Published:Updated:

திருச்சி கோயில்கள் - 17: பரவெளி தரிசனம் காட்டும் பாலக்கரை வெளிகண்ட நாதர் ஆலய மகிமைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வெளிகண்ட நாதர் திருக்கோயில்
வெளிகண்ட நாதர் திருக்கோயில்

வெளிகண்ட என்றால் பரவெளியைக் காண உதவுபவர் என்று தலவரலாறு கூறுகின்றது. ஞானத்தின் வெளிச்சமாக இங்கு சிவன் எழுந்தருளி இருக்கிறார் என்பதே இந்த சுவாமியின் பெருமை எனலாம்.

தெருவுக்குத் தெரு திருக்கோயில்களால் அழகு பெற்றிருக்கும் திருநகரம் திருச்சி. இங்கு திக்குகள்தோறும் ஐந்துவித நாதர்கள் எழுந்தருளி திருச்சியைக் காத்து வருகின்றனர் என்கிறது திருச்சி மாநகரின் வரலாறு. திருச்சிக்குக் கிழக்கில் கயிலாச நாதர், வடக்கில் பூலோக நாதர், மேற்கில் நாக நாதர், மற்றும் காசி விசுவநாதர், தெற்கில் வெளிகண்ட நாதர் என ஐவரும் அமர்ந்து அருள்பாலித்து வருகின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்னைகளைத் தீர்க்கும் பரிகார நாதர்களாகவும் விளங்குகிறார்கள்.
திருச்சி பாலக்கரை வெளிகண்ட நாதர் ஆலயம்
திருச்சி பாலக்கரை வெளிகண்ட நாதர் ஆலயம்
DIXITH

அந்த வகையில் திருச்சி பாலக்கரை வெளிகண்ட நாதர் ஆலயம் தீவினைகளைத் தீர்க்கும் தலமாகவும், திருமணத் தடைகளை நீக்கும் தலமாகவும் விளங்கி வருகின்றது. திருச்சி பாலக்கரை பகுதியில் உய்யகொண்டான் ஆற்றின் கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இந்த ஆலயம். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து எத்தனை எத்தனையோ அற்புதங்களை இன்னமும் நடத்திக் கொண்டு வருகின்றது இந்த ஆலயம் என்கிறார்கள் ஊர் மக்கள்.

திருச்சி பாலக்கரை வெளிகண்ட நாதர்
திருச்சி பாலக்கரை வெளிகண்ட நாதர்
DIXITH

கி.பி 880-ம் ஆண்டுக்குப் பிறகு திருச்சிராப்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் அனைத்தும் சோழப்பேரரசின் பகுதியாக மாறியது. அப்போது கட்டப்பட்ட கோயில் இது என்று நம்பப்படுகின்றது. விஜயாலயச் சோழருக்குப் பின் வந்த ஆதித்த சோழன், காவிரி பாயும் பகுதிகளில் எண்ணற்ற சிவாலயங்களைக் கட்டினான் என்று சுந்தர சோழன் காலத்து அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன. அதன்படி இந்த வெளிகண்ட நாதர் ஆலயமும் அதே காலத்தில் உருவானது என்று சொல்லப்படுகிறது.

திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 11: வாழைப் பொருள்களை மதிப்புக்கூட்டி சாதித்த சிவகுமார் - சசிரேகா!

வெளிகண்ட என்றால் பரவெளியைக் காண உதவுபவர் என்று தலவரலாறு கூறுகின்றது. ஞானத்தின் வெளிச்சமாக இங்கு சிவன் எழுந்தருளி இருக்கிறார் என்பதே இந்த சுவாமியின் பெருமை எனலாம். வெளி அடக்கம் உண்டானால் உள் அடக்கமும் கைகூடும் என்பது ஆன்றோர் வாக்கு. வெளி அடக்கம் என்பது ஐம்புலன்களின் அடக்கம். ஐம்புலனையும் அடக்க வெளி என்பது என்பது என்னவென்று உணர வேண்டும். வெளி என்றால் மாயை, நம்மை சிற்றின்பத்தில் சிக்க வைக்கும் மாயை. அந்த மாயையை உணர வைப்பவர் வெளியை கண்ட வெளிகண்ட நாதர். இவரைப் பற்றிக் கொண்டால் போதும், கரையேறி விடலாம் என்கிறார்கள் பெரியோர்கள். மாயையில் இருந்து தப்பிவிட்டால் தீவினைகள் நம்மை அணுகாது என்பது உண்மைதானே!

சமயக் குரவர்கள்
சமயக் குரவர்கள்
DIXITH

எளிமையான இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி இருந்தாலும், நுழைவு வாயில் தெற்கே அமைந்துள்ளது. ஆலய முன் வளாகத்தில் மகாமண்டபமும், அதன் நடுவே நந்தியம்பெருமானும், பலி பீடமும், கொடி மரமும் அமைந்துள்ளன. மகாமண்டபத்தின் இடது புறம் ஆச்சர்யமாக, திருமாலின் வாகனமான கருடாழ்வார் சிலை அமைந்துள்ளது. அருகேயே சமயக் குரவர்கள் நால்வர்களின் மண்டபமும் உள்ளது.

அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் ஈசன் வெளிகண்ட நாதர் லிங்கத் திருமேனியராக கீழ் திசை நோக்கி எழுந்தருளி இருக்கிறார். சிறிய அழகியத் திருமேனி. இந்திரன், சூரியன், அஷ்டதிக்கு பாலகர்கள், சப்த ரிஷிகளும் வழிபட்ட ஈசன் இவர் என்கிறார்கள். இங்கு வந்து வழிபட ஞானமும் தெளிவும் உண்டாகும் என்கிறார்கள். குறிப்பாக மனநிம்மதி இன்றி தவிக்கும் மக்களுக்கு இவர் ஆறுதலும் தேறுதலும் தருகிறார் என்பது நம்பிக்கை.

அன்னை சுந்தரவல்லி
அன்னை சுந்தரவல்லி
DIXITH

மகாமண்டபத்தில் வலது புறமாக அன்னை சுந்தரவல்லியின் சந்நிதி உள்ளது. நான்கு திருக்கரங்களில், மேல் இரு கரங்களில் தாமரை மலர்களையும், கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி அருள்பாலிக் கிறாள் சக்தி. இவள் திருமண வரம் அருளும் தாயாக இந்த பகுதி மக்களுக்கு விளங்குகிறாள். சுந்தரவல்லி அன்னைக்கு அருகே அவர் அண்ணன், சீனிவாச பெருமாள், தாயார் ஸ்ரீதேவி பூதேவியுடன் தனியே சேவை சாதிக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐப்பசி மாதத்தில் காவிரியில் புனித நீராடுவது எதற்காக?
முத்துக் கருப்பன்
முத்துக் கருப்பன்
DIXITH

மகாமண்டபத்தை அடுத்த அர்த்த மண்டப நுழைவு வாயிலில் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் தண்டாயுதபாணியும் எழுந்தருளி உள்ளார்கள். நவகிரங்கங்கள், தட்சிணாமூர்த்தி, ராகுகால துர்கை, முத்துக் கருப்பன், விநாயகர், முருகர், வள்ளி-தெய்வானை, சூரியன், சனீஸ்வரன், நாகர், சண்டிகேசுவரர், பைரவர் சந்நிதிகளும் திருச்சுற்றில் அமைந்துள்ளன. இங்குள்ள பைரவருக்கும் துர்கைக்கும் பரிகார பூஜைகள் நடத்தப்படுகின்றன. இதில் கலந்து கொள்பவர்களின் தீமைகள் நீங்கி நன்மைகள் உண்டாகின்றன என்கிறார்கள் ஊர் மக்கள். இந்த கோயிலுக்கு வந்து தியானம் செய்ய பரவெளி தரிசனம் எனும் அகண்ட வெளி தரிசனம் நம் மனதுள் நிகழும் என்கிறார்கள்.

'ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்

தெளியும் அவரே சிவசித்தர் தாமே.'

என்பது சித்தர்கள் வாக்கு.

அநேக சித்தர்கள் வந்து அரூபமாக இங்கு வந்து வழிபடுவது வழக்கம் என்கிறார்கள். இந்த வெளிகண்ட நாதரின் பேரருளால் சித்துக்கள் பல கற்ற ஞானியர் பலர் இன்று பௌர்ணமிகளில் இங்கு வலம் வருகிறார்கள் எனப்படுகிறது. இங்கு வந்து தியானிப்பவர்கள் பலர் நிம்மதியும் நல்ல ஆரோக்கியமும் பெற்றுள்ளார்கள் எனக் கூறப்படுகிறது.

சீனிவாச பெருமாள்
சீனிவாச பெருமாள்
DIXITH

திருச்சி மக்களின் தீராத வினைகளைத் தீர்த்து வரும் இந்த வெளிகண்ட நாதரை தரிசித்தாலே பல தொல்லைகள் நீங்குகின்றன என்பது மக்கள் நம்பிக்கை. இங்கு நடைபெறும் ஐப்பசி அன்னாபிஷேக விழா திருச்சி நகரில் பிரசித்தம் என்கிறார்கள். நாளை (20-10-2021) நடைபெற இருக்கும் ஐப்பசி அன்னாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சங்கல்பித்துக் கொண்டு எல்லா நலமும் வளமும் பெற வேண்டுகிறோம்.

தினமும் இரு கால பூஜைகளோடு காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் இந்த ஆலயம் திறந்து இருக்கும்.

அமைவிடம் - திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் பாலக்கரையில் வெளிகண்ட நாதர் ஆலயம் உள்ளது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு