின்னாளில் ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் என்றானது. கருவறை விமானம் கோபுர வடிவில் இருப்பது சிறப்பு. கோபுர வடிவ தாரக விமானத்தின் கீழே சயனக்கோலத்தில் காட்சி தருகிறார் நம்பி. இவர் திருவடிகளில் ஸ்ரீதேவி, பூதேவி அமர்ந்திருக்க நாபிக் கமலத்தில் பிரம்மனும் காட்சி அளிக்கிறார். இங்குள்ள தாயார் அழகியவல்லி நாச்சியார், உற்சவர் வடிவழகி உடனுறை வடிவழகராக எழிலுற எழுந்தருளி உள்ளார்.

108 திவ்ய தேசங்களில் இது 4-வது தலம். பழைமையான இந்த ஆலயப் பிரகாரத்தில் ஆண்டாள், லட்சுமி நரசிம்மர், வீர ஆஞ்சநேயர், நரசிம்மர், வேணுகோபாலர், ஆழ்வார்கள் சந்நிதிகள் உள்ளன. அன்பில் பரமபதம் எனப்படும் இந்தத் தலத்தைத் திருமழிசை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். பூவுலகில் வைகுந்த பெருமாள் சயன நிலையில் காட்சி தரும் ஏழு தலங்களைக் குறிப்பிடும் அவரது பாசுரத்தில் இத்தலமும் ஒன்று எனக் குறிப்பிடுகிறார். இந்த ஏழு தலங்களையும் தரிசிப்பவர் பாற்கடலையும் பரமபதத்தையும் தரிசித்த பலன்களைப் பெறுவர்களாம். (குடந்தை, வெஃகா, திருஎவ்வுள், திருவரங்கம், திருப்பேர், அன்பில், வைகுந்தம்)

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருச்சி கோயில்கள் - 14: இன்றும் ஈசனே எறும்பாக வந்து அருளும் திருவெறும்பூர் திருத்தலம்!
மண்ணுலகம் வந்த வால்மீகி முனிவர் நாரதரின் ஆலோசனையால் 'ராம நாமத்தை' முதன்முதலாக உச்சரித்த தலம் இது எனப்படுகிறது. துர்வாசரின் சாபத்தால் தவளையான சுதபா மகரிஷி தவமிருந்து சாப விமோசனம் பெற்ற தலம் இது. தாழம்பூ இங்கு தல விருட்சம். மண்டூக புஷ்கரிணி தல தீர்த்தம், மாசி மக நாளில் இங்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாசி விசாகத்தில் தங்க கருட சேவையும், மார்கழி மாத பகல் பத்து இராப் பத்து உற்சவங்களும், வைகுண்ட ஏகாதசியும் இங்கு விசேஷம்.
திருமழிசையாழ்வார்
திருமழிசையாழ்வார்

அன்பில் தலத்தில் சுந்தரராஜ பெருமாளைத் தரிசித்து அதே நாளில் எதிர்க்கரையில் உள்ள அப்பக்கூடத்தானையும் தரிசித்தால் முக்தி கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் அன்பில் ஆலயத்தில் அமைந்துள்ள ஆண்டாளை வணங்கினால் திருமண வைபவம் கைகூடி வரும் என்பதும் ஐதீகம். பித்ரு தோஷங்களைப் போக்கும் தலமாகவும், நோய்கள் தீர்க்கும் தலமாகவும் அன்பில் போற்றப்படுகிறது. அமாவாசை நாளில் ஆலயத்தின் எதிரே உள்ள கொள்ளிடம் நதியில் நீராடி, அன்பில் பெருமாளுக்கு அப்பம், ததியன்னம் நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு வழங்கினால், சகல தோஷங்களும் நீங்குமாம்.

மேலும் இங்கு வந்து வேண்ட நீங்காத இளமையும் நிறைவானப் பேரழகும் அடைவர் என்கிறது திருத்தல வரலாறு. சருமப் பிரச்னைகள் கொண்டவர்களும் இங்கு வந்தால் நிவாரணம் பெறலாம் என்பது நம்பிக்கை. தேவ லோக மாதுக்களான ரம்பை, ஊர்வசி, திலோத்தமா, மேனகா போன்றோர் இங்கு வந்து வணங்கி, நீங்காத இளமையும் பேரழகும் பெற்றனர் என்பதும் ஐதீகம். புண்ணியம் பெருகும் இந்தப் புரட்டாசி மாதத்தில் அன்பில் வரதனை, அழகு கொண்ட தேவாதிதேவனை தரிசித்துப் பேரருளைப் பெறுவோம்!

எப்படிச் செல்வது?

திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது அன்பில். திருச்சி, லால்குடியில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. காலை 7 முதல் 12.30 மணி வரை; மாலை 4 முதல் 8 வரை கோயில் நடை திறந்திருக்கும்.

"நாகத்துஅணைக் குடந்தை வெஃகா திருஎவ்வுள்

நாகத்துஅணை அரங்கம் பேர்அன்பில் நாகத்து

அணைப் பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால்

அணைப்பார் கருத்தன் ஆவான்."

- நான்முகன் திருவந்தாதி - திருமழிசையாழ்வார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு