Published:Updated:

திருச்சி கோயில்கள் - 11 - திருவாசி: நோயை நாகமாக மாற்றி அதன் மீது ஈசன் நின்று ஆடிய தலம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திருவாசி: முயலகன் இல்லாத நடராஜர்
திருவாசி: முயலகன் இல்லாத நடராஜர்

திருப்பம் தரும் திருச்சி கோயில்கள்: இங்குள்ள நடராஜர் காலுக்கு கீழே முயலகன் உருவம் இல்லாமல் நாகத்தின் மீது நடனமாடுகின்றார் என்பது இங்கு மட்டுமே காணக்கூடிய சிறப்பு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அதிசயங்கள் நிறைந்த திருப்பாச்சிலாச்சிராமம் என்ற பாடல் பெற்ற தலம், தற்போது திருவாசி எனப்படுகிறது. ஈசன் உறையும் தலங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலம் பிடித்திருக்கலாம். மதுரை, திருவண்ணாமலை, திருவாரூர், திருவானைக்கா... இப்படி! ஆனால் ஈசனே தனக்குப் பிடித்த தலம் என்று இந்த திருவாசியைத் தான் சொன்னார் என்றால் இந்த தலத்தின் பெருமையை என்னவென்று சொல்வது!

அடர்ந்த வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் பராசக்தி, பிரம்மன், திருமகள், அகத்தியர் ஆகியோர் 'சமீவனேஸ்வரர்' என்ற திருநாமம் கொண்ட ஈசனை வணங்கி வந்தார்கள். ஒருமுறை அம்பிகையின் கேள்விக்கு பதில் உரைத்த ஈசனார், 'வேதங்களும் வேத பண்டிதர்களும் தவமியற்றும் இந்த திருப்பாச்சிலாச்சிராமமே என் விருப்பத்துக்குரிய தலம்' என்று சொன்னார். அதன்படி தேவியானவள் இங்கு அன்னப்பறவையாக உருவெடுத்து வந்து 'அன்னமாம் பொய்கை' என்ற தீர்த்தத்தில் வளர்ந்து ஈசனை வணங்கி அருள் பெற்றார் என தலவரலாறு கூறுகிறது.

திருப்பாச்சிலாச்சிராமம்
திருப்பாச்சிலாச்சிராமம்

இந்தப் பகுதியை ஆண்டு வந்த அரசன் கொல்லிமழவனின் மகளுக்கு தீராத வலிப்பு நோய் இருந்து வந்தது. எத்தனையோ வைத்தியம் செய்து பார்த்தும் குணப்படுத்த முடியவில்லை. எனவே அவள் பிணியை குணப்படுத்தும் பொறுப்பை இங்குள்ள ஈசனிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றான். அப்போது இத்தலத்திற்கு எழுந்தருளிய திருஞான சம்பந்த பெருமான் 'துணிவளர் திங்கள் துளங்கி விளங்க' எனும் பதிகம் பாடி அவளின் நோய் தீர்த்தார். இதனால் இன்றும் இந்த திருவாசி தலம் தீராத நோய் தீர்க்கும் தலமாகவும் குறிப்பாக வயிற்று வலி, நரம்புத் தளர்ச்சி, வாதநோய், சர்ப்ப தோஷம், மாதவிடாய் பிரச்னைகள், குழந்தைகளுக்கு வரும் பாலாரிஷ்டம் எனும் நோய்களையும் தீர்க்கும் என்ற நம்பிக்கைய அளிக்கும் ஒரு சிறந்த பரிகாரத் தலமாக விளங்கிவருகிறது.

திருச்சி கோயில்கள் - 10: வாழையடி வாழையாகக் குலம் தளைக்கும்... திருப்பைஞ்ஞீலி மகாதேவர் மகிமைகள்!
கொல்லிமழவன் மகளைத் தாக்கிய நோயை மடக்கி ஒரு பாம்பாக மாற்றி, அதன் மீது நின்று ஆடினார் ஈசன். இதனால் இங்குள்ள நடராஜர் காலுக்கு கீழே முயலகன் உருவம் இல்லாமல் நாகத்தின் மீது நடனமாடுகின்றார் என்பது இங்கு மட்டுமே காணக்கூடிய சிறப்பு. வன்னி தலமரம். அன்னமாம்பொய்கை, சிலம்பாறு தீர்த்தமாக உள்ளன.

கருவறையில் ஈசன் ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். இந்த ஆலயத்தின் ராஜகோபுரத்தின் கீழே அதிகார நந்தி, மனைவியுடன் எழுந்தருளி உள்ளார். மேலும் விசேஷமாக நவக்கிரக சந்நிதியில் சூரியன் தன் மனைவியர் உஷா பிரத்யுஷாவுடன் இருக்க, மற்ற கிரகங்கள் எல்லாம் அவரை பார்த்தபடி உள்ளன. தேவாரப் பாடல்பெற்ற தலங்களுள் இது 62-வது தலம். அருள்மிகு பாலாம்பிகை சமேத மாற்றுரைவரதீஸ்வரர் கோயில் என வழங்கப்படும் இந்த ஆலயம் சுமார் 1500 ஆண்டுகள் பழைமையானது என்கிறார்கள். சமீவனேஸ்வரர் என்ற ஈசன் 'மாற்றுரைவரதீஸ்வரர்' என்ற திருநாமம் கொண்ட சம்பவமே சுவையானது எனலாம்.

திருவாசி
திருவாசி

திருத்தல யாத்திரையின்போது தனது அடியார்களுக்கு குறைவிலாது உணவு வழங்குவது சுந்தரரின் வழக்கம். இதற்காக ஆங்காங்கே ஈசனிடம் போன் பெற்றுக்கொள்வதும் அவர் வழக்கம். அப்படி இந்த திருவாசி தலத்தில் பொன் பெற்றபோது அதன் தரத்தை அறிந்து கொள்ள வேண்டியபோது ஈசனே மாற்றுருவில் வந்து பொன்னின் தரத்தை உரைத்துச் சொன்னாராம். அதனால் 'மாற்று உரை வரதீஸ்வரர்' என்றானார் என்கிறார்கள். சுந்தரருக்கு பொற்கிழி தந்த ஸ்தபன மண்டபம் இன்றும் உள்ளது. இந்த மண்டபத்தை கல்வெட்டு ஒன்று 'கிழி கொடுத்தருளிய திருவாசல்' என்று குறிக்கின்றது. இங்குள்ள ஈசனை ஐயடிகள் காடவர் கோனும் தனது க்ஷேத்திரக் கோவை நூலில் பாடியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிள்ளைகளோடு கொண்டாடுவோம் பிள்ளையாரை... விநாயகர் சதுர்த்தி சிறப்புப் பரிசுப்போட்டி!

வைகாசி மாதம் பௌர்ணமி தொடங்கி 11 நாள்கள் நடைபெறும் முத்துப்பல்லக்கு விழா இங்கு விசேஷமானது. சோமவாரம் எனும் திங்கள்கிழமைகளில் 7 விளக்குகளில் இலுப்ப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் பொருளாதார சுபிட்சம் அடைவர் என்பது ஐதீகம். திருமணமாகாதவர்கள் நல்ல வரன் வேண்டி தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமை அன்னமாம் பொய்கையில் நீராடி பாலாம்பிகைக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்தால் திருமணம் விரைவில் நடக்கும் என்பதும் நம்பிக்கை. தீராத வயிற்று வலி கொண்டவர்கள் இங்கு தொடர்ந்து 9 வாரம் அல்லது 11 வாரம் வந்து ஈசனை வேண்டி பலன் பெறுகிறார்கள். திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோயிலுக்கு எதிரே அடைக்கலம் காத்தார் கோயிலும், அதற்கு அருகே மதுரை வீரன் சந்நிதியும் அமைந்துள்ளது.

ஈசன் வழிபாடு
ஈசன் வழிபாடு

சிறப்பு வழிபாடு: பால் குடிக்காமல் சதா அழுது கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு 'பாலாரிஷ்டம்' என்ற தோஷம் உள்ளதாகச் சொல்வார்கள். காலை 7 மணியிலிருந்து 12 மணிக்குள் இங்குள்ள அம்பாளுக்குப் பால் அபிஷேகம் செய்து, அழும் குழந்தைகள் பெயரில் அர்ச்சனை செய்து, அந்த அபிஷேக தீர்த்தத்தை குழந்தைகள் மேல் தெளித்தால் பாலாரிஷ்டம் தீரும் என்பது நம்பிக்கை.

அமைவிடம்: திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில் சுமார் 14 கி.மீ. தொலைவில் திருவாசி உள்ளது. திருச்சியில் இருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது. காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திருக்கோயில் திறந்திருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு