Published:Updated:

திருச்சி கோயில்கள் - 20: குழந்தைகளின் குறை தீர்க்கும் வேணுகோபால கிருஷ்ணன் கோயில் மகிமைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணன் கோயில்
ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணன் கோயில்

சுமார் 200 ஆண்டுகளாக பிரசித்தமாக இருந்து வரும் இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வடநாட்டு பக்தர்களும் உலகளாவிய பக்தர்களும் வருகிறார்கள் என்பது திருச்சி மக்களுக்கு இன்னொரு பெருமையான விஷயமாக உள்ளது.

வைணவர்களின் முதன்மைத் தலமாக திருச்சி, திருவரங்கம் விளங்குவதால் இந்நகரின் சுற்று வட்டாரங்களில் அநேக வைணவத் தலங்கள் இருந்து வருகின்றன. அதில் குழல் ஊதும் கண்ணனின் சிறப்பானத் தலமாக விளங்குகிறது திருச்சி பீமநகர் வேணுகோபால கிருஷ்ணன் கோயில். இது குழந்தைகளின் குறை தீர்க்கும் திருக்கோயிலாகவும் விளங்குகிறது. அது மட்டும் இன்றி அண்ணனான கண்ணனும் அவன் தங்கையான காளிகா பரமேஸ்வரியும் ஒருங்கே எழுந்தருளி இருக்கும் ஆலயமும் இது எனலாம்.

கண்ணன் என்றாலே குழந்தைகளின் பிரியமான கடவுள். அதிலும் ஒயிலாக நின்ற வண்ணம் குழல் ஊதும் இந்த வேணுகோபால சுவாமி காண்பதற்கு அழகான வடிவம் கொண்டவர் என்கிறார்கள் திருச்சி வாசிகள். 'வேணு' என்றால் குழல் என்று பொருள். வேணு கானத்தால் சகல ஜீவன்களையும் மயங்க வைக்கும் மாயக் கண்ணனின் லீலைகள் ஏராளம், ஏராளம்.

இவர் தான் 'வேணுங்கிறவர்' எங்கள் விருப்பத்துக்கு உரிய சுவாமி என்று திருச்சி மக்கள் குறும்பாக இந்த கண்ணனைக் குறிப்பிடுவது உண்டு. கண்ணன் எல்லோருக்குமே வேணுங்கிறவர் தானே, இதில் என்ன சந்தேகம் என்கிறார்கள் கோயில் நிர்வாகத்தினர்.

வேணுகோபால சுவாமி
வேணுகோபால சுவாமி
DIXITH

ஆரம்பத்தில் இந்த ஆலயம் காளி அம்மனின் ஆலயமாக இருந்தது என்கிறார்கள். ஆங்கிலேயர் காலத்தில் ராணுவ வீரர்கள் தங்கி இருந்த இடமாக இது இருந்துள்ளது. வீரர்களின் காவல் தெய்வமாக வழிபடப்பட்டு வந்தவள் காளி. பின்னர் அந்த பகுதியில் வாழ்ந்து வந்த யாதவ மக்களின் வழிபாட்டுக்காக இங்கே மகாகாளிகா பரமேஸ்வரியின் அண்ணனான வேணுகோபாலனும் இங்கே குடி அமர்ந்தார் என திருக்கோயில் வரலாறு கூறுகிறது.

சுமார் 200 ஆண்டுகளாக பிரசித்தமாக இருந்து வரும் இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வடநாட்டு பக்தர்களும் உலகளாவிய பக்தர்களும் வருகிறார்கள் என்பது திருச்சி மக்களுக்கு இன்னொரு பெருமையான விஷயமாக உள்ளது. அண்ணனும் தங்கையும் அருகருகே வீற்றிருந்து அருள்பாலிக்கும் இந்த கோயிலில் அநேக சந்நிதிகளும் உள்ளன.

வடக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயத்துக்கு ராஜ கோபுரம் இல்லை. அழகிய நுழைவு வாயில், அதை அடுத்து நீண்ட மண்டபம் பிறகு மகாமண்டபம், அர்த்த மண்டபம் என விரிந்து உள்ளது ஆலயம். அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணன் நின்ற நிலையில் குழல் ஊதிய வண்ணம் அருள்பாலிக்கிறார். நாள் எல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்பது போல இவர் திருமேனி அமைந்துள்ளது.

காளிகா பரமேஸ்வரி
காளிகா பரமேஸ்வரி
DIXITH

வெளியே மகாமண்டபத்தின் வலப்பக்கமாக ஸ்ரீகாளிகா பரமேஸ்வரியின் சந்நிதி அமைந்து உள்ளது. கிழக்கு நோக்கி தீ ஜுவாலை தலையைச் சுற்றி ஜொலிஜொலிக்க எழுந்தருளி இருக்கிறாள். இவளுக்கு முன்னே சூலம், நந்தி உள்ளன. இவளைக் கண்டாலே சகல பயங்களும் விலகி விடும் என்கிறார்கள்.

இங்கு சொர்ண கணபதி, நாகராஜா, ஸ்ரீசுந்தரேஸ்வர், அன்னை மீனாட்சி சந்நிதிகள் எழிலார்ந்து அமைந்து உள்ளன. ஸ்ரீஐயப்பன், அருள்மிகு முருகன் வள்ளி தெய்வானை, கால பைரவர், ராஜ கணபதி, விஷ்ணு துர்க்கை சந்நிதிகள் உள்ளன. இங்கே அருள் வழங்கும் விஷ்ணு துர்கையை வழிபட்டால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். ராகு கால வேளைகளில் விளக்கிட்டு இவளை வேண்டினால் தீராத நோய்களும் தீரும் என்கிறார்கள்.

திருச்சி கோயில்கள் 19: பெண்களின் நோய் தீர்க்கும் பேட்டவாய்த்தலை கோயில்... பொற்றாள சித்தர் பெருமைகள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரோஹிணி நட்சத்திர நாள்களில் இங்குள்ள வேணு கோபாலனுக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. அதில் கலந்து கொள்பவர்களுக்கு மழலைப் பேறு கிட்டும் என்பதும் நம்பிக்கை. கிருஷ்ண ஜயந்தி நன்னாளில் இங்கு நடைபெறும் உறியடி உற்சவம் பிரசித்தமானது என்கிறார்கள். பங்குனி மாத கடைசி வெள்ளியில் அன்னை காளிகா பரமேஸ்வரிக்கு பூச்சொரிதல் விழா வெகு அமர்க்களமாக நடைபெறும்.

ஆண்டு பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, ஆடி வெள்ளி, நவராத்திரி, மார்கழி நாள்கள், திருக்கார்த்திகை, சிவராத்திரி, பொங்கல் போன்ற விசேஷ நாள்களில் சிறப்பான பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும். தினசரி ஒரு கால பூஜை நடைபெறுகிறது. இங்கு உண்டியல், வசூல் எதுவும் கிடையாது. மனம் உவந்து பக்தர்கள் அளிக்கும் பொருள்களை மட்டுமே கடவுளுக்காக ஏற்கிறார்கள்.

விஷ்ணு துர்கை
விஷ்ணு துர்கை
DIXITH

உடல் ரீதியாக, மனரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் குணமாக இங்குள்ள வேணுகோபாலனை வேண்டிக் கொண்டு ரோகிணி நட்சத்திர நாளில் பால், தயிர் மற்றும் பழச்சாறு, சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால் அவர்கள் குணமடைகின்றனர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிறு குழந்தைகளின் வயிற்று உபாதைகள் யாவும் இங்கு வந்து தீர்ந்து இருப்பதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கோரிக்கை நிறைவேறிய பலரும் இங்கு வந்து கிருஷ்ணனுக்கு பால் பாயசம் சமர்பிப்பதும் இங்கு சகஜம் என்கிறார்கள். குழந்தைகளின் குறை தீர்க்கும் ஆலயமாக இது விளங்குவதால் எப்போதும் கூட்டத்துடன் இருந்து வருகிறது.

அமைவிடம்: திருச்சி நகரின் மத்தியில் சென்ட்ரல் பஸ் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தொலைவில் பீம நகரில் உள்ளது இந்த ஆலயம். காலை 6 மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை திறந்து இருக்கும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு