Published:Updated:

திருச்சி கோயில்கள் - 13: ஏழு குருமார்களும் ஒருசேர அருளும் ஆதி குரு தலம் - உத்தமர் கோயில் சிறப்புகள்!

உத்தமர் கோயில்: குருமார்களில் ஏழு பேரும் வழிபட்ட சிறப்பான ஆலயம் இது என்பதால் இது ஆதி குருத்தலம் எனப்படுகிறது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவருக்கும் கார்த்திகை தீப விழாவில் தனித்தனியே சொக்கப்பனை கொளுத்தி விழா எடுக்கும் அழகே அழகு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சைவ வைணவ ஒற்றுமைக்கு தமிழகத்தில் பல ஆலயங்கள் சிறப்புற்று விளங்கினாலும் திருச்சியில் உள்ள திருக்கரம்பனூர் உத்தமர் திருக்கோயிலே முழுமை பெற்ற ஒரு மும்மூர்த்தித் தலமாக விளங்கி வருகிறது. இங்கு மட்டுமே பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, திருமகள், சக்தி என மும்மூர்த்திகளுக்கும் அவர்களின் மனைவியருக்கும் தனி சந்நிதிகள் அமைந்துள்ளன. இந்தியாவிலேயே இது ஒன்றே முழுமையான சைவ-வைணவ ஆலயம் என்றும் திருவரங்கத்துக்கு அடுத்த பழைமையும் புகழும் கொண்ட கோயில் என்றும் போற்றப்படுகிறது.
பிரம்மா
பிரம்மா

அதுமட்டும் இல்லாமல் இந்த கோயில் மட்டுமே நாவுக்கரசர், சுந்தரர் மற்றும் திருஞான சம்பந்தர் ஆகியோர் பதிகங்களைப் தேவாரத் திருத்தலமாகவும், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வித்த 108 திவ்ய ஸ்தலங்களுள் 3-வது தலமாகவும் திகழ்கிறது. சைவர்களுக்கு 'பிச்சாண்டார் கோயில்' எனவும் வைணவர்களுக்கு இது 'உத்தமர் கோயில்' என்றும் திகழும் அதிசயக் கோயிலாகவும் இது விளங்குகிறது.

கடம்ப வனக்காடாக இருந்த பகுதி, கடம்பனூர் என்று முற்காலத்தில் வழங்கப்பட்டது. இதுவே திரிந்து கரம்பனூர் என்றானது என்கிறது திருச்சி வரலாறு. இதுவே சமஸ்கிருதத்தில் நீப ஷேத்திரம் என்றானது என்றும் சொல்கிறார்கள். மும்மூர்த்திகளும் ஒருங்கே காட்சியளிக்கும் காரணத்தால் இது மும்மூர்த்தி க்ஷேத்திரம் என்றும் ஆனது. ஆதிபிரம்ம புராணத்தில் போற்றப்படும் இந்த கோயிலில் முன்பு கதவுகளே இல்லாமல் இருந்ததாகவும் எந்நேரமும் பெருமானை தரிசிக்க முடியும் என்ற அபூர்வத் தகவலை பெரியவாச்சான் பிள்ளை குறிப்பிடுகிறார்.

உத்தமர் கோயில்
உத்தமர் கோயில்

கடம்ப மரமாக இங்கு எழுந்தருளிய பெருமாளை பிரம்மா வழிபட்டதால், நான்முகனுக்கும் இங்கே தனி சந்நிதி உருவாகப் பெருமாள் கிருபை செய்தார் என்றும் அதனாலேயே அவர் புருஷோத்தமர் என்று பிரம்மாவால் போற்றப்பட்டு இந்த ஆலயம் உத்தமர் கோயில் என்றானதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிரம்மனின் ஆணவத்தை ஒடுக்க ஈசன், பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்ய, அது ஈசனின் விரலோடு ஒட்டிக் கொண்டது. இதனால் பிட்சாடனக் கோலத்தில் இங்கு வந்த ஈசன், திருமகளின் திருக்கரத்தால் பிட்சை வாங்கி தன் சாபம் தீர்த்துக் கொண்டாராம். இதனால் இந்த கோயில் பிச்சாண்டார் கோயில் என்றானதாகவும் கூறுகிறார்கள்.

புருஷோத்தமப் பெருமாள் கிழக்கு நோக்கி உத்யோக விமானத்தின் கீழ் பள்ளி கொண்ட கோலத்தில் எழுந்தருளி உள்ளார். உற்சவர் நின்ற கோலத்தில் பிரயோக சக்கரத்துடன் அருளுகிறார். பூரணவல்லி தாயார் தரிசனம் இங்கு சிறப்பு என்கிறார்கள். பெருமாள் சந்நிதிக்கு நேர் பின்புறம் ஈசனார் மேற்கு நோக்கி லிங்கத் திருமேனியராக ஏகாந்தமாக எழுந்தருளி உள்ளார். பிச்சாடனாராக கோஷ்டத்திலும், உற்சவ மூர்த்தியாகவும் எழிலுற காட்சி அளிக்கிறார். அன்னை சக்தி இங்கே ஸ்ரீசௌந்தர்ய நாயகி என்னும் திருநாமத்தோடு வீற்றிருக்கிறார்.

பிரம்மன்
பிரம்மன்
உத்தமர் கோயிலில் வெகு சிறப்பாக தனி சந்நிதியில் பிரம்மன் அருளுகிறார். பிரம்மாவிற்கு இடப்புறத்தில் சரஸ்வதி தெற்கு நோக்கி அருளுகிறார். கைகளில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடி ஜெபமாலையுடன் ஞான சரஸ்வதியாக எழுந்தருளுவது இங்கு சிறப்பு.

கதலி தல விருட்சம்; பிரகலாத தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், கதம்ப தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள்; வைகானஸ ஆகமம் போன்றவை இந்த ஆலயத்துக்குச் சிறப்பு சேர்ப்பவை. எண்ணற்ற சந்நிதிகளும் சிறப்புகளும் கொண்ட இந்த ஆலயத்தில் உள்ள தசரத லிங்கம் சிறப்பானது என்கிறார்கள். பிள்ளை வரம் வேண்டி இங்கு வந்து வழிபட்ட தசரத மன்னருக்கு ஈசன் பிள்ளை வரம் தந்ததால் தசரதன் உருவாக்கிய லிங்கம் இது என்கிறார்கள்.

ஞான சரஸ்வதி
ஞான சரஸ்வதி

குருமார்களில் ஏழு பேரும் வழிபட்ட சிறப்பான ஆலயம் இது என்பதால் இது ஆதி குருத்தலம் எனப்படுகிறது. பிரம்ம குரு, விஷ்ணு குரு, சிவ குரு, சக்தி குரு, சுப்ரமணிய குரு, தேவ குருவாகிய பிரகஸ்பதி, அசுர குருவான சுக்கிராச்சார்யர் என ஏழு குருமார்களும் ஒருசேர தரிசனம் தந்து, பக்தர்களுக்கு குரு யோகத்தை வாரி வழங்கும் சிறப்பான குரு பரிகாரத் தலம் இது என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மும்மூர்த்திகளாய் அருளும் முருகன்... அருவியில் தீர்த்தவாரி காணும் இலஞ்சிக்குமாரர்!
சுக்கிரன், திருமங்கையாழ்வார், கதம்ப மகரிஷி, உபரிசிரவசு, ஜனகர், சனந்தனர், சனத்குமாரர், தாயுமானவர், சிவப்பிரகாச சுவாமிகள் உள்ளிட்ட பல தேவர்களும் ஞானியரும் வழிபட்ட ஆலயம் இது. மதுரை மெய்ப்பாத புராணிகர் இந்த தலத்தைப் போற்றி தலவரலாறு ஒன்றையும் இயற்றி உள்ளார்.
பிச்சாண்டார் கோயில்
பிச்சாண்டார் கோயில்

சகல தெய்வங்களும் ஒருங்கே அருளும் தலம் இது என்பதால் இங்கு வந்து வேண்டும் அத்தனை வேண்டுதல்களும் விரைவில் நிறைவேறும் என்பது நிச்சயம் என்கிறார்கள் திருச்சி மக்கள். குறிப்பாக ஞான சரஸ்வதியும் சப்த குருமார்களும் அருளும் இங்கு வந்து வேண்டினால் கல்வியும் ஞானமும் பெருகும். ஐஸ்வர்யங்களை அருளும் பூரணவல்லித் தாயாரும் மழலை வரம் அருளும் சௌந்தர நாயகி அம்மையும் பக்தர்களின் வரப்பிரசாதி என்று போற்றப்படுகிறார்கள்.

மும்மூர்த்திகளும் தேவியர்களோடு அருள்வதால் இங்கு வந்து வழிபட குடும்ப ஒற்றுமை மேலோங்கும். ஈசனின் சாபம் நீங்கிய தலம் என்பதால் இங்கு வந்து வழிபட சகல தோஷங்களும் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.

இப்போது இருக்கும் ஆலயமே 1000 ஆண்டுகளைக் கடந்தது என்றும், இங்குள்ள கல்வெட்டுகளில் சோழன் கேசரி வர்மனும், பாண்டியன் சுந்தரபாண்டியனும் அளித்த கொடைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன என்றும் சொல்கிறார்கள்.

மும்மூர்த்தி தலம்
மும்மூர்த்தி தலம்

பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவருக்கும் கார்த்திகை தீப விழாவில் தனித்தனியே சொக்கப்பனை கொளுத்தி விழா எடுக்கும் அழகே அழகு! தைப்பூசத்தில் ஈசனுக்கும் மாசி மகத்தில் பெருமாளுக்கும் இங்கே விஷேச வழிபாடுகள் நடைபெறுகின்றன.

அமைவிடம் - திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது உத்தமர் கோயில். காலை 6 - 12 மணி வரை, மாலை 4.30 - 8 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு