திருக்கதைகள்
Published:Updated:

ஐந்து நிறங்களில் காட்சி தந்த ஐவண்ண நாதர்!

ஐவண்ண நாதர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஐவண்ண நாதர்

ஐவண்ண நாதர்

திருச்சியின் ஒரு பகுதியாகவே திகழ்வது உறையூர். அருள்மிகு காந்திமதி அம்மன் உடனாய அருள்மிகு ஐவண்ணநாதர் கோயில் கொண்டிருக்கும் தலம் இது. இவ்வூரை ‘உலகில் வளர் அணிக்கு எல்லாம் உள்ளுறை ஊர் ஆம் உறையூர்’ எனப் போற்று கிறார் சேக்கிழார்.

ஐவண்ண நாதர்
ஐவண்ண நாதர்

வீராதித்த சோழ மன்னரின் யானையை, கோழி ஒன்று எதிர்த்து தனது மூக்கால் (அலகால்) குத்திக் காயப்படுத்த, அத்தகு வீரம் நோக்கி, ‘கோழி’ என்றும் ‘கோழியூர்’ என்றும் ‘மூக்கீச்வரம்’ (மூக்கால் குத்தியதால்) என்றும் பெயர் பெற்ற ஊர் இது என்பர்!

பிரம்மதேவன் வழிபட்ட ஊர் இது. அவர் இங்கு வந்து வணங் கியபோது, ஐந்து வேளைகளில், ஐந்து நிறங்களில் இறைவன் காட்சி கொடுத்தாராம் ஈசன். அதேபோல், உதங்க முனிவருக்கும் ஐந்து வண்ணங்களில் தோற்றம் தந்தாராம்.

காலையில்- ரத்தின லிங்கமாகச் செந்நிறத் திலும், உச்சிப்போதில்- ஸ்படிக லிங்கமாக நிறமற்ற தூய்மையிலும், மதியம்- தங்க லிங்கமாகப் பொன்மஞ்சளிலும், இரவில்- வைர லிங்கமாகப் பன்முகம் காட்டும் வெண்மை நிறத்திலும், நடுநிசியில்- சித்திர லிங்கமாக வட்டமிடும் வண்ணங்களோடும் இறைவன் காட்சி தந்தார். ஆகவே இவருக்கு ஐவண்ண நாதர் அதாவது பஞ்சவர்ணேஸ்வரர் என்று திருப்பெயர். வேறொரு கதையும் உண்டு.

இங்கே நாக தீர்த்தத்தின் கரையில், நாக ராஜனின் ஐந்து மகள்களும் ஆளுக்கொரு சிவலிங்கத்தைப் பூஜிப்பதைக் கண்டான் சோழ மன்னன் ஒருவன். கடைசி மகளை அவன் மணந்தான்.

மாமனாரான நாக ராஜனிடம் தனக்கொரு சிவ லிங்கம் கேட்டான். மாமனார், மகள் பூசித்த லிங்கத்தை மாப்பிள்ளையிடம் கொடுத்தார். அந்த ஒன்றொடு மீதமுள்ள நான்கும் இணைந்து கொள்ள, ஐவண்ணநாதர் எழுந்தருளினார் என்பது செவிவழிச் செய்தி.

இந்தக் கோயிலின் சிற்பங் களும் கண்ணையும் கருத்தையும் கவரும்விதம் உள்ளன. மன்மதன் பாணம் எய்யல், தபஸ் காமாட்சி, கஜ சம்ஹாரமூர்த்தி, நடன மகளிர், கண்ணப்பர் கண் அப்புதல், வில்லேந்திய ராமன் முதலான சிற்பங்கள் கொள்ளை அழகுடன் திகழ்கின்றன.

ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால், நான்கு பெண்கள். மறு பக்கம் போய் பார்த்தால், அதுவே குதிரை; நான்கல்ல, ஒற்றைக் குதிரை. இந்தச் சிற்பம், உறையூரின் புகழ்பெற்ற சிற்பங்களில் ஒன்று. அதேபோல், ஊரின் பெயர்க் காரணத்தை விளக்கும் - கோழியும் யானையும் சண்டையிடும் காட்சி, சிற்பங்க ளாகத் திகழ்கிறது.

இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட்டால், ஐவண்ணநாதரின் அருளால் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்; அம்பாள் காந்திமதியின் அருளால் சகல மங்கலங்களும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

- நமசிவாயம், சென்னை-44