ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

வாரணமும் தோரணமும்!

தோரணமலை முருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
தோரணமலை முருகன்

தோரணமலை அற்புதங்கள்!

கந்தசஷ்டிக் கவசத்தைச் சிந்தை கலங்காது தியானிப்பவர்கள், ஒருநாளில் முப்பத்தாறு முறை அந்தத் துதியை ஓதி ஜபம் செய்து, முருகனை வணங்கித் திருநீறு அணிந்தால், எண் திசைகளும் வசமாகும்; மாற்றாரும் வந்து வணங்கிப் பணி செய்வார்கள்; எல்லா நோய்களும் நீங்கும்; நவகிரகங்கள் மகிழ்ந்து நன்மை செய்யும்; என்றும் இன்பமுடன் வாழ்வர்’ என்று அறுதியிட்டுக் கூறுகிறார் பாலதேவராய சுவாமிகள்.

வாரணமும் தோரணமும்!

அதிலும் தனக்காக அல்லாமல் பிறருக்காக வேண்டி பொது நலனுக்காக சங்கல்பித்து, சஷ்டிக் கவசம் படித்து வழிபட்டால், அதற்கான பலன் விரைவில் கிடைக்கும். ஒருவகையில் கந்தசஷ்டி கவசம் பிறந்ததே அவ்வகையில்தான்.

முருகன் தலங்களையெல்லாம் தரிசித்து வந்த பாலதேவராய சுவாமிகள், துன்பற்று வாழும் மனிதர்கள் பலரைக் கண்டார். உடல்நோயால் பீடிக்கப்பட்டவர்கள், மனநோயால் வருந்துவோர், வறுமையால் வாட்டமுற்றோர் எனப் பலரும் பலவாறு வாடுவதைக் கண்டு மனம் கலங்கினார். அவர்களின் துயரங்களைப் போக்க வேலவன் அருளவேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்டார்.

தனக்காக அன்றி அனைவருக்காகவும் அவர் செய்த பிரார்த்தனை முருகவேளை அசைத்தது. சுவாமிகளின் கனவில் தோன்றினார். ‘‘உமது எண்ணம் ஈடேற அருளினோம். பிணிகள் முதலான அனைத்து உபாதைகளும் நீங்கும். அதற்கு வழி உம்மிடம் உள்ளது. உலகிலுள்ளோர் அனைவரும் மந்திரமாக ஓதி இன்புற்று வாழ்வுறும் வகையில் செந்தமிழில் பாடும்!’’ என்று ஆசியளித்து கந்தவேள் மறைந்தார்.

பரவசத்துடன் எழுந்தார் தேவராயர். முருகப்பெருமானின் திரு வருளை வியந்து போற்றி பாமாலை சூட்டியருளினார். அதுதான் 238 அடிகளைக் கொண்ட கந்தர் சஷ்டி கவசம்.

வாரணமும் தோரணமும்!

‘சரவணபவ’ எனும் திருநாமமே இந்தக் கந்தர்சஷ்டி கவசத்தின் மூல மந்திரம். பாலதேவராய சுவாமிகள் இந்த நூலின் முதல், இடை, கடை பகுதிகளில் இந்த மூலமந்திரத்தைப் பொருத்தி இதனைப் பாடியுள்ளார் எனலாம். கவசத்தின் ஒவ்வோர் அடியும் கந்தனின் திருக்கையிலுள்ள வேலைப் போன்றது; உடல், உள்ளம், உயிர் அனைத்துக்கும் கவசமாகத் திகழ்வது. பாராயணம் செய்து பலன் அடைந்தவர்களது அனுபவ உண்மை இது.

அடியவர் செண்பகராமனும் அப்படியான அனுபவத்தைச் சந்தித்தார். ஒருநாள் இரவு, பாதைக்கு வெளிச்சம் காட்டும் எமர்ஜென்ஸி லேம்ப் ஒன்றையும் வாழ்க்கைக்கு வெளிச்சம் காட்டும் சஷ்டிக் கவசப் புத்தகம் ஒன்றையும் எடுத்துக்கொண்டு மலைப் பாதையில் படிகள் ஏறத் தொடங்கினார்.

மலைக்குமேல் தோரணமலையானிடம் சமர்ப்பிக்க அவருக்கு ஓர் விண்ணப்பம் இருந்தது. மிக உயர்ந்த வேண்டுகோள் அது. சிலபல பக்தர்கள் மட்டுமே வந்து செல்லும் தோரணமலை மென் மேலும் பிரசித்திபெற வேண்டும். ஜனப் பிரியனாம் கந்தவேள் மகிழும் விதம், இந்த மலைக்கோயிலை நாடி அனுதினமும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் வந்து, கந்தனருளைப் பெற்று மகிழ வேண்டும் என்பதுதான் அவரின் பிரார்த்தனை.

பொருநையைத் தழுவி, பொதிகையில் தவழ்ந்து, மேகப் பொதி களை விலக்கி வந்து அவரின் மேனியை வருடியபடி வீசிக் கொண்டிருந்த குளிர்க் காற்று மெள்ள வலுக்க ஆரம்பித்தது. அந்த அடியவர், மலையுச்சியில் தோரணமலையான் சந்நிதியை நள்ளிரவு 11:40 மணியளவில் அடைந்தபோது, பெருங்காற்றாக வலுத்திருந்தது.

அடியவர் அசரவில்லை. அவருக்குள்ளும், எதிரிலும் முருகன் இருக்க பயமேது... கவலைதான் ஏது?!

``அப்பனே முருகா! உன் கோயிலும் தலமும் பிரசித்தி பெற வேண்டும். கூட்டம் கூட்டமாய் மக்கள் உன்னை நாடி வரவேண் டும்’’ என்று வாய்விட்டுப் பிரார்த்தித்தார். அப்படியே முருகன் எதிரில் மலைப் பாறையில் அமர்ந்துகொண்டார். கையிலிருந்த சஷ்டிக் கவசம் புத்தகத்தைப் பிரித்தார்.

`துதிப்போருக்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போருக்குச் செல்வம் பதித்துக் கதித்தோங்கும்...’ கந்தசஷ்டிக் கவசத்தை மெள்ள படிக்கத் தொடங்கினார். அவருக்குக் கவசம் மனப்பாடம்தான் என்றாலும் தன்னையும் அறியாமல் ஒரு வரிகூட விடுபட்டுவிடக் கூடாது என்று தீர்மானித்திருந்ததால், புத்தகத்தைத் துணையாக்கிக் கொண்டார்.

பாலதேவராய சுவாமிகள் வழிகாட்டியபடி 36 முறை படிப்பது என்று முடிவு செய்திருந்தார் செண்பகராமன். 7, 8, 9 என்று எண்ணிக்கை நீண்டது. பத்தாவது எண்ணிக்கையை ஆரம்பித்த போது, எமர்ஜென்ஸி லேம்ப் அணைந்துபோனது. அப்போதும் அடியவர் முயற்சியைக் கைவிடவில்லை. சந்நிதியின் தீபவொளியில் பாராயணத்தைத் தொடர்ந்தார்.

முருகனும் அந்தப் பிள்ளையுடனான தனது அருளாடலைத் தொடரவே செய்தார். அடியவர் 14-ஐ தாண்டி 15-வது எண்ணிக் கையைத் தொடும்போது, மேலும் வலுத்த காற்றின் விசையில் கருவறையின் தீபச் சுடரும் அணைந்துபோனது.

அடியவர் தன் செல்போனை ஒளிரவிட்டுக் கொண்டார். முன்பைவிட அதீத முனைப்புடன் கவசம் படிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து காற்றுடன் தூறலும் சேர்ந்துகொண்டது. எண்ணிக்கை 25-ஐ தாண்டுவதற்குள் தூறல் பெருமழையானது. ஆலங்கட்டி விழுவது போன்று பெருந்துளிகள் அடியவரின் முதுகைப் பதம் பார்த்தன. போதாக்குறைக்கு குளிரும் அவரை நடுநடுங்கச் செய்தது.

அப்போதும் செண்பகராமன் உள்ளம் தளரவில்லை; கவசம் ஜபிப்பதைத் தொடர்ந்தார். செல்போனிலும் சார்ஜ் குறைந்து கொண்டே வந்தது. அதுவும் எப்போதும் அணைந்துபோகலாம் என்ற நிலையில், எண்ணிக்கை 36-ஐ பூர்த்தி செய்தார். மணி 3 -ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. மழையும் ஓய்ந்திருந்தது.

வாரணமும் தோரணமும்!

அதுவரையிலும் குளிரும், காற்றும், மழையும் அவரைப் பெரும் சோர்வுக்கு ஆளாக்கியிருந்தாலும், அதையும் தாண்டிய திருப்தியும் பூரிப்பும் நிறைந்திருந்தன அவரிடம். சட்டென்று வெட்டிய மின்னல் வெளிச்சத்தில்... அந்த ஒரு கணத்தில்... உள்ளே முருகனின் திருமுகத்தைக் கண்டார். அவன் புன்னகைத்தது போல் தோன்றியது. உள்ளுக்குள் பரவசம் பொங்கிட `முருகா’ என்று வணங் கினார். அவரையுமறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது.

வேறெதுவும் செய்யத் தோன்றாவண்ணம் பெரும் நிறைவு ஏற்பட்டுவிட, அமர்ந்திருந்த இடத்தில் அப்படியே மல்லாந்து படுத்துக்கொண்டார். அவரின் அனுமதிக்காகக் காத்திராமல் இமைகள் மூடிக்கொள்ள, உறக்கத்தில் ஆழ்ந்தார்.

சுள்ளென்று முகத்தில் விழுந்த காலைக் கதிர்களின் வெம்மை உசுப்பிவிடவும் கண்விழித்த செண்பகராமன், சுனைக்குச் சென்று நீராடி வந்தார். மீண்டும் முருகனைக் கண்டார். அந்த மலைப் பாலகன் `சாதித்துவிட்டாயா’ என்று கேட்பதுபோல் இருந்தது.

``நான் எதுவும் செய்யவில்லையே தைரியமும் துணிவும் உந்துதலும் அளித்தது நீ அல்லவா’’ என்று இவரும் பதில் கூற முற்பட்ட வேளையில், முருகனின் திருமேனி யிலிருந்து மலர் ஒன்று உதிர்ந்து விழுந்தது, ஆசி கூறுவது போல்!

உள்ளப் பூரிப்புடன் மலை இறங்கத் தொடங்கினார் செண்பக ராமன். அவரின் வேண்டுதலை துரிதகதியில் நிறைவேற்ற சித்தம் கொண்டார் போலும் தோரணமலையான். மிகச் சரியாக 15 நாள் களில் சென்னை நண்பர் ஒருவரின் உதவியோடு தனியார் தொலைக்காட்சி அன்பர்கள் வந்தார்கள்; தொடர்ந்து மேலும்பல அன்பர்களும் எழுத்தாளர்களும் தேடி வந்தார்கள். அன்பர் ஆசைப் பட்டதுபோலவே திக்கெட்டு பரவியது தோரணமலையின் மகிமை.

இதோ... இப்போது அந்த மலையைத் தேடி அனுதினமும் பக்தர் கூட்டம் வருகிறது. விசேஷ தினங்களில் ஜனக் கூட்டத்தில் மூழ்கித் திளைக்கிறார் தோரண மலையான். நம்பி வருவோரை கைவிடாமல் ரட்சித்து அருள்கிறார்!

`மலை உச்சியில் அகோரக் காற்றும் பெருமழையுமான நடுநிசிப் பொழுதில், எனக்குத் துணை முருகன் மட்டுமே. எனக்குள் இப்படியான எண்ணத்தை விதைத் ததும் கருவியாக்கிச் செயல்படுத் தியதும் அவனேதான்...’’ என்று சிலிர்ப்புடன் கூறுகிறார் செண்பக ராமன். அவரே தொடர்ந்து தோரண மலையில் தேரையருக்கு நிகழும் வழிபாடு குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

சித்தர் பெருமான் தேரையரின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்றுத் தரும் மிக அற்புதமான வழிபாடு அது!

- தரிசிப்போம்...

வாரணமும் தோரணமும்!

அருணையில் ஆடும் முக்தி தாண்டவம்!

சிவபெருமான் ஓயாது திருநடனம் புரிகிறார். அவரின் நடனமே உலகின் இயக்கத்துக்குக் காரணமாகும். அவ்வகையில் சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக ஆடும் ஞான தாண்டவம், சூரிய மண்டலத்தில் நிகழ்வதாம்.

சந்திர மண்டலத்தின் நடுவே அவர் ஆடுவது அமுதத் தாண்டவம் ஆகும். இந்த நிலையில் அவரின் வலக்கரம் அபயம் காட்ட, இடக் கரத்தை தொங்கவிட்ட நிலையில் அருள்கிறார். உயிர்கள் அழியாத நிலைப்பேற்றை அடைய அருளும் தாண்டவம் இது.

சிவபெருமான் உயிர்களுக்கு அழியாத முக்தி ஆனந்தத்தை அருளும் திருநடனத்தை அக்னி மண்டலத்தின் நடுவே நின்று ஆடுகிறார். அதுவே முக்தி நடனம் எனப்படும். இதை அவர், கார்த்திகைத் தீப நாளில் திருவண்ணாமலையில் ஆடுகிறார். இதை உணர்த்தும் ஐதீகக் காட்சி கார்த்திகைத் தீபத் திருநாளில் திருவண்ணாமலையில் நடத்தப்படுகிறது.

-அருணவசந்தன், சென்னை-4