Published:Updated:

திருச்சி கோயில்கள் - 18: அன்பில் ஈசனை வணங்குவோரை வானோரும் வணங்குவர்... சத்தியவாகீசர் பெருமைகள்!

சத்தியவாகீசர் கோயில்
News
சத்தியவாகீசர் கோயில்

அன்பில் சத்தியவாகீசர் கோயில்: ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட இக்கோயிலில் மூலவர் சத்தியவாகீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்புவாக அமர்ந்துள்ளார். விசேஷமான சதுரபீட ஆவுடையார் இவர்.

ராவணன் குபேரனை தந்திரத்தால் வென்று அவனது புஷ்பக விமானதைக் கவர்ந்தான். மிதமிஞ்சிய ஆணவத்தால் கயிலையை அடைந்த ராவணன், ஈசன் வாழ்ந்த மலையைப் பெயர்த்தெடுக்கத் தொடங்கினான். அவன் கொட்டத்தை அடக்க ஈசன் தனது வலது பெருவிரல் நுனியை அழுத்த ராவணனின் கைகள் சிக்கிக்கொண்டன.
அன்பில் சத்தியவாகீஸ்வரர் கோயில்
அன்பில் சத்தியவாகீஸ்வரர் கோயில்
dixithphotography

கடுமையான வலியால் துடித்த ராவணனின் அழுகுரல் அங்கு தவம் செய்து கொண்டிருந்த வாகீச முனிவரின் காதில் விழுந்தது. இதனால் மனம் இளகி, 'ஈசனின் மனம் கனிய உனது இசையால் அவரைப் போற்றி பாடு' என்று உபாயம் கூறினார். அவனும் அவ்வாறே செய்ய ஈசனின் கருணையால் உயிர் தப்பினான். தன்னால் தண்டிக்கப்பட்ட ராவணனுக்கு உதவிய வாகீசரின் செயல் பரம்பொருளுக்கு கோபத்தை உண்டு பண்ணியது. இதனால் 'நீ பூலோகத்தில் பிறக்கக் கடவுவது' என்று சாபம் இட்டார்.

இதனால் கலங்கிய வாகீசர் பூமியில் அன்பிலாலந்துறை எனும் திருத்தலத்தில் சுயம்புவாய் எழுந்தருளிய ஈசனைப் பணிந்து வழிபட்டார். ஈசனின் கருணையால் திருஆமூரில் மருள் நீக்கியாராகப் பிறந்தார். மேற்கண்ட இந்த நிகழ்வை அடிக்கடி தனது பதிகத்திலும் குறிப்பிட்டுள்ளார் அப்பர் சுவாமிகள். வாகீசர் பணிந்த ஈசன் சத்திய வாகீசர் என்று திருநாமம் கொண்டார். அது மட்டுமல்ல, வாகீசர் என்ற திருப்பெயர் பிரகஸ்பதிக்கும் நான்முகனுக்கும் கூட உண்டு. அவர்களும் இங்கு வந்து ஈசனை வழிபட்டார்கள் என தலவரலாறு கூறுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அன்பில் கோயில்
அன்பில் கோயில்
dixithphotography

அழகிய அன்பில் ஆலந்துறை சத்தியவாகீஸ்வரர் கோயில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் என இருவராலும் பாடப்பெற்ற அற்புதத் தலம். காவிரி வடகரைத் தலங்களில் இது 57-வது தலம். அன்பில் என்பது ஊர் பெயர், ஆலந்துறை என்பது கோயிலின் பெயர், இரண்டும் இணைந்து அன்பிலாலந்துறை என்றானது. அருணகிரிநாதரால் பாடப்பெற்று இது திருப்புகழ் தலமாகவும் விளங்குகிறது. பராந்தகச் சோழன் காலத்தில் இந்த ஆலயத்துக்கு பல திருப்பணிகள் செய்ததாகவும், 108 அக்னிஹோத்ரி அந்தணர்களைக் குடி அமர்த்தி இந்த வட்டாரத்தில் வேள்விகளை நடத்த ஏற்பாடு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட இக்கோயிலில் மூலவர் சத்தியவாகீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்புவாக அமர்ந்துள்ளார். விசேஷமான சதுரபீட ஆவுடையார் இவர். பிரம்மன் வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என்றும், ஆலமரங்கள் சூழ்ந்த வனத்தில் எழுந்ததால் ஆலந்துறையார் என்றும் போற்றப்படுகிறார். இந்த ஈசனை வணங்கினால் ஏழேழு ஜன்மங்களிலும் செய்த தீவினைகள் விலகி நல்வாழ்வை அடையலாம் காணப்படுகிறது. ஒவ்வொரு பிறவியும் அடைந்திருக்கும் மூன்று விதமான கடன்களில் இருந்தும் மீளலாம் என்றும் சொல்லப்படுகிறது.

சுயம்பு கணபதி
சுயம்பு கணபதி
dixithphotography

அம்பாளின் திருநாமம் சௌந்தரநாயகி என்பது. பெயருக்கேற்ற வடிவழகு கொண்டவள் இந்த அன்னை. இந்த அன்னை மகப்பேறு அளிக்கும் தாயாக விளங்கி வருகிறாள். விளக்கேற்றி இந்த அன்னையை வழிபட்டால் நல்ல வரனும் கிடைக்கும் என்கிறார்கள் திருச்சி நகர மக்கள். இங்கு சந்திர தீர்த்தம் வினை தீர்க்கும் தீர்த்தமாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆலயத்தின் திருச்சுற்றில் விசுவநாதர், விசாலாட்சி, சப்த கன்னியர், பிட்சாடனர், பைரவர், முருகப்பெருமான், சுயம்பு கணபதி, நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள செவி சாய்த்த கணபதி விசேஷமானவர். ஒருமுறை இங்கு திருஞான சம்பந்தர் வருகை தந்தபோது நதியில் வெள்ளம் பெருகி ஓட, எதிர்க்கரையில் நின்றவாறே ஈசனைப் பாடினார் காழிப்பிள்ளையார். அவரது குரல் காற்றில் மெலிதாகக் கேட்கவே இங்கிருந்த கணபதி காதைத் திருப்பி ஒளி வந்த திக்கு நோக்கி ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை குத்துக்காலிட்டு அமர்ந்து கேட்டாராம். அந்த அழகிய வடிவம் இன்றும் சிற்பமாகக் காணக் கிடைக்கிறது.

செவி சாய்த்த கணபதி
செவி சாய்த்த கணபதி
dixithphotography

இவரை வணங்கினால் காது சம்பந்தமான குறைகள் நீங்கும் என்கிறார்கள். ஜைமினி முனிவர் இங்கு வந்து சாமகானம் பாடியதாகவும், அதை ரசித்த கணபதி பெருமான், தனது செவியைச் சாய்த்து மகிழ்ந்தார் என்றும் இந்த திருக்கோலத்துக்கு மற்றொரு புராணமும் சொல்லப்படுகிறது. சம்பந்த பெருமான் தரிசிக்கவென்று நந்தி இங்கு சுவாமியை விட்டு சற்றே விலகி இருக்கிறார்.

சம்பந்தரும் நாவுக்கரசரும் உருகி உருகிப் பாடிய இந்த பெருமான் மிக விசேஷமானவர் என்கிறார்கள். அதிலும் சத்தியவாகீசப் பெருமானை வணங்கி வலம் வருவோரை அந்த வானுலக தேவர்கள் வலம் வந்து தொழுவர். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இறைவனை இறைஞ்சுவார்கள் என்று அப்பர் சுவாமிகள் தன்னுடைய பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

'இலங்கை வேந்தன் இருபது தோள்இற்று

மலங்க மாமலை மேல்விரல் வைத்தவன்

அலங்கல் எம்பிரான் அன்பில் ஆலந்துறை

வலங்கொள் வாரை, வானோர்வலம் கொள்வரே'

- அப்பர் சுவாமிகள்

சகல தோஷங்களையும் நோய்களையும் நீக்கும் சத்தியவாகீசப் பெருமானை வணங்கி நலமும் வளமும் பெறுவோம்!

அன்பில் கிராமம்
அன்பில் கிராமம்
dixithphotography
அமைவிடம்: திருச்சியிலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் அன்பில் கிராமம் உள்ளது. அங்குதான் அன்பில் அழகர் கோயிலும், அன்பில் மாரியம்மன் கோயிலும் உள்ளது. காலை 7.00 - 12.30 மணி வரையும், மாலை 4.00 - 7.30 மணி வரையும் திருக்கோயில் திறந்து இருக்கும்.