Published:Updated:

வாரணமும் தோரணமும்!

தோரண மலை முருகன் சந்நிதி
பிரீமியம் ஸ்டோரி
தோரண மலை முருகன் சந்நிதி

தோரண மலை அற்புதங்கள்!

வாரணமும் தோரணமும்!

தோரண மலை அற்புதங்கள்!

Published:Updated:
தோரண மலை முருகன் சந்நிதி
பிரீமியம் ஸ்டோரி
தோரண மலை முருகன் சந்நிதி

சாவல் நாலு குஞ்சது அஞ்சு தாயது ஆனவாறு போல்
காயமான கூட்டிலே கலந்து சண்டை கொள்ளுதே
கூவம் ஆன கிழநரி கூட்டிலே புகுந்தபின்
சாவல் நாலு குஞ்சது அஞ்சும் தாமிறந்து போனவே!

ஆகாயப் பயணம் என்பது சித்தர்களுக்குக் கைவந்த கலை. சூட்சும தேகத்தோடு விண்ணில் பாய்ந்து சிலநொடிப் பொழுதுகளில் பலமைல் தூரம் கடந்து விடும் வல்லமை அவர்களுக்கு உண்டு. அப்படித்தான் கொங்கணர் விண்ணேகிப் பறந்த தருணத்தில்... மண்ணில் ஒரு வனப்புறத்தில் தொன்றிய தவ ஒளி அவரை வசீகரித்தது. ஆகவே அந்த இடத்தில் தரையிறங்கினார்!

வாரணமும் தோரணமும்!

வ ஒளிக்குக் காரணமான மனிதர் ஏதோ மூலிகையைப் பறிக்கும் முனைப்பில் இருந்தார். அந்த மனிதர் சாதாரணர் அல்ல என்பதைப் புரிந்துகொண்ட கொங்கணர் அவரைக் கட்டியணைத்துக் கொண்டார். அவரும் இவரின் மகிமையைப் புரிந்துகொள்ள இருவரின் சந்திப்பும் ஞானப் பேச்சும் தொடர்ந்தன.

ஒருநாள் அந்த தவசீலரின் குடிலுக்குச் சென்றார் கொங்கணர். வீட்டில் அவர் இல்லை. அவரின் இல்லாளான குறமகள் இருந்தாள். அவளிடம் `வீட்டில் ஏதேனும் இரும்புத் துண்டுகள் உள்ளனவா’ எனக் கேட்டு வாங்கிய கொங்கணர், அவற்றை ரசவாதம் செய்து தங்கத் துண்டுகளாக்கிக் கொடுத்துச் சென்றார்.

குறமகளின் கணவரான தவசீலர் வந்ததும் அவரிடம் விஷயத்தைச் சொன்னாள். அவரோ பதறினார். ``என்ன... இரும்பைத் தங்கம் ஆக்கினாரா... அது ஆட்கொல்லி ஆயிற்றே; நமக்கு வேண்டாம். கிணற்றில் தூக்கி வீசிவிடு’’ என்றார். அவளும் மறுபேச்சு பேசவில்லை அவர் சொன்னபடியே செய்தாள்.

இல்லாளின் செயல் கண்டு அவர் மகிழ்ந்தார். அந்த மகிழ்ச்சியில் ஞானப்பாடல் ஒன்று பாடினார். அதுவே, இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் உளந்து. இதன் பொருள் ஒரு கதையாய் விரிகிறது. என்ன தெரியுமா?

வாரணமும் தோரணமும்!

ஒரு கோழி. அதற்கு ஒன்பது குஞ்சுகள். அவற்றில் ஐந்து பெண்; நான்கு ஆண். அந்தக் குஞ்சுகளுக்கு இடையே எப்போதும் சண்டை - சச்சரவுதான். ஆக, சந்தர்ப்பம் எதிர்பார்த்திருந்த நரி ஒன்று, நேரம் கனிந்ததும் கூண்டுக்குள் நுழைந்தது; குஞ்சுகள் வாழ்வை இழந்தன!

இதன் மறைபொருள் என்ன. கோழிதான் நம் ஆன்மா. உடம்புதான் கோழிக் கூண்டு. நம்மோடு உறவாடி நம்மை இயக்கும் ஐம்பூதங்களும் ஐந்து பெண் குஞ்சுகள். நமக்குள் இருக்கும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கு அந்தக்கரணங்களும் ஆண் குஞ்சுகள். நம் வாழ்வை முடிக்கும் காலனே நரி.

வெளியே இருக்கும் ஐம்பூதங்களும் நமக்குள் இருக்கும் அந்தக்கரணங்களும் ஒன்றுபட்டால் காலத்தை வெல்லலாம்; கால தத்துவத்தைக் கடக்கலாம்; இல்லையெனில் அழிவுதான்.

எவ்வளவு அற்புதமான கதை - பொருள்!

அதுசரி, இந்தப் பாடலைப் பாடிய தவசீலர் யார்? அவர்தான் சிவவாக்கியர். பொன் பொருள் வேண்டி மனிதர்கள் தங்களின் வாழ்வைப் போராட்டக் களமாக்கிக் கொண்டிருக்கும் காலம் இது. ஆனால், அந்தச் சித்தரோ பொன்னைக் கண்டால் பதறுவார்; ஆட்கொல்லி என்று விலகியோடுவார்.

இவரின் இந்த நிலை சாமானியர்களாகிய நமக்குச் சாத்தியமா? கடினமானதுதான். ஆனால் நமக்கு ஒரு வழியுண்டு. `நம்மால் இயலாது’ என்பதை உணர்ந்து இறைவனின் திருவடியில் முழுவதுமாய்ச் சரணாகதி அடைவதுதான் அது.

அங்ஙனம் தோரணமலையில் குகைக்கோயில் அழகனாய் அருளும் முருகனைச் சரணடைந்து, வாழ்வும் வரமும் பெற்ற அன்பர்கள் பலர் உண்டு. அவர்களின் அனுபவங்கள் ஒவ்வொன் றும் நமக்கான வாழ்க்கைப் பாடங்கள். அவற்றையும் விரிவாகத் தெரிந்துகொள்ளப் போகிறோம். முன்னதாக... முகப்பு வான் நோக்கித் திகழும் குகைகள் குறித்துப் பார்த்தோம் அல்லவா? அவற்றைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

`ஒரு ராக்கெட் ஏவுதளம் போன்றன இந்தக் குகைகள் என நாம் எடுத்துக்கொள்ளலாம். அதாவது, சித்தபுருஷர்கள் சூட்சும உடம்போடு தாங்கள் விண்ணில் பாய ஏற்புடைய இடமாக இத்தகைய அமைப்புடைய குகைகளைத் தேர்ந்தெடுத்தார்கள்’ என்று நமக்குப் புரியும் வண்ணம் தக்க உதாரணத்துடன் எளிமையாய் விவரிக்கிறார், உலக சித்தக்கலைகள் ஆய்வு மையத்தின் நிறுவனர் அன்பர் மு.அரி.

சித்தர்களால் சூட்சும உடம்போடு விண்ணில் பறக்க முடியுமா? ஆம்! முடியும் என நிரூபித்திருக்கிறார்கள். போகர், கொங்கணர் என்று பலரையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதுபற்றிய ரகசியங்கள் சித்தர் நூல்களில் மறைபொருளாக விளக்கப்பட்டுள்ளன.

வாரணமும் தோரணமும்!

அபூர்வ பாறைகளில் இருந்து சேகரிக்கும் ஒருவித ரசத்தை பல மூலிகைகளோடு கலந்து பக்குவப்படுத்துவார்களாம். ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு தன்மையை அடையுமாம் அந்த ரசம். நிறைவில் ஆற்றின் கரையோரம், தகுந்ததொரு இடத்தில் - ஆற்று நீரை எதிர்ப்பது போல் ஏதுவான ஒரு பாறையில் அமர்ந்து மேலும் பல மூலிகைகள் கலந்து அரைத்து ரசத்தைப் பதப்படுத்துவார்கள். அப்போது ககன மணி எனும் பொக்கிஷம் கிடைக்கும். அதையும் உரிய பதம் வரும் வரையிலும் புடம்போட்டுப் பயன்படுத்துவார்கள்.

ஆம்! இந்தக் ககன மணியை வாயில் குதப்பிக்கொண்டால், விண்ணில் எழுந்து பறக்க இயலும் என்பது சித்தர்கள் நடைமுறை. ஆகாய கமனம் - வான்புகல் குறித்து ஆய்வு செய்யும் சித்தக்கலை ஆர்வலர்கள் சிலர், சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்து கொண்டார்கள்.

``நம் தேகத்தை ஸ்தூல தேகம், சூட்சும தேகம் என்று பிரித்துப் பாடம் சொல்லும் சித்தர் பெருமக்கள், யோக நிலையால் தங்களின் ஸ்தூல தேகத்தில் இருந்து சூட்சும தேகத்தைப் பிரித்து எழுந்து, ஆகாய மார்க்கமாகப் பயணித்த தகவல்கள் உண்டு. அதற்கு ஏற்ற இடமாக இதுபோன்ற குகைகளைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். தோரணமலையிலும் அதுபோன்ற ஆகாயப் பிரவேசம் நிகழ்ந்திருக்கலாம்’’ என்கிறார்கள்.

அவர்களின் கருத்தை ஆமோதிப்பதுபோன்று திகழ்கிறது, தோரணமலையில் சிற்சில இடங்களில் அமைந்துள்ள குகைகள். இந்த மலையில் உள்ள தாமரைச் சுனையின் மகிமையைப் பற்றிப் பார்த்தோம் அல்லவா? அந்தச் சுனையில் எதிரில், நாம் கண்ட குகை உள்ளது. அதன் முகப்பு நுழைவாயில் மேல்நோக்கியபடி, அதாவது வானம் நோக்கியபடி திகழ்கிறது.

தேரையரும் இந்தக் குகையில் அமர்ந்து தவம் செய்திருப்பாரோ, இங்கேயே தமது தவத்தையும் தியானத்தையும் தொடர்ந்து, தன் ஸ்தூல தேகத்திலிருந்து சூட்சுமத்தைப் பிரித்து ஆகாய பயணம் கிளம்பியிருப்பாரோ?

மனதுக்குள் கேள்விகள் எழ, நம்மையும் அறியாமல் குகையை நோக்கி கரம் கூப்பி, கண்மூடி வணங்கினோம். இனம்புரியாத பரவசமும் சிலிர்ப்பும் நமக்குள்!

இன்னும் என்னென்ன அற்புதங்கள் கொட்டிக் கிடக்கின்றனவோ இந்த அதிசய மலையில்?!

- தரிசிப்போம்...

புண்ணிய பலன் குதிரைக்கு!

ரதத்தாசாரியர் என்ற மகான் பெரும் துறவியாகத் திகழ்ந்தவர். சிவபக்தியில் திளைத்தவர். அதன் பலனாக எதையும் செய்யும் ஆற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். அவரின் மகிமையை அறிந்த சோழ அரசன் ஒருவன் அந்த மகானை தரிசித்தான்.

அவரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, ``சுவாமி! நான் வீடு பேறு அடைவதற்கான வழியைச் சொல்லுங்கள்’’ என்று வேண்டினான்.

அவர் அக்னீசுவரம் எனும் திருத்தலத்தைப் பற்றிக் குறிப்பிட்டு,

``அரை யாம நேரத்தில் அந்தத் தலத்தின் அருகிலுள்ள ஏழு சிவாலயங்களையும் வழிபட்டு வா. உனக்கு வீடுபேறு வாய்க்கும்’’ என்றார். உடனே மன்னன் குதிரையின் மீது ஏறி சிவாலயங்களைத் தரிசிக்கப் புறப்பட்டான். ஏழு சிவாலயங்களையும் விரைவில் சுற்றி வந்தான். திரும்பும்போது அவனுடைய குதிரை சட்டென்று மறைந்து போனது. மன்னன் தரையில் நின்றிருந்தான். துறவியிடம் ஓடோடி வந்து நடந்ததை விவரித்தான்.

``சிவாலயங்களைச் சுற்றிய புண்ணியத்தால் குதிரை வீடுபேறு அடைந்தது. நீயும் உன் கால்களால் நடந்து ஏழு சிவாலயங்களையும் வலம் வந்து வழிபடு’’ என்றார். அதன்படியே செய்து வீடுபேறு அடைந்தானாம் சோழன்!

- க.ஆனந்தி, மதுரை-3

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism