Published:Updated:

திருச்சி கோயில்கள் - 23: இயற்கைச் சீற்றங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் கல்லுக்குழி அனுமன் வழிபாடு

கல்லுக்குழி அனுமன்
News
கல்லுக்குழி அனுமன் ( DIXITH )

வழிபடுவதில் மிகுந்த ஆசாரமும் பலன் பெறுவதில் அதிக மடங்கு நன்மையையும் அளிக்கக் கூடியது அனுமன் வழிபாடு. இந்தியாவெங்கும் பரவியுள்ள அனுமன் வழிபாடு, திருச்சி மாநகரிலும் வெகுபிரசித்தம்

துஷ்டசக்திகளை அழித்து தர்மத்தை நிலைநாட்ட விஷ்ணு பகவான் ஸ்ரீராமராக ராமாவதாரம் எடுத்துவிட்டார். அவருக்கு உறுதுணையாக இருக்க சகல தேவர்களும் தங்களால் இயன்ற வகையில் வெவ்வேறு சிருஷ்டிகளை உருவாக்கி ராவண யுத்தத்தின்போது உதவ முன்வந்தனர். சகல உயிர்களுக்கும் ஆதாரமான ஈசன், தன் பங்குக்கும் ராமனுக்கு உதவும் பொருட்டு ஏதாவது செய்ய நினைத்தார். அதன்படி தன்னுடைய சக்தியை எடுத்துச் சென்று அஞ்சனையிடம் தருமாறு வாயுதேவனைப் பணித்தார். அந்த நேரத்தில்தான் அஞ்சனை தனக்கு ’எவராலும் வெல்லப்படாத ஒப்புமை இல்லாத ஒரு மைந்தன் வேண்டும்’ என்று ஈசனை நோக்கி தவம் இருந்துவந்தாள். அவளிடம் ஈசனின் சக்தியைக் கொண்டு சேர்த்தார் வாயுதேவன். ஈசனின் சக்தியாக ராமருக்கு உதவும் பொருட்டு அவதரித்தவரே ஆஞ்சநேயர் என்ற புராணத் தகவல் ஒன்றும் உண்டு.

கல்லுக்குழி ஆஞ்சநேயர்
கல்லுக்குழி ஆஞ்சநேயர்
DIXITH

வழிபடுவதில் மிகுந்த ஆசாரமும் பலன் பெறுவதில் அதிக மடங்கு நன்மையையும் அளிக்கக் கூடியது அனுமன் வழிபாடு. இந்தியாவெங்கும் பரவியுள்ள அனுமன் வழிபாடு, திருச்சி மாநகரிலும் வெகுபிரசித்தம். திருச்சி மாநகர ரயில் நிலையத்துக்குப் பின்புறம் உள்ளது கல்லுக்குழிப் பகுதி. இங்குதான் எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ ஆஞ்சநேயர். கல்லுக்குழி ஆஞ்சநேயர் என்றாலே கவலைகள் எல்லாம் பறந்துவிடும் என்பார்கள் திருச்சி நகர மக்கள். திருச்சியின் பரபரப்பான இந்தப் பகுதியில் இந்த ஆஞ்சநேயர் குடிபுகுந்த வரலாறே மிகவும் சுவாரசியமானது என்பர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஸ்ரீஆஞ்சநேயர்  கல்லுக்குழி
ஸ்ரீஆஞ்சநேயர் கல்லுக்குழி
DIXITH

சுமார் 120 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர் ஆட்சியில் வரிவசூல் மிகவும் கண்டிப்போடு வசூலிக்கப்பட்ட காலம் அது. வடக்கே இருந்து திருச்சிக்கு வந்தது ஒரு ரயில். அதில் அங்கமெங்கும் திருமண் பூசியிருந்த ஒரு வைஷ்ணவ அடியார் ஒருவர் இறங்கினார். அவரிடம் இருந்த பெரிய சாக்கு மூட்டை ஒன்று இறக்கப்பட்டு எடை போடப்பட்டது. எல்லோரும் எண்ணியதைவிடவும் அந்த முட்டையின் எடை அதிகம் இருக்கவே, அதன் சரக்கு வரியாகப் பெரும் தொகை அரசால் நிர்ணயிக்கப்பட்டது. அந்தத் தொகையைக் கேட்ட வைஷ்ணவ அடியார், ’தம்மால் அந்தத் தொகையைத் தர முடியாது, அதில் உள்ளவை வெறும் தானியங்கள் மட்டுமே’ என்று காட்டிவிட்டு, அந்த மூட்டையை ரயில்வே நிலையத்திலேயே விட்டுவிட்டுச் சென்றார்.

ஸ்ரீஆஞ்சநேயர்  கல்லுக்குழி
ஸ்ரீஆஞ்சநேயர் கல்லுக்குழி
DIXITH

நாள்கள் சில சென்றன, ஒருவரும் சொந்தம் கொண்டாடாத அந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று பார்க்க அங்கிருந்த ரயில்வே அதிகாரிகளுக்கு ஆவல் வந்தது. பிரித்துப் பார்த்தால் கண்ணைக் கவரும் அழகிய அனுமன் திருமேனி. அன்று திறந்து பார்த்தால் தானியங்களாக இருந்த மூட்டை, இன்று எப்படி அனுமன் திருமேனியாக என்று எல்லோரும் வியக்க, 'எல்லாம் ராமபக்தனாம் ஆஞ்சநேயரின் திருவருள்!' என்று வணங்கி, அங்கேயே அவருக்கு ஓர் ஆலயமும் எழுப்பினார்கள் பக்தர்கள்.

கருவறையில் ஓரடி உயரமுள்ள மூலவர் சிலையாக இடது பாதம் வடக்கு நோக்கியும், வலது பாதம் கிழக்கு நோக்கியும் உள்ளது. இடது கரத்தில் பாரிஜாத மலரை வைத்திருக்கிறார். வலது கரத்தில் அபய ஹஸ்தம் எனும் ஆசி வழங்கிய நிலையில் உள்ளார். மேலும் இந்த ஆலயத்தில் ஸ்ரீராமர், ஸ்ரீயோக ஆஞ்சநேயர், விநாயகர், முருகப்பெருமான், நவகிரகங்கள், சக்கரத்தாழ்வார், ஸ்ரீபாண்டுரங்கன், நாகர் சந்நிதிகளும் உள்ளன. பஞ்சபூதங்களையும் நவகிரகங்களையும் அடக்கி ஆண்ட ஆஞ்சநேயப்பெருமான், இயற்கைச் சீற்றங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் வல்லமை கொண்டவர் என்று அநேக புராணக் கதைகளின் வழியாக நாம் அறிந்து வந்திருக்கிறோம். வருணன், அக்னி, வாயு, இந்திராதி தேவர்களின் ஆணவத்தை ஒடுக்கிய ஆஞ்சநேயர், பேரிடர்களிலிருந்து நம்மைக் காக்கும் வல்லமை கொண்டவர். ’இடைவிடாத மழை, அதனால் உண்டான வெள்ளச் சேதங்களிலிருந்தும் அன்றும் இன்றும் எங்களைப் பாதுகாத்துவருகிறார்’ என்கிறார்கள் திருச்சி மாநகர மக்கள். இன்றும் நடுங்க வைக்கும் இடி இடித்தால் 'அர்ஜுனா, ஆஞ்சநேயா' என்று பக்தியோடு திருநாமம் சொல்லும் வழக்கம் நம்மிடையே உண்டு.

ஸ்ரீஅனுமன் ஜயந்தி
ஸ்ரீஅனுமன் ஜயந்தி
DIXITH

வெகு விரைவிலேயே அழகிய ஆலயமாக பல சந்நிதிகளோடு உருவான இந்தக் கோயில் 1988-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் வந்தது. இங்கு மாணவர்களுக்காகச் சிறப்பு தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இங்கு காட்சி தரும் ஸ்ரீதியான நிலை அனுமனுக்கு 'ஸ்ரீராமஜெயம்' என்று 108 சீட்டு எழுதி மாலையாக சாத்தி தியானம் செய்தால் மன நிம்மதியையும் ஞாபகசக்தியையும் அனுமன் ஏற்படுத்துவார் என்கிறார்கள் திருச்சி மாணவர்கள்.

கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீராம நவமி விழா பத்து நாள் விழாவாக வெகுவிமரிசையாக நடைபெறும். அதேபோல், நவராத்திரி ஒன்பது நாள் விழாவும் சிறப்பாக நடைபெறும். ஸ்ரீஅனுமன் ஜயந்தி நாளில், 10,008 வடை மாலை, பிரமாண்ட வெற்றிலை, துளசி மாலை மற்றும் ஜாங்கிரி மாலையும் சாத்தி விசேஷ பூஜைகள் நடைபெறும். உற்சவருக்குத் திருவீதியுலா, விசேஷ அபிஷேகம் போன்றவையும் நடைபெறும்.

சிரஞ்சீவி அனுமன்
சிரஞ்சீவி அனுமன்
DIXITH

பொதுவாக அனுமனை வணங்கினால் சிவன், விஷ்ணு, பிரம்மா, இந்திரன், பஞ்சபூதங்கள், கருடாழ்வார் அருள் கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. ராமாயணம், மகாபாரதம் என இரு காவியங்களிலும் முக்கியத்துவம் பெற்ற சிரஞ்சீவி, அனுமன் ஒருவரே. இவரை வழிபட நவகிரக பாதிப்புகள் ஏற்படாது. உடல் வலிமை பெறும், அறிவு பெருகும், மனவுறுதி உண்டாகும், அச்சம் விலகும், நோய் நொடிகள் நீங்கும், மனதில் தெளிவு உண்டாகும். வாக்கு வன்மை உண்டாகும். திருமணம் ஆகாதவர்கள்; குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள்; நஷ்டம் அடைந்தவர்கள்; ஏமாற்றப்பட்டவர்கள்; தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள்; ஊழ்வினையால் துன்புறுகிறவர்கள் அனைவரும் அனுமனை வழிபட்டால் பலன் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. அனுமனுக்கு சனி மற்றும் வியாழன் அன்று வெண்ணெய் சாத்தி, வெற்றிலை மாலை, வடை மாலை, எலுமிச்சை மாலை, துளசி மாலை சூட்டி வழிபட்டால் எல்லா நன்மைகளும் பெறுவர் என்பது நம்பிக்கை.

திருச்சியிலும் அப்படித்தான் கல்லுக்குழி அனுமன் நம்மைக் காத்துவருகிறார் என்கிறார்கள் திருச்சிவாசிகள்!