Published:Updated:

`மித்ரன்’ படம் வெற்றி பெற குடும்பத்தோடு அத்திவரதரை வழிபட்ட விஜயகாந்த்!

சைலபதி

அத்திவரதர் தரிசனத்துக்காகத் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குடும்ப சகிதமாக இன்று காஞ்சிபுரம் வந்திருந்தார். அன்புமணி ராமதாஸ், ஏ.கே.மூர்த்தி, ஜி.கே.மணி மற்றும் பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டவர்களும் இன்று தரிசனம் செய்தனர்.

அத்திவரதர்
அத்திவரதர்

அத்திவரதர் தரிசனத்தின் 11-ம் நாளான இன்று காவிநிறப் பட்டு உடுத்தி அத்திவரதர் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். அதிகாலை 3 மணியிலிருந்தே காஞ்சிபுரம் நகர வீதிகளில் பக்தர்களின் நடமாட்டம் அதிகரித்துவிடுகிறது.

விஜயகாந்த்
விஜயகாந்த்

பக்தர்களுக்கான தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டதால் கடந்த 10 நாள்களில் மட்டும் சுமார் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.

அத்திவரதர் தரிசனத்துக்காகத் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குடும்ப சகிதமாக இன்று காஞ்சிபுரம் வந்திருந்தார். மேற்கு மண்டபம் வரை காரில் வந்து இறங்கிய விஜயகாந்த் அங்கிருந்து வசந்த மண்டபம் வந்தடைந்தார். அத்திவரதர் முன்பு, விஜயகாந்த்தின் மகன் ஷண்முகப் பாண்டியன் நடிக்கும் ‘மித்ரன்’ படத்தின் 'க்ளிப் போர்டு' வைக்கப்பட்டது.

விஜய காந்த்
விஜய காந்த்

மித்ரன் படம் வெற்றி பெருவதற்காக சிறப்பு பூஜை நடைபெற்றது. அத்திவரதருக்கு முன்பாக பிரேமலதா அமர்ந்து தரிசனம் செய்தார். விஜயகாந்த் மற்றும் அவரின் மகன்கள் ஷண்முகப் பாண்டியன், விஜயபிரபாகரன் ஆகியோர் விஜயகாந்த்துடன் நின்றுகொண்டே அத்திவரதரைத் தரிசனம் செய்தார்.

தரிசனம் முடிந்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ``40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் புண்ணியமான வைபவத்தில் அத்திவரதரை தரிசிப்பதற்கு லட்சக்கணக்கான மக்கள் காஞ்சிபுரம் வந்துகொண்டிருக்கிறார்கள். காஞ்சிபுரம் முழுவதுமே ஆன்மிக பூமியாகக் காட்சியளிக்கிறது. அத்திவரதரைத் தரிசனம் செய்தது மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரை தரிசிக்கும் எல்லோருக்கும் நல்லது நடக்கும்” என்றார்.

அன்புமணி
அன்புமணி

விஜயகாந்த் தரிசனம் செய்த அடுத்த சிறிது நேரத்தில் அன்புமணி ராமதாஸ், ஏ.கே.மூர்த்தி, ஜி.கே. மணி மற்றும் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டவர்கள் தரிசனம் செய்தனர். நாளை குடியரசுத் தலைவர் வருகையையொட்டி இன்று முதலே பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.