Published:Updated:

வைகைப் பெருவிழா 3-ம் நாள்... சுமங்கலி பூஜையுடன் சாக்த வழிபாடு! - நாளை வைஷ்ணவ மாநாடு

முத்துக்குமரன் மு
வி.சதிஷ்குமார்

வைகைப் பெருவிழா...

வைகைப்பெருவிழா
வைகைப்பெருவிழா

ஆடிப்பெருக்கையொட்டி, 'அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம்' முதல்முறையாக மதுரையில் நடத்தும் `வைகைப் பெருவிழா – 2019’ மாநாடு புட்டுத்தோப்பு மைதானத்தில் 24.07.19 (புதன்) அன்று தொடங்கியது. மொத்தம் 12 நாள்கள் நடைபெறும் இந்தப் பெருவிழாவில், வெள்ளிக்கிழமையான இன்று 'சாக்த மாநாடு' எனப்படும் பெண்கள் மாநாடு நடத்தப்பட்டது.

வைகைப்பெருவிழா
வைகைப்பெருவிழா

வைகைப் பெருவிழாவில், இன்று அதிகாலை தொடங்கி கன்னிகா பூஜை நடைபெற்றது. இந்தக் கன்னிகா பூஜையில் 6 முதல் 9 வயது வரையிலான பெண் குழந்தைகள் 108 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து, சேலம் ராஜராஜேஸ்வரி மடம் சார்பில் வருண வேள்வியும் நடத்தப்பட்டது. அதோடு, 108 துளசி பூஜையும் அங்கே நடைபெற்றது. இவற்றைத் தொடர்ந்து, காலை 10 மணியளவில் 108 சுமங்கலி பூஜை நடைபெற்றது. மதுரை மற்றும் சுற்றுப்புறங்களிலுள்ள பெண்கள் 108 பேர் கலந்துகொண்ட இந்தப் பூஜையில், லலிதா சகஸ்ரநாமம் உள்ளிட்ட ஸ்தோத்திரங்கள் ஜெபிக்கப்பட்டன.

வைகையையும் மழையையும் வாழ்த்தி, பெண்கள் பாடல்களைப் பாடினர். பெண்கள் பங்குபெற்ற சொற்பொழிவுகள் மாலைநேரம் வரையிலும் நடந்தன. வைகையைக் காக்க வேண்டியதன் அவசியம், இயற்கை வளத்தைப் பேணுவதன் நோக்கம் உள்ளிட்டவற்றை பெண் துறவிகளும் அடியார்களும் பேசினர்.

வைகைப்பெருவிழா
வைகைப்பெருவிழா

இன்றைய மாநாடு குறித்து பெண் துறவி ஒருவர் பேசியபோது...

``ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் மழை வழிபாட்டு நிகழ்ச்சியும், நதி மற்றும் இயற்கை வளம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்படுகின்றன. அதன்படி, இன்றைய தினம் பெண்கள் சார்பில் விழாவை நடத்துகிறோம். இயற்கை அன்னை பெண்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்ப்பாள். எனவே, மனமுருகி மழைக்காக வேண்டுகிறோம்.

மழையைப் பெறுவது மட்டும் போதாது. அதைச் சேமிக்க வேண்டும். நதியைப் புனிதமாகப் போற்ற வேண்டும். இந்தப் பெருவிழா, நமக்கு தினமும் உணர்த்திக்கொண்டிருப்பது இதைத்தான்” என்றார். மாலையில் வைகை நதிக்குத் தீபாராதனைகள் நடைபெற்றன.

வைகைப்பெருவிழா
வைகைப்பெருவிழா
Vikatan

ஒவ்வொரு நாளும், விழா நேரம் முழுவதும் அடியார்களுக்கும் பொதுமக்களுக்கும் விழாத் திடலில் அன்னதானம் நடைபெற்று வருகிறது. வைகைப் பெருவிழாவில், நாளைய தினம் வைஷ்ணவ மாநாடும், ஆடிப்பெருக்கன்று மாபெரும் தீர்த்தமாடுதல் உற்சவமும் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.