Published:Updated:

திருச்சி ஹேங்கவுட்: அழகிய சிற்பங்கள், அரூபமான ஆண்டவன் - ஆத்மநாதரின் ஆவுடையார்கோவில் அற்புதங்கள்!

ஆவுடையார்கோவில்

மற்ற கோயில்களில் இருப்பதுபோல், இங்குக் கொடிமரம் இல்லை. நந்தி இல்லை. மூலவருக்கு உருவம் இல்லை. இறைவனின் திருநாமம் ஆத்மநாதர், அம்பாள், யோகாம்பாள் இருவரும் உருவமின்றி அரூபமாகக் கருவறையில் காட்சி தருகின்றனர்.

திருச்சி ஹேங்கவுட்: அழகிய சிற்பங்கள், அரூபமான ஆண்டவன் - ஆத்மநாதரின் ஆவுடையார்கோவில் அற்புதங்கள்!

மற்ற கோயில்களில் இருப்பதுபோல், இங்குக் கொடிமரம் இல்லை. நந்தி இல்லை. மூலவருக்கு உருவம் இல்லை. இறைவனின் திருநாமம் ஆத்மநாதர், அம்பாள், யோகாம்பாள் இருவரும் உருவமின்றி அரூபமாகக் கருவறையில் காட்சி தருகின்றனர்.

Published:Updated:
ஆவுடையார்கோவில்

திருச்சிக்கு அருகே புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து 13 கி.மீ தொலைவிலிருக்கிறது ஆவுடையார்கோவில். திருவாசகத்தை நமக்கு அருளிய மாணிக்க வாசகரைச் சிவபெருமானே குருந்த மரத்தினடியில் குருவாக எழுந்தருளி ஆட்கொண்ட திருத்தலம் ஆவுடையார்கோவில். ஆவுடையார்கோவிலின் கல் வேலைப்பாடுகளைக் காண நமக்குக் கண் கோடி வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நேர்த்தியாக ஒவ்வொன்றும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சிற்பங்கள் அனைத்தும் நம் சிந்தனையைக் கவர்கின்றன. ஆவுடையார்கோவில் ஆன்மிகம் சார்ந்தது மட்டுமல்ல, சிற்பக்கலையில் தமிழர்கள் சிறந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடம்.

ஆவுடையார்கோவில்
ஆவுடையார்கோவில்

திருப்பெருந்துறை எனப்படும் ஆவுடையார்கோவிலில் உள்ள ஆத்மாநாதசாமி கோயில் மற்ற கோயில்களில் காணப்படாத பல சிறப்பம்சங்களைப் பெற்றிருக்கிறது. தமிழகத்திலுள்ள கோயில்கள் எல்லாம் பொதுவாகக் கிழக்குமுகம் நோக்கியே இருக்கும். சில மேற்கு முகமாகவும் அல்லது வடக்கு முகமாகவும் அமைந்திருக்கும். ஆனால், ஆவுடையார்கோவில் தெற்கு முகமாக அமைந்திருக்கிறது.

மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த இரண்டாம் வரகுண பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகர், மன்னனுக்குக் குதிரை வாங்குவதற்காகக் கொண்டு வந்த பணத்தைக் கொண்டு சிவபிரானுக்கு கோயில் கட்டி ஆவுடையார் என்று கோயில் உருவானது என புராண நூல்கள் கூறுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மன்னனின் கோபத்திற்கு ஆளான மாணிக்கவாசகரைக் காப்பாற்ற இறைவன் நரிகளைப் பரிகளாக மாற்றியதாகவும் புராண நூல்கள் கூறுகின்றன. இக்கோயிலின் மண்டபங்களில் காணப்படும் தாழ்வாரம் மிகவும் காணத்தக்க ஒன்றாகும். இந்தக் கோயிலின் மண்டபத் தாழ்வாரங்களைக் கல்லிலே இழைத்து கட்டிக் கல்லைக் கவி பாட வைத்திருக்கின்றனர். தாழ்வாரத்தைச் சுற்றியுள்ள விளிம்புகளில் உள்ள கல் பலகைகளில் உள்பாகத்தைத் தேக்கு மரச்சட்டக் கைபோல் இழைத்து அதிலே குறுக்காக நான்கு பட்டை, ஆறு பட்டை, உருண்டை கம்பிகளும் இணைத்துச் சேர்த்துள்ளனர். அதிலேயே குமிழ் உள்ள ஆணிகள் அறைந்திருப்பது போல், எல்லாமே கல்லில் செய்து, அதன் மேல் மெல்லிய ஓடு வேய்ந்திருப்பது போலவும் செய்யப்பட்டிருப்பது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

ஆவுடையார்கோவில்
ஆவுடையார்கோவில்
ஒரு கல்லும், மற்றொரு கல்லும் எந்த இடத்தில் எப்படிச் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டுபிடிக்க முடியாத அளவிற்குப் பல கற்களை இணைத்துத் தொகுத்து இதனை அமைத்துள்ளனர். மண்டபத்தின் விதானத்தில் மதுரை, திருவண்ணாமலை, திருவனைக்காவல் என ஆயிரத்தெட்டு சிவாலயங்களை அழகிய ஓவியங்களாக வரைந்துள்ளனர்.
மற்ற கோயில்களில் இருப்பது போல், இங்குக் கொடிமரம் இல்லை. நந்தி இல்லை. மூலவருக்கு உருவம் இல்லை. இறைவனின் திருநாமம் ஆத்மநாதர், அம்பாள் - யோகாம்பாள். இருவரும் உருவமின்றி அரூபமாகக் கருவறையில் காட்சி தருகின்றனர். இங்குள்ள அம்பாளைக் காண்பதற்கு அம்பாள் சந்நிதியில் 36 துவாரங்கள் உள்ளன.

அந்தத் துவாரங்கள் வழியே நாம் பார்வையைச் செலுத்தினால், உள்ளே இருக்கும் அம்பாளின் பாதத்தை நம்மால் காணமுடியும். மாணிக்கவாசகருக்குத் தனி சன்னதி உள்ளது. அம்பாளுக்கு நைவேத்தியம், தீப ஆராதனை காட்டும்போது அங்கிருந்தவாறே மாணிக்கவாசகருக்கும் நைவேத்தியம் தீப ஆராதனை ஒரே நேரத்தில் நடக்கிறது. இதன் தலவிருட்சம் குருந்த மரம். இந்தக் குருந்த மரம் வடமேற்கு மூலையில் அமைந்திருக்கிறது. மூலவரின் கோயில் விமானம் பொன்னோடு வேயப்பட்டது. வாயில் முகப்பிலிருந்து இக்கோயில் மொத்தம் ஆறு மண்டபங்களைக் கொண்டது.

ஆவுடையார்கோவில்
ஆவுடையார்கோவில்

முன் மண்டபத்தில் ஒரே கல்லில் செய்யப்பட்ட 12 அடி உயரமுள்ள அகோர வீரபத்திரர், ரணவீரபத்திரர் ஆகிய சிற்பங்கள் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன. கலையழகுமிக்க குதிரை வீரர்கள் சிலை, ஆயிரங்கால் மண்டபத்தில் வரிசையாக உள்ள பத்ரகாளி, பிட்சாடணர், சங்கரநாராயணர் போன்ற சிற்பங்களும் நம் நாட்டுச் சிற்பக்கலைக்கு இலக்கணமாக விளங்குகிறது. இங்குள்ள ராவுத்தர் மண்டபம் என்னும் மண்டபத்தில் சிவபெருமான் குதிரை மீது அமர்ந்து வருவது போன்ற சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கின்றன. அதோடு உள்மண்டபங்களில் உள்ள சிற்பங்கள் நமக்கு வியப்பூட்டும் வகையில் அமைந்திருக்கிறது. உள்மண்டபத்தின் மேற்கூரையில் தட்டையான பல கற்கள் எந்தவித பிடித்தம் இல்லாமல் பதிக்கப்பட்டிருக்கிறது.

கற்களின் விளிம்பில் கம்பிகள்போல் செதுக்கி, பின்பு இணைப்புக் கற்களில் துவாரம் போட்டு இணைத்திருக்கின்றனர். கோயில் மண்டபச் சுவர்களில் பல இடங்களில் மாணிக்கவாசகரின் வரலாறு மற்றும் சிவபுராணக் காட்சிகளை ஓவியமாக வரைந்துள்ளனர். எல்லா கோயில்களிலும் உற்சவ மூர்த்தி இறைவனாக இருக்க, இந்தக் கோயிலில் மாணிக்கவாசகர் உற்சவ மூர்த்தியாக இருக்கிறார். புதுக்கோட்டைத் தொண்டைமான் மன்னர்கள் இக்கோயிலுக்குக் கொடையாகப் பல கிராமங்களைக் கொடுத்திருப்பதாக வரலாறு கூறுகிறது. இக்கோயிலில் பல கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. ஆன்மிக அன்பர்களுக்கும், சிற்பங்களின் அழகியலைக் கண்டு ரசிப்பவர்களுக்கும் ஆவுடையார்கோவில் பெரும் தீனிபோடும். குறிப்பாக, ஆன்மிக அன்பர்கள் செல்ல வேண்டிய அதி அற்புதக் கோயில் ஆவுடையார் கோவில்.

ஆவுடையார்கோவில்
ஆவுடையார்கோவில்

எப்படிச் செல்வது?

புதுக்கோட்டையிலிருந்து 46 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கிறது. புதுக்கோட்டையிலிருந்து, அறந்தாங்கி சென்று அங்கிருந்து ஆவுடையார்கோவிலை அடையலாம். அறந்தாங்கியிலிருந்து ஆவுடையார்கோவிலுக்குப் பேருந்து வசதி இருக்கிறது. பெரும்பாலும், சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள், சொந்த வாகனத்திலே சென்று சிற்பங்களைக் கண்டு ரசிப்பதுடன் ஆத்மநாதரையும் தரிசித்துவிட்டு வரலாம்.