Published:Updated:

வைகை நதிக்கரை ஆலயங்கள் - 1 - நோய்கள் தீர்த்து வெற்றி அருளும் வண்டியூர் மாரியம்மன் கோயில்!

வண்டியூர் மாரியம்மன் கோயில்

மதுரை மாநகரத்தில் பல்வேறு புகழ்பெற்ற ஆலயங்கள் உள்ளன. உலகப் புகழ்பெற்ற இந்த ஆலயங்களை இனி ஒவ்வொரு வாரமும் இந்தத் தொடரில் தரிசிப்போம்! - வைகை நதிக்கரை ஆலயங்கள்

வைகை நதிக்கரை ஆலயங்கள் - 1 - நோய்கள் தீர்த்து வெற்றி அருளும் வண்டியூர் மாரியம்மன் கோயில்!

மதுரை மாநகரத்தில் பல்வேறு புகழ்பெற்ற ஆலயங்கள் உள்ளன. உலகப் புகழ்பெற்ற இந்த ஆலயங்களை இனி ஒவ்வொரு வாரமும் இந்தத் தொடரில் தரிசிப்போம்! - வைகை நதிக்கரை ஆலயங்கள்

Published:Updated:
வண்டியூர் மாரியம்மன் கோயில்

மதுரை, வைகைக் கரை நாகரிகத்தின் பெருமிதம் கமழும் மாநகரம். சங்க இலக்கியத்திலிருந்து சமகால இலக்கியம் வரைக்கும் போற்றிப்புகழும் நகரம். தமிழின் தலைநகரம். தராசின் ஒரு தட்டில் மதுரையை வைத்து மறு தட்டில் உலகனைத்தையும் வைத்தாலும் மதுரைக்கு அவை ஈடாகாது என்கிறது பரிபாடல் ஒன்று. இதற்குக் கோயில் நகரம் என்றும் பெயர் உண்டு.

சைவமும் வைணவமும் கொண்டாடும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமும் அழகர் மலை அழகர் கோயிலும் இங்குதான் உள்ளன. குமரக்கடவுளின் படைவீடுகளான பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் ஆகிய இரண்டும் இங்குதான் உள்ளன. மண்ணின் தெய்வங்களையும் காலம் காலமாகக் கொண்டாடி மகிழும் ஊர் மதுரை. அதற்கு உதாரணமாகத் திகழும் ஓர் ஆலயம் வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில்.
வண்டியூர் மாரியம்மன்
வண்டியூர் மாரியம்மன்

வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் என்று தெப்பக்குளத்தை முன்னால் சொல்லிப் பழகிவிட்டாலும் தெப்பக்குளம் தோன்றுவதற்கு முன்பாக 800 ஆண்டுகள் முன்பாகவே கோயில்கொண்டவள் இந்த அன்னை. மாரி, தமிழகம் முழுமையையும் காத்தருள் தாய்த் தெய்வம். மாரி என்றால் மழை. அவள் விழியசைவில்தான் மக்கள் வான்மழையும் கருணை மழையும் பெறமுடியும். அதே நேரம் அவள்தான் காவல் தெய்வமும். மதுரையின் காவல் தெய்வமாகவும் வெற்றி தெய்வமாகவும் திகழ்பவள் இந்த மாரியம்மன்.

தமிழர்களின் தொல்குடித் தெய்வம் கொற்றவை. போரில் வெற்றி தருபவள் கொற்றவையே. அதனால் தமிழ்க்குடி முழுமையும் கொற்றவளை வணங்கியே களம் புகும். பின்னாளில் கொற்றவை துர்கை என்றும் மகிஷாசுரமர்த்தினி என்றும் போற்றப்பட்டாள். சுயம்புவாகத் தோன்றி வந்தவள் இந்தத் தாய். ஆற்றில் அன்னையின் சிலாரூபத் திருமேனி கிடைத்தது என்பர்.

மன்னர் கூன்பாண்டியன் ஆட்சி காலத்தில் குறும்பர்கள் எனும் இனத்தவர்கள் மகிழ மரக் காடுகளாக இருந்த இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து, அப்பகுதி மக்களுக்குப் பெரும் தொந்தரவு கொடுத்து அட்டகாசம் செய்து வந்துள்ளனர். மேலும் அங்கிருந்த இயற்கை வளங்களையும் அழித்துவந்துள்ளனர். இதுபற்றிய புகார் மன்னர் கூன்பாண்டியன் கவனத்துக்குச் சென்றுள்ளது. மக்களைக் காப்பாற்ற அப்பகுதிக்குப் படையுடன் சென்ற மன்னர், ஆக்கிரமிப்பு செய்த குறும்பர் இனத்தவருடன் சண்டையிட்டு அவர்களை விரட்டி அடித்துள்ளார்.

மாரியம்மன் கோயில்
மாரியம்மன் கோயில்

அதன் வெற்றியைத் தொடர்ந்து அங்கிருந்த வைகை ஆற்றில் கிடைத்த அம்மனின் சிலையை வைகை ஆற்றின் தெற்குக் கரையில் வைத்து வழிபட்டுள்ளார். அதிலிருந்து போருக்குச் செல்லும்முன் அம்மனை வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதனால் பல வெற்றிகளையும் அடைந்திருக்கிறார். யுத்தம் செய்யச் செல்லும் முன் மன்னர்கள் அனைவரும் தாய் மாரியை வழிபட்டே செல்வராம். தாயும் அவர்களுக்கு வெற்றியைப் பரிசாகத் தருவாளாம். பாண்டிய மன்னர்கள், சேதுபதி மன்னர்கள், நாயக்க மன்னர்கள் என மதுரையை ஆண்ட மன்னர்கள் அனைவரும் இந்த அன்னையை வணங்காமல் எந்தக் காரியத்தையும் தொடங்கியதில்லை என்கிறார்கள். இன்றும் இந்த அன்னையை வணங்கித் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும் என்பது நம்பிக்கை.

இங்கு அன்னை துர்கையாகவும் மாரியம்மனாகவும் சேர்ந்தே தரிசனம் தருகிறார். அன்னையின் காலடியில் மகிஷன் இருக்கிறான். தன் வலது காலை மடக்கி இடது காலைக் கீழே தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள் தாய். கையில் பாசம் அங்குசம் ஏந்திக் காட்சி தருகிறாள். அன்னையின் சக்தி அளவிடற்கரியது. அதனால்தான் மதுரையில் எந்தப் பெரிய கோயில்களில் விழாக்கள் தொடங்குவதற்கு முன்பும் இங்கு வந்து முதலில் மாரிக்கு பூஜை செய்தே தொடங்குகிறார்கள்.

சுற்றியிருக்கும் ஊர் மக்கள்கூட உடல் நலக்குறைவு ஏற்பட்டால் இந்த அம்மனைதான் வேண்டிக்கொள்கிறார்கள். இந்தத் தாய், வெப்ப நோய்களைப் போக்குபவள். அன்னைக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை இங்கு பக்தர்கள் வாங்கிச் செல்கிறார்கள். வெப்பு நோய்க்கும், அம்மை நோய்க்கும், தோல் வியாதிகளுக்கு இதுவே அருமருந்து என்கிறார்கள் பக்தர்கள். அம்பிகைக்கு உப்பு, மிளகு சாத்தி வேண்டிக்கொண்டால் வியாதிகள் தீரும் என்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியவர்கள் மாரியம்மனுக்குக் கூழ் வார்த்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். மேலும் வேண்டும் வரங்களை வாரி வழங்குபவளும் அவளே.

இங்கு அன்னையே பிரதானம் என்பதால் வேறு பரிவார தெய்வங்கள் இல்லை. விநாயகரும் பேச்சியம்மனும் மட்டும் சந்நிதிகொண்டு அருள்கிறார்கள். பேச்சியம்மன் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் இங்கு அருள்பாலிக்கிறாள்.
வண்டியூர் தெப்பக்குளம்
வண்டியூர் தெப்பக்குளம்

பிரமாண்ட தெப்பக்குளம்

தமிழகத்தின் மிகப்பெரிய தெப்பக்குளம் என்னும் பெருமை வண்டியூர் தெப்பக்குளத்துக்கே உண்டு. இதன் பரப்பளவு சுமார் நாற்பது ஏக்கர். 304.8 மீட்டர் நீள அகலம் கொண்டது. இத்தனை பெரிய தெப்பக்குளம் எவ்வாறு உருவானது அதுவும் இங்கே... இதற்கு திருமலை நாயக்கர் மன்னர் காலத்துக்குச் செல்ல வேண்டும். திருமலை நாயக்கர் மஹால் கட்டுவதற்காக மண் எடுக்கக் குழி தோண்டினர். மண் அள்ளும் பணி தோன்றியபோது கிடைத்த விநாயகர்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமர்ந்திருக்கும் பிரமாண்டத் திருமேனியரான முக்குருணி விநாயகர் என்பார்கள். வேண்டும் அளவுக்கு மண் அள்ளி முடிந்ததும் பார்த்தால் அவ்விடம் மிகப் பெரிய பள்ளமாக மாறியது. திருமலை நாயக்க மன்னர் இந்தப் பள்ளத்தை என்ன செய்வது என்று யோசித்தார். அப்போதுதான் அதன் கரையிலேயே இருக்கும் மாரியம்மன் கோயிலுக்கான குளமாக மாற்றிவிடலாம் என்று முடிவு செய்தார். நாற்புறமும் சுவர் எழுப்பி அதைத் திருக்குளமாக மாற்றினார். தற்போது வைகைநதி நீர் தெப்பக்குளத்துக்குள் வரும் விதமாக சுரங்கக் குழாய்கள் அமைத்துள்ளனர்.

மன்னர் காலத்திலேயே இங்கு தெப்போத்ஸ்வம் நடைபெற்றதாகச் சொல்கிறார்கள். தைமாத தெப்பத் திருவிழா இங்கு விசேஷம். தைப்பூச நட்சத்திரமே திருமலை மன்னனின் பிறந்தநாள். அன்றைய நாளில் தெப்போத்ஸ்வம் மிகவும் விமர்சியாக நடைபெறும். குளத்தின் மையத்தில் இருக்கும் மண்டபத்தில் திருமலை நாயக்க மன்னரின் திருவுருவச் சிலை இருக்கும். தைப்பூச நன்னாளில் சுவாமியும் அம்பாளும் தெப்போத்ஸ்வம் காண்பார்கள். அந்த நாளில் திருமலை மன்னனுக்குப் பரிவட்டம் கட்டிக் கரை திரும்புவது வழக்கம்.

மதுரை மாநகரத்தில் பல்வேறு புகழ்பெற்ற ஆலயங்கள் உள்ளன. உலகப் புகழ்பெற்ற இந்த ஆலயங்களை வரும் வாரங்களில் தரிசிப்போம்.
மாரியம்மன் கோயில் நாகர் சந்நிதி
மாரியம்மன் கோயில் நாகர் சந்நிதி

உங்கள் கவனத்துக்கு

தலம்: மதுரை.

அம்மன்: அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன்.

தலச் சிறப்பு: மாரியம்மனே மகிஷாசுர மர்த்தினி கோலத்திலும் அருளும் ஆலயம்.

தல விருட்சம்: வேம்பு, அரசமரம்.

பூஜை மற்றும் திருவிழாக்கள்: தை மற்றும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகள். பௌர்ணமி ஆகிய நாள்களில் சிறப்பு பூஜை வழிபாடுகளும் பங்குனி மாதம் பூச்சொரிதல் உள்ளிட்ட பத்து தினங்கள் நடைபெறும் திருவிழா குறிப்பிடத்தக்கவை.

நேர்த்திக் கடன்: பால்குடம், தீச்சட்டி எடுத்தல், கண்மலர் காணிக்கை, அம்மனின் உருவப் பொம்மைகள் வாங்கிவைத்தல், பானை முழுவதும் மையினால் புள்ளிவைக்கப்பட்ட பானை கொண்டுவருதல் (இதற்கு ஆயிரம் கண் பானை என்று பெயர்), மாவிளக்கு போன்ற பல நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர்.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6 முதல் இரவு 9 வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 வரை திறந்திருக்கும்.

எப்படிச் செல்வது?: மதுரை மாட்டு தாவணியில் இருந்தும், பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்தும் நகரப் பேருந்து வசதி உள்ளது.