Published:Updated:

வெற்றிகள் அருளும் கணபதி! - விஜயாபதி ஓமகுண்ட பிள்ளையார் தரிசனம்

கணபதி
பிரீமியம் ஸ்டோரி
News
கணபதி

ஆனந்த் பாலாஜி

வெற்றிகள் அருளும் கணபதி! - விஜயாபதி ஓமகுண்ட பிள்ளையார் தரிசனம்

லகின் பிதாமகர் என்று ஞானநூல்களால் போற்றப்படுபவர் காசிப முனிவர். தன்னுடைய கடும்தவத்தால் மகாவிஷ்ணுவை மகனாகப் பெறும் வரத்தைப் பெற்றவர் இந்த முனிவர். அவ்வகையில் இவருக்கு மகனாக - வாமனராக மகாவிஷ்ணு அவதரித்ததும், தவம் செய்ததும் சித்தாஸ்ரமம் எனும் ஓர் அற்புதமான தலத்தில்.

எவராலும் வெற்றிகொள்ள முடியாத தலம்; நாடி வருவோருக்கு வெற்றியை அருளும் தலம் எனும் பொருளில், `விஜயாபதி’ என்ற திருப்பெயரும் இந்தத் தலத்துக்கு உண்டு. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரிலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவிலுள்ளது விஜயாபதி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

விஸ்வாமித்திரரின் திருக்கதையும் அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்ட அருள்மிகு ஓமகுண்ட கணபதி தரிசனமும் இத்தலத்தின் கூடுதல் சிறப்பம்சங்கள்!

ஓமகுண்ட  கணபதி ஆலயத் தோற்றம்.
ஓமகுண்ட கணபதி ஆலயத் தோற்றம்.

எத்தகைய துன்பமும் காரியத் தடங்கலும் வந்தாலும் சரி, இந்த ஓம குண்ட கணபதியை மனதார வேண்டி வழிபட்டால், விரைவில் அவை விலகியோடும் என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாருங்கள்... விஜயாபதியின் புண்ணியக் கதையை விரிவாக அறிந்து மகிழ்வோம்.

விஸ்வாமித்திரருக்கு முன் பிறந்தவள் சத்தியவதி. கௌசிக வம்சத்தில் பிறந்ததால், கௌசிகி என்று அழைக்கப்பட்டாள். இவளே பிற்காலத்தில், தன் கணவர் ரிசிக முனிவரின் வாக்குப் படி, மக்களின் நலனுக்காக - அவர்களின் பாவங்களைப் போக்கும் கெளசிக நதியாகப் பாய்ந்தோடினாள்.

ஓமகுண்ட  கணபதி ஆலயத் தோற்றம்.
ஓமகுண்ட கணபதி ஆலயத் தோற்றம்.

இமயமலைச் சாரலில் ஓடிவரும் கௌசிக நதி மிகவும் புனிதமானது; அழகானது. இந்த நதிக்கரையில் தவ வாழ்வை மேற்கொண்ட விஸ்வாமித்திரர் தாய்மையின் அரவணைப்பில் இருப்பதை போல உணர்ந்தார். தவ வழிபாடு நெடுங்காலம் நீண்டது. அப்போது அவரின் மனத்தில் `சித்தாஸ்ரம்’ எனும் தலம் குறித்தும், அங்கு மேற்கொள்ள வேண்டிய விரத வழிபாடுகளைப் பற்றியும் சிந்தனைகள் தோன்றின.

விரைவில் சித்தாஸ்ரமத் துக்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்த விஸ்வாமித்திரர், அந்த இடத்தில் பிரச்னை ஒன்று இருப்பதையும் அறிந்தார். ஆம், வேறு எவரும், அற்புதமான இந்த இடத்துக்கு வந்து தவம் செய்து ஸித்திபெற்றுவிடக் கூடாது என்று கருதிய ராவணன், இந்தப் பகுதியைக் கட்டுக்குள் வைக்க அரக்கர்கள் பலரை ஏவியிருந்தான். அவன் ஆணைப்படி மாரீசன், சுபாகு முதலான அசுரர்கள், சித்தாஸ்ரமத்தில் எவரும் வழிபாடு நடத்தமுடியாதபடி இடையூறு களைக் கொடுத்து வந்தனர்.

புண்ணியம் வாய்ந்த இந்த க்ஷேத்திரத்தில், முனிவர்களோடு இணைந்து ஆறு நாள்கள் யாகம் நடத்த விரும்பினார் விஸ்வாமித்திரர். அதே நேரம், அரக்கக் கூட்டத்திடமிருந்து யாகத்தைக் காக்க தகுந்த வீரர்கள் வேண்டுமே என்றும் யோசித்தார். அயோத்தியின் இளவர சனான ஶ்ரீராமனைப் பற்றியும், அவன் பொருட்டுத் தனக்குச் சில கடமைகள் இருப்பதையும் அறிந்தார்.

விஸ்வாமித்திர மகாலிங்கம் ஆலயம்
விஸ்வாமித்திர மகாலிங்கம் ஆலயம்

சற்றும் தாமதிக்காமல் அயோத்திக்கு விரைந்தார். தசரதனிடம் பேசி, ஶ்ரீராமனையும் லட்சுமணனையும் யாக பூமிக்கு அழைத்துச் சென்றார். அரக்கர்களிடமிருந்து யாக பூமியை - யாகத்தைக் காக்கும்படி அவர்களிடம் கேட்டுக்கொண்டார். அத்துடன், யாகத்துக்கு எவ்வித இடையூறுகளும் நேர்துவிடக் கூடாது என்று பிள்ளையார் பெருமானைப் பிரதிஷ்டை செய்தும் வழிபட்டார்.

விஸ்வாமித்திர முனிவர், திவ்ய அஸ்திர சாஸ்திரங்களைச் சிவ பெருமானிடமிருந்து நேரடியாகப் பெற்றவர். அந்த வித்தைகளை ஶ்ரீராமனுக்குக் கற்றுக்கொடுக்கவும் விரும்பினார். அதன்படி, தான் பிரதிஷ்டை செய்த கணபதியை வழிபட்டு, ஶ்ரீராமனுக்கு அஸ்திர வித்தைகளை அருளினார். ஶ்ரீராமன் மூலம் லட்சுமணனும் அஸ்திர வித்தைகளைக் கற்றறிந்தார். இருவரும் அளவிலாத வித்தியா பலன்களைப் பெற்றனர்.

தொடர்ந்து, ஆறு நாள்கள் நடைபெற்ற யாகத்தை இரவு பகல் பாராமல் கண்விழித்துக் காத்தனர் இருவரும். யாகத்தைக் கெடுக்க வந்த அசுரர்களையும் அழித்தொழித்தனர். குறைவின்றி பூர்த்தியாகின யாக வழிபாடுகள்; விஸ்வாமித்திரர் மகிழ்ந்தார்.

ராமாயணத்தில் பாலகாண்டத்தில் - ஶ்ரீராமன், லட்சுமணனுக்கு இத்தலத்தின் பெருமைகளை விஸ்வாமித்திரர் எடுத்துரைப் பதன் மூலம், இதன் சிறப்புகளை அறியமுடிகிறது. எண்ணிய எண்ணங்களை கைகூட வைக்கும் இடமும், எவராலும் வெற்றிகொள்ள முடியாத தலமுமாகிய சித்தாஸ்ரமமே தற்போதைய விஜயாபதி தலம் ஆகும். இங்கு, காசியில் தான் வணங்கி வழிபட்ட காசிவிஸ்வநாதரையும், அகிலாண்டேஸ்வரியையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் விஸ்வாமித்திரர். மேலும், இந்த நிலத்தின் காவல் தெய்வமாகிய தில்லை காளியையும் வணங்கி வழிபட்டார்.

ஸ்ரீவிஸ்வாமித்திரர்
ஸ்ரீவிஸ்வாமித்திரர்

இந்தத் தலத்தில் விஸ்வாமித்திரமகாலிங்கம் - அகிலாண்டேஸ்வரி கோயில், விஸ்வா மித்திரரின் கோயில், ஓமகுண்ட கணபதி கோயில், தில்லைக்காளி கோயில் ஆகியவை அருகருகே அமைந்துள்ளன.

யாகம் செய்யுமுன் விஸ்வாமித்திரர் வழிபட்டு அருள்பெற்ற கணபதியையே ‘ஓமகுண்ட கணபதி’ என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். இவரின் அருகில், தவக் கோலத்தில் அருளும் விஸ்வாமித்திரரின் மூர்த்தத்தையும் தரிசிக்கலாம்.

மட்டுமன்றி, ஓமகுண்ட கணபதி சந்நிதிக்கு வலப்புறமும் இடப்புறமும் காவல் காக்கும் நிலையிலான ஶ்ரீராமன் மற்றும் லட்சுமணரின் விக்கிரகங் களையும் தரிசிக்க முடிகிறது.

இந்தக் கணபதியின் சந்நிதியையொட்டி கிணறு வடிவில் தீர்த்தக் கட்டம் உள்ளது. இதை, விஸ்வாமித்திரர் யாகம் செய்த ஓமகுண்டம் என்று கூறுகின்றனர். இந்தத் தலத்தில் விநாயகருக்குரிய எல்லா விழாக்களும், வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.

தீர்த்த கட்டம் ( யாகம் செய்த இடம் )
தீர்த்த கட்டம் ( யாகம் செய்த இடம் )

பக்தர்கள் தங்களின் துன்பங்களும் சங்கடங் களும் தீர, சங்கடஹர சதுர்த்தி தினத்தில் திரளாக வந்திருந்து கணபதியை வழிபட்டு வரம்பெற்றுச் செல்கின்றனர். இவரை வழிபட்டால், பெரும் சங்கடங்கள் அனைத்தும் நம்மைவிட்டு விலகி சந்தோஷம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

உண்மைதான்... எண்ணற்ற மகிமையுடையது இந்த விஜயாபதி. அது தன்னகத்தே கொண்ட பல அற்புதங்களில் தலையாயது, அருள்மிகு ஓமகுண்ட கணபதியின் அருள் சந்நிதி. அவரை வழிபட்டால் நமக்கும் வெற்றி கிட்டும்.

பக்தர்கள் கவனத்துக்கு...

தலம்: விஜயாபதி

ஸ்வாமி: விஸ்வாமித்திர மகாலிங்கம்

அம்பாள்: அகிலாண்டேஸ்வரி

பிள்ளையர்: அருள்மிகு ஓமகுண்ட கணபதி

வழிபாட்டுச் சிறப்பு: இங்கு வந்து அம்பாள்- ஸ்வாமி, விநாயகர் ஆகியோரை தரிசித்து, விஸ்வாமித்திரரை மனத்தால் தியானித்து வழிபட்டுச் சென்றால், புது முயற்சிகள் மிகப்பெரிய வெற்றி பெறும். காரியத் தடைகள், துன்பங்கள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை. பெளர்ணமி, சங்கடஹர சதுர்த்தி தினங்களில் வழிபடுவது மிகவும் விசேஷம்.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6 முதல் இரவு 8 மணி வரை.

எங்கு உள்ளது?: திருநெல்வேலி – நாகர்கோவில் நெடுஞ்சாலையில் உள்ளது வள்ளியூர். இவ்வூரிலிருந்து ராதாபுரம் வழியாக விஜயாபதியை அடையலாம். வள்ளியூரிலிருந்து ராதாபுரம் சுமார் 16 கி.மீ தொலவு; ராதாபுரத்திலிருந்து 12 கி.மீ. தூரத்திலுள்ளது விஜயாபதி.