Published:Updated:

திருச்சி கோயில்கள் - 10: வாழையடி வாழையாகக் குலம் தளைக்கும்... திருப்பைஞ்ஞீலி மகாதேவர் மகிமைகள்!

திருப்பைஞ்ஞீலி திருத்தலம்

திருப்பம் தரும் திருச்சி கோயில்கள் - 10: இங்குள்ள ஈசன் யமன், விஷ்ணு, இந்திரன், காமதேனு, ஆதிசேஷன், வாயு பகவான், அக்னி பகவான், ஸ்ரீராமர், அர்ச்சுனன், வசிஷ்டர் உள்ளிட்டோரின் பதவியை மீண்டும் அளித்தவர் என்பதால் 'அதிகார வல்லபர்' என்ற திருநாமம் கொண்டுள்ளார்.

திருச்சி கோயில்கள் - 10: வாழையடி வாழையாகக் குலம் தளைக்கும்... திருப்பைஞ்ஞீலி மகாதேவர் மகிமைகள்!

திருப்பம் தரும் திருச்சி கோயில்கள் - 10: இங்குள்ள ஈசன் யமன், விஷ்ணு, இந்திரன், காமதேனு, ஆதிசேஷன், வாயு பகவான், அக்னி பகவான், ஸ்ரீராமர், அர்ச்சுனன், வசிஷ்டர் உள்ளிட்டோரின் பதவியை மீண்டும் அளித்தவர் என்பதால் 'அதிகார வல்லபர்' என்ற திருநாமம் கொண்டுள்ளார்.

Published:Updated:
திருப்பைஞ்ஞீலி திருத்தலம்
புராதானமான திருக்கோயில்கள் அணிவகுத்துக் காட்சி தரும் திருச்சி மாநகரில் மற்றுமொரு அதிசய ஆலயமாகத் திகழ்வது திருப்பைஞ்ஞீலி ஸ்ரீஞீலிவனநாதர் திருக்கோயில். 'ஆதி வெள்ளறை, அடுத்து பைஞ்ஞீலி, ஜோதி ஆனைக்கா, சொல்லிக் கட்டியது திருவரங்கம்' என்பது திருச்சி வாழ் பெரியவர்கள் கூறும் பழமொழி. அதாவது திருச்சியின் தொன்மையான ஆலயங்களில் இதுவும் முக்கியமானதாம்.

வாழையடி வாழையாக தங்கள் குலம் சிறந்து விளங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அதிலும் அகாலமாக எந்த துன்பமும் ஏற்பட்டுவிடாமல் சிறப்பாக வாழவேண்டும் என்பதே சகலரின் வேண்டுதலாகவும் உள்ளது. இந்த வேண்டுதல்களை நிறைவேற்ற என்றே உருவானதுதான் இந்த திருப்பைஞ்ஞீலி திருத்தலம்.

திருப்பைஞ்ஞீலி மகாதேவர்
திருப்பைஞ்ஞீலி மகாதேவர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முசுகுந்த சக்கரவர்த்தியால் எழுப்பப்பட்ட இந்த ஆலயம் மகேந்திரவர்ம பல்லவர் ஆட்சி காலத்தில் சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணி செய்யப்பட்டது என்கிறார்கள். ஐந்து பிராகாரங்களுடன் எண்ணற்ற சந்நிதிகளுடன் ஆலயம் அமைந்துள்ளது. தில்லையில் தாம் கொண்டிருந்த ஆனந்த தாண்டவக் கோலத்தை வசிட்ட மாமுனிக்கு இங்கு காட்டியமையால், இது மேலச் சிதம்பரம் என்றும் போற்றப்படுகிறது. இது சுவேதகிரி, தென்கைலாயம், ஞீலிவனம், கதலிவனம், அரம்பை வனம், விமலாரண்யம், தரளகிரி, வியாக்ரபுரி என்றும் அழைக்கப்படுகிறது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் பாடிய தலமிது. ஸ்ரீராமரும் ராவணனும் வழிபட்ட ஆலயம் என்பதும் சிறப்பு.

பைஞ்ஞீலி என்றால் கல்வாழை என்று பொருள். வாழைத் தோப்பாக இருந்த இடத்தில், கல்வாழைகள் நிறைந்த இடத்தில் இந்த ஆலயம் உருவானதால் பைஞ்ஞீலி என்றே இந்த தலத்துக்கு திருநாமம் உருவானது. வாழையே இங்கு தல விருட்சமாகவும் உள்ளது. இந்த ஆலயத்தின் ஈசனின் திருநாமம் ஸ்ரீஞீலிவனநாதர். இவரே திருமண வரமளிக்கும் தயாபரனாக இங்கு எழுந்தருளி இருக்கிறார். இங்கு அம்பிகை விசாலாட்சி என்றும் ஸ்ரீநீள்நெடுங் கண்நாயகி என்றும் எழுந்தருளி இருக்கிறார். பைஞ்ஞீலி மகாதேவர், பைஞ்ஞீலி உடையார், நீலகண்டேசுவரர், வாழைவன நாதர், சுவேத கிரியார், கதலிவசந்தர், ஆரண்யவிடங்கர் என்றும் கல்வெட்டுகள் ஈசனைத் துதிக்கின்றன.

ஸ்ரீஞீலிவனநாதர் திருக்கோயில்
ஸ்ரீஞீலிவனநாதர் திருக்கோயில்
இங்குள்ள ஈசன் யமன், விஷ்ணு, இந்திரன், காமதேனு, ஆதிசேஷன், வாயு பகவான், அக்னி பகவான், ஸ்ரீராமர், அர்ச்சுனன், வசிஷ்டர் உள்ளிட்டோரின் பதவியை மீண்டும் அளித்தவர் என்பதால் 'அதிகார வல்லபர்' என்ற திருநாமம் கொண்டுள்ளார். அதனால் இழந்த பதவியைப் பெற விரும்புவோர், பதவியைப் பெற முடியாமல் தவிப்பவர் இங்கு வழிபட்டால் நன்மை பெறுவார் என்பதும் நம்பிக்கை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருமண வரம், சந்தான பாக்கியம் ஆகிய வரங்களோடு நீண்ட ஆயுளை அளித்து பேரன், பேத்திகளோடு கூடி வாழும் யோகத்தையும் அளிப்பவர் ஸ்ரீஞீலிவனநாதர். ஆம், மார்க்கண்டேயரின் ஆயுளைப் பறிக்க வந்த யமனை திருக்கடையூரில் சம்ஹாரம் செய்தார் ஈசன் என்று நீங்கள் அறிந்திருக்கலாம். யமன் இல்லாத பூவுலகம், மரணமே இல்லாமல் சகல ஜீவன்களும் பெருகியபடியே இருந்ததாம். இதனால் கவலை கொண்ட பூமாதேவி, ஈசனிடம் முறையிட அவரும் இந்த தலத்தில் யமனுக்கு பாவவிமோசனம் அளித்து அருள் செய்தாராம்.

இதனால் இங்கு யமனுக்கு தனி சந்நிதி உள்ளது. மேலும் ஈசனின் ஆணைக்கு ஏற்ப இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு யம பயம், அகால துர்பயம் எதுவும் உண்டாகாது என்று தலவரலாறு கூறுகிறது. இங்கே வந்து ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் செய்து கொள்பவர்களுக்கு பூரண ஆயுள் கிட்டும் என்பதும் நம்பிக்கை. இங்கு நவகிரகங்களுக்கு சந்நிதி இல்லை. அதற்குப் பதிலாக நந்திக்கு அருகில் உள்ள ஒன்பது குழிகளில் எண்ணெய்விட்டு விளக்கேற்றி, அதையே நவகிரகமாக வழிபடும் வழக்கமும் உள்ளது.

ஸ்ரீஞீலிவனநாதர்
ஸ்ரீஞீலிவனநாதர்

இந்த தலத்தில் உறையும் வாழை மரங்கள் சப்த கன்னியரின் அம்சம் எனப்படுகின்றன. சப்த கன்னியரும் இங்கு கூடி ஈசனிடம் திருமண வரம் கேட்டதாக ஐதீகம். இதனால் இங்கே வாழை மரங்களுக்கு பூஜை செய்வதும் வழக்கம். இங்கு காலையும் மாலையும் வாழை பரிகார பூஜை செய்யப்படுகிறது. இதனால் நாகதோஷ நிவர்த்தி, திருமணத்தடை விலகுதல், பூரண ஆயுள் போன்ற மங்கலங்கள் நிறைவேறுமாம். இங்குள்ள வாழை தனித்த சிறப்பு கொண்டது. இது வேறிடத்தில் நட்டால் வளர்வதில்லை. இந்த வாழையின் இலை, காய், கனி என எல்லாமே ஈசனுக்கே அர்ப்பணிக்கப்படுகிறது. மீறி யாராவது உண்டால் அவர்களுக்கு உடல் நலக்கோளாறு வரும் என்பது இங்குள்ளோரின் கூற்று. இதனால் இந்த வாழையை ஈசனுக்கு நைவேத்தியம் செய்து நீரில் விட்டுவிடுவார்களாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்குள்ள யமனுக்கு எள் தீபமேற்றி, எள் சாதம் நைவேத்தியம் செய்து வழிபடுவது இங்கு விசேஷம். ஈசனையும் அம்பிகையையும் வணங்கி விளக்கேற்றி வழிபட்டால் திருமண, சந்தான, செவ்வாய் தொடர்பான சகல தோஷங்களும் விலகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வர் என்பதும் நம்பிக்கை.
திருச்சி கோயில்கள்
திருச்சி கோயில்கள்

கல்யாண தீர்த்தம், எம தீர்த்தம், விசாலாட்சி தீர்த்தம், அக்னி தீர்த்தம், தேவ தீர்த்தம், அப்பர் தீர்த்தம், மணிகர்ணிகை தீர்த்தம் என இங்கு ஏழு தீர்த்தங்கள் உள்ளன. அதில் அப்பருக்கு பொதி சோறு கொடுத்த இடம் அப்பர் தீர்த்தம். அப்பரின் பசியை ஈசன் தீர்த்ததால் இங்குள்ள ஈசன் 'சோற்றுடைய ஈஸ்வரன்' என்றும் வணங்கப்படுகிறார். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில், இங்குள்ள ஈசனின் மீது சூரியக் கதிர்கள் விழுந்து வணங்கும் காட்சி மெய் சிலிர்க்க வைக்கும் வழிபாடு என்கிறார்கள் பக்தர்கள். மேலும் இந்த ஆலயத்துக்கென்றே விசேஷ வழிபாடான கல்(யாண) வாழைகளுக்கு முன்னே அமர்ந்து செய்து கொள்ளும் பரிகார பூஜை மற்றும் தோஷ நிவர்த்தி பூஜை அதிசயமானது என்று வியக்கிறார்கள் பக்தர்கள்.

நீண்ட ஆயுளையும் நிறைந்த மண வாழ்க்கையையும் அருளும் இந்த தலத்துக்கு ஒருமுறை சென்று வாருங்கள்! நினைத்தது எல்லாம் நிறைவேறும் என்று சத்திய சாட்சி சொல்கிறார்கள் திருச்சி வாழ் மக்கள்.

அமைவிடம் - திருச்சியிலிருந்து மண்ணச்சநல்லூர் வழியாக இந்த ஆலயம் செல்லலாம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism