Published:Updated:

பார்த்தசாரதி கோயில் பரமபதவாசல் திறக்கப்பட்டது.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்!

பெருமாள்
பெருமாள்

பக்தர்களின் `கோவிந்தா' கோஷம் அதிர, சரியாக 4.30 மணிக்கு சொர்க்க வாசலில் எழுந்தருளினார் பெருமாள். தொடர்ந்து தீபாராதனைகளும் வேத பாராயணங்களும் செய்யப்பட்டன.

எம்பெருமான் கோவிந்தன், உலக உயிர்களுக்கெல்லாம் தலைவன். அவனை அனுதினமும் நாம் சென்று கண்டு மகிழ்கிறோம். ஒரே ஒருநாள் மட்டுமே நம்மை நோக்கி இறங்கி வந்து நம்மைக் கண்டு மகிழ்கிறான். அவன் தன் அடியாரைச் சந்தித்து அருள் கொடுக்கவே பரமபத வாயில் கடந்து இறங்கி வருகிறான். இத்தகு மேன்மை பொருந்தியது வைகுண்ட ஏகாதசித் திருநாள்.

நம்மாழ்வார்
நம்மாழ்வார்

வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக, பரமபத வாயில் வழியே நம்பெருமாள் எழுந்தருளுகிற சொர்க்கவாசல் திறப்பு வைபவம் பெருமாள் தலங்களில் கோலாகலமாக நடைபெற்றது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

பார்த்தசாரதி பெருமாள், சந்நிதியில் நள்ளிரவு விஸ்வரூப தரிசன சேவை சாதித்தார். பின்னர் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரமானதும் தேவியர் சமேதராய் வைபவத்துக்குப் புறப்பாடாகினார். மங்கல வாத்தியம் முழங்க உள்பிரகார வலம் வந்த நம்பெருமாள், பக்தர்களின் `கோவிந்தா' கோஷம் அதிர, சரியாக 4.30 மணிக்கு சொர்க்க வாசலில் எழுந்தருளினார். தொடர்ந்து தீபாராதனைகளும் வேத பாராயணங்களும் செய்யப்பட்டன.

பெருமாள்
பெருமாள்

எதிர்நின்று நம்மாழ்வார் வரவேற்க, அவருக்கு காட்சியருளிய வண்ணம் எம்பெருமான் சொர்க்க வாசல் கடந்தார். இரவு வரையிலும் சுவாமி திருவாய்மொழி மண்டபத்தில் வீற்றிருப்பார். நள்ளிரவு 12 மணிமுதலே கோயிலுக்கு வெளியே பக்தர்கள் வரிசையில் காத்திருக்கத் தொடங்கினர். கட்டண பாஸ், சிறப்பு தரிசன பாஸ் வைத்திருந்தவர்கள் தரிசனம் முடிந்து வெளியேறியதும் அதிகாலை 6 மணியிலிருந்து பொது தரிசன பக்தர்கள் தரிசனம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

சுவாமியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். பக்தர்களுக்கு உதவும் விதமாக காவலர்கள் வழிகாட்டி வருகின்றனர். அவசர கால சிகிச்சைகளுக்கு ஆங்காங்கே ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள், மருத்துவர்கள் குழு என எல்லாமே தயாராய் உள்ளன.

பெருமாள்
பெருமாள்

இந்த வைகுண்ட ஏகாதசியில் பார்த்தசாரதி பெருமாளை வழிபாட்டு வாழ்வில் நீண்ட ஆயுளும் நிலைத்த புகழும் நிறைசெல்வமும் நிம்மதியான வாழ்வும் பெறுவோம்!

அடுத்த கட்டுரைக்கு