கட்டுரைகள்
Published:Updated:

உலகின் முதல் சகஸ்ர லிங்கம் தோன்றிய அதிசயக் கோயில்! - திருவாசி!

திருவாசி
பிரீமியம் ஸ்டோரி
News
திருவாசி

ஒரு தலம் 4

திருச்சியிலிருந்து முசிறி, நாமக்கல், சேலம் செல்லும் சாலையில் 15 கி.மீ தூரத்தில் உள்ளது திருவாசி. உலகின் முதல் சகஸ்ர லிங்கம் தோன்றிய அதிசயத் தலம். இதன் பழைமையான பெயர், திருப்பாச்சிலாச்சிராமம். தேவாரத் தலங்களுள் 62-வது தலம் இது.

* ஒருமுறை அம்பிகையின் கேள்விக்கு பதில் உரைத்த ஈசனார், ‘வேதங்களும் வேத பண்டிதர்களும் தவமியற்றும் இந்தத் திருப்பாச்சிலாச்சிராமமே என் விருப்பத்துக்குரிய தலம்’ என்று எடுத்துரைத்தார். அதன்படி தேவி, அன்னப்பறவையாக இங்கு வந்து ‘அன்னமாம் பொய்கை’ என்ற தீர்த்தத்தில் வளர்ந்து ஈசனை வணங்கி அருள்பெற்றார் என்பது தல வரலாறு.

* இத்தலத்தில் உள்ள அருள்மிகு பாலாம்பிகை சமேத மாற்றுரை வரதீஸ்வரர் கோயில் சுமார் 1,600 ஆண்டுகள் பழைமையானது. சுவாமி கிழக்கு நோக்கியிருக்க, அம்பாள் அவருடைய வலக்கை பாகத்தில், சந்நிதி கொண்டிருக்கிறாள். இருவரும் ஒருவரையொருவர் நோக்கியதைப் போல அமைந்திருப்பது சிறப்பம்சம்.

* கர்ப்பகிரகத்தில் ருத்திராட்சப் பந்தலின் கீழே சுயம்புநாதராகக் காட்சி தருகிறார் மூலவர். சுந்தரமூர்த்தி நாயனாருக்கு தாம் கொடுத்த தங்கத்தை உரைத்துக் காட்டியதால் இங்குள்ள ஈசனுக்கு ‘மாற்று உரை வரதர்’ அல்லது ‘மாற்று உரைத்த ஈஸ்வரர்’ என்ற பெயர் உண்டானதாம்.

* சோம வாரமாகிய திங்கட்கிழமையில் இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றி ஈசனை வழிபட்டால் நிரந்தர வேலை, வேலையில் இருப்பவர்களுக்கு உயர்பதவி, பூர்வீகச் சொத்து பிரச்னை நீங்குதல் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருவாசி கோயில்
திருவாசி கோயில்

* ‘துணி வளர் திங்கள் துலங்கி விளங்க’ என்ற திருஞானசம்பந்தர் பதிகம் பாடப்பெற்ற இடம் இதுவே. வலிப்பு நோயையும் குழந்தைகளுக்கு வரும் நோய்களையும் தீர்த்துவைக்கும் திருத்தலம் இது.

* கொல்லிமழவன் எனும் அரசனின் மகளுக்குப் பிடித்திருந்த வலிப்பு நோயை இங்குதான் சம்பந்த பெருமான் நீக்கினார். இங்குள்ள ஆவுடையாப்பிள்ளை மண்டபத்தில் கொல்லி மழவன் மகளுக்குச் சம்பந்தர் நோய் நீக்கிய வரலாற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன.

* திருவாசியில் அருளும் நடராஜர் விசேஷமானவர். இவரின் திருவடியில் முயலகனுக்குப் பதில் சர்ப்பம் உள்ளது. நோய்களை நாகமாக்கி அதை ஈசன் மிதித்து ஆடுவதாக ஐதீகம். இதுபோன்ற நடராஜர் கோலம் வேறெங்கும் இல்லை.

* இந்த சர்ப்ப நடராஜருக்கு அர்ச்சனை செய்து, அந்த விபூதியை 48 நாள்கள் தொடர்ந்து பூசிவர வேண்டும். இதனால் நரம்புப் பிரச்னைகள், வாதநோய், வலிப்புநோய், வயிற்றுவலி, சர்ப்ப தோஷம், மாதவிடாய்ப் பிரச்னைகள் முதலியன விலகும் என்கிறார்கள் பக்தர்கள்.

* திருவானைக்கா போன்றே அச்சு அசலாக இந்த ஆலய அமைப்பும் அமைந்துள்ளது. அங்கு போலவே அம்பிகைக்கு எதிரே கணபதி காணப்படுகிறார். இங்குள்ள சிற்பங்கள் மிக மிக அழகானவை. வன்னி மரம் இங்கு தல விருட்சமாக விளங்குகிறது.

* இக்கோயிலில் அர்த்தஜாம பூஜையின்போது, அம்பாளுக்கே முதலில் வழிபாடு செய்யப்படுகிறது. பால் குடிக்காமல் அழும் குழந்தைகள், உடலில் பிரச்னை இருக்கும் குழந்தைகள் மற்றும் பாலாரிஷ்டம் உள்ள குழந்தைகளை இங்கேயுள்ள அம்பாள் சந்நிதிக்கு அழைத்து வந்து, காலை 7 மணியிலிருந்து 12 மணிக்குள் அம்பாளுக்குப் பால் அபிஷேகம் செய்து, குழந்தைகள் பெயரில் அர்ச்சனை செய்து, அந்த அபிஷேக தீர்த்தத்தைக் குழந்தைகள் மேல் தெளித்தால், நோய் தீரும் என நம்பிக்கை.

* அம்பிகை சந்நிதிக்கு எதிரே உள்ள ‘அன்னமாம் பொய்கை’ என்ற தீர்த்தம் மகத்துவமானது. வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தினங்களில் காலை 7 மணிக்குள் இதில் நீராடி, புத்தாடை உடுத்தி, அம்பாளுக்கு 11 நெய் தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். இதுபோல 5 வாரங்கள் செய்தால் திருமண வரம் பெறலாம் என்பது நம்பிக்கை.

* அம்பிகை கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகிகளின் முன் தொட்டில் கட்டி வழிபட்டால் பிள்ளை வரம் கிட்டும் என்பதும் நம்பிக்கை. திருவாசி ஆலயத்தில், கிரக மூர்த்தியர் சூரியனை நோக்கியே அமைந்துள்ளனர். சூரியதேஷம் உள்ளவர்கள் இத்தல நவகிரகங்களை வழிபடுவது சிறப்பு.

* சண்டிகேஸ்வரிக்கென தனிச் சந்நிதி அமைந்துள்ள திருத்தலம் இது. தம்பதி ஒற்றுமை வேண்டவும், படித்துக்கொண்டிருக்கும் பெண்கள் மனம் தடுமாறாமல் படிப்பில் கவனம் செலுத்தவும் வேண்டி, இந்த அம்மனை வழிபடுகிறார்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இந்தச் சண்டிகேஸ்வரிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.

அதிசய நடராஜர் - 
 கோயில் முன்புறம் - வள்ளி, தெய்வனை சமேத முருகன்
அதிசய நடராஜர் - கோயில் முன்புறம் - வள்ளி, தெய்வனை சமேத முருகன்

* கஜலட்சுமித் தாயாருக்கும் இங்கு தனிச் சந்நிதி உண்டு; செல்வகடாட்சம் அருளும் அன்னை இவர்.

* ஈசன் சந்நிதியில் சுந்தரமூர்த்தி நாயனாருக்குப் பொற்கிழி தந்த ஸ்தபன மண்டபம் உள்ளது. இவ்விடத்தைக் கல்வெட்டு ஒன்று ‘கிழி கொடுத்தருளிய திருவாசல்’ என்ற பெயரால் குறிக்கிறது. மேலும் முதலாம் ராஜராஜன், ராஜராஜ விடங்கன் எனும் சிவலிங்க மூர்த்தம் ஒன்றை நிறுவியதாகக் கல்வெட்டு தெரிவிக்கிறது.

* முதலாம் ராஜராஜனின் அரண்மனை பெரிய வேளத்துப் பணிப்பெண்ணாக இருந்த நக்கன் கற்பகவல்லி என்பவள் தம்மைத் திருவாசிக் கோயில் ஈசனின் மகளாக எண்ணி வாழ்ந்தவர். இவர் தம் ஊதிய சேகரிப்பிலிருந்து 201 கழஞ்சுப் பொன் அளித்தாளாம். அத்துடன், ஆண்டுக்கு 16 கலம் நெல் விளையும் நிலங்களையும் சேர்த்தளித்தார் என்றும் இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது.

* இந்த அற்புத தலத்தில்தான் பூவுலகின் முதல் சகஸ்ர லிங்கம் முதன்முதலாகத் தோன்றியது எனக் கூறப்படுகிறது. 1000 லிங்கங்கள் ஒன்று சேர்ந்த ஒரே லிங்க வடிவமே சகஸ்ர லிங்கம் எனப்படும். இங்கு 1,000 ரிஷிகள் ஒன்றுகூடி ஈசனை வழிபட்டு இறுதியில் அவர்கள் அனைவரும் ஈசனுள் கலந்து உருவான சகஸ்ர லிங்கமே இங்கு அபூர்வ சகஸ்ர லிங்கமானது.