Published:Updated:

13 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகத்துக்குத் தயாராகும் வடபழநி ஆண்டவர் கோயில்!

வடபழநி ஆண்டவர் திருக்கோயில்!
வடபழநி ஆண்டவர் திருக்கோயில்!

13 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது கும்பாபிஷேகப் பணிகளுக்குத் தயாராகியுள்ளது, வடபழநி ஆண்டவர் திருக்கோயில்.

பழநிக்கு இணையான தலமாகப் போற்றப்படுவது சென்னையில் உள்ள வடபழநி ஆண்டவர் திருக்கோயில். பழநிக்குச் செல்ல முடியாத பக்தர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து வடபழநி ஆண்டவனை வேண்டிச் சென்றனர். சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக மாறிவிட்ட இந்தத் திருக்கோயிலில் கும்பாபிஷேகத் திருப்பணிகள் நாளை தொடங்குகின்றன. இதற்கு முன்பு கும்பாபிஷேகம் 2007-ம் ஆண்டு நடைபெற்றது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கும்பாபிஷேகப் பணிகளுக்குத் தயாராகியுள்ளது, வடபழநி ஆண்டவர் திருக்கோயில்.

முருகன்
முருகன்

இதையொட்டி, கும்பாபிஷேகப் பணிகளுக்கான கோயில் பாலாலய விழா மார்ச் 11, 12 ஆகிய இரண்டு நாள்களுக்கு நடைபெறுகிறது. முதல்நாள் நிகழ்ச்சியாக, மார்ச் 11 புதன்கிழமையன்று காலை 9 மணி முதல் 11.30 மணிவரை அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகிய பூஜைகள் நடைபெறும். மாலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிக்குள் முதல்கால யாகபூஜைகள் தொடங்கி நடைபெறும். பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்படும். இரவு 9.30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடைபெறும்.

கோலாகலமாய் நடந்தேறிய திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்!

மறுநாள் மார்ச் 12-ம் தேதி அதிகாலை 5.50 மணிக்கு இரண்டாம்கால யாகபூஜைகள் நடைபெறும். அடுத்து காலை 8 மணிக்கு மஹா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெறும். அதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான பாலாலய பிரதிஷ்டை காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது. அதையடுத்து காலை 9.15 மணிக்குத் திருப்பணிகள் தொடங்கப்பெறும். பாலாலய விழாவைக் காண்பதற்குத் திரளான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் வசதிக்கான ஏற்பாடுகளை காவல்துறையும் கோயில் நிர்வாகமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

அறநிலையத் துறை மக்கள் தொடர்பு அலுவலர் த.மருதபிள்ளை
அறநிலையத் துறை மக்கள் தொடர்பு அலுவலர் த.மருதபிள்ளை

இதுகுறித்து அறநிலையத் துறையின் மக்கள் தொடர்பு அலுவலர் த.மருதபிள்ளை பேசியபோது, ``சென்னையின் புகழ்வாய்ந்த இந்தத் திருக்கோயிலில் நடைபெறுகிற பாலாலய விழாவை பக்தர்கள் வந்து சிறப்பித்து, வடபழநி ஆண்டவர் அருள்பெற்றுச் செல்ல வேண்டும். திருப்பணிகள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது" என்றார்.

`புராதனக் கோயில் புதையுண்டு போகலாமா?' - 60 ஆண்டுகளுக்குப் பின் தொடங்கும் திருப்பணிகள்!

செல்வம், திருமண பாக்கியம், குழந்தைப் பேறு, தொழில் விருத்தி என சகலத்தையும் நிறைவேற்றி வைப்பவர் வடபழநி ஆண்டவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அடுத்த கட்டுரைக்கு