Published:Updated:

`முருகப் பெருமானுக்கு வைகாசி விசாகச் சிறப்பு அபிஷேக தரிசனம்!' - சக்திவிகடன் யூடியூப் சேனலில் நேரலை

வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமண்யர்
வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமண்யர்

முருகப்பெருமானுக்கு நடைபெற இருக்கும் அபிஷேக ஆராதனைகளை பக்தர்கள் தரிசனம் செய்ய உதவியாக சக்திவிகடன் தன் யூடியூப் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்ப உள்ளது.

முருகப்பெருமானின் அவதாரத் திருநட்சத்திரம் விசாகம். அதனால்தான் அவருக்கு விசாகன் என்ற திருநாமமும் உண்டு. முருகக்கடவுள் வினைகளை நீக்கி நற்கதி அருள்பவர். அன்னை சக்தியிடம் பெற்ற வெற்றிவேலை உடையவர். வேல் அன்னையின் அம்சம். லோகமாதாவான அன்னை பார்வதி தேவி கருணையே வடிவானவள். எனவே அன்னையின் சக்திவடிவமான வேலும் கருணையோடு முந்திவந்து முருகனைப் பணியும் பக்தர்களுக்கு அருள்செய்கிறது.

அப்படிப்பட்ட முருகப் பெருமானை வழிபட உகந்த பண்டிகை நாள்களில் வைகாசி விசாகம் முதன்மையானது. அந்த நாளில் முருகப்பெருமானுக்குச் செய்யப்படும் அபிஷேக ஆராதனைகளை தரிசனம் செய்வது மிகவும் புண்ணியபலன்களைத் தரும் என்பது நம்பிக்கை.

`முருகப் பெருமானுக்கு வைகாசி விசாகச் சிறப்பு அபிஷேக தரிசனம்!' - சக்திவிகடன் யூடியூப் சேனலில் நேரலை

சென்னைப் பெருங்களத்தூர் ஸ்ரீநிவாசா நகரில் உள்ளது கருணாம்பிகை சமேத காரணீஸ்வரர் திருக்கோயில். இந்தக் கோயிலில் எழுந்தருளியுள்ள விநாயகப் பெருமான் அந்தப் பகுதியில் கட்டடப் பணி செய்தபோது கிடைத்தவர். இந்த விநாயகப் பெருமானின் தோற்றத்தைக் கொண்டு அது பல்லவர்காலச் சிற்பமாக இருக்கலாம் என்று கணிக்கின்றனர். இந்த விநாயகருக்கு ஆதி விநாயகர் என்பது பெயர்.

மேலும் இங்கு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமண்யரும், நடராஜப் பெருமானும், துர்கை அம்மனும், காலபைரவரும் சந்நிதிகொண்டு அருள்கிறார்கள். இங்கு காலபைரவர் தெற்கு நோக்கி சந்நிதிகொண்டு அருள்பாலிப்பது சிறப்பான ஓர் அம்சம் என்கின்றனர். இங்கு அனைத்து விழாக்களும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

`முருகப் பெருமானுக்கு வைகாசி விசாகச் சிறப்பு அபிஷேக தரிசனம்!' - சக்திவிகடன் யூடியூப் சேனலில் நேரலை

இங்குள்ள முருகப்பெருமான் சந்நிதியில் வைக்கும் வேண்டுதல்கள் விரைந்து நிறைவேறுகின்றன என்றும் சந்நிதிக்கு எதிரே உள்ள வேலில் ஆறு எலுமிச்சைகளைக் குத்தி வழிபட்டால் தீராத துன்பங்கள் எல்லாம் தீரும் என்கின்றனர் பக்தர்கள். இத்தகைய சிறப்புகளையுடைய இந்த முருகக் கடவுளுக்கு நாளை வைகாசி விசாகத்தை ஒட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. ஆலயங்களில் தற்போது பக்தர்களுக்கு அனுமதியில்லாத சூழ்நிலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாமல் தவித்துவருகின்றனர்.

அந்தக் குறையைப் போக்க சக்திவிகடன் பெருங்களத்தூர் காரணீஸ்வர் கோயில் நிர்வாகத்தோடு இணைந்து சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

நாளை (4.6.20) வைகாசி விசாகத்தை முன்னிட்டு காலை 9 மணி முதல் 11 மணிவரை முருகப்பெருமானுக்கு நடைபெற இருக்கும் அபிஷேக ஆராதனைகளை பக்தர்கள் தரிசனம் செய்ய உதவியாக சக்திவிகடன் யூடியூப் பக்கத்தில் நேரலை செய்ய உள்ளது.

இதன்மூலம் வீட்டிலிருந்தே இந்த அபிஷேகங்களை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். இந்த அபிஷேகங்களைக் கண்டு முருகப் பெருமானை வேண்டிக்கொள்வதன் மூலம் காரியத்தடைகள் நீங்கி நன்மைகள் சூழும் என்பது நம்பிக்கை. எனவே பக்தர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி எல்லாம்வல்ல முருகனுக்கு நிகழ்த்தப்படும் அபிஷேக ஆராதனைகளை தரிசனம் செய்து அருள்பெறலாம்.

அடுத்த கட்டுரைக்கு