Published:Updated:

திருச்சி - ஊறும் வரலாறு 6: ஊரின் உச்சியில் பிள்ளையார்... காலம் கடந்து நிற்கும் கோட்டையின் கதை!

திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயில்

வரலாற்றின் திசையெங்கும் பண்பாட்டின் பரப்பெங்கும் வியாபித்துள்ள பிள்ளையார், தமிழ்நாட்டில் அதிக உயரத்தில் அமர்ந்துள்ள ஊர் திருச்சிதான். அதனால்தான் அவரை ‘உச்சிப் பிள்ளையார்’ என்று அழைக்கிறோம்.

திருச்சி - ஊறும் வரலாறு 6: ஊரின் உச்சியில் பிள்ளையார்... காலம் கடந்து நிற்கும் கோட்டையின் கதை!

வரலாற்றின் திசையெங்கும் பண்பாட்டின் பரப்பெங்கும் வியாபித்துள்ள பிள்ளையார், தமிழ்நாட்டில் அதிக உயரத்தில் அமர்ந்துள்ள ஊர் திருச்சிதான். அதனால்தான் அவரை ‘உச்சிப் பிள்ளையார்’ என்று அழைக்கிறோம்.

Published:Updated:
திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயில்
‘துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா’ என்று சங்கத் தமிழ் கேட்ட ‘ஆத்திசூடி ஔவைக்கும் அவர்தான் முதற்கடவுள். 'எள்ளு பொரித்த பொரியும் இடித்து அவல் தன்னில் கலந்து வள்ளிக் கிழங்கைத் திருத்தி வாழைப்பழத்தை உரித்து உள்ளிய பாகு பிரட்டி உண்ணும்படியே தருவோம்' என்று படையல் பதார்த்தங்களைப் பட்டியலிடும் நாட்டார் பாட்டின் பாமரனுக்கும் அவர்தான் துணை.
திருச்சி மலைக்கோட்டை
திருச்சி மலைக்கோட்டை

பெரிய கோயில்களில் இருப்பார். அதைப்போலவே ஆற்றின் கரையிலும் குளத்தின் கரையிலும் அரசமரத்தடியிலும் இருப்பார். ஒருவகையில் ஆய்வாளர் ஆ.சிவசுப்ரமணியன் சொல்வதைப்போல் ஆகமங்களைக் கடந்த கடவுள் விநாயகர். மேல்நிலை தெய்வங்கள்,பரிவார தெய்வங்கள், நாட்டார் தெய்வங்கள் என்ற எந்த வகைப்பாட்டுக்குள்ளும் சேராமல் தனக்கான தனி இடத்தைப் பெற்றவர் பிள்ளையார். களிமண், மஞ்சள், சந்தனம், அரிசிமாவு இவற்றால் கையால் செய்தும் அவரை வழிபட முடியும். இப்படி எல்லா மக்களுக்கும், எல்லா நிலையிலும் வழிபாட்டுக்குரிய கடவுளாகப் பிள்ளையார் கொண்டாடப்படுகிறார். இன்று நாம் வணங்கும் பிள்ளையார் வடிவம் குப்தர் காலத்துக்கு முந்தைய சிற்பங்களில் இல்லை என்றும், குப்தர் காலத்தில்தான் பிள்ளையார் உருவங்கள் காட்சியளிப்பதாகவும் ஆனந்தகுமாரசாமி கூறுகிறார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் கி.பி.6-ம் நூற்றாண்டில் பிள்ளையார் வழிபாடு தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டின் மிகப்பழைமையான பிள்ளையார் கோயில் பிள்ளையார்பட்டியிலுள்ள கோயில்தான் என்று அறிஞர் தொ.பரமசிவம் கருதுகிறார். வணிகர்களின் வாயிலாகத் தமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாடு பரவியதாகவும் தொ.ப கருதுகிறார். அதன் காரணமாகவே வணிக சமூகம் அதிகம் வாழும் பிள்ளையார்பட்டியில் கோயில் உருவானதாகவும் தொ.ப கூறுகிறார். ஊர்வலமாகச் சென்று கடல் போன்ற பெரும் நீர்நிலைகளில் சிலையைக் கரைக்கும் வழக்கத்தை பாலகங்காதரதிலகர் 1893இல் உருவாக்கினார். வெள்ளையர்களுக்கு எதிராக மக்களைத் திரட்டும் ஒரு வடிவமாக இதை அவர் பார்த்தார். ஆனால் பாரதி போன்றவர்கள் இதில் முரண்பட்டனர். இப்படி வரலாற்றின் திசையெங்கும் பண்பாட்டின் பரப்பெங்கும் வியாபித்துள்ள பிள்ளையார், தமிழ்நாட்டில் அதிக உயரத்தில் அமர்ந்துள்ள ஊர் திருச்சிதான். அதனால்தான் அவரை ‘உச்சிப் பிள்ளையார்’ என்று அழைக்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருச்சி மலைக்கோட்டை
திருச்சி மலைக்கோட்டை
அந்த உச்சிப் பிள்ளையார் கோயில் அமைந்துள்ள இடம் ‘மலைக்கோட்டை.’ மலைக்கோட்டைதான் திருச்சியின் அடையாளம். இந்த மலைக்கோட்டையில் உள்ள மலைக்கு வயசு 3,400 மில்லியன் ஆண்டுகள். கோட்டைக்கு வயசு 510 ஆண்டுகள்தான்.

திருச்சியின் மையத்தில் நிற்கும் இந்த மலை நம் இமயத்தைவிட வயதில் மூத்தது. எரிமலை வெடிப்பால் உருவான மலை அது. காவிரியின் நீர்மடியில் 83 மீட்டர் உயரம் உள்ள மலை இது. ’ஃபாசில் ராக்’ என்னும் பாறையால் அமைந்ததாக நிலவியல் பேசும். இந்த மலையைத்தான் “கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது நெடும் பெரும் குன்றத்து” என்று சங்கப் புலவன் மருதனார் அகநானூற்றில் பாடுகிறார். நகரின் நடுவில் அமைந்துள்ள இக்குன்றைச் சுற்றி உய்யக்கொண்டான் மலை, திருமலை, பொன்மலை, திருவெறும்பூர் மலை என்று மலைகள் சூழ்ந்துள்ளன. தென்னிந்தியக் கோட்டைகளில் இதுமட்டும்தான் ‘மலை-சமவெளி-ஆறு’ என்று மூன்றும் கலந்த பரப்பாக விரிகிறது. இங்கு தாயுமானவர், மட்டுவார் குழலி உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகர், முத்துக்குமாரசாமி ஆகிய ஐந்து தெய்வங்களுக்கும் இம்மலையில் தனிச் சிறப்புடன் கோயில்கள் உள்ளன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்போதும் திருச்சியைச் சுற்றியுள்ள ஊர்களில், “எங்க போறீங்க” என்று கேட்டால் வயசாளிகள் “கோட்டைக்குப் போறேன்” என்பார்கள். திருச்சியிலிருந்து கல்யாணம் கட்டிக்கொண்டு வந்த ஒரு பெண்ணை எங்கள் ஊரில் ‘கோட்டையம்மா’ என்று சொல்லும் பழக்கம் இன்றும் உள்ளது. இன்று அந்தக் கோட்டை இல்லை. ஆனால் வரலாறு உள்ளது. சில மிச்ச சொச்சங்கள் சிதிலங்களாக உள்ளன. இக்கோட்டையின் வயசு 510-550 ஆண்டுகள்தான். இந்தக் கோட்டையை நாயக்க மன்னர்களும் ஆற்காடு நவாபும் கட்டினார்கள். மலைக்’கோட்டை’ எப்படி இருந்தது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா? பிரிட்டிஷாரிடம் உள்ள எதையும் ஆவணப்படுத்தும் பழக்கத்தால்தான் நாம் திருச்சிக் கோட்டையைப் பற்றி அறிய முடிகிறது.

மலைக்கோட்டை பழைய தோற்றம்
மலைக்கோட்டை பழைய தோற்றம்

ஆங்கிலேயப் படைத் தளபதிகளான லாரன்ஸ் மற்றும் ராபர்ட்ஓம் எழுதிய குறிப்புகளும் வரைபடமும்தான் கோட்டையைப் பற்றி நமக்குக் கிடைக்கும் தரவுகளாகும். 1753 ஆம் ஆண்டு நவம்பர் 23-ல் அவர் எழுதிய குறிப்பில் - இரண்டு கோட்டைகள் இருந்ததாகவும்; 6000 அடி நீளமும் 36 அடி அகலமும் கொண்ட மிகப் பலம் வாய்ந்ததாக அவை இருந்தன. வெளிக்கோட்டை சுமார் 18 அடி உயரமும் 5 அடி அகலமும் உள்கோட்டை 30 அடி உயரமும் 20 அடி அகலமும் உள்ளதாக இருந்துள்ளன. வெளிக்கோட்டைக்கும் உள்கோட்டைக்கும் இடையே 25 அடி அகலப்பாதை இருந்திருக்கிறது. மேலும் வெளிக்கோட்டைக்கு வெளியே கோட்டையைச் சுற்றிப் பெரிய அகழி இருந்துள்ளது. அகழி, 30 அடி அகலமும் 12 அடி ஆழமும் உள்ளதாக அமைக்கப்பட்டிருந்தது. இன்றுள்ள கீழப்பொலிவார்டு சாலை மேலபொலிவார்டு சாலை பட்டர்வொர்த் ரோடு பகுதிகளில் கோட்டைச் சுவர்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. இடிக்காமல் விட்டுவைத்துள்ள கோட்டையின் பகுதியே மெயின்கார்டு கேட்டாகும்.

இக்கோட்டையே நகர வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாக நினைத்த முனிசிபாலிடி 1868இல் இடிக்கத் தொடங்கியது. கோட்டையைத் தரைமட்டமாக்க 12 வருடங்கள் ஆகி 1880இல்தான் முடிந்தது. கோட்டை இடிபாடுகளை அகழியில் போட்டு அதன் மேல் சாலைகள் அமைக்கப்பட்டன. மரங்கள் நிறைந்த அகலமான சாலை என்னும் பொருளில் பொலிவார்டு என்று அவை அழைக்கப்பட்டன. அதோடு பட்டர்வொர்த் என்ற கலெக்டரின் பெயர் சாலைக்கு வைக்கப்பட்டது. இதுதான் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட கோட்டை உள்ளே வருவதற்கான சாலையாக மாறிய கதை.

மலையில் 273 அடி உயரத்தில் உள்ள பிள்ளையாரை 417 படிகள் ஏறினால் தரிசிக்கலாம். காவிரியின் நீரே தீர்த்தம். வில்வமே கோயிலின் ஸ்தல மரம். ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன்’ என்று இருக்க, இங்கு மட்டும் எப்படி அண்ணன் கணேசன் போய் அமர்ந்தார் என்பதை ஒரு மரபுவழிக் கதை சுவையாகச் சொல்லிச் செல்கிறது.

ராமருக்குப் பட்டாபிஷேகம். விபீஷணன் வந்தான். ஊர் திரும்பும்போது எங்கும் தரையில் வைக்கக்கூடாது என்று சொல்லி ஒரு ரங்கநாதர் சிலையை ராமர் தந்தார். அரக்கன் கையிலா ரங்கநாதர் என்று ஆத்திரம் கொண்ட தேவர்கள் பிள்ளையாரிடம் முறையிட்டனர்.

மலைக்கோட்டை பழைய தோற்றம்
மலைக்கோட்டை பழைய தோற்றம்

இலங்கை திரும்பும் வழியில் காவிரியில் நீராட நினைத்த விபீஷணன் திருவரங்கத் தீவில் இறங்கினான். சிறுவனாக உருமாறி வந்த பிள்ளையாரிடம் சிலையைக் கொடுத்து இதைக் கீழே வைக்காதே எனச் சொல்லிவிட்டுக் குளிக்கப் போனான். சிறுவன் தரையில் வைக்க ரங்கநாதர் அங்கேயே தங்கிவிட்டார். ஆத்திரம் கொண்ட விபீஷணன் சிறுவனைத் துரத்த சிறுவன் மலைமேலே ஏறி உச்சிக்குப் போய் உட்கார்ந்தான். விபீஷணன் ‘நங்’ என்று தலையில் குட்ட தலை வீங்கிவிட்டது. பிள்ளையார் விஸ்வரூபம் காட்டினார். இன்றும் உச்சிப்பிள்ளையார் தலையில் ஒரு கொழுக்கட்டை வீக்கம் உள்ளது. எதற்கும் காரணம் தேடுவது மனித மனதின் இயல்பு. அதற்கான காரணத்தைக் கதையாக அது உருவாக்கிக்கொள்கிறது. வாய்மொழி மரபுக் கதைகள் மனித குலத்தின் மாபெரும் சொத்து.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கீழிருந்து 258 படிகள் ஏறிச்சென்றால் தாயுமானவர் கோயிலை அடையலாம். சுமார் 5 அடி உயர லிங்க வடிவத்தில் தாயுமானவர் மேற்குத் திசை பார்த்து அமர்ந்துள்ளார். முதல் தளத்தில் மேற்கு நோக்கி மட்டுவார்குழலியம்மையும் இருக்கிறார். இக்கோயிலை தென் கயிலாயம் என்று பக்தர்கள் வழிபடுகின்றனர். தனகுந்தன் என்னும் வணிகன் மனைவி ரத்னாவதி. பிரசவ காலம். தாயை உதவிக்கு அழைத்தாள். காவிரியிலோ வெள்ளம். தாயால் மகளைச் சேர முடியவில்லை. ரத்னாவதி இறைவனை மன்றாடினாள். இறைவன் தாய் வடிவில் மகப்பேறு பார்த்தார். பிறகுதான் வந்தது சிவன் எனத் தெரிந்தது. இதனால்தான் அவர் தாயுமானவர் ஆனார். திருச்சியின் வரலாறை மலைக் கோட்டையிலிருந்து பிரிக்க முடியாது.

மலைக்கோட்டை படிக்கட்டுகள்
மலைக்கோட்டை படிக்கட்டுகள்

சங்க காலம் தொடங்கி ஆங்கிலேயர்வரை ஆட்சி செய்த ஆட்சியாளர்களும் தங்கள் வரவை, ஆட்சியை, அதிகாரத்தை உலகுக்குச் சொல்லத் தேர்ந்தெடுத்த இடம் மலைக்கோட்டை. இந்தக் காலத்தில் அதிகாரத்துக்கு வரும் ஆட்சியாளர்கள் கோப்புகளில் அதிகாரத்தின் அடையாளமாகக் கையெழுத்து போடுவதுபோல், அந்தக்கால மன்னர்கள் கையெழுத்துக்குப் பதிலாக ‘கலை எழுத்தை’ கோயில்களாகக் கட்டடங்களாகத் தங்கள் அடையாளத்தோடு வடிவமைத்தார்கள். முற்காலச் சோழர்கள், களப்பிரர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், முத்தரையர்கள், பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், போசளர்கள், சுல்தானியர், விசயநகர மன்னர்கள், நாயக்கர்கள், ஆற்காடு நவாபுகள், ஆங்கிலேயர்கள் என்று திருச்சியை ஆண்ட எல்லா அரசுகளின் அடையாளங்களையும் சுமந்தே மலைக்கோட்டை வாழ்கிறது.

தாயுமானவர் கோயில் புறத்தோற்றம்
தாயுமானவர் கோயில் புறத்தோற்றம்

தமிழ்நாட்டுக் கோயில் அமைப்புகளைக் குடைவரைகள், ஒருகல் தளிகள், கற்றளிகள் என்று வகைப்படுத்தலாம். திருச்சி மாவட்டத்தில் 5 குடைவரைகள் காணப்படுகின்றன. இவற்றுள் இரண்டு மலைக்கோட்டையிலும், மேலும் இரண்டு திருவெள்ளறையிலும் மற்றொன்று திருப்பைஞ்ஞீலியிலும் அமைந்துள்ளன. தமிழகத்தின் பல குன்றுகளை, இயற்கையில் அமைந்த மலை முழைஞ்சுகளை சமண முனிவர்கள் தங்கும் இடமாகவும் தவம் செய்யும் இடமாகவும் பயிற்றுவிக்கும் இடமாகவும் பயன்படுத்தினார்கள். அதுபோலவே திருச்சி மலையில் அமைந்த முழைஞ்சுகளும் தொடக்கக் காலத்தில் சமணப் பள்ளிகளாகவே இருந்தன. இங்குள்ள பிராமிக் கல்வெட்டு கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இம்மலையை ‘கூபக்கிரி’ என்று கல்வெட்டு குறிக்கிறது. இம்மலையில் அமைந்த சமணப் பள்ளியின் தலைவராக ‘சிரா’ என்ற சமணத் துறவி இருந்துள்ளார். அதனாலேயே இம்மலை ‘சிராப்பள்ளி’ எனப்பட்டது. பள்ளி என்றால் படுக்கும் இடம் என்று பொருள். ஶ்ரீரங்கத்தில் படுக்கை நிலையில் உள்ள பெருமாளை ரங்கநாதர் பள்ளி கொண்டுள்ளார் எனச் சொல்ல இதுவே காரணம்.

மலைக்கோட்டை படிக்கட்டுகள்
மலைக்கோட்டை படிக்கட்டுகள்

சமணத் துறவிகள் பயன்படுத்திய 4 அடி நீளமும் 1 1/2 அடி அகலமும் கொண்ட கற்படுக்கைகள் உச்சிப் பிள்ளையார் கோயிலின் பின்புறத்தில் மேல்தொங்கிய பாறையின் அடியில் காணப்படுகின்றன. சமணத் துறவிகளின் பாதம் இரண்டும் செதுக்கப்பட்டுள்ளன. முதலாம் மகேந்திரவர்மன் தனது ஆட்சியின் முதல் பகுதியில் சமணத்தை ஆதரித்தான். அக்காலத்தில் இங்கு சமணம் தழைத்தது. ஆட்சியின் பிற்காலத்தில் சைவத்தைத் தழுவினான். முதலாம் மகேந்திரவர்மன்தான் (கி.பி.600-630) இந்தக் குன்றைக் குடைந்து கோயில் அமைத்த முதல் மன்னன். இதை ‘மேற்குடைவரை’ என்று வரலாற்றாளர்கள் அழைப்பார்கள். மகேந்திரவர்மன் காலத்தில் மலைக்கோயில் சிவன் கோயிலாக மாறியது. பாறைக் கட்டடக்கலையை (Rock Architecture) பல்லவர்களும் சாளுக்கியர்களும் தோற்றுவித்தார்கள். புத்த சமய கட்டடக்கலை இந்து சமய கட்டடக்கலையில் பெரும் செல்வாக்கைச் செலுத்தியது.

மேல் குடைவரையில் உள்ள ‘லலிதாங்குச பல்லவேச்சுர கிருகம்’ என்ற கல்வெட்டால் இதை அமைத்தவன் முதலாம் மகேந்திரவர்மன் என்று அறிய முடிகிறது. முகம்பு மண்டபம் நீள் சதுரமாகவும் கருவறை சதுர வடிவமாகவும் குடையப்பட்டுள்ளன. மலையின் அடிவாரத்தில் தெற்கில் ஒரு குடைவரை உள்ளது. இதை ‘கீழ்க்குடைவரை’ என்பர். இதன் காலம் குறித்து முரண்பட்ட கருத்துகள் அறிஞர்களிடம் உலவுகின்றன. திருச்சி மலையில் உள்ள குடைவரைகளில் ‘கீழ்க்குடைவரை’ கட்டடக் கலையில் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. இது தொண்டை மண்டல குடைவரை போலவும் இல்லை. பாண்டி நாட்டு குடைவரையை ஒத்து சோழ நாட்டில் அமைந்துள்ள இதனை முதலாம் நரசிம்மன் குடைந்திருக்கலாம் என்றும், பாண்டியன் ஶ்ரீமாறன் ஶ்ரீவல்லபன் எழுப்பியிருக்கலாம் என்றும், இந்தக் குடைவரையில் உள்ள கலை பாணியைக்கொண்டு அறிஞர்கள் தீர்மானிக்கிறார்கள். இக்குடைவரை முற்றுப்பெறவில்லை.

மலைக்கோட்டை
மலைக்கோட்டை
File Photo

இந்தக் குடைவரைகள் அமைந்த இரண்டு பாறைகளும் இளம் சிவப்பு நிறம் கொண்டவை. கடினமான கிரானைட் வகையைச் சேர்ந்தவை. மலையில் அமைந்த தாயுமானவர் கோயில் - பல வளர்ச்சிப் படிகளை பாணிகளைக் கண்ட கோயிலாகும். திராவிடக் கலைபாணியை ஒத்த தொடக்கக்காலக் கோயிலாகும் இது. இக்கோயிலில்தான் விஜயாலய சோழன் முதன் முதலில் திருப்பணி செய்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. கோயில் கட்டப்பட்ட விதம் அதில் உள்ள ஒப்பனைகளைக் கொண்டு இக்கோயிலை கி.பி 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதுகின்றனர். இக்கோயில் 11 ஆம் நூற்றாண்டில் விரிவாகக் கட்டப்பட்டது என்பர்.

இக்கோயிலின் சில கூறுகள் தாராசுரத்தை ஒத்ததாகவும், சில அம்சங்கள் போசள சாளுக்கிய கலை பாணியைக் கொண்டதாகவும் உள்ளதால் தாயுமானவர் கோயிலை 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தது என்பாரும் உண்டு. நாயக்க மன்னர்களில் விஸ்வநாத நாயக்கர் காலத்தில் திருச்சி நகரம் பாதுகாப்பு நகரமாகவும் மதுரையின் துணை நகரமாகவும் விரிவடைந்தது. முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கரும் வீரப்ப நாயக்கரும் தங்கள் ஆட்சியில் ஏராளமான திருப்பணிகளை தாயுமானவர் கோயிலுக்குச் செய்து கோயிலை விரிவடையச் செய்தனர். அதுவும் முத்துவீரப்ப நாயக்கர் கி.பி 1661இல் மதுரை நாயக்க அரசின் தலைநகரமாகத் திருச்சியை உருவாக்கினார்.

மலைக்கோட்டை படிக்கட்டுகள்
மலைக்கோட்டை படிக்கட்டுகள்

மதுரையைவிட திருச்சி பாதுகாப்பானது என்று கருதிய சொக்கநாத நாயக்கர் கி.பி 1666-ல் மீண்டும் திருச்சியை தலைநகரம் ஆக்கினார். கி.பி 1529 முதல் 1736 வரை அரசாண்ட நாயக்க மன்னர்கள் காலத்தில் திருச்சி மலைக்கோட்டை கோயில்கள் அரண்மனைக் கட்டடங்கள் மண்டபங்கள், தெப்பக்குளம் ஆகியவை திராவிட இந்திய சாரசானிய பாணியில் கட்டப்பட்டன. தெற்கு நோக்கி நகர் விரிவடைந்தது. 18 ஆம் நூற்றாண்டில் திருச்சி போர் ஈர்ப்பு மையமாகத் திகழ்ந்து. 1792-ல் ஆற்காடு நவாபிற்கும் ஆங்கிலேயருக்கும் உடன்படிக்கை ஏற்பட்டது. 1801-ல் திருச்சியின் முதல் மாவட்ட கலெக்டராக ஜான் வாலசு நியமிக்கப்பட்டார். ஆங்கிலேயர் கைக்குத் திருச்சி போனது.

செவ்வந்தி விநாயகர் என்ற புராணப் பெயர் கொண்ட உச்சிப்பிள்ளையார் காலத்தால் பிந்தியவரே. மதுரை நாயக்க அரசின் தளபதியும் அமைச்சருமான அரியநாயக முதலியார் என்பவரால் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் உச்சிப்பிள்ளையார் கோயில் கட்டப்பட்டதாக அறியமுடிகிறது. 1950 களில் மாணிக்கம் பிள்ளை என்பவர் காவிரியில் குளிக்கச்சென்ற போது ஆற்றங்கரையில் கிடைத்த பிள்ளையாரை மலை ஏறும் வழிக்கு முன்பு வைத்து வழிபாட்டை உருவாக்கினார். அந்த விநாயகரை மாணிக்க விநாயகர் என்று அழைக்கிறோம்.

மலைக்கோட்டை படிக்கட்டுகள்
மலைக்கோட்டை படிக்கட்டுகள்

இம்மலையில் அமைந்துள்ள ‘மௌன மடம்’ பதினெட்டு சைவ சித்தாந்த மடங்களுள் ஒன்று. இம்மடத்தை திருமூலர் வழிவந்த சாரமா முனிவர் தோற்றுவித்தார். இவரைத் தொடர்ந்துவந்த மௌன குருதான் தாயுமானவ அடிகளின் குருநாதர் ஆவார். மௌன குருவின் சமாதியின் மேல்தான் முத்துக்குமாரசாமி கோயில் அமைந்துள்ளது. இம் மடமே தாயுமானசாமி கோயிலை நிர்வகித்து வந்தது. இம்மலையின் கடவுளரை, திருஞானசம்பந்தர், நாவுக்கரசர், மாணிக்கவாசகர், சேக்கிழார், அருணகிரிநாதர், எல்லப்பநாவலர், முத்துசாமி தீட்சிதர், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்று பலரும் பாடி வணங்கியுள்ளனர். தென்னிந்தியக் கட்டடக்கலையில் மிகச் செறிவான பாணியை சோழ மண்டலத்தில் போசளர்களே அறிமுகம் செய்தனர். அந்த பாணியில் அமைந்த திருவரங்கம் வேணுகோபால் கோயில் போலவே தாயுமானவர் கோயிலும் புதிய வளர்ச்சியைக் கண்டது.

இங்குள்ள மண்டபங்கள், அம்மன் கோயில், தாயுமானவர் கோயில் ஆகியவற்றில் பிற்காலச்சோழர், பிற்காலப் பாண்டியர், போசளர் ஆகியோரின் கட்டடக்கலை மரபுகள் இணைந்து கலை அமைதியை வழங்குவதை இன்றும் உணரலாம். பேலூர்-அலிபேடு கோயில்களில் உள்ளதைப்போன்ற பலகணி சிற்பங்களை மகாமண்டபத்தில் காணலாம். தாயுமானவர் கோயில் லிங்கத்தின் மேல் பங்குனி மாதத்தின் 24,24,25 தேதிகளில் மாலைச் சூரியக் கதிர்கள் விழுவதுபோல் கோயில் கட்டப்பட்டுள்ளது. பழம் தமிழர்களின் கட்டட அறிவுக்கும் வானியல் புரிதலுக்கும் சாட்சியாக இக்கோயில் விளங்குகிறது. மட்டுவார்குழலி அம்மன் கோயில், நாயக்கர் ஆட்சியின் சாட்சியாக உள்ளது. நாயக்கர்கள்தான் சிவனுக்கு ஈடாக அம்மனுக்கு ஆலயம் எழுப்பினார்கள். மிக மிக அழகிய வேலைப்பாடுகள் அமைந்த மீனாட்சி சுந்தரேச்சுரர் மண்டபத்தை 16 ஆம் நூற்றாண்டில் பெரியவீரப்பன் கட்டியுள்ளார்.

கம்பீரமான திருச்சி மலைக்கோட்டை
கம்பீரமான திருச்சி மலைக்கோட்டை

நாகநாதர், கைலாசநாதர், விசுவநாதர், பூலோகநாதர், வெளிகண்டநாதர் என்று ஐந்து நாதர்களைத் தன்னைச் சுற்றிலும் அமைத்துக்கொண்ட மலை இது. இப்படி நகரில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் மலையும் உச்சிப்பிள்ளையாரும் ஒரு உண்மையை மௌனமாகத் பேசுவதாகவே தோன்றுகிறது. 3,400 மில்லியன் ஆண்டுகளைக் கடந்தும் மலைக்கோட்டையின் மலை வாழ்கிறது. ஆனால் 550 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோட்டை இல்லாமல்போனது. இயற்கையின் வலிமையையும் செயற்கையின் பலகீனத்தையும் புரியவைக்கும் சொல்லாடலாகவும் ‘மலைக்கோட்டை’ அமைந்துவிட்டது. ஒருவேளை இந்த ‘நிலையாமையை’ எங்கள் மலை மௌனமாகப் பேசிக்கொண்டே இருப்பதால்தான், அதிகார ஆசையோடு நடக்கும் சாதி-மத மோதல்களும் சண்டைகளும் திருச்சியில் இல்லையோ..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism