Published:Updated:

திருச்சி – ஊறும் வரலாறு 18: `அரங்க மா நகருளானே' - திருவரங்கம் பெரியகோயில்!

திருச்சி திருவரங்கம் கோயில்

`அரங்கம்' என்றால் ஆற்றிடைக்குறை என்று பொருள்படும். சிறப்புக் கருதி `திருவரங்கம்' ஆனது. அங்கு பெருமாள் வந்து தங்கியது ஒரு சுவையான புராணம்.

திருச்சி – ஊறும் வரலாறு 18: `அரங்க மா நகருளானே' - திருவரங்கம் பெரியகோயில்!

`அரங்கம்' என்றால் ஆற்றிடைக்குறை என்று பொருள்படும். சிறப்புக் கருதி `திருவரங்கம்' ஆனது. அங்கு பெருமாள் வந்து தங்கியது ஒரு சுவையான புராணம்.

Published:Updated:
திருச்சி திருவரங்கம் கோயில்
சைவர்கள் சிதம்பரத்தை `பூலோக கைலாசம்' என்பதைப்போல் வைணவர்கள் திருவரங்கத்தை `பூலோக வைகுண்டம்' என்பார்கள். வைணவத்தில் `பெரிய கோயில்' என்றால் திருவரங்கம்தான். பெருமாளின் 108 திருப்பதிகளில் முதன்மையான கோயில் திருவரங்கம்தான். காரணம் வைணவ சம்பிரதாயப்படி சிலாரூபமாக பெருமாள் வெளிப்பட்ட முதற் கோலம் ரங்கநாதர் கோலம்தான். அதனால் வைணவர்களுக்கு ரங்கநாதர்தான் பெரிய பெருமாள்.

கொஞ்சும் தமிழில் பாடிய 12 ஆழ்வார்களில் மதுரகவி தவிர 11 ஆழ்வார்களும் திருவரங்கப் பெருமானைப் பாடியுள்ளனர். 108 திருப்பதிகளில் தானாய் தோன்றிய (சுயம்பு) திருப்பதிகள் 8 தான். அதிலும் முதல் திருப்பதி திருவரங்கம்தான். பள்ளிகொண்ட நிலையில் பெருமாள் இங்கு அருள்கிறார். இதனை `சயனக் கோலம்' என்பார்கள்.

திருச்சியில் காவிரியும் கொள்ளிடமும் உருவாக்கிய மணல் தீவு முக்கொம்பு தொடங்கி கல்லணை வரை உள்ளது. `அரங்கம்' என்றால் ஆற்றிடைக்குறை என்று பொருள்படும். சிறப்பு கருதி `திருவரங்கம்' ஆனது. அங்கு பெருமாள் வந்து தங்கியது ஒரு சுவையான புராணம். ராமர் முடி சூட்டிக்கொண்ட பிறகு விபீஷணனுக்கு அவன் செய்த உதவிக்காக `ரங்க விமானம்' தருகிறார் ராமர். அதை விபீஷணன் இலங்கை போகும் வழியில் சந்திரபுஷ்கரினி என்னும் தடாகத்தின் கரையில் வைக்கிறான். எடுக்க முயலும்போது ரங்க விமானம் அசையவில்லை. தர்மவர்மா என்ற அந்தப் பகுதி மன்னனின் பக்தியை மெச்சி பெருமாள் அந்தத் தீவிலேயே தங்கிவிடுகிறார். தர்மவர்மா ஆலயம் எழுப்புகிறான். கால வெள்ளம் காவிரியில் புரண்டது. தர்மவர்மா எழுப்பிய ஆலயம் மணலில் புதைந்தது.

திருச்சி திருவரங்கம் கோயில் (பழைய படம்)
திருச்சி திருவரங்கம் கோயில் (பழைய படம்)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காலம் யுகயுகமாய் கடந்தவிடுகிறது. இப்போது அந்தப் பகுதி முழுக்க காடு. வேட்டைக்கு வந்த சோழ மன்னனுக்கு ஸ்லோகம் சொன்ன ஒரு கிளி ஆச்சர்யம் தந்தது. கிளி அமர்ந்த மரத்தின் அடியைத் தோண்ட புதைந்துபோன ரங்க விமானம் தெரிந்தது. அதைச்சுற்றி தர்மவர்மா கோயில் கட்டினான். அதனால் அவன் கிளிச்சோழன் ஆனான். இப்படித்தான் சரயு நதிக் கரையிலிருந்து காவிரிக்கரைக்கு பெருமாள் வந்ததாக வைணவம் சொல்கிறது. அந்த கிளியின் நினைவாகத் திருவரங்கத்தில் இன்றும் கிளி மண்டபம் உள்ளது.

தமிழில் திருமால் வழிபாடு தொன்மையானது. முல்லை நிலக் கடவுளாக திருமால் இருந்ததை “மாயோன் மேயக் காடுறை உலகம்” எனத் தொல்காப்பியம் கூறுகிறது. சிலப்பதிகாரத்தின் நாடுகாண் காதையில், “அறிதுயில் அமர்ந்த மணிவண்ணன் கோட்டம் வலம் செயாக் கழித்து” என்று இளங்கோ திருமால் வழிபடப்பட்டதைச் சொல்லிப்போகிறார்.

ஆழ்வார்கள் திருமால் வழிபாட்டை உச்சம் கொண்டு சென்றனர். அவர்கள் திருமாலை, “ஓங்கி உலகளந்த உத்தமன்” என்றும் “திண்தோள் மணிவண்ணா” என்றும் “வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை” என்றெல்லாம் துதித்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கெல்லாம் முன்னோடியாக இளங்கோவடிகள் “ஆச்சியர் குரவை” யில் “வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி.. எனத்தொடங்கி “கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே? கண் இமைத்துக் காண்பார் தம்கண் என்ன கண்ணே.” என்று இசையால் வசமாவார். இந்தப் பாடலை எம் எஸ்.சுப்புலட்சுமி பாடிக் கேட்க வேண்டும். இன்பத் தேன் வந்து பாய்ந்திடும் காதினில்.

பழைமையான தமிழ் வழிபாட்டு முறைகளில் ஒன்றான திருமால் வழிபாட்டில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பது திருவரங்கம். ஒரு நாட்டின் மன்னனுக்கு நடப்பதுபோன்று பெருமாளுக்கு விழாக்கள் நடக்கின்றன. இதனால்தான், “திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே” என்று பேசுகிறோம்.

மூவேந்தர்கள் தொடங்கி விசயநகர மன்னர்கள், நாயக்கர்கள், ஆங்கிலேயர்கள் எல்லோருமே அரங்கனை வணங்கி கோயிலை வளர்த்தனர். அதனால்தான் வரலாறு, சமயம், தத்துவம், கலைகள், இலக்கியம் எல்லாம் தோண்டும் இடமெல்லாம் ஊறுகிறது.

திருச்சி திருவரங்கம் கோயில் (பழைய படம்)
திருச்சி திருவரங்கம் கோயில் (பழைய படம்)

கம்பன் தனது ராமகாதையை கி.பி.885 - ல் இங்குதான் அரங்கேற்றம் செய்தார் என்று சொல்லப்படுகிறது. வால்மீகியில் இல்லாத `இரண்ய வதைப்படலம்' கம்பன் தனது காவியத்தில் எழுதியதை சிலர் ஏற்க மறுத்தனர். ஆனால் மேட்டழகிய சிங்கர் என்ற நரசிம்மர் கர்ஜித்து ஏற்றதாக ஸ்தல புராணம் கூறுகிறது. தாயார் சந்நிதிக்கு அருகில் உள்ள நான்குகால் மண்டபத்தில்தான் கம்பராமாயணம் அரங்கேறியதாம். இதன் சாட்சியாக திருவந்திக்காப்பு மண்டபத் தூணில் கம்பர் கைகூப்பி வணங்கும் சிற்பம் உள்ளது.

இக்கோயிலின் வழிபாட்டு முறைகளை ஒழுங்கு செய்தவர் ராமாநுஜர். இவர்தான் வைணவத்தை நிலை நாட்டினார். தனக்கு மட்டும் சொல்லப்பட்ட `நாராயண' மந்திரத்தை திருக்கோஷ்டியூர் கோபுரம் ஏறி எல்லோருக்கும் சொன்ன சீர்திருத்தவாதியாகவும் இருந்தார். ஒடுக்கப்பட்ட மக்களை வைணவத்தில் `திருக்குலத்தார்' என்று ஏற்பதற்கு இவரே காரணம். 77 ஆண்டுகள் வாழ்ந்த ராமாநுஜரைப் பெருமாளின் ஆணையின்படி வசந்த மண்டபத்தில் அடக்கம் செய்தனர். அங்கே சிலை எழுப்பி வழிபாடும் நடந்துவருகிறது. அந்த சந்நிதி `உடையவர் சந்நிதி' என்று வணங்கப்படுகிறது. பிரம்ம உற்சவ காலங்களில் பெருமாள் உடையவர் சந்நிதிக்கு வருவார்.

வைணவ ஆசார்யர்களில் பலர் வாழ்ந்தது இங்குதான். முக்கியமானவர்கள்- நாதமுனிகள், ஆளவந்தார்,பெரியநம்பி, பெரியவாச்சான் பிள்ளை, வேதாந்த தேசிகன் மற்றும் சிலர். இவர்கள் எழுதிய கிரந்தங்கள் வைணவத்தில் முக்கியமானவை. ந.சுப்புரெட்டியார், எம்பார் விஜயராகவாச்சார்யர் போன்ற பலர் பிறந்த இடம் திருவரங்கமே.
திருச்சி திருவரங்கம் கோயில் (பழைய படம்)
திருச்சி திருவரங்கம் கோயில் (பழைய படம்)

வைணவ இதழ்களான ஶ்ரீவைஷ்ணவ சுதர்சனம், அமிர்தலஹரி, போன்றவற்றின் இயங்கு தளம் திருவரங்கம்தான். ரேவதி முத்துசாமி நடத்தும் `கோதை தந்த கோபுரம்' நாட்டிய நாடகம் இங்கு உருவானதே. ஶ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் நடத்தும் ஶ்ரீமத் ஆண்டவன் கலைக்கல்லூரி இங்குதான் உள்ளது. பல வைணவ சபாக்களும் இயங்குகின்றன.

மன்னர்களின் மோதல் கோயில்களில் எதிரொலிக்கும் என்பதன் சாட்சி திருவரங்கம் பெரிய கோயில். வரலாறு நெடுக இதை நம்மால் பார்க்கமுடிகிறது. வைணவத்தின் தலைமைச் செயலகமாக கி.பி.7-ம் நூற்றாண்டு முதல் 13 -ம் நூற்றாண்டு வரை திருவரங்கம் கோயிலே இருந்தது. தலைமை பீடமாகவும் இயங்கியது.

கி.பி 10-ம் நூற்றாண்டு வரை இந்தக் கோயிலுக்கு வரலாற்றுச் சான்று இல்லை. எல்லாம் இலக்கிய சான்றுகளே. `கோயில் ஒழுகு' கோயிலின் மூன்றாம் சுற்றை திருமங்கை மன்னன் கட்டியதாகக் கூறுகிறது. ஆதித்ய சோழன் காலம் தொட்டு 644 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவற்றின் மூலமாகவே சோழர்கள் பாண்டியர்கள் விஜயநகர மன்னர்கள் நாயக்கர்கள் செய்த திருப்பணிகளையும், கொடுத்த நிலம் பொன் போன்றவற்றையும் அறிய முடிகிறது. இதுகுறித்த கல்வெட்டுகள் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மராட்டி, ஒடியா முதலிய 6 மொழிகளில் கிடைக்கின்றன.

திருச்சி திருவரங்கம் கோயில் (தற்போது)
திருச்சி திருவரங்கம் கோயில் (தற்போது)

நாதமுனிகள்தான் நாலாயிர திவ்யப் பிரபந்தங்களை தொகுத்தார். ஆளவந்தாரால் வழிபாடுகளும் விழாக்களும் தொகுக்கப்பட்டன. 12-ம் நூற்றாண்டில் ராமாநுஜர் கோயிலின் நடைமுறைகளையும் விழாக்களையும் சீரமைத்து அரங்கனுக்கு செல்வம் சேரக் காரணமானார். கோயில் பணியாளர்களை 10 தொகுதிகளாகப் பிரித்து அவர்களின் வேலையை நிர்ணயித்தார். முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி 1070-1120) ராமாநுஜருக்குப் பல கொடுமைகள் செய்தான். ராமாநுஜர் மைசூர் சென்றார். கங்கர்கள் கோயிலைக் கவர்ந்து கொண்டனர். சுந்தரபாண்டியன் கோயிலை மீட்டான். பிறகு ஒய்சாளர்கள் கோயிலைக் காப்பாற்றினர். இதன் பின்னால் வந்த முதலாம் சடாவர்மன் சுந்தரபாண்டியன் பல கட்டடங்கள் கட்டிப் பெரும் புகழ் பெற்றான். மாறவர்மன் குலசேகரபாண்டியன் (1268-1308) காலத்தில் வந்த மார்க்கோ போலோ இதன் செல்வச் செழிப்பைக் கண்டு வியந்தார்.

கி.பி.1311-ல் வந்த மாலிக்காபூர் பாண்டியரை வீழ்த்தினான். திருவரங்கக் கோயிலைக் கொள்ளையடித்தான். புதிய சிலைகள் வைத்து வழிபாடு தொடர்ந்தது. முகமது பின் துக்ளக் காலத்தில் அஞ்சிய கோயில் நிர்வாகம் விலை உயர்ந்த ஆபரணங்களைத் திருப்பதிக்கு அனுப்பியது. கி.பி 1371ல் ஆட்சிக்கு வந்த விஜயநகரப் பேரரசு காலத்தில்தான் கோயில் நிம்மதி மூச்சுவிட்டது. கடவுள் சிலைகள் மீண்டும் திருவரங்கம் வந்தன.

விஜயநகரப் பேரரசின் படைத்தலைவர்கள் செய்த ஊழலால் கோயில் நலிந்தது. சிலர் இதை எதிர்த்து வெள்ளைக் கோபுரம் ஏறிக் குதித்துத் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களைத் தொடர்ந்து வந்த நாயக்க மன்னர்கள் வைணவத்தின் ஆர்வலர்கள். இவர்கள் புதிய மண்டபங்களைக் கட்டினார்கள். மதுரை நாயக்கர்கள் திருச்சியை தலைநகராக்கிய பின்னால் திருவரங்கம் வளர்ந்தது.

திருச்சி திருவரங்கம் கோயிலும் எதிரே மலைக்கோட்டையும்
திருச்சி திருவரங்கம் கோயிலும் எதிரே மலைக்கோட்டையும்

தொடர்ந்து ஆற்காடு நவாபுகள், ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர், மராட்டியர், சந்தாசாகிப்... இப்படிப் பலரிடம் அதிகாரம் கைமாறியும் அரங்கனின் புகழ் குறையவில்லை. ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் படையெடுத்தனர். பிறகு 1803 -ல் வந்த கிழக்கிந்திய கம்பெனியின் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஜான்வாலெஸ் வேலப்ப முதலி மூலம் கோயில் ஒழுங்கை 5 படிகளாகத் தயாரித்தார். நிர்வாகம் சீரானது. இதனையே 1947- ல் வி.என்.ஹரிராவ் HISTORY OF THE SRIRANGAM TEMPLE என்று மொழிபெயர்த்தார்.

திருவரங்கப் பெரியகோயில் 6,13,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. அதாவது 156 ஏக்கர். கோயில் சுவர்களின் மொத்த நீளம் 32,592 அடி. பெரியகோயில் ஏழு திருச்சுற்றுக்களோடு அமைந்துள்ளது. இந்தியாவிலேயே ஏழு சுற்றுக்களைக் கொண்ட கோயில் இதுமட்டுமே. பெருமாள் தென்திசை நோக்கிப் பள்ளி கொண்டுள்ளார். கருவறை விமானத்தில் நான்கு கலசங்கள் உள்ளன. இவை நான்கு வேதங்களைக் குறிப்பதாக நம்புகிறார்கள். சுந்தரபாண்டியன் விமானத்துக்குத் தங்கம் பதித்தான். அதனால் பொன்மேய்ந்த பெருமாள் என அழைத்தனர்.

முல்லை நிலக் கடவுளான திருமால் வழிபாடு சமய வழிபாடாக மாறியபோது `வைணவ சமயம்' தோன்றியது. ராமாநுஜர் காலத்தில் பெரு மதங்களில் ஒன்றாக வைணவம் வளர்ந்தது. பக்தியும் சரணாகதியுமே அதன் வழியாகச் சொல்லப்பட்டது. ராமாநுஜரின் விசிட்டாத்துவைதக் கோட்பாடே வைணவம். ஆழ்வார்கள் வைணவத்தை `தீதில் நன்னெறி' என்று கருதினர். எவன் ஒருவன் தன்னைத் தாழ்த்திக் கொள்கிறானோ அவனே வைணவன் என்று கருதப்பட்டான். ராமாநுஜர் ஜாதிகளைக் கடந்து வாழ அவரது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற அவரது கோட்பாடான வைணவமே காரணமானது.

திருச்சி திருவரங்கம் கோயில் (மொட்டை கோபுரம்)
திருச்சி திருவரங்கம் கோயில் (மொட்டை கோபுரம்)

நாம் ஶ்ரீரங்கநாதரை தரிசிக்க ஏழாம் சுற்றின் தெற்கு வாசலில் உள்ள ராஜகோபுரத்தின் வழியாக நுழைகிறோம். முடிவடையாமல் இருந்த அந்த மொட்டை கோபுரம் சிலருக்கு நினைவிருக்கலாம். ஓவியர் சில்பி அதைப் பிரமாதமாக வரைந்திருப்பார். இந்த கோபுரத்தை 1979 - ல் தொடங்கி 1987 மார்ச்சில் அஹோபில மடத்து 44 -ம் ஜீயர் அழகியசிங்கர் ஜீயர் 236 அடி உயரத்தில் முழுமையாக்கினார். ஆசியாவிலேயே பெரிய கோபுரமிது. இதைத் தவிர இன்னும் 20 கோபுரங்கள் உள்ளன. இந்த ஏழாவது திருச்சுற்றில் சித்திரைத் திருவிழா நடப்பதால் இதை 'சித்திரை திருவீதி' என்று அழைக்கின்றனர். பங்குனித் திருநாளில் நம்பெருமாள் உலா வரும் `கோரதம்' இங்குதான் உள்ளது. கோட்டை வாசல் அருகில் உள்ள கண்ணன் சந்நிதியும் இங்குள்ளது.

திருச்சி திருவரங்கம் கோயில் (ஓவியர் சில்பி வரைந்த படம்)
திருச்சி திருவரங்கம் கோயில் (ஓவியர் சில்பி வரைந்த படம்)
அடுத்து நாம் ஆறாம் திருச்சுற்றில் நுழைகிறோம். இந்த உள் வீதி, உத்திரவீதி என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் ரங்கநாதரைப் பராமரிக்கும் உரிமையுள்ள ஶ்ரீரங்க நாராயண ஜீயர் மடம் உள்ளது. உடையவர் ராமாநுஜர் இந்த மடத்தில்தான் இருந்தார். இந்த வீதியில்தான் அஹோபில மடம் உள்ளது. அரங்கனுக்கே திருவாய்மொழி சொன்ன மணவாள மாமுனிகள் திருக்கோயில் இங்குள்ளது.
ராமாநுஜர்
ராமாநுஜர்

நாம் இப்போது ஐந்தாம் திருச்சுற்றுக்குள் இருக்கிறோம். இதன் வாசலை நான்முகன் கோட்டை வாசல் என்பார்கள். முக்கியமான மண்டபங்களும் சந்நிதிகளும் இந்த வீதியில் உள்ளன. மறைந்துபோன நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை வெளிப்படுத்திய நாத முனியின் கோயில் அருகில் உள்ளது. இந்த வீதியில் உள்ள வேணுகோபாலன் சந்நதியில் நுட்பமான சிற்பங்கள் நிறைந்துள்ளன. இங்குள்ள கண்ணாடி பார்க்கும் பெண் சிற்பம் அற்புதமானது.

பகை, எதிர்ப்பு, நோய் தீர்க்கும் சக்கரத்தாழ்வார் சந்நிதி இந்த வீதியில் உள்ளது. தாயார் சந்நிதியும் இங்குதான் உள்ளது. ஶ்ரீரங்க நாயகி என்பது தாயாரின் பெயர். மூலஸ்தானத்தில் இரண்டு தாயாரகள் உள்ளனர். அதுபோலவே “விபீஷணன் சரணாகதி”யைச் சொல்லும் சிற்பமுள்ள பங்குனி உத்தர மண்டபம் இங்குள்ளது. வைகுண்ட ஏகாதசியைத் தொடர்ந்து நடக்கும் “ராப்பத்து” உற்சவம் திருமாமணி மண்டபத்தில்தான் நடக்கும். நம்மாழ்வாருக்கு மோட்சம் கிடைத்ததும் இங்குதான். நரசிம்மர் ஹிரண்யனை வதைக்கும் காட்சியும் ராமன் சிவதனுசை முறிப்பதும் ராவணன் சபையில் வாலால் அமைந்த சிம்மாசனத்தில் அமர்ந்த அனுமன் எல்லாம சிற்பங்களாக உள்ள சேஷராயர் மண்டபமும் இந்த வீதியில்தான் உள்ளது. இந்த வீதியில்தான் ராமாநுஜரின் உடையவர் சந்நிதியும் உள்ளது.

திருமங்கை மன்னன் திருச்சுற்றான நான்காம் சுற்றுக்கு வந்துவிட்டோம். பெரிய திருவடி எனப்படும் கருடபகவான் அமர்ந்த நிலையில் கைகூப்பியவாறு மேனி முழுக்கப் பாம்புகள் நெளியத் தரும் காட்சி சிறப்பானது. தமிழ் வேதம் தந்த நம்மாழ்வாரின் சந்நிதி இங்கு உள்ளது. இதில் மதுரகவி ஆழ்வாரையும் திருமங்கை ஆழ்வாரையும் நாம் வணங்கலாம். இதே வீதியல்தான் மருத்துவ அறிஞரான தன்வந்திரி, வியாசர், ஆண்டாள் எல்லோரையும் கைகூப்பலாம்.

திருச்சி திருவரங்கம் கோயில்
திருச்சி திருவரங்கம் கோயில்
குலசேகரன் திருச்சுற்றான மூன்றாம் சுற்றுக்கு வந்திருக்கிறோம். பரமபத வாசல் இங்குதான் உள்ளது. ராப்பத்தின் முதல் நாளான வைகுண்ட ஏகாதசி அன்று பரம்பத வாசலைத் திறப்பார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் ``ரங்கா... ரங்கா..." என கசிந்து பெருமாளை வணங்குவார்கள். போலோத்ஸவ மண்டபம் இங்கு உள்ளது. சிற்பங்களால் வழியும் இரட்டை தூண்கள் இதன் சிறப்பாகும்.

இரண்டாம் திருச்சுற்றுக்கு “நாளிகை கேட்டான் திருவாசல்” என்ற வினோத பெயருள்ளது. ராஜமகேந்திரன் திருச்சுற்று என்றும் சொல்வார்கள். இந்த வீதியில்தான் கோயிலின் கருவூலம் மற்றும் ஆபரண அறைகள் உள்ளன. இங்குள்ள மண்டபத்தில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் குடும்பத்தோடு சிலை வடிவில் இருக்கிறார். பெருமாள் சீடனாக மாறி மணவாள மாமுனியிடம் திருவாய்மொழி கேட்ட இடம் இதுதான். துலுக்க நாச்சியார் சந்நிதியும் உள்ளது. அதுபோலவே கிளி மண்டபம் முக்கியமானது. கண்ணன் சந்நிதியும் கண்ணாடி அறையும் மிக அழகானவை. இங்குள்ள யாளிப் படிகள் வழியாகவே கருவறைக்கு போகவேண்டும்.

திருச்சி திருவரங்கம் கோயில்
திருச்சி திருவரங்கம் கோயில்

இப்போது நாம் முதல் சுற்றில் நிற்கிறோம். இதை தர்மவர்மன் திருச்சுற்று என்பார்கள். இங்குள்ள காயத்ரி மண்டபத்திற்கு 24 தூண்கள். காயத்ரி மந்திரத்தில் 24 எழுத்துக்களாம். இதன் வழியாகவே அரங்கனின் கருவறையை அடையமுடியும். இராமாயணக்காட்சிகள் ஓவியங்களாக உள்ளன. உள் நுழையும் படியை குலசேகரன்படி என்பது வழக்கம். ஏன் தெரியுமா? “படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனோ” எனப் பாடியது குலசேகராழ்வார்தான்.

உள் நுழைந்தால், திருவரங்கப் பெருமாள் தென்திசை நோக்கிப் பள்ளி கொண்டிருக்கிறார். “குணதிசை முடியை வைத்துக், குடதிசை பாதம் நீட்டி, வடதிசை முதுகு காட்டி, தென்திசை இலங்கை நோக்கி அரிதுயிலில் இருப்பதைக் காணும் பக்தர்கள் பரவசம் அடைகிறார்கள்.

அரங்கன் மீது கொண்ட காதலால் ஶ்ரீவில்லிபுத்தூரிலிருந்து திருவரங்கம் வந்தவர் ஆண்டாள். அவனையே மணக்க விரும்பி அரங்கன் சந்நிதியில் திருமணத்தூணில் புகுந்து மறைந்தார் என்பது வரலாறு.

திருச்சி திருவரங்கம் கோயில்
திருச்சி திருவரங்கம் கோயில்

திருமங்கையாழ்வாரும் இதே இடத்தில் நின்றுதான் அரங்கனைப் பார்க்கிறார். “ஒரு கையில் சங்கு, ஒரு கை மற்றாழி ஏந்தி, உலகுண்ட பெருவாயரிங்கே வந்து” என்று அரங்கனின் ஆயுதங்களைப் பாடுகிறார். நம்மாழ்வாரோ “என் திருமகள் சேர் மார்பனே, நிலமகள் கேள்வனே, ஆய்மகள் அன்பனே என்று திருமாலின் காதலை வியக்கிறார். ஆண்டு முழுவதும் திருவிழாக்களால் ஆனது திருவரங்கம். இதில் குறிப்பிடத்தக்கது “அரையர் சேவை”. இராமானுஜரை திருவரங்கம் அழைத்து வந்ததே பெருமாளரையர் என்று கூறப்படுகிறது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளிடம் இவர் தேவகானம் பாட, என்ன வரம் வேண்டும் எனப் பெருமாள் கேட்க, அரையர் “நம்பி ராமாநுசனே வேண்டும்” எனக்கேட்க அனுப்பி வைத்தார் என்கிறது வைணவ மரபு.

நாதமுனிகள் தொடங்கிய அரையர் பணி 1,400 ஆண்டுகளாகத் தொடர்வதாகத் தெரிகிறது. நாள்தோறும் காலையில் பெருமாள் முன்பாக நாலாயிரத்தை இசையோடு இவர்கள் பாடுவார்கள். வைகுண்ட ஏகாதசி நாளில் அரையர்கள், குல்லாயும் பரிவட்டமும் மாலையும் சூடி செய்யும் வழிபாடு மிகச்சிறப்பானது. திவ்யபிரபந்தப் பாடல்களை இசையோடு பாடி ஆடி நடிக்கும் இவர்களின் சேவை ஒரு காலத்தில் எல்லா வைணவக் கோயில்களிலும் நடந்தது. இப்போது திருவரங்கம், திருவில்லிப்புத்தூர், ஆழ்வார்திருநகரி ஆகிய இடங்களிலேயே நடக்கிறது.

திருவரங்கம் கோயிலிலும் சுற்றியுள்ள மண்டபங்களிலும் உள்ள சிற்பங்கள் நமக்கு “கல்லிலே கலை வண்ணம் கண்டான்” என்ற சீர்காயழியின் பழைய பாடலை நினைவுபடுத்தும்.

உதாரணமாக, வேணுகோபாலன் சந்நிதியில் உள்ள வீணை வாசிக்கும் பெண்ணைப் பாருங்கள். அவள் நிற்கும் ஒய்யாரம், வீணையின் நாதம் மெல்லிய புன்னகையாய் பூக்கிறது. சொருகித் தொங்கும் கூந்தலின் அழகும் அதுபோலவே. அலங்காரம் செய்துகொள்ளும் பெண்ணை கவனியுங்கள். இவள் முகத்தை கை மறைத்துவிடாமல் பொட்டு வைக்கும் லாவகம். பட்டாடைகளின் வேலைப்பாடுகள்... இந்த சிற்பங்கள் ஒய்சளர் காலத்தவை என்று கருதப்படுகிறது.

சேஷராயர் மண்டபத்தில் உள்ள குதிரைத் தூண்களைப் பாருங்கள். வேட்டைக்கு ஒருவன் போகிறான். புலி தாக்க வருகிறது. குதிரைக் கால்களைத் தூக்க வேறு ஒருவன் புலியின் உடம்பில் கத்தி பாய்ச்சுகிறான். தமிழர்களின் வீரம் கல்லில் உரைந்து வாழ்கிறது.

இங்குள்ள கலைக்கூடத்தில் பழங்கால உலோகச் சிற்பங்கள், வாள்கள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றன. 1966-ல் யுனெஸ்கோ செய்த உதவியால் சிற்பங்களும் ஓவியங்களும் புதுப்பிக்கப்பட்டன.
திருச்சி திருவரங்கம் கோயில்
திருச்சி திருவரங்கம் கோயில்

பொதுவாகக் கோயில்களில் வருடத்தில் ஒன்றோ இரண்டோ விழாக்கள் நடக்கும். ஆனால வருடத்தில் 322 நாள்களும் பெருமாளுக்கு விசேஷம் என்பது திருவரங்கத்தில்தான். இதில் சித்திரைத் தேரும், 21 நாள் நடக்கும் மார்கழிமாத வைகுண்ட ஏகாதசியும் மிக முக்கியமானவை. அதுமட்டுமல்ல, பெருமாள் வீதியில் உலா வரும்போது அவருக்கு முன்பாகத் தமிழ் மறை (நாலாயிரம்) ஓதுவதும் இங்குள்ள சிறப்பாகும்.

ஆழ்வார்களிலேயே அரங்கனைத் தவிர மற்றொரு பெருமானைப் பாடாமல் வாழ்நாள் முழுதும் ஶ்ரீரங்கத்திலேயே வாழ்ந்து மறைந்தவர் தொண்டரடிப் பொடி ஆழ்வார்தான். அவர் திருவரங்கத்தின் பெருமை உணர்ந்தே, “இந்திரலோகம் கூட வேண்டாம்.. அரங்க மா நகரான திருவரங்கம் போதும் என்கிறார்.

(இன்னும் ஊறும்)