Published:Updated:

ஶ்ரீரங்கத்தில் தொடங்கியது வைகுண்ட ஏகாதசி!

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஶ்ரீரங்கத்தில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி
வைகுண்ட ஏகாதசி முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி

வைணவ மரபின் தலைநகரம் என்று போற்றப்படும் ஶ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு விழாவுக்கு ஏராளமான பக்தர்கள் திரண்டு, அரங்கனை தரிசித்து மகிழ்வார்கள்.

அந்தவகையில், இந்த வருடம் வைகுண்ட ஏகாதசி, திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதசுவாமி திருக்கோயிலில் 25.12.2019 திருநெடுக்க திருவிழாவுடன் தொடங்குகிறது.

அடுத்து, 27.12.2019 முதல் 5.1.2020 வரை பகல் பத்தும், அடுத்து முக்கிய நிகழ்வான மோகினி அலங்காரம் 5.1.2020 அன்றும், 6.1.2020 அன்று அதிகாலை முக்கியத் திருவிழாவான பரமபத வாசல்திறப்பும் நடைபெறுகிறது. 13.1.2020 அன்று வேடுபறி திருவிழா, 15.1.2020 பெருமாள் தீர்த்தவாரி, 16.1.2020 ராப்பத்து முடிந்து வைகுண்ட ஏகாதசி நிறைவு விழா நடைபெறும் எனக் கோயிலின் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் நடைபெற்ற அறங்காவலர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இன்று காலை ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதசுவாமி திருக்கோயில் ஆயிரங்கால் மண்டபம் அருகே முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் மற்றும் அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள், பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.