Published:Updated:

வயலூர் முருகன் கோயில் அற்புதங்கள்: வாழ்வளிக்கும் வள்ளலே, வயலூர் பெருமானே! | திருச்சி கோயில்கள் - 3

வயலூர் முருகன்
வயலூர் முருகன்

முருகப்பெருமானின் பெருமை சொல்லும் ஆலயமாக இது இருந்தாலும், ஆதியில் இது சிவாலயமாகவே உருவானது என்கிறது தலவரலாறு.

ஆலயங்களின் அணிவகுப்பாகத் திகழும் நகரம் திருச்சி. இங்கே சைவம், சாக்தம், வைணவம், கௌமாரம், காணாபத்யம் என எல்லாப் பிரிவுகளுக்கும் பிரசித்தமான பல கோயில்கள் உள்ளன. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விழாக்களும் கோலாகலமும் நிறைந்திருந்த ஊர் இது என்று சங்க இலக்கியங்கள் கூறும். கோழி என்று வழங்கப்பட்ட உறையூரும் கல்லணையும் திருச்சியின் புராதனப் பெருமையைக் கூறும் என்றால், ஆனைக்காவும் திருவரங்கமும் இந்நகரின் புராணப் பெருமைக்குக் கட்டியம் கூறும்.

சங்க இலக்கியங்களில் பல இடங்களில் உறையூரைப் பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. (உறையூர் தற்போது திருச்சியின் ஒரு பகுதியாக உள்ளது) வளம்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை (குறுந்தொகை), உறந்தை அன்ன பொன்னுடை நெடுநகர் (அகநானூறு) இதுபோல புறநானூறு, நற்றிணை, சிறுபாணாற்றுப்படை, சிலப்பதிகாரம் போன்ற நூல்களும் உறையூரைக் கொண்டாடுகின்றன. பங்குனி உத்தர நாளில் காவிரி ஆற்றங்கரையில் பங்குனி முயக்கம் என்னும் பங்குனி திருவிழா நடைபெறும். பொங்கலிட்டுப் படைக்கும் பங்குனித் திருவிழாவில் தமிழர்களின் மூதாதையான முருகப்பெருமான் வழிபாடும் வேலன் வெறியாடலும் நடக்கும் என்றும் இலக்கிய குறிப்புகள் உள்ளன (அகநானூறு, நற்றிணை).

கணபதி
கணபதி

தொன்றுதொட்ட காலம் தொட்டே வேலன் வழிபாடு நடந்து வந்த இந்த திருச்சி மாநகரில் ஓர் அற்புதமான முருகப்பெருமான் ஆலயத்தைக் காணலாம். முருகப் பெருமானுக்குப் பிடித்தமான ஆலயங்கள் இரண்டு என்பார் அருணகிரிநாதர். ஒன்று திருச்செங்கோடு, மற்றொன்று திருச்சி வயலூர். திருச்சியில் இருந்து மேற்கே, 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது வயலூர். குமாரவயலூர் என்னும் வயலூர், வயல்கள் சூழ்ந்த இடம் என்பதால் இந்தப் பெயர் பெற்றது என்பர். இவ்வூரை 'உறையூர் கூற்றத்து வயலூர்', 'தென்கரை பிரமதேய நந்திவர்ம மங்கலம்' 'ராஜகம்பீர வளநாடு' 'மேலைவயலூர்' என்று குறிப்பிடுகின்றன.

வயலூர்
வயலூர்

அருணகிரிநாதரை திருவண்ணாமலையில் கம்பத்து இளையவராக தடுத்தாட்கொண்ட முருகப் பெருமான் முதன்புதலில் வயலூருக்குத்தான் வரச்சொல்லி உத்தரவிட்டார். அருணகிரிநாதர் இங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டு 18 பாடல்கள் புனைந்த பெருமை கொண்ட தலம் இது. இங்கிருந்தே திருப்புகழ் எனும் பெரும் பொக்கிஷம் உருவானது என்பதும் இவ்வாலய பெருமைகளில் ஒன்று.

தாயுமாகிய செவ்வந்தி நாதர்... திருச்சி தாயுமானவர் கோயில் அற்புதங்கள்!

முருகப்பெருமானின் பெருமை சொல்லும் ஆலயமாக இது இருந்தாலும், ஆதியில் இது சிவாலயமாகவே உருவானது என்கிறது தலவரலாறு. காலமறியா காலத்தில் காட்டு விலங்குகளை வேட்டையாடச் சென்ற ஒரு சோழ மன்னன், இங்கிருந்த கரும்பு ஒன்றை ஒடிக்க வாளால் வெட்டினான். அப்போது ஒடிந்த கரும்பிலிருந்து ரத்தம் வடிந்தது. இதனால் பதறிய சோழன் வயலைத் தோண்டிப் பார்க்கையில், அங்கே ஈசன் லிங்கமேனியாக காட்சி அளித்தான். அங்கேயே அவருக்கு ஓர் ஆலயம் எழுப்பி, ஆதிநாதர் என்ற திருநாமம் இட்டு வணங்கினான் என்று சொல்லப்படுகிறது. 9-ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் மீண்டும் புனரமைக்கப்பட்டது.

வயலூர் முருகப்பெருமான்
வயலூர் முருகப்பெருமான்

ராஜகேசரிவர்மன், குலோத்துங்கச் சோழன், பரகேசி வர்மன், ராஜேந்திர சோழன் ஆகியோரால் திருப்பணிகள் கண்ட இந்த கோயிலின் கல்வெட்டுகள் ஆலயத்தின் பழைமையை எடுத்துக் கூறுகின்றன. இங்குள்ள ஆதிநாதர் தம்மை நாடிவரும் பக்தர்கள் கேட்பதை மறக்காமல் கொடுப்பதால் மறப்பிலி நாதர் என்றும் அக்னி பகவான் வழிபட்டதால் அக்னீஸ்வரன் என்றும், விடங்கப் பெருமான், திருமகாதேவன், திருக்கற்றளிப் பெருமான் என பல நாமங்களால் வணங்கப்படுகிறார். இங்கு அம்பிகையின் திருநாமம் ஆதிநாயகி. இங்கே வீற்றிருக்கும் கணபதியைப் பொய்யாக் கணபதி என்பர். கைத்தல நிறைகனி... எனத் துவங்கும் அருணகிரிநாதரின் விநாயகர் ஸ்தோத்திரப் பாடல் உருவானதும் இவரால்தான்.

வயலூர் முருகப்பெருமான் என்று உலகெங்கும் பிரசித்தமான இந்த ஆலயத்தில் தெய்வானை, வள்ளி ஆகிய இருவருடனும் முருகப்பெருமான் இணைந்து ஈசனை இங்கு பூஜிக்கிறார்கள் என்பது ஐதீகம். தனி சந்நிதியில் வள்ளி - தெய்வானை சமேதராக காட்சி தருகிறார் வயலூர் முருகப்பெருமான். முயலகன் இல்லாத சதுர தாண்டவ நடராஜர், முருகப் பெருமானே தன் வேலினால் குத்தி உண்டாக்கிய சக்தி தீர்த்தம், வைகாசி விசாக சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும் சட்டத்தேர் விழா என இந்த ஆலயத்தில் அதிசயங்கள் அநேகம். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருப்பணிகள் செய்து வழிபட்ட திருத்தலம் இந்த வயலூர் முருகன் கோயில்.

வயலூர் முருகன் கோயில்
வயலூர் முருகன் கோயில்

'ஏழ்தலம் புகர் காவேரியால் விளை

சோழ மண்டல மீதே மநோகர

ராஜ கெம்பிர நாடாளு நாயக வயலூரா’

என்று இந்த வயலூர் முருகப்பெருமானை எண்ணி திருவாவினன்குடியிலும் பாடி இருக்கிறார் அருணகிரிநாதப் பெருமான். எண்ணினாலும் தரிசித்தாலும் எண்ணிலடங்காப் பேறுகளை அள்ளித்தரும் வயலூர் முருகப்பெருமானை முடிந்தவர்கள் நேரில் தரிசிக்க நலம் பெருகும். வளம் தழைக்கும் என்பது வாரியார் சுவாமிகள் வாக்கு.

பரிகாரங்கள் மற்றும் வழிபாடுகள்

திருமண தோஷம் மற்றும் தடைகள் உள்ளவர்கள், முதல் நாள் இரவே இங்கு வந்து தங்கி, மறுநாள் சக்தி தீர்த்தத்தில் நீராடி, முருகப்பெருமானை வழிபட்டால் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை. ஆண்டு முழுக்க பக்தர்கள் இங்கு வந்து கூடி முடி இறக்குதல், காவடி எடுத்தல், பால் குடம் எடுத்தல், காது குத்தல், சஷ்டி விரதம் இருத்தல், ஆண்கள் அங்கபிரதட்சணம் செய்தல், பெண்கள் கும்பிடு தண்டமும், அடிப் பிரதட்சணமும் செய்வது என பல நேர்த்திக்கடன்கள் செய்கின்றனர். நாக தோஷம் மற்றும் குழந்தை வரம் இல்லாதோர் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி, வழிபட்டால் தோஷங்கள் நீங்கி, நற்பலன்கள் அடைவர் என்பது நம்பிக்கை.
அடுத்த கட்டுரைக்கு