Published:Updated:

ஐப்பசி அன்னாபிஷேகம்... தஞ்சைப் பெரியகோயில், கங்கைகொண்ட சோழபுரம்... தரிசனம் எப்போது?

அன்னாபிஷேகம்
அன்னாபிஷேகம்

நவகிரகங்களில் சந்திரனை மனோகாரகன் என்பர். மனதுக்கு அதிபதி சந்திரன். சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. எனவே அரிசிகொண்டு சோறு சமைத்து அதை ஈசன் திருமேனி எங்கும் சாத்தி வழிபடுவது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

பிரபஞ்ச உயிர்களுக்கெல்லாம் படியளப்பவன் ஈசன். அந்தப் பரமனுக்கு அன்னம் சாத்தி வழிபடுவதே அன்னாபிஷேகம் எனப்படும். ஆண்டுமுழுவதும் சிவபெருமானுக்குப் பல திரவியங்களால் அபிஷேகம் நடந்தாலும் அன்னம் கொண்டு அவர் அபிஷேகிக்கப்படும் நாள் ஐப்பசி பௌர்ணமி.

உணவு உலக உயிர்களுக்கெல்லாம் ஆதாரமாக விளங்குவது அன்னம். ‘அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ' என்று குறிப்பிடுகிறது சாமவேதம். இதன் பொருள் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருக்கிறார் என்பதாகும். அதனால்தான் சகல தானங்களிலும் உயர்ந்தது அன்னதானம் என்கிறது சாஸ்திரம். அப்படிப்பட்ட உயர்வான அன்னத்தை ஈசனின் திருமேனியில் முழுமையாக சாத்தி வழிபடும் நாளே அன்னாபிஷேகத் திருநாள்.

சிவபெருமான்
சிவபெருமான்

சாதம்போதும்... சோறு கொடு

சந்திரன் தட்சனின் மருமகன். ஆணவத்தால் தன்னை அவமதித்த சந்திரனை, நாளொரு கலையாகத் தேய்ந்து மறைவாய் என்று சாபமிட்டார் தட்சன். இதுகுறித்துக் கவலை அடைந்த சந்திரன் சர்வேஸ்வரனான சிவபெருமானை எண்ணித் தவமிருந்தார். சந்திரனின் தவத்தில் மகிழ்ந்த ஈசன் அவருக்கு சாப விமோசனம் அளித்துத் தன் தலையில் சூடிக்கொண்டார். அதன் பலனாக சந்திரன் தன் முழுவடிவோடு ஜொலித்தான். அந்த நாள் ஐப்பசி பௌர்ணமி.

‘சாதம்’ என்ற சொல்லுக்குப் ‘பிறப்பு’ என்ற பொருளும் உண்டு. ‘சோறு’ என்ற சொல்லுக்கு ‘முக்தி’ என்பது பொருள். இதன்படி சாதத்தைப்படைத்து, சோற்றை அதாவது முக்தியை வேண்டுவதே அன்னாபிஷேக வைபவம் என்ற தத்துவ விளக்கமும் சொல்லப்படுகிறது இதற்குச் சொல்லப்படுகிறது.

மன நலம் அருளும் மகேஸ்வர தரிசனம்

நவகிரகங்களில் சந்திரனை மனோகாரகன் என்பர். மனதுக்கு அதிபதி சந்திரன். சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. எனவே அரிசிகொண்டு சோறு சமைத்து அதை ஈசன் திருமேனி எங்கும் சாத்தி வழிபடுவது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக சந்திரனின் சாபம் தீர்ந்த ஐப்பசி பௌர்ணமியில் இந்த அபிஷேகம் அனைத்து சிவாலயங்களிலும் நடைபெறும். அந்த நாளில் சிவதரிசனம் செய்தவர்களின் துயரங்கள் எல்லாம் தீரும் என்பது ஐதிகம். குறிப்பாக ஜாதகத்தின் சந்திரன் பலவீனமாக உள்ளவர்கள், மன நலம் மேம்பட வேண்டுபவர்கள் சந்திராஷ்டமங்களால் மிகுந்த துயர் அடைபவர்கள் அன்னாபிஷேக தரிசனம் கண்டால் மனக் கலக்கங்கள் மறைந்து நிம்மதியும் இன்பமும் பெறுவர் என்பது நம்பிக்கை.

தஞ்சை ஈசன்
தஞ்சை ஈசன்

தஞ்சைப் பெரியகோயிலில் அன்னாபிஷேகம் எப்போது?

அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும் என்றாலும் முக்கிய கோயில்களில் அன்னாபிஷேக வைபவம் மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படும். அப்படிப்பட்ட திருக்கோயில்களில் ஒன்று தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்.

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோயில் ராஜ ராஜ சோழனால் கி.பி. 1010 - ம் ஆண்டு கட்டப்பட்டது. 1,000 ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக காட்சி அளித்து தமிழர்களின் பெருமையை உலகத்திற்கே பறை சாற்றிக் கொண்டிருக்கும் இந்தக் கோயில். இந்த ஆலயத்தின் மூலவர் 12 அடி உயரமும், 65 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட பிரமாண்டத் திருமேனியாகத் திகழ்பவர். இந்தப் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் காட்சி அற்புதமானது. ஒவ்வோர் ஆண்டும் இந்த அரிய தரிசனத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் தஞ்சையில் கூடுவர்.

இந்தாண்டிற்கான அன்னாபிஷேக விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா பரவுதலைத் தடுப்பதற்காகப் பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அரசு அறிவித்துள்ள நடைமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளியுடன் அன்னாபிஷேக விழா நடத்துவதற்குக் கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தஞ்சைப் பெரியகோயில்
தஞ்சைப் பெரியகோயில்

இது குறித்து கோயில் தரப்பில் பேசினோம்,

"கடந்த ஆண்டு பெருவுடையாருக்கு 1,000 கிலோ அரிசியில் வடிக்கப்பட்ட சாதத்தாலும், 500 கிலோ காய்கறி மற்றும் பழங்களாலும் அலங்கரித்து அன்னாபிஷேகம் செய்தோம். இரவு லிங்கத்திலிருந்து எடுக்கப்படும் சாதம், பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்படும். மீதமுள்ள அன்னம், அருகில் உள்ள கல்லணைக் கால்வாயில் நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாகப் போடப்படும். இது வழக்கமான நடைமுறை. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருவுடையாரை கோஷங்கள் முழங்க தரிசனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு அதே நடைமுறை கடைப்பிடிக்கப்படும். சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்படுவார்கள்" எனத் தெரிவித்தனர்.

தஞ்சைப் பெரியகோயில் அன்னாபிஷேக தரிசன நேரம்

நாள்: 31.10.20

நேரம்: மாலை 4.30 மணியிலிருந்து 8 வரை

கங்கை கொண்ட சோழபுரம்

தஞ்சையைப் போன்றே அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் கோயிலும் பிரசித்திபெற்றது. இங்கு வழக்கமாக நூறு மூட்டை அரிசியில் சாதம் வடித்து அதனை 13 ½ அடி உயரம், 60 அடி சுற்றளவும் கொண்ட லிங்கத்திற்கு சாத்தி அன்னாபிஷேகம் செய்வர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வர்.

அன்னாபிஷேகம்
அன்னாபிஷேகம்

தற்போது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகக் கடைபிடிக்கப்படும் நடைமுறையால் இங்கு எளிய முறையில் அன்னாபிஷேக விழா கொண்டாடப்பட உள்ளது. 31-ம் தேதி அன்று அன்னாபிஷேகம் செய்யப்பட்டு மாலை 6.45 மணிக்கு தீபாராதனை நடைபெறும். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு தரிசன அனுமதியில்லை என்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு