திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

வாரணமும் தோரணமும்!

பொதிகை மலை
பிரீமியம் ஸ்டோரி
News
பொதிகை மலை

சித்தர்கள் வழியில் இறையருள் தேடி...

உலகின் ஒட்டுமொத்த சாரத்தையும் தன்னகத்தே கொண்டு அதன் ஆதித் தொட்டிலாகத் திகழ்வதுதான் தென்தமிழ்நாடு. அங்கே சாகரம் உண்டு அவற்றின் சங்கமமும் உண்டு. வற்றாத ஜீவநதிகள், ஊற்றெடுத்து நீர் பெருக்கும் சுயம்புச் சுனைகள், பெருங்காடுகள், பாலை நிலங்கள், பசுமைபோர்த்திய வயல்கள், பட்டினங்கள், பட்டணங்கள் என இங்கு காண முடியாததை எங்கும் காண முடியாது எனும் நம்பிக்கை எமக்குள் எப்போதும் உண்டு.

வாரணமும் தோரணமும்!

குறிப்பாக... பொதிகை மலையும் சிறியதும் பெரியதுமாக அதில் திகழும் சிகரங்களும் விவரிக்க முடியாத வியப்பை அளிப்பன. மூலிகைகள், கனிமங்கள், ஒளஷதச் சுனைகள், சிற்றாறுகள், குகைகள், சித்தர் பீடங்கள் என அங்கு திகழும் விஷயங்கள் மட்டுமல்ல, நிகழும் பல சம்பவங்களும் மனித சிந்தைக்கு அப்பாற்பட்டவை என்கிறார்கள்!

பொதிகைச் சாரலிலிருந்து சற்று விலகித் திகழும் குன்றங்களும் உண்டு. அப்படி ஒரு மலை - முழுவதும் பாறைகளால் இல்லாமல் மண்ணும் சிறு பாறைகளுமாய் சேர்ந்து குவிந்து உருவானதுபோன்ற ஒரு குன்று அது. கடல்மட்டத்திலிருந்து சுமார் 400 அடி உயரம் என அளவு சொல்லலாம்.

வாரணமும் தோரணமும்!

உச்சியில் பெரும்பாறை உண்டு. அதன் உச்சியில் கல்லால மரங்களும் உண்டு. எப்போதோ கட்டப்பட்ட கல்மண்டபம் ஒன்றும் உண்டு. அந்த இடத்துக்கு ஏறிச் செல்பவர்கள் அபூர்வம். அப்படிச் செல்வதும் எளிதல்ல! `அது அமானுஷ்யங்கள் நிறைந்த இடம்...’ என்றும் `இல்லையில்லை அது தெய்வ சாந்நித்தியம் நிறைந்த இடம்... சித்தர்கள் உலவும் பூமி... சாமானியர்கள் போகக் கூடாது’ என்றும் அந்த மலையைப் பற்றியும் சித்தர் பெருமக்களின் வழிபாடுகள் குறித்தும் ஊர்ப் பெரியவர்கள் கதைகதையாய்ச் சொல்வார்கள்.

அப்படியான அந்த மலைச்சாரலில் மெள்ள ஏறிக்கொண்டிருந்தான் அந்தச் சிறுவன்.

`ஏலேய்... வழுக்கி விழுந்துடப் போற... அதுக்குமேலே போக வேண்டாம்... சொன்னா கேளு... இறங்கி வா’’

கீழே பாதுகாப்பான ஓரிடத்தில் நின்றபடி ஆட்டுக்கார தாத்தா கொடுத்த குரல், அதிக சத்தத்தோடு மலைப்பாறைகளில் எதிரொலித் தன. ஆனாலும் கண்டுகொள்ளாமல் மேலும் ஏற முயன்றான் சிறுவன். சிற்சில இடங்களில் சரளை மண் சறுக்கச் செய்தது. பாறை இடுக்கில் கிளைத்திருந்த ஒரு கிளையைப் பிடிமானமாகப் பற்றிக் கொண்டான்.

கிழவரின் ஆட்டுக்கூட்டத்திலிருந்த குட்டி ஆடு தொலைந்துபோனது. சில தருணங்களில் சரிவுகளில் இயன்றவரை மேலே ஏறி மேய்ச்சலுக்குச் செல்லும். ஆகவே அவனும் மேலே ஏறினான். மட்டுமன்றி சற்று உயரமான இடத்திலிருந்து பார்த்தால் ஆடு இருக்கும் இடத்தை எளிதில் கண்டுகொள்ளலாமே என்ற எண்ணம். இன்னொரு காரணமும் உண்டு... கடுக்காய் சேகரித்து வரச் சொல்லியிருந்தார் அவனின் தாத்தா. அவர் குளிகைக்காரர். அதோடு எங்கேனும் கல்தாமரை கிடைத்தாலும் சேகரிக்கவேண்டும். அது அவனுடைய தனிப் பட்ட விருப்பம்... அசாத்திய வல்லமை மிக்கது கல்தாமரை!

பொதிகை
பொதிகை


சிந்தனையோடு மெள்ள நகர்ந்துகொண்டிருந்தவனுக்கு ஆட்டின் குரல் அருகில் எங்கோ கேட்பதுபோல் இருந்தது. அதன் குரலைவிடவும் சற்று மேலே கல்தாமரை போல் தோன்றிய ஒரு தாவரம் அவனை ஈர்த்தது. முனைந்து ஏறத் தொடங்கினான். ஒரு பாறை நீட்சி. அதைப் பற்றிக்கொண்டு மேலே ஏறினால் பறித்துவிடலாம். பாறை நீட்சியைப் பற்றி ஏறினான்... பாறையின் மேற்பரப்பு எதிர்பக்கத்தில் ஒரு சரிவுபோல் திகழ்ந்தது. இந்த அமைப்பை அவன் எதிர்பார்க்கவில்லை. ஆகவே தடுமாறிச் சரிந்தான்.

சரிந்தவன் விழுந்துகொண்டே இருந்தான். ஆம்! சரிவின் முடிவு ஏதேனும் பாறை இடுக்காகவே இருக்கும் என்று எதிர்பார்த்த வனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பாதாளத்துக்குள் செல்வதுபோன்று சரிந்துகொண்டிருந்தவன், மெள்ள மெள்ள இருளில் மூழ்க ஆரம்பித் தான். இருளால் பயமும் சூழந்தது. இந்த நிலை சில கணங்கள்தான்.

மெள்ள மெள்ள ஓர் ஒளிவட்டத்துக்குள் புகுந்தான்... பெரும் வியப்பு ஆக்கிரமித்தது அவனை... காற்றில் மிதப்பது போன்ற உணர்வு சூரியகோடி நட்சத்திரங்களும் கிரகங்களும் அவனைச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தன. அவனும் ஒளிர்ந்தான்!

இதென்ன..?

அம்பலத்தில் ஆசான் அவர் சீடர்களுக்கு உபதேசித்த விஷயங்களை இவன் செவிமடுப்பது உண்டு. பெருவெளியைச் சிற்றண்டம், பேரண்டம் என்றெல்லாம் பிரித்து விளக்கிச் சொல்வார். அதெல்லாம் உண்மைதானா... இப்போது காண்பது சிற்றண்டமா பேரண்டமா?

பேரண்டமாக இருக்காது. விண்ணில் மனிதன் இதுவரையிலும் கண்டுகொண்டிருந்த விஷயங்கள் சகலமும் சிற்றண்டத்தில் உள்ளதையே என்பார் ஆசான். மனிதனின் சிற்றறிவுக்கு எட்டாதது பேரண்டம். அதையும் தாண்டி ஒன்று உண்டாம். `அது அகண்டம்’ என்பார் ஆசான். அது வாயுப் பெருவளி இல்லாததாம். `சூன்யமாக இருக்குமோ’ என்று இவன் யோசித்திருக்கிறான்... இல்லாத இருப்பு அது என்று தனக்கான ஞானவிளக்கத்தைச் சொல்வான் சீடன் ஒருவன். ஆசான் சிரித்துக்கொள்வார்.

மலைக்கோயில்
மலைக்கோயில்


அவன் ஒருமுடிவுக்கு வருவதற்குள்... இன்னும் வெகுவேகமாக மீண்டும் சரியத் தொடங்கினான். எவரோ விசையுடன் தன் காலைப் பற்றி இழுப்பதுபோல் தோன்றியது அவனுக்கு. ஒருநிலையில், அதுவரை அவன் தரிசித்திருந்த சிற்றண்ட காட்சிகள் சட்டென்று மறைய மீண்டும் பேரிருள் சூழ்ந்தது...

மனதில் மீண்டும் அச்சம். அதைப் போக்குவதுபோல் தூரத்தில் சில ஒளிப் புள்ளிகள். நெருங்க நெருங்க அவை ஒளிப் புள்ளிகள் அல்ல ஒளி உருவங்கள் என்பதை அவனால் அறிய முடிந்தது!

ஆறு ஒளியுருவங்கள் ஒரு பேரொளியை வணங்கிக் கொண்டிருந்தன. ஓம்... ஓம்... என்று அவர்கள் உச்சரித்த ஓங்கார மந்திரம் இந்தப் பிரபஞ்சத்தின் ஒலிபோல் எங்கும் நிறைந்தது. அவன் அந்த எல்லையைத் தொட்டபோது ஆறும் ஒன்றில் அடங்கின.

அந்த ஒன்று சிறு சிவலிங்கமாய்க் காட்சி தந்தது. அவனையுமறியாமல் கண்ணீர்க்கசிய சிரமேற் கரம் குவித்து வணங்கினான். மறுகணம் சகலமும் விநோதங்களும் மறைந்துப்போக விநோதங்களுக்கெல்லாம் விநோதனான அந்தச் சிவமும் இவனும் மட்டுமே அங்கிருந்தனர்!

இந்தச் சிறுவனுக்கு மட்டுமா... இத்தகைய அனுபவம் இன்றும் அபூர்வமாய்ச் சிலருக்கு வாய்த்திருக்கிறது பொதிகை மலை தீரத்தில்.

இப்படியான விநோதங்கள் நிறைந்த குகைகளும், கோயில்களும், பீடங்களும் அதிகம் உண்டு தென்பொதிகைச் சீமையில்.

தென் தமிழகத்துக்குத் தோரணம் போன்றும் பருந்துப் பார்வையில் ஒரு பட்டத்து வாரணம் (யானை) எல்லையில் படுத்திருப்பது போன்றும் திகழும் தோரணமலை முதற்கொண்டு, மகாலிங்கம் மலை எனப்படும் கம்பிளி மலை, குற்றாலம், பொதிகைமலை, பண்பொழில் என சிலிர்ப்பூட்டும் இடங்களையெல்லாம் தரிசிக்கப் போகிறோம் இந்தத் தொடரில்.

வாருங்கள், சிந்தை மகிழ பயணப்படுவோம்...

மலைகள், மலைக்கோயில்கள், அகத்தியரின் மருத்துவச்சாலை, தேரையரின் மருத்துவம், களரிக் களங்கள், தொட்டாலே பிணி தீர்க்கும் அதிசய மூலிகைகள், சிறிது நீர் பருகினாலே ஆயுளைப் பெருக்கும், ஒளஷதச் சுனைகள், சித்த தரிசனம் கண்ட ஆன்றோரின் அனுபவங்கள்... அனைத்தும் காத்திருக்கின்றன நமக்காக!

- பயணிப்போம்...