Published:Updated:

தாயுமாகிய செவ்வந்தி நாதர்... திருச்சி தாயுமானவர் கோயில் அற்புதங்கள்!

செவ்வந்தி நாதர்
செவ்வந்தி நாதர்

திருப்பம் தரும் திருச்சி கோயில்கள்-2

"ன்றுடையானைத் தீயதிலானை நரை வெள்ளேறு
ஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானை சிராப்பள்ளி
குன்றுடை யானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே."


திருச்சி மாநகரம் திருக்கோயில்களின் பெட்டகம் என்றே அழைக்கப்படுகிறது. 9,16,857 பேர் கொண்ட (2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி) 167.23 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட மாநகரமாகத் திகழ்கிறது. இம்மாநகரின் கம்பீர வரவேற்பு அடையாளமாக உள்ளது திருச்சி மலைக் கோட்டை. இம்மலையின் மத்தியில் உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குக் கீழே அமைந்துள்ளது தாயுமானவர் திருக்கோயில்.

தாயுமானவர் திருக்கோயில்
தாயுமானவர் திருக்கோயில்


தல வரலாறு : திருச்சி உறையூரைத் தலைநகராகக் கொண்டு முற்கால சோழ மன்னன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். அப்போது மலைக்கோட்டையின் கீழே உள்ள நந்தவனத்தில் சாரமா முனிவர் எழுந்தருளி இருந்தார். தினமும் மலைக்கோட்டை சிவனுக்கு நந்தவனத்து செவ்வந்தி மலர்களைக் கொய்து வழிபட்டு வந்தார். ஒருநாள் அரசனது படை வீரர்கள் சிலர் முனிவரின் நந்தவனத்தில் மலர்களைத் திருடி, மன்னனுக்குக் கொடுத்தார்கள். அந்த மலர்களின் மணம், நிறம் இவற்றால் ஆசை கொண்ட அரசன் தினமும் மலர்கள் கொண்டு வரும்படி ஆணையிட்டான். இதனால் நந்தவனத்தில் தினமும் மலர்கள் திருடு போனது. முனிவரின் சிவபூஜையும் நின்று போனது. மன்னனிடம் முறையிட்டும் பலன் இல்லை. இதனால் முனிவர் ஈசனிடம் முறையிட்டார்.

அடியார் தவிக்க ஆண்டவன் பொறுப்பானா! உறையூர் நோக்கி ஈசன் உக்கிரப் பார்வை செலுத்தினான். அங்கு மண் மழை பொழிந்தது. உறையூர் மண்மூடிப் போனது என்று தல வரலாறு கூறுகிறது. உறையூர் சோழ அரசனும் அரசியும் அரண்மனையை விட்டு வெளியேற, அரசன் அழிந்தான். கருவுற்றிருந்த அரசி புவனமாதேவி ஈசனை வேண்டி அழுது, அலை புரண்டோடிய காவிரியில் விழுந்து உயிர்விடத் துணிந்தாள். அடியார் ஒருவர் அரசியைக் காப்பாற்ற, அரசி ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்தாள். அந்தக் குழந்தையே பார் போற்றும் கரிகால் சோழன் என்கிறது ஒரு சரித்திரத் தகவல். செவ்வந்தி மலரால் பூஜிக்கப்பட்டவர் என்பதால் இங்குள்ள ஈசன் 'செவ்வந்தி நாதர்' என்ற திருநாமம் கொண்டார். அதுசரி பிறகு ஏன் தாயுமானவர் என்றும் சுவாமி போற்றப்படுகிறார். அதற்கும் ஒரு கதை உண்டு.

தாயுமானவர்
தாயுமானவர்


தாயுமாகி ஆண்ட செல்வப்பெருந்தகை : தனகுத்தன் என்ற வணிகனின் மனைவி ரத்தினாவதி. செவ்வந்திநாதர் மீது தீராத பக்தி கொண்டவர்கள் இந்த தம்பதியர். ரத்தினாவதி சூலுற்றாள்; பிரசவம் பார்க்க தன் தாயை உதவிக்கு அழைத்தாள். மகளைக் காண விரைந்து வந்த தாய் காவிரி ஆற்றின் பெருவெள்ளத்தால் அக்கறையிலேயே நின்று விட்டாள். நேரம் நெருங்கியது, தாய் தன் மகளுக்கு என்னாகுமோ என்று மலைக்கோட்டையை நோக்கி கரம் குவித்து 'செவ்வந்திநாதா, அபயம் அபயம்...' என்று கதறினாள். அங்கே நிறை சூல் கொண்ட ரத்தினாவதியும் துணை இன்றி துடித்தாள். செவ்வந்திநாதர் தாயானார்; ஆதரவின்றி தவித்த பெண்ணுக்கு தாதியானார். தாயையும் பிள்ளையையும் பூப்போல பிரித்தெடுத்தார். காவிரி வெள்ளம் வடிந்து பெற்றவள் வரும்வரை ரத்தினாவதியைப் பேணி காத்தார். இந்த அற்புத லீலையால் மண்ணுலகின் சகல ஜீவராசிகளுக்கும் தாயுமானவர் ஆனார். இப்போதும் ஒவ்வோர் ஆண்டும் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ ஐந்தாம் நாள் விழாவில் செட்டிப் பெண் மருத்துவம் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என்பது விசேஷம். ரத்தினாவதியின் வழி வந்த குலத்தினர் இந்தத் திருவிழாவை இப்போதும் விமரிசையாக நடத்துகிறார்கள்.இந்த விழாவில் கலந்து கொள்ளும் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவ மருந்து வழங்கப்படுவதும் விசேஷம்.

குழந்தை வரம் கிடைக்கவும், சுகப்பிரசவம் ஆகவும் இந்த கோயிலுக்கு வருபவர்கள் அநேகம். வடமொழியில் தாயுமானவர் மாத்ருபூதேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தாயுமானவர் சுயம்பு மூர்த்தியாக மேற்கு திசையில் எழுந்தருளியுள்ளார். மலைப் பாறைகள் மீது 3 அடுக்குகளாக கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் பழங்கால கட்டிடக் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பிரமாண்டமான சிவலிங்கத் திருமேனி சுமார் 5 அடி உயரம் கொண்டது. 'தர்ப்ப ஆசன வேதியன்' என்ற பெயராலும் கொண்டாப்படும் இந்த ஈசனை குழந்தைகள் வழிபட்டால் கல்வியில் மேம்படுவர் என்பதும் நம்பிக்கை. அம்பிகை, அகத்தியர், அனுமன், அர்ஜுனன், ராமர், இந்திரன், சப்தரிஷிகள், கலைமகள், பிரம்மா, ஜடாயு போன்றோர் இங்கு வந்து சுவாமியை வழிபட்டுள்ளார்கள். அப்பரும் சம்பந்தரரும் பாடித் தொழுத பரமன் இவர். அம்பாள் மட்டுவார் குழலி, சுகந்த குந்தளாம்பிகை என்று வடமொழியிலும் போற்றப்படுகிறாள். ஈசனை மணக்க விரும்பிய அம்பிகை தாமரை மலரில் அவதரித்து கார்த்யாயன முனிவரால் வளர்க்கப்பட்டாள். நீண்ட காலம் தவமிருந்து ஈசனை அடைந்தாள் என புராணம் கூறுகிறது. தன் கூந்தலில் இயற்கையாக நறுமணம் வீச வளர்ந்த அம்பிகை மட்டுவார் குழலி என்றானாள்.

சிவலிங்கத் திருமேனி
சிவலிங்கத் திருமேனி

குழந்தை வரம் கிட்ட இங்கு நடத்தப்படும் வாழைத்தார் வழிபாடு பிரசித்தமானது. கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் ஆக, இங்கு வந்து வாழைத்தார் வாங்கித் தொட்டில் கட்டுவதாக பிரார்த்தித்துக் கொள்வார்கள். அதேபோல் பிரசவம் ஆன பிறகு சுவாமியின் சந்ந்தியில் வாழைத்தாரைக் கட்டி அதைத் தொட்டிலாக ஆடவிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். பிறகு வாழைப்பழங்களை அங்குள்ள பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிப்பார்கள்.

நேர்த்திக்கடன்
நேர்த்திக்கடன்

இங்குள்ள முருகப் பெருமான் முத்துக்குமார சாமியாக பன்னிரு கரங்களும், ஆறு முகமும் கொண்டு மயில் மீதமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். தேவியர் புடைசூழ விளங்குகின்றார். வேறொரு சந்நிதியில் முருகப் பெருமான் ஒரு முகமும் நான்கு கரங்களும் கொண்டு இரு தேவியருடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். இந்த முருகப்பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பட்டவர்.

இங்குள்ள சிவதீர்த்தம் பாவங்களை நீக்க வல்லது. சிவ அபசாரத்தால் பன்றியாக பிறப்பெடுத்த ஒருவன், இங்குள்ள தீர்த்தத்தைக் கண்ட மாத்திரத்தில் சாபவிமோசனம் பெற்றான் என்று தலபுராணம் கூறுகின்றது. இங்குள்ள நவக்கிரகங்களில் 8 பேரும் சூரிய பகவானைப் பார்த்தவாறு எழுந்தருளியுள்ளதால் இங்கு வழிபட தோஷ நிவர்த்தி உண்டாகும் என்பர்.

ஆரம்பத்தில் இங்குள்ள ஈசன் கிழக்கு நோக்கியே அருள் புரிந்தார் என்றும் சாரமா முனிவருக்காக உறையூரை தண்டிக்க மேற்கு நோக்கி திரும்பினார் என்றும் கூறப்படுகிறது. இதனால் இக்கோயிலில் சிவனுக்கு பின்புறம் கொடிமரம் உள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி மூர்த்தம் எட்டு முனிவர்களுடன் தர்ப்பாசனத்தில் அமர்ந்து எழுந்தருளி இருப்பது வேறெங்கும் காண முடியாத அதிசயம். அதேபோல் இங்கு எழுந்தருளி உள்ள மரத்தால் ஆன மகாலட்சுமி அன்னை நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். இவளை வழிபட அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும் என்கிறார்கள். மரத்தால் ஆன துர்கையும் இங்கு விசேஷம். கொடி மரத்துக்கும் பலி பீடத்துக்கு இடையே உள்ள சங்குநாதர் வடிவம் சிறப்பானது. சங்குசாமி என்று வணங்கப்படும் இந்த சிவகண அடியார், இறைவன் புறப்பாடு நடக்கையில் சங்கு நாதம் எழுப்பி சகலருக்கும் அறிவிப்பாராம்.

தாயுமான சுவாமி
தாயுமான சுவாமி

இந்த தலத்தின் பெயரைச் சொன்னாலே முக்தி கிட்டும் என அப்பர் சுவாமிகள் பணிந்து பாடிய திருத்தலம் இது. திருச்சி செல்பவர்கள் இன்றும் முதலில் சென்று பார்க்கும் முக்கிய தலமும் இதுவே. காசிக்கும் ராமேஸ்வரத்துக்கு முந்திய மூத்த தலம் என்று போற்றப்படும் இந்த தலத்தின் தாயுமான சுவாமியையும் அன்னை மட்டுவார் குழலியையும் வணங்கி வேண்டி சகல நலமும் பெறுவோம்.

அடுத்த கட்டுரைக்கு